நாகேஸ்வரி அண்ணாமலை

தமிழ்நாடில் சில காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளும் காதலர் தினத்தன்று அதிரடியாக உச்சநீதிமனறம் அளித்த தீர்ப்பும் தமிழ்ப் படம் ஒன்றை இடைவேளைவரை பார்த்த ஒரு உணர்வை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது.  இன்னும் மீதிப் படமும் க்ளைமேக்ஸும் பாக்கியிருக்கின்றன.

இதற்கிடையில் தமிழக மக்களை அடுத்த தேர்தலுக்குத் தயார்படுத்துவது சமூகத்தில் இருக்கும் சில சிந்தனையாளர்களின் கடமை ஆகிறது.

பிப்ரவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு நம் முன் சில உண்மைகளை வைத்திருக்கிறது.  தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்.  பதினாலாம் தேதிய தீர்ப்பு மிகத் தாமதமான தீர்ப்பு என்றாலும் முழுமையாக மறுக்கப்பட்ட நீதி என்று சொல்ல முடியாது.  வழக்கில் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர் இறந்துவிட்டாலும் மற்ற மூவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு நிம்மதியைத் தருகிறது.

தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா சசிகலாவைத் தன்னுடன் வைத்துக்கொண்டது அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அல்ல என்றும் தான் சட்டத்திற்குப் புறம்பாக பல ஊழல்கள் புரிந்து சேர்த்த பணத்திலிருந்து தமிழக மக்களை அச்சுறுத்தி வாங்கிய சொத்துக்களை மறைப்பதற்குத் தேவையான பினாமிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் சில தவறுகளை மறைக்கவும் சசிகலாவைத் தன்னோடு வைத்துக்கொண்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.  (இதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது.  ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் இதைக் கூறியிருக்கிறார்கள்.)  ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதற்காக அவர் மீதுள்ள எந்தக் குற்றங்களையும் குறைத்து மதிப்பிடவில்லை நீதிபதிகள்.  ஊழல் புரிந்தவர் என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்கள்.  மற்ற குற்றவாளிகளையும் நடு நிலையில் நின்று அவர்கள் புரிந்த குற்றங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.  மேலும் நாட்டில் அரசியல் ஊழல்கள் மலிந்துவருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருந்து இனிமேலாவது ஊழல்செய்பவர்களை அவர்கள் அப்படி ஊழல் செய்யாமல் தடுக்கவேண்டும் என்றும் இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  இந்த அறிவுரையைத்தான் நான் தமிழக மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்

ஊழல் புரிவதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றும் சொல்லப்போனால் ஜெயலலிதா முதல் சூத்திரதாரி என்றும் சசிகலா அவருக்குத் துணைபோன இரண்டாவது சூத்திரதாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இது இப்படி இருக்க ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல் மந்திரி பதவி வகிக்க நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வம் (பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியைப் பறித்துக்கொள்ள மாட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஜெயலலிதா அவரை முதல் மந்திரி பதவியில் அமர்த்தினாரேயொழிய அவர் மீது இருந்த அதி அன்பினாலோ அவருடைய திறமையினாலோ அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.) ஜெயலலிதாவை ஊழலே புரியாத அரசியல்வாதி போலவும் எல்லா ஊழல்களுக்கும் காரணகர்த்தா சசிகலா போலவும் பேசிவருகிறார்.  அன்றுவரை சசிகலாவுக்கு அடிபணிந்தவர் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று நாற்பத்து ஐந்து நிமிஷம் தியானத்தில் மூழ்கி ‘அம்மாவின்’ ஆசி பெற்று சசிகலாவை எதிர்க்கத் துணிந்தாராம்!  சசிகலா ஊழல் புரிந்தவர் என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல் புரிந்தவர் என்றுதானே நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.  பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை புடம் போட்ட தங்கமாக ஜெயலலிதா மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிவந்திருக்கிறார்.  இது எப்படி சாத்தியம்?  சசிகலா சிறைக்குச் செல்வது சரிதான் என்று கூறும் பன்னீர்செல்வம் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்?  இது என்ன முரண்பாடு?  ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறாராம்!  அவரைவிட அதிக ஊழல்கள் புரிந்து தமிழ்நாட்டை ஊழல் சக்கரவர்த்திகளின் கூடாரமாக மாற்றப் போகிறாரோ என்னவோ.

தமிழக மக்களே, தயவுசெய்து சிந்தியுங்கள்.   தமிழக சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அம்மாவின் வழியில் வந்த யாருக்கும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்.  நீதிமன்றமே அம்மாவைப் பற்றிய இந்த மதிப்பீட்டை வழங்கிய பிறகு இனிமேலாவது ‘அம்மா தெய்வம், தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது’ என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்காதீர்கள்.  (உங்களது இதய தெய்வமான அம்மாவை மனிதனால் தண்டிக்க முடியாது என்பதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறினாலும் கூறுவீர்கள்.)  தமிழ்நாட்டில் எதிலும் எங்கும் ஊழல் நீக்கமற நிறைவதற்கு வித்திட்டுத் தன்னை ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துபவர் என்று காட்டிக்கொண்ட அம்மாவின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.  ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கியதன் மூலம் தன்னைத்தானே எப்படி வளப்படுத்திக்கொண்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  சசிகலா ஊழல் பேர்வழி என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல்வாதி என்னும் உண்மையை மறைக்கும், இரட்டை வேடம் போடும் பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகளைப் பொதுவாழ்வில் இருந்தே நீக்குங்கள்.  அம்மாவின் வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியையும் நம்பாதீர்கள்; அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.  இதை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ்நாடு இதைவிடப் பெரிய ஊழல் நாடாக மாறும்.    அ.தி.மு.க. மட்டுமல்ல, மற்ற எந்த ஊழல் கட்சி வேட்பாளர் என்றாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.  இப்போது பண மதிப்பு நீக்கம் அமலில் இருந்தும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு யார் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பது என்ற போட்டியில் ‘குதிரை பேரம்’ நடக்கிறது, கோடிக்கணக்கில் பணப்புழக்கம்  இருக்கிறது.  இதுவரை இந்தக் கட்சிகள் நம்மை முட்டாளடித்தது போதும்  இனியாவது அப்படிச் செய்யாமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.  எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.  நாம் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு நம்மை ஆள அனுமதி கொடுத்தால்தானே இவர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அமிதவா ராய் கூறியுள்ள அறிவுரையைக் கேளுங்கள்.  ஊழல் கொடிய நோய் போல் சமூகத்தில் பரவிவரும்போது ஊழல் புரிபவர்கள் மக்களிடம் ஒரு பயத்தையும் பக்தியையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அப்போது நேர் வழியில் போக நினைக்கும் மனிதர்களுக்கு மூச்சுத் திணறுகிறது.  அவர்களின் நிலை என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.  ஊழல் புரிபவர்களை சமூகத்திலிருந்து நீக்குவதற்கு ஒட்டுமொத்தமாக எல்லோரும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுங்கள்.  சுதந்திர இந்தியாவுக்காக போராடியது போல இந்த ஊழலுக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தில் தன்னலம் இல்லாமல் அனைவரும் ஈடுபட வேண்டும்.  இது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட என்கிறார் நீதிபதி.

தமிழக மக்களே, இனி மேலாவது விழித்தெழுங்கள்.  நம் உரிமைகளைக் காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழக மக்களே உஷாராகுங்கள்

  1. காலம் கடந்த நீதி .இதனால் பாதிக்கப்படுவது தமிழ்  மக்களாகிய 
     நாமே.
    ஜெயலலிதா  குற்றவாளி என்பதனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலே செல்லாதது என உச்ச நீதி மன்றம்  அறிவித்து இருந்தால்….
    ம்ம்  நினைப்பதற்கு  நன்றாகத்தான் இருக்கிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.