வாய்த்திடட்டும் தைப்பொங்கல் !

எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

download 
பொங்கலென்று நினைத்துவிடின்
பூரிப்பே வந்துநிற்கும்
மங்கலங்கள் நிகழ்வதற்கு
பங்களிப்பை நல்கிநிற்கும்
எங்களது வாழ்வினிலே
என்றுமே இன்பம்வர
எல்லோரும் பொங்கலிட்டு
இறைவனயே எண்ணிடுவோம் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
தரமான வார்த்தையிது
எதிர்காலக் கனவுகளை
எங்கள்தையும் ஈய்ந்திடட்டும்
வருடத்தின் தொடக்கமதை
வாழ்த்திநின்று வரவேற்போம்
வையகமே விடிவுபெற
வாய்த்திடட்டும் தைப்பொங்கல் !

புத்துடுப்பு உடுத்திடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
மத்தாப்புப் பட்டாசு
வகைவகையாய் வெடித்திடுவோம்
சொந்தபந்தம் சூழ்ந்துநிற்க
சுவைபயக்கப் பொங்கல்பொங்கி
சூரியனை வணங்கிநின்று
சுகம்பெறவே வேண்டிடுவோம் !

வளம்பெருக வேண்டுமென்று
மனமார வேண்டிடுவோம்
வானவரும் வாழ்த்துரைக்க
வாழ்ந்துமே காட்டிடுவோம்
வையகத்தில் அமைதிவர
வடிவாகப் பொங்கல்பொங்கி
வாழ்ந்திடுக தமிழென்று
வாயார வாழ்த்திநிற்போம் !

பால்பொங்கி வருவதுபோல்
பலநலனும் பெருகவென
பச்சரிசி தனையெடுத்து
பானையிலே இட்டிடுவோம்
இச்சையுடன் சர்க்கரையை
எங்கள்கையில் எடுத்துவைத்து
உச்சமுடன் வாழவெண்ணி
உள்ளுக்குள் சேர்த்திடுவோம் !

மாவிலை தோரணங்கள்
வாசலிலே கட்டிவைத்து
மனம்முழுக்க மகிழ்வுடனே
பொங்கிடுவோம் வாருங்கள்
ஊணுறக்கம் தனைமறந்து
உழைத்துநிற்கும் யாவரையும்
உள்ளமதில் நினைத்தபடி
உணர்வுடனே பொங்கிடுவோம் !

உலகெங்கும் அமைதிவர
உழைப்புயர மனமெண்ணி
நிலமெங்கும் நீதிவர
நிம்மதியும் நிறைந்துவர
நலமில்லா அத்தனையும்
நாட்டைவிட்டே அகன்றோட
நாம்பொங்கல் பொங்கிநின்று
நாடிடுவோம் இறையருளை !

Leave a Reply

Your email address will not be published.