-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா 

மாற்றம் என்பது மனிதவாழ்வில் இன்றியமையாதது. மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது. அந்த மாற்றமும் – தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும். சிலவேளை – ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத்தோன்றும். இதனால் – மாற்றம் என்பது வந்தால், யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும். அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம். அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன்பெறுமளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.

அப்படியான மாற்றங்கள்பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா? அப்படியான மாற்றங்கள் எந்தவகையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.

சமயம் என்றால் என்ன? அது ஒரு “வாழும்நெறி.” வாழ்க்கை என்றால் என்ன? எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. எப்படியும் வாழலாம் என்றால் – அதனை வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. விலங்குகள் போல மனிதன் வாழமுடியாது.

விலங்களுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது மட்டுமல்ல, புரியவும் மாட்டாது. ஆனால் பகுத்தறிவு மிக்க மனிதனுக்கு வாழ்க்கை பற்றித் தெரிய வேண்டும். தெரியாமலும், புரியாமாலும் வாழும் வாழ்வு மனித வாழ்வு அல்ல. இது விலங்கு வாழ்வேயாகும். அந்த விலங்கு வாழ்வைவிட்டு – மனிதன் மனிதனாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும் வல்லமை சமயத்துக்கே உண்டு. இதனால்தான் சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகவும் வாழும் நெறியாகவும் அமைந்திருக்கிறது.

சமயம் உண்மையா? பொய்யா? கடவுள் உண்டா? இல்லையா? இப்படிப்பட்ட கேள்விகள் காலங்காலமாகக் கேட்கப்பட்டுக் கொண்டே வருவதைக் காண்கின்றோம். இதற்கான சரியான பதில்களும் அவ்வப்போது உரியவர்களால் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.

ஆனால் உரிய பதில் அளிக்கப்பட்டபோதும் – இம்மாதிரியான குதர்க்கத்தன
மான கேள்விகள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் சமயம் சம்பந்தமான நடவடிக்கைகளோ, கோவில்கள் கட்டி வழிபாடுகள் செய்யும் நிலைகளிலோ – எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. பதற்றமும் இல்லை. யாவும் அதன் வழியில் செம்மையாக நடைபெறுவதைப் பார்க்கின்ற பொழுது – இதனை ஒரு மாற்றம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

இன்றைய உலகில் விஞ்ஞானம் பெரும்பகுதியில் வியாபித்து நிற்பதைக் காண்கின்றோம். மனித இயக்கம் முழுமையும் விஞ்ஞானத்தை அண்டியே அமைந்திருப்பதும் கண்கூடு. விஞ்ஞானமில்லாவிடின் மனிதனே வாழ முடியாது என்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்வை விஞ்ஞானத்துடன் இணைத்து விட்டான். இதனால் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றாகிவிட்டது.

விஞ்ஞானத்தின் உச்சியில் நிற்கும் பல மேல்நாட்டவர்கள் தமது வாழ்க்கையைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர். மேல்நாட்டவர் வழியையே போற்றிநின்ற கீழ்நாட்டவரும் தமது நிலைபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது.

எதனால் எல்லாமே செய்யமுடியும் என்று எண்ணியவர்கள் எல்லாம் – சற்று நின்று நிதானித்து நிற்க முயல்வதைக் காணமுடிகிறது. அதாவது – ”விஞ்ஞானம், விஞ்ஞானம்” எனப் பேரொலி எழுப்பிய நாடுகளும் – விஞ்ஞானம் சார்ந்தவர்களும், விஞ்ஞானம்தான் எல்லாமென எண்ணியவர்களும் – விஞ்ஞானத்துக்கு அப்பாலும் அதைவிடச் சக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது என்று உணரத் தலைப்பட்டமையைக் காணமுடிகிறது.

அவர்கள் யாவரும் மெய்ஞ்ஞானம் பற்றியறியவும் – அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் – அதனால்தான் அர்த்தமுள்ள வாழ்வுகிட்டும் என உணரத் தலைப்பட்டு மெய்ஞ்ஞான மார்க்கத்தை நாடி,தேடி, ஓடி வந்துகொண்டிருப்பது – ஒரு பெரிய மாற்றம் அல்லவா?

வாழ்க்கையில் இரண்டுவிதமான அமைப்புகள் காணப்படுகின்றன. முதலாவது உலகியல் சார்ந்தவாழ்கை. மற்றையது உலகியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. உலகியல் சார்ந்த வாழ்க்கையைத்தான் யாவரும் விரும்புகின்றோம். அதில்தான் பெரும்பாலானவர்களின் நாட்டமும் செல்கிறது.

அதற்காகவேதான் நாளெல்லாம் உழைக்கின்றோம். அதுவும் ஓய்வற்ற உழைப்பெனலாம். உழைப்பின் முடிவில் காண்பதுதான் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாகும்! இதற்கு நாமெல்லோரும் நம்பியிருக்கின்ற விஞ்ஞானத்தால் விடை சொல்ல முடியாமல் இருக்கிறது.

விஞ்ஞானம் என்பது ஓர் அளவுடன் தனது பணியை முடித்துக் கொள்கின் றது. அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மெய்ஞ்ஞானம்தான் கைகொடுக்க வேண்டும். மெய்ஞ்ஞானத்தால் அது முடியும் என்று கருதும் நிலை இன்று பரவலாகி வருவதும் நல்லதொரு வரவேற்கத்தக்க மாற்றம்தானே!

சமயமும் கோவிலும் மாற்றத்துக்கு வழிவகுக்குமா? இது ஒரு முக்கியமான கேள்விதான். அதேவேளை இவையிரண்டையும் விட – நல்லமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய வேறு சாதனங்கள் இல்லையென்று யாவரும் நம்புகின்றனர்.

விஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நிரந்தரமற்றவை. மெய்ஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்களோ நிரந்தரமானவை. இதனால்தான் “மெய்ஞ்ஞானம்” என்று சொல்லப்படுகிறது. மனிதவாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களுக்கு எல்லாம் சமயமும், அதனைத் தாங்கிநிற்கும் கோவில்களும் என்றுமே உறுதுணையாகி நின்றன. தற்போதும் நிற்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது.

மனிதவாழ்வின் அடிநாதமே இறையுணர்வுதான். அதை ஊட்டியதும், காட்டியதும், சமயந்தான். இறையுணர்வுஅற்று வாழும் வாழ்வு ஒரு வாழ்வு அன்று; உயிர்த்துடிப்பற்ற வாழ்வாகவே அது அமையும். அதனை வாழ்வு என்று சொல்லவே முடியாது.

உயிர்த்துடிப்புக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் இறைவனுக்கு உருவம் கொடுத்து – அந்த உருவங்களில் திருவருட் சக்தியை உருவேற்றி அவற்றை வைத்து – வழிபாடு என்னும் மடைமாற்றத்தை ஏற்படுத்த வழிசமைக்க உதவி நிற்பனதான் கோவில்கள். இதனால்தான் –

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” – என்று சொல்லப்பட்டதோ என என்ணத்தோன்றுகிறது.

சமூகத்தின் மையமாகக் கோவில்கள் திகழ்கின்றன. இந்த நிலையை அன்று தொடக்கம் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கிறது. எனவேதான் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஊர்கள் தோறும் கோவில்கள் அமைக்கப்பட்டன.

கோவில்களை மையமாகக் கொண்டு கிராமங்கள் வளர்ந்தன. நகரங்களும் வளர்ந்தன. நாடும் வளர்ந்தது. ஆலயத்தை அரணெனக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக அமைந்தது.

எதைச் செய்தாலும் – அதனை ஆரம்பிக்கும் முன்னர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னரே செய்யும் வழக்கம் பண்டுதொட்டு நிலவிவந்தது. அதனை தற்போது – சிலர் தேவையற்ற ஒன்று என்றும், மூடத்தனமானது என்று சொல்லுவதையும் கேட்க முடிகிறது. கோவில் என்றும், ஆலயம் என்றும் இறைவனது சன்னிதானத்தை அழைப்பதில் கூட மிகச்சிறந்த பொருள் பொதிந்து இருக்கின்றது.

“கோ’ என்றால் தலைவன். “இல்” என்றால் இருக்குமிடம். எனவே               “கோவில்” என்றால் உலகத்துக்கும், உயிர்களுக்கும் எல்லாம் தலைவன் ஆகிய இறைவன் இருக்குமிடம் என்ற பொருளாகின்றது.” ஆலயம் ” என்பதன் பொருள் – ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்பதாகும். எங்களது பாரம்பரியத்தில் – வாழையடி வாழையாகக் கோவில்கள் – நல்ல திருப்பத்துக்கும், மனமாற்றத்துக்கும் உறுதுணையாகவே வந்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல. வாழ்க்கையை – வாழ்க் கையாக எண்ணி வாழ்கின்ற மனிதன் – மனத்தை உடையவன். அந்த மனத்தில் நல்ல சிந்தனைகள் எழுதல் வேண்டும்.

“எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய்” என்னும் வேத வாக்கை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒரு கூட்டமாகக் கூடி எமது முழு இயக்கத்தையுமே மாற்றிச் சிதைத்துவிடும் வல்லமை பெற்றன. அகத்தோடு தோன்றும் எண்ணங்கள் வழி – புறச் செயற்பாடுகளும் அமைந்து விடுகின்றன. இதனால் அகச் சிந்தனைகள் நல்ல மாற்றம் பெற வேண்டும். அகம் நல்ல மாற்றம் பெறவும் – அதன்வழி புறச் செயற்பாடுகள் நல்லபடி அமைவதற்கான மடைமாற்றம் செய்யக் கோவில்கள் உதவுகின்றன. சமயமும் கோவிலுடன் இணைந்து நின்று மாற்றத்துக்கு வலுவூட்டி நிற்கிறது.

புராணங்களும், இதிகாசங்களும் எமது சமயத்தின் கருவூலங்கள். இவை யாவும் கற்பனையிலுதித்த கதைகள். விசித்திரமானவை. விளங்க முடியாதவை என்றெல்லாம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் – அவை யாவும் – மனிதகுல மாற்றத்துக்கு அருந்துணையானவை. அருமருந்தாய் என்றும் விளங்குகின்றன.

ஆதிகாவியமான இராமாயணத்தைப் பாடிய வான்மீகி பற்றிய ஒரு சம்பவம் கதையானாலும் – முக்கியக் கருத்தொன்றை வெளிக்காட்ட உதவுகிறது எனலாம். களவுத்தொழிலையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டிருந்த வான்மீகி – புனிதமான இராமாயணத்தைப் பாடி சமூகமாற்றத்துக்குப் பலவழிகளில் உதவிநின்றபாங்கு – வான்மீகியிடம் ஏற்பட்ட மாற்றமேயாகும். அப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறியும் பொழுது – நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் கிடைக்கின்றதல்லவா?

ராம நாமத்தையே உச்சரிக்க முடியாத அளவுக்கு கல்வியறிவற்ற கசடன் ஆகவும், கடையனாகவும், இருந்தவனை – மரா மரா என உச்சரிக்கச் செய்து முடிவில் அந்த உச்சரிப்பு “ராம ராம” என உருமாறி ராமாயணம் பாடப்பட்டது என்பது வரலாறாகும். இது கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதன்மூலம் வெளிப்படும் கருத்தே முக்கியமானதாகும். இறைநாமத்தின் பெருமையும், அதனை உச்சரிப்பதால் எப்படிப்பட்ட மனமும் மாறிவிடும் என்பதும் – அப்படி ஏற்படும் மாற்றம் ஒருவருக்கும் மட்டுமே பயன் கொடுக்காது உலகத்துக்கே பயனாகி – உலகிலே பரந்துபட்டளவிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது என்பதை மறுக்கத்தான் முடியுமா?

வான்மீகி ராமாயணம் பல மொழிகளில் தழுவி மொழிமாற்றம் செய்யப்பட்டோ எப்படியோ எல்லாவிடங்களிலும் பரவிவிட்டது. அக்காவியம்-  தான் எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தன்னிகரற்றதாகவே யாவராலும் ஏற்றிப் போற்றப்படுகிறது. இராமாயணத்தில் வரும் இராமன் – தெய்வமாகிவிட்டான்; குடும்பங்கள் அனைத்தும் – இராமனைப்போலவே தங்கள் பிள்ளைகளும் இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். சீதை கற்புக்கு எடுத்துக்காட்டாகி விடுகிறாள். எத்தகைய வல்லமைகள் இருந்தாலும் நல்லவழியில் செல்லாவிட்டால் யாவும் பயனற்று விடுவதோடு – முடிவில் அழிவையே தந்துவிடும் என்பது – இராவணன் வாயிலாக உணர்த்தப்படுகிறது. இவை எல்லாம் இராமயணம் சமூகத்துக்குக் காட்டும் நெறிகளல்லவா!

வான்மீகி மாறினான். இராமாயணம் பிறந்தது. இராமாயணத்தால் மாற்றங்க ளுக்கு வழியுமேற்பட்டது. இம்மாற்றமானது சமயத்துடன் இணைந்து சமூகத்துக்கும் சென்றுவிட்டது. இதனால்தான் கோவில்கள்தோறும் இராமாயணம் கதையாகவும், கதாப்பிரசங்கமாகவும், வில்லுப்பாட்டாகவும், நாடகமாகவும் நிகழ்த்தப் பட்டுவருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

இராமாயணம் மாற்றத்துக்கு எப்படி வழிகோலியதோ – அதே போன்றுதான் மகாபாரதமும் அமைகிறது. அரச வம்சங்களின் போட்டா போட்டி, சண்டைபற்றி மகாபாரதம் கூறினாலும்- அதில் இடம்பெறும் “பகவத்கீதை” இந்துக்களின் வேதமாகவும், இருதயமாகவும் விளங்குகின்றது.

வாழ்க்கையெனும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் யாவருக்கும் பகவத்கீதை மருந்தாக அமைகின்றது. மனத்தில் ஏற்படும் எண்ணங்கள் செயலைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் நல்லதாக அமையின் செயல் நல்லபடி அமையும்.  அல்லாவிடின் தீய விளைவுகள் ஏற்படும். எனவே மனந்தான் யாவற்றுக்கும் அடிப்படை. மனத்தை நல்வழிப்படுத்தக் கீதை வழி சொல்லுகிறது.

கீதையின் போக்கே தனித்துவமானது. அதனால்தான் யாவரும் பொன்னேபோல் அதனைப் போற்றுகின்றனர். உலகியல் நடைமுறையில் சென்று – உள்ளத்தைத் திருத்தி  உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் அழுக்குகளை அகற்றி – உலப்பிலா ஆனந்தம யமான இறையுணர்வை ஏற்படுத்தும் பெருமாற்றத்தை இன்றளவும் “பகவத்கீதை” ஆற்றிக் கொண்டிருக்கிறது. பாரதத்தில் இடம்பெறும் பஞ்ச பாண்டவர்கள் அறத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றுவரான துரியோதனன் ஆகியோர் மறத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றனர். நோயைக் குணப்படுத்தும் மருந்து அளவில் சிறியதானாலும் – அதன் செயற்பாடு மிகப் பெரியது. இத்தத்துவம் மகாபாரதத்தால் உணர்த்தப்படுகிறது. அருமருந்தாக விளங்கும் இவைகள் மாற்றங்களுக்கு என்றும் வழிவகுத்தபடியேதான் இருக்கின்றன என்பது உண்மையல்லவா?

‘பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ ” – என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசபதவி வகித்தபோதும் அவர் மனத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.

கவித்துவம் மிக்க சேக்கிழார் – தனது சிந்தனையைச் சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்லவிட்டார். அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப்பிரசாதம்தான் “பெரியபுராணம்” ஆக அமைகிறது. தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதற்கு ஒப்ப – சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் – சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம் நாமும் மாற்றத்துக்கு ஆளாகிவிடுவோம்!

பெரியபுராணத்தில் வரும் அடியார்களின் மாற்றங்கள் யாவும் நிகழ்வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களும்தான்.

நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில். நாவுக்கரசரை மாற்றியதும் கோவில். சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரர் மனம்மாறி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவில்தான். முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத்ததும் கோவில்தான்.

அறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு – சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரணமெனலாம்.இதனால்தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணியிலும், கோவிலுடனும் இணைத்துக் கொண்டார்கள்.இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில்கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.

சம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ்சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான் எமது சைவத் திருமுறைகள். கோவில்தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச்சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும் – இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.

இவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பலரை மாற்றமுறச் செய்தது. இதனால் நன்னெறி வளர்ந்தது. கோவில் வழிபாடும் சிறப்படைந்தது. நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் – இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் – அறவழியில் செல்லவும் – உதவியதை மறக்கமுடியாது. இவை நல்ல மாற்றங்கள்தானே!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *