மீனாட்சி பாலகணேஷ்

 

அடியவரின் ஆவலான கேள்விகள்!

குழந்தை செங்கீரையாடுதலுக்கு இருவிதமாகப் பொருள் கூறப்படுகின்றது. முதலாவது, தவழும்பருவத்துக் குழந்தை, ஒருகாலை மடித்தும், மறுகாலை நீட்டியும் தலையை உயர்த்திப் பார்த்தும் தன் பவளவாயிலிருந்து அமுதத்திற்கு ஒப்பான உமிழ்நீர் ஒழுகத் தவழும் அழகினை விளக்குவது; மற்றொன்று, பொருளற்ற ஓசைகளை எழுப்பித் தாய்தந்தையரை மகிழ்விப்பது. கீர் என்றால் சொல் என்பது பொருள். நக்கீரர் என்பது நல்ல சொற்களைக் கூறுபவர் எனப் பொருள்படும். திருத்தமான பொருளற்ற மழலையொலி குழந்தை எழுப்புவதாம். இத்தகைய மொழியைக் கூறுதல் என்பது மங்கல வழக்காகச் செங்கீரை ஆடுதல் எனப்பட்டது. இந்த ஒலியை எழுப்பும் பருவமே செங்கீரையாடும் பருவம் எனவும் கூறலாம்.

amee
‘ங்க்கா’ ‘ங்க்கு’ என நீரொழுகும் வாயைத்திறந்தும், பேசுவதனைப்போல் தலையை ஆட்டியபடியும், உற்சாகத்தில் குழந்தை தவழ்ந்தாடும். இதனைக் கண்ட தாயும் மற்றவர்களும் அக்குழந்தை எதனையோ பேச முயல்வதாகக் கருதி மகிழ்வார்கள். தாய் தலையசைத்துப் பேசுவதனைப்போலத் தானும் செய்ய முனையும்; முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் இதனைப் ‘போலச்செய்தல்,’ எனக் குறிப்பிடுவார்கள் என்கிறார்.

தாய் குழந்தையிடம் உரையாடுவது போன்றுஅடியார்கள் குழந்தை வடிவாகத் தாம் காணும் அன்னை தெய்வத்திடம் வரம் கேட்கிறார்கள். இதனைத் தாய் உளவியல் அல்லது அடியார்களாகிய மானிடர்களின் உளவியல் எனலாம். எப்போதுமே சிறுகுழந்தையை தெய்வவடிவாகக் காண்பது இந்தியப் பாரம்பரிய எண்ணம். அதிலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் தெய்வத்தைக் குழந்தையாக்கிப் பாடும்போது, தமது எல்லையற்ற அன்பை அக்குழந்தைமீது சொரிந்தும், தமது துன்பங்களைத் துடைக்கும் பரம்பொருளாக அத்தெய்வக்குழந்தையைக் கண்டு வேண்டுவதாகவும் பாடுவார்கள். தெய்வம் ஒன்றே நமது பிறவித்துயரைத் துடைக்கவல்லது என்பது இந்துக்கள் தீவிரமாக நம்பும் ஒரு கருத்து. அத்தெய்வத்தைக் குழந்தையாக்கி வழிபடும்போதிலும் பிறவித்துயரைத் துடைக்கவேண்டுவார்கள். இந்த உளவியல் கோட்பாட்டினை ஒற்றியே பிள்ளைத்தமிழ் நூல்களில் சில பருவங்களில் பாடல்கள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது.

கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் எழுதியுள்ள சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள செங்கீரைப்பருவப் பாடல்கள் இரண்டினை நாம் இங்கு காணப்போகிறோம்.

பெண்மகவு தனது வாயில் தேன்போலும் உமிழ்நீர் ஒழுக, தவழ்ந்தாடி வருகிறாள். “என்னிடம் ஓடிவா தாயே!” என அன்புமீதூர அழைக்கும் தாயினிடம் ஓடோடிச் செல்கின்றாள். நிமிர்ந்து தாயை நோக்கும் தலை; ஆசையும் அன்பும் பாசமும் பெருகத் தாய் (அடியார்) தனது குழந்தையை நோக்குகிறாள். அன்னை பராசக்தியே அங்கு அவள் கண்களுக்கு குழந்தையாகத் தென்படுகிறாள். பக்தியினால் புளகாங்கிதமுற்ற (அடியாரெனும்) அன்னை கேட்கிறாள்:

“நான் உனது அடியவள்; நீயே எனக்கு எல்லாம் என இருப்பவள்; ஆகவே, என்னை இனிமேலும் அன்னையர் வயிறாகிய பிறவிச்சேற்றினில் (அளறு- சேறு) திரும்பத் திரும்பப் பிறக்குமாறு செய்வாயா? எண்ணுதற்கு அரிய துயரங்களை எமக்களித்து பிறப்பு எனும் தண்டனையை எமக்குக் கொடுப்பாயா? எம் உடலில் பொருந்தியிருந்து மாறிமாறி எம்மை மயக்கும் ஐம்பொறிகள் காட்டும் வழியில் உழலுமாறு எம்மைச் செய்து விடுவாயா? பெண், பொன், மண் எனும் மூவாசைகள் (வேடணைகள்) எம்மை விடாமல் தொடர்ந்து வந்து துயர்செய்ய விடுவாயோ? உன்னுடைய மலரடிகளைப் பணிகின்ற அன்பில்லாதவர்களின் குழுவில் நாங்களும் சேர்ந்துநின்று உன்னையே மறந்துவிடச் செய்குவையோ?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்(ள்). ‘இவ்வாறெல்லாம் எம்மைச் செய்துவிடாதே,’ எனும் ஆதங்கம் இவ்வடிகளில் தொனிப்பதனைக் காணலாம்.

ஒரு ஆதங்கத்தில், பக்திப்பெருக்கில், இவ்வாறு வினவிய தாய், பின்னர் இது வாய்திறந்து மறுமொழி உரைக்க இயலாத சிறுகுழந்தை என (ஒரு தாயின் போக்கில்) உணர்ந்து குழந்தையின் தலையசைப்பையே தனக்கு அது கூறும் மறுமொழியாகக் கருதுகிறாள். அதற்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள்.

“நான் கேட்கும் இந்த வினாக்களுக்கெல்லாம் நீ தயை புரிந்து எதிர்மறையாக விடைதருவது போல (அதாவது ‘இல்லை இல்லை! இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேன்’ எனக்கூறுவது போல) உனது தலையை (சென்னியை) இருபுறமும் அசைத்து, எனதன்னையே! நீ செங்கீரையாடி வருவாயாக!” என வேண்டி உள்ளம் கசிந்து பாடுகிறார். கேட்கவே இனிமையாக இல்லையா? உள்ளம் உருகவில்லையா?
குழந்தையும் தாய் தன்னிடம் ஏதோ கேட்பதைக் கண்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்கிறது. தாயின் உடலும் உள்ளமும் மறுமொழி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறன.

இன்னுமுன் அடியரெமை அன்னையர் வயிற்றளறில்
இருமென்று புகவிடுவையோ?
எண்ணுதற் கரியதுயர் பண்ணிவெளி வருபிறப்
பென்றதண் டனையிடுவையோ!
மன்னிநின் றெமைமாறி மாறிமயல் செய்பொறிகள்
வழியிலே உழல்விப்பையோ?
மாதர்பொன் மண்ணென்ற வேடணைகள் வீடாது
வந்துதுயர் செயவிடுவையோ?
நின்மலர்த் தாள்பரவு மன்னுமன் பிலர்குழுவில்
நின்றுனை மறப்பிப்பையோ?
நீதயை புரிந்துமொழி கெனும்வினா வுக்கெதிர்
நிகழ்த்திமறை விடைவிடுதல்போற்
சென்னியிரு புறமசைத் தென்னவென் னன்னையொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!

(சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

ame2
இதற்கு சைவசித்தாந்த அருளாளர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார்: அவருடைய சொற்களிலேயே அதனைக் காண்போமே! :: சிவசக்தியாகிய அருட்சத்திதான் உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காக மாயையிலிருந்து உடல், கருவி, உலகு, போகங்கள் ஆகியவற்றை அளித்துப் பிறப்பு- இறப்பில் செலுத்துகின்றது எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது. உயிரறிவை விளக்கும்பொருட்டுக் கூட்டப்பட்ட மாயை, உயிரின் ஆணவமல சம்பந்தத்தால் அறிவை மயக்கம் செய்கின்றது. அந்த மயக்கம் தீர, திருவருளாகிய சிவசத்தியின் துணைவேண்டும். அடியான் தன் அச்சத்தைக் கூறி இத்தகைய துன்பத்தில் யான் புக என்னை விடுவையோ என வினா நிகழ்த்தி, குழந்தையாகிய சிவசத்தியிடம், ‘நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்ற எதிர்மறை விடையைத் தலையை இருபுறம் அசைப்பதிலிருந்து பெற விழைகின்றான். சிவபக்தி நிறைந்த ஒருவர், தம்முடைய மானுடக்குழந்தையிடம் இவ்வினாக்களைக் கேட்டு, அக்குழந்தை எதிர்மறை விடையாகத் தலையசைக்க சிவசத்தியே தம்மைத் தெளிவிப்பதாகக் கருதி இன்பம் அடைவார்.

ஆசையுடன் அருமையாகப் பெற்றெடுத்த தன் குழந்தையே தாய்க்குப் பெரும் செல்வம். அக்குழந்தையைத் தனது தவப்பயனாகவும், குலதெய்வமாகவும், தன்னை வாழவைக்க வந்த பரம்பொருளாகவும், தனது உயிர் என்றும், கண் என்றும், கண்ணின் ஒளி எனவும், தான் பெற்ற பெருஞ்செல்வம் என்றும், தன்னைப்பெற்ற தாயாகவும் போற்றிக் கொண்டாடுவாள் அன்னை.

இந்த உளக்கருத்தில் இவ்வுத்தியை தாயின் நிலையில் நின்று கவிஞர் கையாண்டு அழகுறப்பாடுகிறார்:

“முன்பு ஒரு காலத்தில் தேவர்கள் குழு தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருந்தது; அப்போது அங்குசென்று அவர்களிடையே ஒரு துரும்பை நட்டு அவர்களுடைய அகந்தையை அழித்தானே அந்தச் சிவபிரான்தான் உனது மேனியின் ஒரு பாகத்தைக் கொண்டவனோ தாயே? அவனுடைய அருள் என விளங்கும் குணமும் நீயேதானோ?*

(* ‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்,’ எனும் திருமந்திர வரிகள் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஒன்றேயான பரம்பொரும் உயிர்களுக்கு அருள்செய்யும்பொருட்டு இரண்டாகி, அவனது அருளாகி, சக்தி எனும் பெயரும் வடிவும் கொண்டு நிற்கின்றதாம்)

“என்றென்றுமே, பிறப்பு, இறப்பு, இவை தொடர்பான மலங்கள் முதலியன இல்லாமலிருத்தல் என்பதுதான் உமது இயல்போ? எண்ணிறந்த சராசரங்களாகிய உலகங்களை ஈன்றெடுத்து அவற்றில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நீ இனிய நற்கதியைத் தருவீர் அல்லவோ?

ame
“உனது திருக்கோவிலில் நின்று கண்ணில் காணும் காட்சியாக உன்னைத்தொழுது வணங்கும் எளிய அடியாருக்கும் நீ அருளுவது உன்னுடைய வழக்கம் அல்லவா? இங்ஙனம் எல்லாம் அருளி எம்மை நீ எப்போதும் வாழ்விப்பாயா என நாங்கள் விருப்பமுற்றுக் கேட்டு நிற்கிறோம். ‘ஆம்’ எனும் விடை வழங்கும் முகமாக நீ உனது திருமுகத்தினை அசைத்து எங்களுக்குக் குறிப்புணர்த்தியபடி செங்கீரையாடியருள்வாயாக! (சென்ற பாடலில் எதிர்மறை விடையினை வேண்டித் தலையசைப்பை எதிர்பார்த்த தாய் இப்பாடலில் ‘ஆம்’ எனும் குறிப்பைத் தலையசைப்பினால் உணர்த்த வேண்டி நிற்கிறாள்).

“சீகாழியில் மேவும் திருநிலைநாயகியாகிய சுந்தரவல்லியே, செங்கீரையாடி அருளுவாயாக,” என வேண்டுகிறார் கவிஞர். இவ்வாறு குழந்தையின் தலையசைவுகளுக்கேற்ப மறுமொழிகளைக் கொண்டு மகிழ்ச்சியடையும் தாயின் இயல்பு அடியவராகிய கவிஞருக்கு அந்தப் பரம்பொருளின் பெருமைகளைப்பாடி மகிழும் உத்தியாக அமைகிறது.

இப்பாடல்கள் தாயினுடையவும், அவள் நிலையில் தம்மை இருத்திப் பரம்பொருளைக் குழந்தையாகக் கண்டு வணங்கும் பக்தனுடையவும் ஆகிய இருவருடைய மனநிலைகளையும் அவற்றில் எழும் சிந்தனைகளையும் மிக அழகாக விளக்குகின்றன. பாடப்படும் இப்பாட்டுடைத்தலைவி, குழந்தையா தெய்வமா எனும் சந்தேகத்திற்கே இடமில்லை. இருவரும் ஒன்றே- குழந்தையும் தெய்வமும் போற்றப்படவேண்டியவர்களே என்பது நன்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றமர் குழுவினிடை சென்றொரு துரும்புநட்
டவரகந் தையையழித்த
ஆற்றல்மிகு மாண்டகையு னொருபுறத் தான்கொலோ
அவனருட் குணமுநீயோ!
என்றுமுதி யாமைமரி யாமைமல மில்லாமை
என்பனவும் மியல்கொலோ?
எண்ணில சராசரந் தம்மையீன் றுயிர்களுக்
கினியகதி தருவீர்கொல்லோ?
மன்றினிடை நின்றுவெளி கண்டுதொழு வார்க்கருள்
வழங்குவது முண்டுகொல்லோ?
வாழ்விப்பி ரோவென வினாவினோம் விதிவிடை
வழங்குதிரு முகமசைத்தே
தென்றலி லிளம்பசிய கொடியென்ன அம்மையொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!!

(வெளி- மேற்பார்வைக்குக் காணும் காட்சி)

(சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை கடவுள்கள் மீதானவையே! இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் ஒவ்வொரு பருவத்தினையும் புலவர்கள் பாடும்போது அப்பருவத்திற்கான பத்துப்பாடல்களில் சில, அழகான கதைகளையும் தொன்மங்களையும் இணைத்தும், வேறு சில, சந்தநயம் மிகுந்தும், இன்னும் சில பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் கடவுட்தன்மையைப் போற்றியும் பாடப்படும். இத்தகைய பாடல்களில், அவை அன்னையைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூலாக இருப்பின், சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்து பொலிவனவாகப் பாடுவது பெரும்புலவோரின் தனிச்சிறப்பு. அவ்விதத்தில் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது சைவசித்தாந்தப் புலமையையும் பற்றையும் இலைமறைகாயாக இப்பாடல்களில் மிகவும் எளிமையாக ஆயினும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியவையாகக் காட்டியுள்ளது வியக்கத்தக்கதாம்.

இவை போலும் சிறப்புகளை வெவ்வேறு பிள்ளைத்தமிழ் நூல்களில் இனிவரும் அத்தியாயங்களில் தொடர்ந்து காண்போம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *