எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா


நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம்
சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்
போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே!

கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம்
சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம்
சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்!

மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம்
மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம்
நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம்
போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது!

கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும்
ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார்!

ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம்
வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம்
மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார்!

கதிரையினைப் பிடிப்பதற்கும் போராட்டம் நடக்கிறது
கதிரையிலே இருப்பாரும் போராட்டம் நடத்துகிறார்
போராட்டம் என்பதற்கே அர்த்தமின்றிப் போகிறது
போராட்டம் தனையொழிக்கப் போராட்டம் தேவையன்றோ!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *