சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (6)
பவள சங்கரி
‘புத்தக வாசிப்பு மூலம் மனிதர்களின் மதிப்பை குழந்தைகள் அறிந்துகொள்ள முடியும். நமது பண்பாடு, சமயம், பொருளாதாரம், நமக்கான அறிவியல் போன்றவை குறித்தும், சமூக அமைப்புகள் குறித்தும் அறிந்துகொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்” – அப்துல் கலாம்.
இன்றைய குழந்தைகளுக்கான படைப்புகள்:
குழந்தை இலக்கியம் சிறப்பாக உள்ள சமுதாயமே மிகச்சிறந்த சமுதாயமாக வாழ முடியும்.
இன்றைய குழந்தைகளுக்கான படைப்புகளான, கதைகள், பாடல்கள், நாடகம், துணுக்குகள், படக்கதை, புதிர்கள், காணொலிகள், குறும்படங்கள் என அனைத்திலும் பெரும்பாலும் நீதிபோதனையைவிட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவைகளாக இருப்பவைகளே பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான படைப்புகள் என்றபோதும் அவை மற்ற அனைத்துத் தரப்பினரையும் கவருவதாகவே அமைகின்றன என்பதே சிறப்பு. பழங்கதைகளை ஊடுறுவிப்பார்க்கும்போது குழந்தைகள் இலக்கியங்களின் தேவைகள், படிப்பினைகள் என பலவற்றையும் அறிந்துணரக்கூடும்.
நம் ஆதிகால குழந்தை இலக்கியங்கள் அனைத்தும் வாய்மொழிக் கதைகளாகவே இருந்ததால் எழுத்து வழி இலக்கியங்களின் தொடக்கம் குறித்து அறிவது எளிதல்ல. அதை முழுமையாக எடுத்துரைக்கும் அன்றைய குழந்தைகளான இன்றைய முதியோரையும் காண்பதும் அரிதாகவே உள்ளது. அதையொரு இலக்கியமாகக் கருதாமல், குழந்தைக்கால அனுபவமாக மட்டுமன்றி தங்கள் வளர்ச்சிக்கு ஒரு வித்தாக எண்ணியிருக்கும் சூழல் அமையாத காரணத்தாலும் இருக்கலாம். 19ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்திற்கு முன்பாக குழந்தைகள் இலக்கியம் பெரும்பாலும் நீதி போதனைகள் அல்லது இயற்கை நிகழ்வுகள், இயற்கை சார்ந்த விசயங்கள் போன்றவைகள் மட்டுமே உள்ளீடுகளாக இருந்தன. குறிப்பாக இந்த குழந்தை இலக்கியங்கள் மூத்தோர்களையும் கவர்ந்திழுத்த அந்த பொன்னான காலகட்டங்களில் இதற்கான வரவேற்புகளும் அதிகமாகவே இருந்தன. பஞ்சதந்திரக் கதைகள் தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகள், நாடோடிக் கதைகள், புராண இதிகாசக் கதைகள் போன்றவற்றின் தாக்கங்களால் அமையும் படைப்புகள் இன்றளவிலும் சுவையாக உலா வருவதைக் காணமுடிகிறது.
அச்சிதழ்களின் முன்னேற்றத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டபோது அது புதிய வழி முறைகளுக்கு பாதை அமைத்துக் கொடுத்திருந்தன. அந்தக்காலகட்டங்களில் சில குழந்தைகள் இலக்கிய படைப்புகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் பாடப்புத்தகங்களாகவோ அல்லது நீதியைப் போதிக்கும் ஆன்மீகக் கதைகள் நிறைந்த நூல்களாகவே இருந்துள்ளன. இவையனைத்தும் குழந்தைகளைக் கருத்தில்கொண்டு படைக்கப்படாவிட்டாலும் அக்கதை மாந்தரின் சாகசங்கள் மற்றும் அவை குறித்த ஓவியங்கள், கற்பனைக் காட்சிகள், பிம்பங்கள் போன்றவை குழந்தைகளை பெரிதும் கவர்ந்தன.
உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் அரும்பணியால், பல அரிய நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. 1901இல் கவிமணி பாடிய குழந்தைப் பாடல்கள், 1915இல் பாரதி பாடிய பாப்பா பாட்டு போன்றவைகள் குறிப்பிடத்தக்கன. இதன்பின் கா.நமச்சிவாய முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார், மயிலை.முத்துக்குமார சுவாமி போன்றோரும் குழந்தைகளுக்காகக் கதைகளும் பாடல்களும் எழுதியதோடு அவை பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டன.
அழ.வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவினார். தனது 13ஆவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி, பாப்பாவுக்குப் பாட்டு, பெரியோர் வாழ்விலே, நல்ல நண்பர்கள் (கதை), சின்னஞ்சிறு வயதில், பிள்ளைப்பருவத்திலே போன்ற ஏறக்குறைய 60 நூல்கள் படைத்துள்ளார்.
“குழந்தை இலக்கிய முன்னோடி” என்று போற்றப்படும் மயிலை சிவமுத்து, முத்துப் பாடல்கள், தங்க நாணயம், நல்ல எறும்பு, நல்ல குழந்தை, முத்துக் கதைகள், சிவஞானம், நாராயணன் முதலிய 25 நூல்கள் படைத்துச் சிறுவர் இலக்கியத்தைச் சிறக்கச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரப்புலி, மாயக்கள்ளன், ஆனையும் பூனையும், பறக்கும் மனிதன், ஓலைக்கிளி, தம்பியின் திறமை, நாட்டிய ராணி, மஞ்சள் முட்டை, கொல்லிமலைக் குள்ளன், கடக்கிப்பட்டி முடக்கிப்பட்டி எனப் பல நூல்கள் படைத்துள்ள “தூரன்” அவர்களும் வரலாற்றில் நிலைத்திருப்பவர். தம்பி சீனிவாசன், நெ.சி.தெய்வசிகாமணி, பூவண்ணன் போன்றவர்களும் குழந்தை இலக்கிய படைப்பாளர்களின் வரிசையில் நினைவில் நிற்பவர்கள்.
‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்ற நூலை டாக்டர் பூவண்ணன் எழுதியுள்ளார். இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழில் குழந்தை இலக்கியங்கள் பீடு நடைபோட்டதை, கிட்டத்தட்ட 50 சிறுவர் இதழ்கள் தமிழில் வெளிவந்த அந்த காலத்தை வைத்து அறிய முடிகிறது. பாலியர் நேசர், பாலவிநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங்ண்டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முதது, கண்ணன், சின்னக் கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சேலை, சிறுவர் உலகம், ரேடியோ, குஞ்சு, ஜில் ஜில் வானர சேனை, மத்தாப்பு, ரத்னபாலா, பூந்தளிர், தமிழ்சிட்டு, ஜிங்லி, அம்புலி மாமா, கோகுலம், துளிர் போன்றவைகள் இதில் அடங்கும். இவைகளில் வெகு சில இதழ்களே இன்று நிலைத்திருக்கிறது.
இதில், பாலியர் நேசன், அணில், டமாரம், கண்ணன், கரும்பு, அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிகைகள் 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று சிறுவர் பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்கத் தயங்கும் நிலையே அதிகமாகக் காணப்படுகின்றன என்பது வேதனைக்குரிய விசயம். பிரபல தினசரிகள் இதுபோன்ற குழந்தை இலக்கிய இதழ்களை இலவசமாக தரும் நிலையே பரவலாக இருக்கிறது. இதனாலேயே ஆகச்சிறந்த, குழந்தைகளை முழுமையாகக் கவரும் வகையில் வெளிவரும் அச்சிதழ்கள் வெகு குறைவாகவே இருக்கின்றன.
1950 இல் தோன்றிய குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் தலைமையில் செயல்பட்டது. வெள்ளி விழா ஆண்டான 1975இல், “குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?” என்ற நூல் வெளிவந்தபோது குழந்தை எழுத்தாளர்கள் அடையாளம் காட்டப்பட்டு, பெருமைபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணி, குழந்தைகள் கண்ட குடியரசு, அன்பின் அலைகள், ஏகலைவன், கலங்கரை விளக்கம், மீனாவின் கடிதம், சத்யமே வெல்லும், மோதி என் தோழன், பொன்மானும் தங்க மீனும் போன்ற குழந்தைகள் திரைப்படங்கள் வெளிவந்தன. பிரபல இயக்குநர்கள் சாந்தாராம், சத்யஜித்ரே போன்றவர்கள் குழந்தைகள் திரைப்படம் எடுக்க ஊக்கமளித்ததும் தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் குழந்தைகள் திரைப்படங்கள் திரையிடப்பட்டதும் மறக்க இயலாதவை.
நா. வானமாமலை, எஸ். தோத்தாத்ரி, பெரியசாமி தூரன், டாக்டர் மு.வ. கல்வி கோபால கிருணன் உட்பட பல்வேறு ஆய்வறிஞர்கள் பல நல்ல கட்டுரை நூல்களைத் தொகுத்தளித்திருந்தனர். காகிதத்தின் கதை, ரப்பரின் கதை, இரும்பின் கதை, இரயிலின் கதை, காற்றின் கதை, மின்சாரத்தின் கதை போன்று அறிவியல் உண்மைக்கதைகள் எழுதினார்கள். இதுமட்டுமன்றி விலங்குகள், பறவைகள், மரங்கள், மலைகள் கடல் என்று இயற்கை சார்ந்த பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் வெளிவந்தன. கல்கி சிறுவர்களுக்காக சோலைமலை இளவரசி என்ற வரலாற்று நாவல்கள் எழுதியுள்ளதும் போற்றத்தக்கது. சா.தேவதாஸ், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரும் குழந்தை இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.
ஜான் நியூபெர்ரி என்ற பெயரில் குழந்தை இலக்கியத்திற்கான பிரபலமான விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜான் நியூபெர்ரி 1744ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான மிக அழகிய கையேடு உருவாக்கினார். அது குழந்தைகளுக்கான முதல் பல்லூடக இதழ் என்பதோடு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியோடு படிப்பினையும் வழங்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இதன்பின் இந்த அச்சகம் மூலமாக பல்வேறு படைப்புகள் வெளிவரத் தொடங்கின. குழந்தைகளை சமூகம் அதிகமாகக் கொண்டாடத் தொடங்கிய காலகட்டத்தில் குழந்தைகள் இலக்கியங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. மத்தியதர வகுப்பினரும் பெரிதும் ஆர்வம் காட்ட ஆரம்பித்த வேளையில் குழந்தைகள் இலக்கியம் பரவலாக கிளர்ந்தெழ ஆரம்பித்தன.
லூயிஸ் கரோல் (Lewis Carroll ) எழுதிய ஆலிஸின் மாய உலக சாகசங்கள் (Alice’s Adventures in Wonderland), ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சனும் பொக்கிச தீவும், (Robert Louis Stevenson and his Treasure Island), மார்க் ட்வெயின் மற்றும் ஹக்கில்பெர்ரி பிஃன் (Mark Twain and his Huckleberry Finn ) போன்று பழங்கால நீதி போதனைகளை மாற்றி பொழுதுபோக்கும், கற்பனை வளமும் மிக்க சுவையான படைப்புகளும் அளிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த காலகட்டத்தின் இலக்கியம் மேலும் ஒரே மாதிரியான பாலின பாத்திரங்களையே வலுப்படுத்தியது. உதாரணமாக, லூயிஸா மே ஆல்காட் எழுதிய லிட்டில் விமன் (Little Women by Louisa May Alcott ) உருவாக்கிய அடிமைப்பெண் மனைவி பாத்திரத்தைக் குறிப்பிடலாம்.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் குழந்தை இலக்கியங்கள் பரந்துபட்ட வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீன கட்டமைப்புகளும், ஆடம்பரங்களும் குழந்தைகளுக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன.
இருப்பினும் இன்றைய நிலையில் குழந்தைகள் கணிப்பொறி உலகின் மனித மென்பொருட்களாக மாறும் அபாயத்தில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதையும் மறைக்க முடியவில்லை.
தொடருவோம்