நிர்மலா ராகவன்

உடனே வேண்டும்!

நலம்

சின்னஞ்சிறு குழந்தை பசியால் வீறிட்டு அழும். பால் கிடைக்கும்வரை அழுதுகொண்டே இருக்கும். அதன் தேவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும். `பொறுமையாகக் காத்திருந்தால், அம்மா தானே பால் கொடுப்பாள்!’ என்ற எண்ணம் அதற்குக் கிடையாது.

`குழந்தை அழுது, அழுது விறைச்சுப் போயிடும், பாவம்!’ என்று தாய் விரைவதும் இயற்கை.

ஆனால், வளர்ந்தபின்னும் சிலருக்கு நினைத்தது எதுவும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால், அவர்கள் வளரவேயில்லை என்றுதானே கூறவேண்டும்!

கதை

`ஐம்பது வயதிலேயே நம் தோற்றம் முதுமையைக் காட்டுகிறதே!’ என்ற அயர்ச்சி அந்த செல்வந்தருக்கு. ஓர் அயல்நாட்டிற்குப்போய், `பிளாஸ்டிக்’ அறுவைச் சிகிச்சைமூலம் உடலின் பல பாகங்களையும் சீர்படுத்திக்கொண்டார் — அடுத்தடுத்த நாட்களில்!

ஆறாவது நாளில் தமது நாடு திரும்பியவர் அந்தப் புதிய `இளமையை’ அனுபவிக்க முடியவில்லை. அடுத்த நாளே இறந்துபோனார்.

ஓர் அறுவைச் சிகிச்சை முடிந்தபின், அதற்கடுத்த நாளே இன்னொரு பாகத்திலும் பண்ணிக்கொள்ள அவசரப்பட்டதன் விளைவோ? அவருடைய சிகிச்சை முடிந்தாலும், உடல்நிலை சீராகும்வரை மருத்துவமனையில் தங்கியிருந்து, தகுந்த கவனிப்புடன் இருந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததை அலட்சியம் செய்திருப்பாரோ?

என்னதான் அவாவும் உத்வேகமும் இருந்தாலும், பொறுமை இருந்திருந்தால் இம்மாதிரியான வேண்டாத விளைவுகளைத் தவிர்க்கலாமே! பல ஆயிரங்கள் செலவழித்துவிட்டு, பலனை அனுபவிக்காமலே போய்விட்டார், பாவம்!

ஏன் அவசரம்?

மேற்கூறியபடி, ஆரோக்கியக் குறைவால் அவதிப்படுகிறவர்களோ, `நாமும் இறந்துவிடுவோமே!’ என்று இருபது வயதில் உறைக்கும்போது எழும் அச்சத்தாலோ சிலர் பொறுமை இழக்கிறார்கள். எதுவும் நினைத்தவுடன் கிடைக்கவேண்டும் என்ற அவசரம் எழுகிறது.

அன்பான சூழலில் வளரும் பாக்கியம் கிட்டாது, போட்டி போட்டுத்தான் எதையும் பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தவர்களும் விரைவாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் உடனுக்குடன் கிடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆத்திரம்தான். `நடக்கக்கூடாதது நடந்துவிட்டால்?’ என்ற பயம் இவர்களைத் தொடர்ந்து வரும்.

இன்றே கிடைக்கவேண்டும் என்ற இந்த அவசரக் குணத்தை இளைஞர்களிடம் அதிகமாகப் பார்க்கலாம். அவர்களுடைய தேவைகள், ஆசைகள் உடனே நிறைவேற வேண்டும். அப்படி நடக்காவிட்டால், மன இறுக்கம். முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வார்கள்.

வித்தியாசமானவர்கள் சிலரே!

இப்போது உல்லாசமாகப் பொழுது கழியாவிட்டாலும் பரவாயில்லை, சிறிது காலம் சிரமப்பட்டால், பிற்காலத்தில் வாழ்க்கை சற்று எளிதாக இருக்குமே என்ற அறிவு எத்தனை பேருக்கு இருக்கிறது!

பொதுவாக, அறிவுகூர்மை உடைய சிறுவர்கள் உடனடியான வெகுமதியை எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு எதிர்காலத்தை எப்படிக் கழிக்க வேண்டும் என்ற தீர்மானம் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது.

`வீட்டில் எல்லாரும் திரைப்படம் பார்க்கப்போனால் போகட்டும், எனக்கு அடுத்த வாரம் வரப்போகும் பரீட்சைக்குப் படிக்க வேண்டும்!’ என்ற திடசித்தமும், சுயகட்டுப்பாடும் உள்ளவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

இளமையில் நேரத்தைச் சரியான முறையில் செலவிட்டால், பிற்காலத்தில் பல வருடங்கள் எளிதான, குறையற்ற வாழ்க்கை அமையும் என்று இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். கூட வருமாறு பிறர் வற்புறுத்தினாலும், மரியாதையுடன் மறுத்துவிடுவார்கள். இப்படி முனைப்புடன் ஒரு காரியத்தில் ஈடுபட பொறுமை, தூரநோக்கு இரண்டும் அவசியம்.

கதை

எங்கள் வீட்டுப் பணிப்பெண் தன் உறவுக்காரியான பதினைந்து வயதுப் பெண்ணைத் தனக்குப் பதிலாக அனுப்பத் தொடங்கினாள். அந்தச் சிறுமிக்குக் கல்வியறிவு புகட்ட முயன்று தோற்றோம்.

அவளைப் பொறுத்தவரையில், வீட்டு வேலை செய்தால், மாத இறுதியில் சம்பளம் கிடைக்கும். புதிதாக ஆடை, பிடித்த சாப்பாட்டுச் சாமான் வாங்கிக்கொள்ளலாம், திரைப்படத்துக்குப் போய் பொழுதை உல்லாசமாகக் கழிக்கலாம். படித்தால் என்ன கிடைத்துவிடப்போகிறது!

இம்மாதிரியான மனப்பான்மை உள்ளவர்களின் முழுத்திறமையும் வெளிப்பட வாய்ப்பில்லை. அதனால் ஆயுள் முழுவதும் ஒரே நிலையில் உழல வேண்டியதுதான்.

இப்படியா வாழ்க்கையை அனுபவிப்பது!

முன்பு ஏதாவது புதிய விஷயம் கற்க வேண்டுமானால், வாசகசாலையைத் தேடிப் போகவேண்டும். இப்போதோ, வீட்டிலேயே அமர்ந்து, இணையத்தில் தேடினால் போதும். இசை, நாட்டியக் கச்சேரிகளும் அப்படித்தான். இதெல்லாம் சௌகரியம்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், எல்லாமே இப்படி நினைத்தவுடன் கிடைக்கவேண்டும் என்பது நடக்கிற காரியமா?

இப்படியே பழகியவர்கள், தாம் செய்வதுதான் சரி என்ற சாதிப்பார்கள். தம் பயனை ஒத்திப்போடுகிறவர்களை, `வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவர்!’ என்று கேலி செய்யவும் தயங்குவதில்லை.

பள்ளி நாட்களில்கூட மாணவர்கள் பலரும் இதைப் புரிந்து வைத்திருப்பதில்லை.

`பாட புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது. ஆனால் இரவு எந்நேரமானாலும் தொலைகாட்சியில் படம் பார்க்க முடிகிறதே! ஏன், டீச்சர்?’ என்ற என் மாணவிகள் ஒருமுறை என்னைக் கேட்டார்கள். உடனடியான மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதன் விளைவு இது.

`படித்தால், பல நாட்கள் பாடங்களை நினைவு வைத்திருக்க வேண்டும். பரீட்சையில் நமக்குத் தெரிந்த பாடங்களில் கேள்வி வர வேண்டும். அப்படியே தேர்ச்சி பெற்றாலும், வேலை கிடைத்துவிடப்போகிறதா? பெண்களாக இருந்தால், ஒரு வேளை, கல்யாணமானபின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்? இவ்வளவு நேரத்தைச் செலவழித்து, பல சுகங்களைத் தியாகம் செய்து படிப்பதால் என்ன பயன்?’

இப்படியெல்லாம் யோசனை போவதால் படிப்பின் அருமை புரிவதில்லை பலருக்கு.

சாதாரணமாக, பெரும்பாலான இளவயதினர் எதையும் தீர யோசிப்பதில்லை. `என் செலவுக்கு எப்போதும் என் தந்தை பணம் கொடுப்பார்!’ என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

`எத்தனை காலம் கொடுப்பார்? அவருக்குப்பின், உனக்கு வயதாகிவிட்டால் யார் காப்பாற்றுவார்கள்?’ என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறேன்.

அவர்களிடம் பதிலில்லை. அதைப்பற்றி யோசிக்கக்கூட அவர்கள் விரும்புவதில்லை. `இன்று கேட்பதெல்லாம் கிடைக்கிறது, அது போதாதா!’ என்ற மெத்தனம்.

இவர்களுக்குத் தொலைநோக்கு கிடையாது. நாம் கூறும்போது சிறிது அச்சம் உண்டாகுமே ஒழிய, மாறுவது கடினம்.

கதை

“எங்கள் வீட்டுப் பணிப்பெண், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் முந்திரிப்பருப்பை எல்லாம் எடுத்துச் சாப்பிட்டு விடுகிறாள். அது எப்படி, ஒரு கிலோ முந்திரியை நான்கு நாட்களுக்குள் சாப்பிடுகிறாள்?” என்று அலுத்துக்கொண்டாள் என் சக ஆசிரியை, மிஸஸ் ஜோசப். “நாம் அப்படிச் செய்வது இல்லையே!”

“நம்மால் எப்போதும் வாங்கித் தின்ன முடியும். அவளுக்கோ, இந்த வேலையிலிருக்கும்வரைதான் கிடைக்கும்!” என்றேன்.

சாப்பாட்டுச் சாமான்கள் என்று மட்டுமில்லை, வேறு எதிலாவது கைவைத்தால், உத்தியோகத்தையே இழக்க வேண்டிவரும் என்ற அறிவு இவர்களைப் போன்றவர்களுக்குக் கிடையாது. உடனுக்குடன் தமக்குப் பிடித்ததை அடையும் வெறி கொண்டிருப்பவர்கள் படித்தவர்களாக ஆனாலும், இன்னலுக்குத்தான் ஆளாவார்கள்.

தள்ளிப்போடு

நாளை செய்யக்கூடியவற்றையும், கிடைப்பதையும் இன்றே, இப்போதே அடைய வேண்டும் என்று அவசரப்பட்டால், அரைகுறையாகத்தான் செய்ய முடியும். இழப்பிலும் முடியக்கூடும்.

பெற்றோரும், ஆசிரியர்களும் `எதுவும் நினைத்தவுடன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நல்லதல்ல,’ என்று அடிக்கடி போதித்தல் பயன் தரும்.

வசதியான குடும்பத்தில் பிறந்த குழந்தைகளாக இருந்தால், `நீ இப்போது அனுபவிப்பதுபோல், அல்லது இதைவிடக் கூடுதலாக அடைய விரும்பினால், கல்வி கற்பது ஒரு சிறந்த வழி!’ என்று பெற்றோர் சுட்டிக்காட்டுவது சிறந்த பலனளிக்கும். இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பொறுப்புணர்ச்சியுடன் வளர்கிறார்கள்.

குறையான போதனை

`நீ நிறையப் படித்துப் பெரிய வேலைக்குப் போகவேண்டும்!’ என்பதை மட்டும் வலியுறுத்தினர் பெற்றோர். அவர்களுடைய கனவை நிறைவேற்றினான் மகன்.

தான் பெரிய அறிவாளி என்ற கர்வம் மிகுந்தது. பெற்றோரைக் காப்பது தன் கடமை என்பதை உணரவில்லை. அதையும் அவர்கள் மறைமுகமாகச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டுமோ?

எப்படித் தடுப்பது?

வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி, பிறருடன் பழகுவது, எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதைச் சிறப்பாகச் செய்வது, இயன்றவரை பிறருக்கு உதவி செய்வது போன்ற குணங்களையும் சிறுவயதிலிருந்தே வளர்த்தால், எவருடனும் போட்டி போடும் சுயநலமிகளாக வளரமாட்டார்கள். `உடனே அடையவேண்டும்’ என்ற வெறி மறைந்து, பிறரையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். பிறகு வெற்றி பெறத் தடையேது!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *