எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

 

பறவைகள் தங்கிய காடு – இப்போ
பார்க்கின்ற இடமெல்லாம் வீடு
குருவிகள் தேடுது காடு – ஆனால்
குலைக்கிறார் மனிதரோ நாளும் !

விளைநிலம் எல்லாமே போச்சு – இப்போ
வீடுகள் எழும்பல் ஆச்சு
பசுமைகள் அழிக்க நாளும் – இப்போ
பார்க்கிறார் பெரிய வேலை !

மண்ணினைத் தோண்டியே நாளும் – இப்போ
வளத்தினைக் கெடுக்கிறார் பலபேர்
எண்ணிடும் போதுமே நெஞ்சம் – இப்போ
ஏங்கியே நிற்குது இங்கே !

தொழிற்சாலை என்கின்ற பெயரால் – இப்போ
கெடுக்கிறார் குடிநீரை எல்லாம்
கழிவுகள் சேர்ந்திட்ட நீரால் – இப்போ
கண்ணீரில் நிற்கிறார் மக்கள் !

மரம்வெட்டி பணம்புரட்டும் பலரால் – இப்போ
வரண்டநிலை வந்துவிட்ட தெங்கும்
வரமாக அமைந்திட்ட மரத்தை -இப்போ
தம்நலமாக மாற்றுறார் பலபேர் !

ஆறுகள் குளத்தைக் காணவில்லை – இப்போ
அங்கெல்லாம் மாடிகள் எழும்பிருக்கு
சேறு நிலத்தையும் விட்டாரில்லை – இப்போ
கூறுகள் போடுறார் பூமியையே !

ஏழையெளியவர்கள் இருக்கவிடம் இல்லாமல்
வாழ்ந்துவந்த இடமெல்லாம் வளமிளந்து போனதனால்
நாளையென்னும் பொழுதவர்க்கு நஞ்செனவே இருக்கிறது
நாட்டிலுள்ள நல்லவரே காட்டிடுங்கள் அக்கறையை
வீட்டைக்கட்டிப் பணம்குவிக்கும் வித்தைக்காரர் வினையாலே
நாட்டுவளம் எல்லாமே நாசத்தோடு இணைந்தாச்சு
காட்டினையும் அழித்து கழனிகளையும் அழித்து
காசுகாசாய் சேர்பதிலே காணுமின்பம் இழிவன்றோ !
இயற்கையாய் வளர்ந்தமரம் எமக்குத்துன்பம் தருவதில்லை
தலைக்கனத்தைக் கொண்டோரால் தான்துன்பம் வருகிறது
மலைகாடு மாநதிகள் மாவரமாய் வந்தனவே
மாவரத்தைக் கருவறுத்தல் மானிடர்க்கு இடரன்றோ
கொள்ளை அடிப்பதற்கும் கோடிகோடி குவிப்பதற்கும்
குவலயத்தின் இயற்கையினை கொள்ளையிடல் முறையாமோ
நல்லபடி சிந்திப்போம் நாட்டுவளம் காத்துநிற்போம்
எல்லோரும் சேர்ந்திருந்து இயற்கைதனைக் காத்திடுவோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *