பெருவை பார்த்தசாரதி
=======================

கவிக்கோ
இன்றுளக் கவிஞருள் அரசனவன் அப்துல்
—–தன்கவிதை தனிமரபென திறனுடன் புகழுற்று
நற்றமிழில் தீஞ்சுவைக் கவிதைபாடி தமிழ்க்
—–கற்பனை வானில் நீந்திய கவிக்கோரகுமான்.!

கவிதை வளர்த்து கவிஞனை உருவாக்கிடும்..
—–கவிதைச் சந்ததிக்கெலாம் காவலானாகும் கோவே!
செவிகள் மகிழும் ஹைக்கூகவிதை படைத்த
—–கவிதையுலகின் மாமூத்த ஆசிரியப்பாவும் அவரே.!

சொல்வீச்சால் புதுக்கவிதை நடை பாணியில்
—–வல்வீச்சு வலுவாயிருக்கும் வரி ஒவ்வொன்றிலும்
நல்லதோ தீயதோ எதுவெனினும் நயம்படவுரைத்து
—–நாவால்மொழிய நற்கவிதை புனைவதில் வல்லவர்.!

இதயத்தில் எழுவதைப் பட்டெனப் பகிர்ந்திடுவார்!
—–உதயமாகும் ஒவ்வொரு சொல்லிலும் உணர்ச்சியழும்
குற்றமென நினைத்தால் குன்றிலேறிக் கூவத்தயங்கார்!
—–பற்றுக்கொண்டு பாபுனைவதில் புதுமாற்றம் கண்டார்.!

அரும்பெருஞ் சிலப்பதிகாரத்தை நால்வரியில் நன்றாக
—–அருகியதைச் சுருக்கி அருபொருளை யறியவைத்தவர்
அமுதத்தமிழருந்திய அமைதியான மனிதரவர் அப்துல்!
—–ஆணவமில்லாக் கவிஞனேனத் திகழ்ந்த வரவரே.!

ரகுமானின் ரம்மியமான வரிகளே கவிதையாகி
—–ரசித்தவனின் மனதுக்குள்ளே மகிழ்ச்சி எழவைக்கும்!
பொய்தான் கவிதை அனைத்துக்கும் கருவென்றால்
—–மெய்தானுனது கவிதைக்கு உடம்படு மெய்யாகும்.!

செந்தமிழின் சுவை யுணர்ந்து கவியெழுதி
—–செம்மொழியால் செவிக்கின்பம் பெருகத் தந்தாய்!
சொல்லுகின்ற கவிக்குப் பெயருண் டாலதற்கு
—–எல்லையுண்டோ உன் பெயருக்கே “ரகுமானே”

புதுமைபல புகுத்திய புதுக் கவிதையினுள்
—–முதுமைக்கென வோர் அத்தியாயம் காண்பாய்!
நல்லதொரு சமுதாயம் காணநாளும் எழுதிய..
—–வல்லமை வாய்த்த கவியேயவர் ரகுமானாம்.!

காலத்தை வெல்லும் கவிதைகளை தந்தார்!
—–குவலயத்தில் கவிதை மன்னனெனத் திகழ்ந்தார்!
கவியாற்றல் உள்ளவரைக் கண்டு மகிழ்வார்!
—–கவிபாட வருவோரை வரவேற்று உபசரிப்பார்.!

கம்பன்விருது கலைஞர்விருது தமிழன்னைவிருது
—–கலைமாமணி கம்பகாவலர் சாகித்தியஅகடமிவிருது
பாரிவிழா பாஆதித்தனார் பொதிகை விருதென
—–பார்புகழும் விருதுகளை விழுதாய்க் குவித்தாய்.!

வானம்பாடி யிலிணைந்து வாணியம் பாடியில்
—–வக்பு வாரியத்துக்கு வகையான தலைவனானாய்!
உத்தம நபியின் ஆசியில் உமருபுலவர்பெயர்
—–உன்னத விருதையும் உனதுடமை கொண்டாய்.!

கவிக்குநீ அரசனாகி கவிக்கோவெனப் புகழப்பட்டாய்!
—–கலையுலகில் புதுக்கவிக்கென முத்திரை பதித்தாயுன்
கவிகானம் வானுலகிலும் தமிழ்வழியாய் முழங்க
—–கல்லரை உனைவெகுவா யழைத்துக் கொண்டதோ.!

=============================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு 12-06-17

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *