Tag: பா. ராஜசேகர்

  • உலகம் போற்றும் மாமனிதர் !

    -பா. ராஜசேகர்

    இந்தியப்பெருங்கடல் ஓரம்
    இளஞ்சிங்கம் துயில்வதைப் பாரீர் !
    மக்கள் மனங்களில் புதைந்து
    மனக்கண்ணில் அழுவதைப் பாரீர் !

    வஞ்சங்கள் இல்லாத நெஞ்சம்
    பிஞ்சுகள் இவரைக் கொஞ்சும்
    தேசத்திற்கு இவரே தந்தை
    பாசத்தில் திளைத்தாரே விந்தை !

    மதஒற்றுமைக்கு இங்கில்லை நிகராய்க்
    கற்பித்தலைக் கொண்டாரே உயிராய்…
    பண்பாளன் மாமனிதர் மேன்மை
    பாமரனும் அறிந்ததுதான் உண்மை !

    விந்தை மனிதனே என் தலைவன்
    என் சிந்தை நிறைந்த முதல்வன்
    மாந்தருக்கு நீ விதைத்த அறிவு
    நாளை ஆலமரமாகும் என் தெளிவு !

     

    Share
  • இறை காணிக்கை நீ!

    -பா. ராஜசேகர்

    மாணவர்களுக்காகப்
    பிறந்த மாணிக்கம் நீ
    மனிதருக்காக
    இறைதந்த காணிக்கை நீ!                 abdul_kalam1

    கேளிக்கைகள்
    நிறைந்த உலகில்
    கோரிக்கைகள்
    உனக்கில்லா மனிதன் நீ!

    சோதனைகள்
    தாண்டிய சாதனை நீ
    சாதனையிலும்
    கலையாத கவுரவம் நீ!

    மகனுக்கு குருவே தந்தை
    இந்தியமக்களுக்குக்
    கலாமே நீயே தந்தை!

    வாழ்வியல் சிறக்க
    அடிப்படைக் கல்வி
    கல்வியில்
    உன்படை பெருக்கினாய்!

    உயிரிலே
    கருணை பரப்பினாய் நீ
    உயர்விலே
    உன் புகழ் உசுப்பினாய் நீ!

    அன்பே
    ஆருயிரே
    உலகமெல்லாம்
    உன் புகழ் வாழவேண்டும்!
    உன் கனவுகாண
    நல் மனிதர்கள் பிறக்கவேண்டும்!

     

    Share
  • மலை மகளே வருக !

    -பா.ராஜசேகர்

    பச்சையிலே பட்டுடுத்திப்
    பாறையிலே முகம் புதைத்து
    நாணலாக இடையசைத்துத்
    தவழ்ந்துவரும் மலைமகளே !                 falls

    வான் பொழிந்த புன்னகையிலே
    மலையரசி பெற்ற மலையருவி
    வறட்சிகண்ட உயிரினங்கள்
    மகிழ்ச்சிகொள்ள வந்த பேரழகே !

    இளமை பொங்க இருகரையும்
    மனமகிழ்ந்து ஓடி ஆடி
    நீ ஆர்ப்பரித்துக் கொட்டும்
    அழகுக்கு ஈடு இணை இல்லையடி!

    இயற்கை தந்த இன்பத்திலே
    உன் சிரிப்பொலியே
    எமக்குப் பசுமைச் சொர்க்கமடி !

     

    Share
  • நீ அவளில்லை!

    -பா. ராஜசேகர்

    கண்ணசைத்தாய்
    மெல்லச் சிரித்தேன் !

    புன்னகைத்தாய்
    கை கொடுத்தாய்
    மெல்ல அணைத்தேன்!

    துள்ளிக்குதித்தாய்
    முத்தமிட்டாய்
    மனம் மகிழ்ந்தேன்!

    உனை அணைத்துத்
    தெருமுழுதும்
    வலம் வந்தேன் !

    ஆற்றில் கலந்தாய்
    ஏரி குளம் நிறைந்தது
    பலன் தந்தாய் !

    காதலித்தேன்
    என்னையே மறந்தேன்
    கிராமத்து மழையே !

    நகரம் வந்தேன்
    பின்தொடர்ந்தாய்!

    புன்னகைத்தாய்
    மெல்லச் சிரித்தேன் !

    துள்ளிக்குதித்தாய்
    நீ சேரும் இடம்
    சகதி கண்டேன்
    திரும்பிவந்தேன் !

    உன்னையே மறந்தேன்
    நீ அவளில்லை
    நகரத்து மழையே !

     

    Share
  • மனித சாதிக்குப் பிறந்தவன் நீ படி!

    பா. ராஜசேகர்

    சாதிகள் இல்லையடி பாப்பா
    பாரதி கனவுகள்
    கனவான கதை நீ படி !

    அமரும் இருக்கை புடிக்கல
    தேநீர்க் கோப்பை புடிக்கல
    சாதிமட்டும் புடிக்குது நீ படி !

    எதிரே வந்தாப் புடிக்கல
    எழுந்து நின்னாப் புடிக்கல
    ஏர் உழுதாப் புடிக்குது நீ படி !

    இவன் வெளுத்த துணியப்
    போட்டுச் சிரிக்கிறான் எதிரே நின்னா
    மொறைக்கிறான் நீ படி!

    பெரியார் கொள்கையென அழுறான்
    சாதி நூறு சொல்லுறான்
    ஓட்டு வங்கிப் பாக்கிறே
    யாரை ஏமாற்றப் பாக்கிறே ? நீ படி!

    சாதிகள் இல்லையெனச்
    சொல்லித்தரும் வாத்தியாரே
    சாதிச்சான்று கேட்கிறார் நீ படி !

    பிஞ்சு மனம் வெம்புது
    நஞ்சை இங்கு விதைப்பது
    பாடம் சொல்லும் முறையாடா? நீ படி !

    சாதியை நம்பும் மனிதனே
    எதிரில் நிற்கும் ஒருவனை
    எதைவைத்துச் சாதி கண்டுபிடிப்பீரோ? நீ படி !

    சாதிக்குப் பிறந்தவன்
    உண்மைதான்
    மனித சாதிக்குப் பிறந்தவன் நீ படி!

    பழைய சாக்கடைக்
    கதையெல்லாம் விட்டுடு
    சாதிக்கலாம் வா தோள்கொடு நீ படி !

     

    Share
  • வெற்றிக்கொடி கட்டு!

    -பா.ராஜசேகர்

    இன்பமெல்லாம்
    இன்பமில்லை
    துன்பமில்லா
    இன்பம் கண்டாரில்லை !

    துன்பம் கண்டுத்
    துயரம் கொண்டு
    இன்பம் கண்டார்
    தோற்பதில்லை !

    தோல்விகள்
    நிலையானதென
    எண்ணிடாதே!

    துன்பங்கள்
    நிலை கொண்டால்
    அஞ்சிடாதே !

    சுற்றிவரும்
    உலகைப்பார்
    சோர்ந்திடாதே!

    தோல்விகளைக்
    காலடியில்
    படியாக்கு
    முயற்சியே
    உன் முதலீடு !

    நம்பிக்கைப்
    படியேறு
    வானம் தூரமில்லை !

    வெற்றிகள்
    விண்ணை முட்டும்
    உலகமே
    உன்தோளைத் தட்டும் !

     

    Share
  • மனிதம் எங்கே ?

    -பா.ராஜசேகர்

    தாயின் நோயும்
    தங்கையின் பசியும்
    என் கண்முன்
    அவலம் அள்ளுவது வலித்தன்று…

    மனிதம் மரத்துப்போனவனே!
    உன் கழிவை நீக்க
    குடித்த மதுவால்
    தந்தை உயிரைக் குடித்ததும்
    எங்கள் வாழ்வைக் கெடுத்ததும்
    உனக்கெங்கே தெரியும்…?

    மனிதம் மரத்துப்போனவனே!
    நீ அழுக்கைக் களையக்
    குளிக்கிறாய்
    எங்கள் அடுப்பெரிய
    அழுக்கிலே குளிக்கிறோம்!

    மனிதம் மரத்துப்போனவனே!
    உன் கழிவுகளில்
    செல்கள் செத்து
    மனமும் பித்துப்பிடித்து
    நாடிநரம்புகள் தொலைந்தும்
    தீண்டாமை மருந்துதெளிக்கிறாய்

    மனிதம் மரத்துப்போனவனே!

    Share
  • ரமலான் நோன்பின் மகிமை!

    -பா.ராஜசேகர்

    நரகத்தின்
    வாசலைத் தாளிடு
    ரஹ்மத்தின்
    வாசலைத் திறந்திடு !

    இஸ்லாத்தின்
    தத்துவம் மேன்மையே
    இறைவன்
    அருளியது உண்மையே!

    உண்ணாமை
    மட்டும் நோன்பல்ல
    ஐம்புலனை
    அடக்கினால் தீங்கல்ல!

    பசித்திரு
    பிறர்பசியறி நீகொடு
    வலியறி
    மனமிரங்கு உதவிடு !

    நாவடக்கு
    புறம்பேசும் பழிவிடு
    செவிமடு
    தீயவைகளை நீவிடு!

    இச்சைகளை
    நீ தவிர்
    நிச்சயமில்லா
    இவ்வுலகம் நீ உணர் !

    ஆன்மிகம்
    தழைக்கவும்
    மனிதம்
    செழிக்கவும்
    மனிதா…
    துளியேனும்
    இறைவணங்கு !

    ரமலான்
    வாழ்த்துக்கள் நண்பர்களே !

     

    Share
  • ஈகைக் குணம் நன்றே !

    -பா.ராஜசேகர்

    சிந்தையிலே
    விந்தையுண்டு
    பிறர்க்குதவும்
    குணமும் ஒன்று !

    இல்லாதோர்
    காண்கையிலே
    இளகிநின்று
    மனம் நோகும் !

    பிறர்க்கீய
    மனம் துடிக்கும்
    தன்
    பசி மறக்கும் !

    மறுநொடி
    மடிதேடும்
    உதவும்
    மனம் மகிழும் !

    பலன் காணாது
    பழகும்
    வரம்கண்டு
    வாழும் !

    சிந்தையிலே
    அரிய விந்தை
    வள்ளல்
    குணம் ஈகை !

    செல்வத்துள்
    சிறப்போன்றே
    இச்செல்வக்
    குணம் நன்றே !

    பிறர்க்குதவத்
    தேவை
    செல்வச்செழிப்பல்ல…
    மனக்களிப்பே!

     

    Share
  • கருத்துச் சுதந்திரம்!

    -பா. ராஜசேகர்

    மனத்தெண்ணம்
    வெளிக்கொணர்ந்து
    பகிர்ந்துண்ணும்
    சுதந்திரம்!

    கருத்துக்கள்
    முரண்படினும்
    பிறர் புண்படுத்தாச்
    சுதந்திரம் !

    பிறர் மானம்
    மரியாதை
    கெட இடங்கொடாச்
    சுதந்திரம் !

    உடல் பொருளும்
    தனி மனிதம்
    சேதமில்லாத
    சுதந்திரம் !

    அண்டையர்
    மத நம்பிக்கை
    பழித்திடாச்
    சுதந்திரம் !

    துரத்துகின்ற
    வாதங்கள்
    பிடிவாதமாகாச்
    சுதந்திரம் !

    எதிர்வாதம்
    மதிப்பளிக்கும்
    மிதவாதமான
    சுதந்திரம் !

    கருத்துக்கும்
    கற்புண்டு
    கண்ணியமான
    சுதந்திரம்!

    அடிப்படை
    உரிமைகளில்
    பொறுப்பானது
    சுதந்திரம்!

    சிந்தனைகள்
    சீர்தூக்கச் சேதிகளைச்
    செப்பனிடும்
    சுதந்திரம் !

    பிறர் மனம்
    மதிப்போம்
    கருத்துரிமை
    காப்போம் !

     

    Share
  • தந்தை ஒரு பொக்கிசமே !

    -பா. ராஜசேகர்

    தந்தையால்
    இவ்வுலகில்
    கால் பதித்தேன்!

    சிந்தையில்
    இரவு பகல்
    முகம் பதித்தேன் !

    பந்தியில்
    அமர்ந்துண்டேன்
    அவன் உழைப்பில்!

    அஞ்சினேன்
    தவறிழைக்க
    முகம் கண்டு !

    துஞ்சினேன்
    அரவணைப்பில்
    தினம் உண்டு !

    மிஞ்சினேன்
    கல்வியிலே
    அவன் பங்குண்டு !

    வீதியில்
    நடக்கையிலே
    அவன் மகனாய் !

    வெற்றிகள்
    குவிக்கையிலே
    தினம் பெருமிதமே !

    சுதந்திரம்
    தினம் உணர்ந்தேன்
    அவன் தந்திரத்தில் !

    சாத்திரங்கள்
    எடுத்து வைப்பான்
    என் நன்மைக்காக !

    மந்திரம்
    தந்தை சொல்லே
    உண்மையாக !

    பொத்திப் பொத்தி
    வளர்த்தானே
    நான் பூமிவாழ !

    பொக்கிசமே
    தந்தை என்பேன்
    உலகம் வாழ !

     

    Share
  • எண்ணித் துணிக கருமம்!

    -பா.ராஜசேகர்

    அன்பும்
    பண்பும்
    பாசம் தரும் !

    உண்மையும்
    உழைப்பும்
    ஊக்கம் தரும் !

    கல்விச்
    செல்வமே
    புகழைத்தரும் !

    கருமை
    மேகமே
    மழையைத் தரும்!

    காதலில்
    தூய்மை
    மேன்மை பெறும் !

    மழலைச்
    செல்வமே
    மகிழ்வைத் தரும்!

    ஒவ்வொரு
    இரவும்
    பகலைத் தரும் !

    ஒளிகண்ட
    நிலவே
    வெளிச்சம் தரும் !

    நல்நிலம் கண்ட
    முளையே
    விளைச்சல் தரும் !

    தொய்வில்லா
    முயற்சியே
    வெற்றியைத் தரும்!

    மாற்றத்தில்
    நன்றே
    சிறப்பைப் பெறும்!

    துன்பத்தின்
    பின் இன்பமே
    இனிமை தரும் !

    கருணை
    மனமே
    இறையருள் பெறும்!

    Share
  • மனமுருக்கம் !

    -பா.ராஜசேகர்

    செடிகொடிகள்
    பசி கொண்டு
    வான் நோக்கும் !

    மேகங்கள்
    கலந்தாடிக்
    கருத்தரிக்கும் !

    கருமேகங்கள்
    மனமுருகி
    மழை பொழியும் !

    மண் குளிரும்
    வளம் கொழிக்கும் !

    மகரந்தம்
    மலர்தாவும்
    கனி பிறக்கும் !

    இறக்கை
    சிறகடிக்கப்
    பறவைகள் பசியாறும் !

    இயற்கையின்
    இலக்கணமே
    மிக நெருக்கம் !

    மனமுருக்கம்
    ஒன்றேதான்
    மாற்றும் என்பேன் !

    சுழலுகின்ற
    உலகுக்கும்
    மனமிருக்கு !

    கனிந்த மனம்
    வாழ்வியலைச்
    சிறப்பாக்கும் !

    வாழ்க்கைக்கு
    அர்த்தத்தை
    உருவாக்கும் !

    வாழ்கின்ற
    காலம் மிக
    கொஞ்சமையா !

    வாழ்த்துகின்ற
    உள்ளங்களில்
    துஞ்சுமையா !

     

    Share
  • உலாப்பேசி !

    -பா.ராஜசேகர்

    தென்றலும்
    பறவையும்
    மேகமும்
    தூது அப்போ!

    காலமெல்லாம்
    மாறிப்போச்சு
    கைபேசி
    உதவலாச்சு!

    மின் அலைகள்
    உணர்வலையாய்
    நுண்ணலைகள்
    தொடர்பலையாய்க்
    கையடக்கக்
    கைபேசி
    உலகாளும்
    அதிசயமே !

    படம் பிடிக்கப்
    படம் பார்க்க
    வலைத்தளங்கள்
    நீ பார்க்க!

    பொழுது போகும்
    விளையாட்டு
    பேசிப்பேசி
    பொழுதுபோச்சு!

    நொடிப்பொழுதில்
    உலகமேயுன்
    கை விரலில்
    கண்ணசைப்பில்!

    உயிர் பறிக்கும்
    மனங்கெடுக்கும்
    தீங்கிழைக்கும்
    மெய்ம்மறந்து
    அதில் நுழைந்தால்!

    விஞ்ஞானம்
    அவசியமே
    நன்மையோடு
    நிறுத்திக்கொண்டால் !?

     

    Share
  • கூலித்தொழிலாளி !

    -பா. ராஜசேகர்

    மூட்டையை
    முதுகில் தூக்க,
    துயரங்கள்
    மனதை தாக்க
    உயரத்துச்
    சூரியனும்
    உதிரத்தைச்
    சூடாக்கும்!

    எளிதாக்கும்
    பசிமயக்கம்
    இதயத்தைச்
    சோர்வாக்கும்!

    உச்சி வெயில்
    வேளையிலும்
    கும்மிருட்டைக்
    கண்பார்க்கும்!

    தள்ளாடும்
    கால்கள் கூட
    வீரத்தை
    வேவு பார்க்கும்!

    ஆடி ஓடி
    உழைத்த காலம்
    மேலோங்கிப்
    போனதய்யா!

    இளமையிலே
    சிறுகச் சேர்த்துக்
    குஞ்சுகளைப்
    பறக்க வைத்து

    இறக்கை கட்டும்
    காலம் இப்போ
    குஞ்சுகளும்
    பறந்து போச்சு!

    இளமை
    மறைஞ்சு போச்சு!
    வாழ்க்கையோ
    கவலையாச்சு!

    சொந்தம்தான்
    போனதென்பேன்
    நம்பிக்கை
    போகவில்லை!

    தன்கையே
    தனக்குதவி!
    தன்னம்பிக்கை
    உதவலாச்சு!

     

    Share