Tag: பா. ராஜசேகர்

  • காணாமல்போன பொங்கல்

    பா.ராஜசேகர்

     

    உனக்கு மட்டும்தெரியும்
    நாம் சந்திக்கும்போதெல்லாம்
    பொங்கல் வந்துபோவது.

    வளைந்து நெளிந்துதான் 
    கீழிறங்குகிறது அருவி
    மலைமுகட்டிலிருந்து
    நீ கீழிறங்குவதுபோல்.

    வயல் வரப்பின் புல்வெளிகள்
    பஞ்சுமெத்தையாய்
    உன்பாதங்களை தாங்கிக்கொள்கிறது
    என்னிதயத்தில்
    நீயும் அப்படித்தான்.

    நெல்மணிகள் வெட்கித்
    தலைகுனிந்து நிற்கின்றன
    உன்னழகில்.
    நீ என் கண்சிமிட்டலில்
    வெட்கத்தில் தலைகுனிகிறாய்.

    நான் பறித்துவந்த
    நாவல்பழத்தை இருவரும் ருசித்தோம்
    நாவல்பழம் உன்னை ருசித்ததை
    நான் மட்டும் கவனித்தேன்

    நீ எங்கிருக்கிறாய்
    எனக்குத்தெரியாது
    அருவி என்கண்களில்
    கீழிறங்குகிறது.

    நாவல் பழம் இப்போது
    கசந்துகிடக்கிறது
    அது உன்னை ருசிப்பதை
    இப்போது காண்பதற்கில்லை.

    வரப்புகளில் புற்களில்லை
    என்மனசைப்போல்
    சருகாகிக்கிடக்கிறது.

    என்எதிர்காலம் வெடித்துச்சிதறி
    சின்னாபின்னமாய் கிடக்கிறது
    நெல்மணிகள்
    நிறைந்திருந்த வயல்.

    நீயில்லாத பொங்கலை
    கடந்துகொண்டிருக்கிறேன்
    நிலவில்லாத வானமாய்!

     

    Share
  • முன்பொருகாலம்!

     பா.ராஜசேகர்

    குச்சிஐஸ் ஜிகர்தண்டா
    வளையல்கடை
    பொம்மைக்கடை முளைக்கும்
    கரகாட்டம் ஒயிலாட்டம்
    மேளதாளம் முழங்கி 
    திருவிழாவும் தொடங்கும்
    கன்னியரும் காளையரும் கூட
    வீச்சருவா ஐய்யனாரு எதிரே
    காதல்கணை பறக்கும்
    சின்னஞ்சிறு மனங்களில்
    மின்மினிகள் ஜொலிக்கும்
    அச்சமட நாணமெல்லாம்
    கவிதைகளாய் பறந்து
    அழகாய் தெரிந்தது
    திருவிழா மட்டுமல்ல
    கண்களாலெழுதிய
    அழகியகாதலும்தான்
    முன்பொருகாலம்!

    Share
  • பா.ராஜசேகர் கவிதை

    பா.ராஜசேகர்  

    மாடியிலிருந்து
    கால்வாய்வரை
    நீர்தேங்காமல் வழிவிட்டேன்.
    மாநகராட்சி அதிகாரிகள்
    கால்வாயிலிருந்து ஆறுவரை
    சுத்தம் செய்தார்கள்.
    பிறகு ஆற்றைதூர்வாரி
    கடலுக்கு வழிவிட்டார்கள்.
    இப்போது
    மழைபெய்து கடல் வயிறு
    நிரம்பிக்கொண்டிருக்கிறது.
    இனிமேல்தான்
    நான் கடல்நீரில்
    பயிர்விதைத்து அறுவடைக்கு
    முயற்சிக்கவேண்டும்.

     

    Share
  • பா.ராஜசேகர் கவிதை

     பா.ராஜசேகர் 

    சுள்ளிக்கொம்பு
    உடைச்சு தருவேன்
    சுண்டைக்காயும்
    பறிச்சுதருவேன்
    விறகு அடுப்பில 
    தோசைக் கல்லைவைப்பா
    வெங்காயத்தையெடுத்து
    எண்ணையில் நனைச்சு
    தேய்ச்சுக் கொடுத்து
    மொறுமொறுத் தோசை
    சுடச்சுட சுட்டுத்தருவா
    சுண்டக்க குழம்பும்
    ஊற்றித்தருவா
    சுவையும்மணமும் சேத்துதருவா
    அம்மா
    முன்பொருகாலம்

    Share
  • சிதறிவிடப்போகிறது!

     

    பா.ராஜசேகர்  

    அதோ
    தெருவோரம்
    அமர்ந்து கீரைவிற்கும்
    மூதாட்டியிடம்
    அவள்
    சிறுகச்சிறுகச்சேர்த்த
    சேமிப்பு
    சுருக்குப்பையில் இருக்கும்
    ஒரேஒரு
    ஐநூறுரூபாய்நோட்டும்
    செல்லாக்காசென
    சொல்லிவிடாதீர்கள்
    அவள் மனம்
    சிதறிவிடப்போகிறது!

     

     

    Share
  • உயிர் பெறும் கனவு

    பா.ராஜசேகர்

     

    முன்பொருகாலம்
    முன்பொருகாலமென
    மூச்சைப்பிடித்து
    முகவுரையிட்டுக்கொண்டே
    வருகிறேன்
    என்றாவது ஒருநாள்
    முன்பொருகாலம்
    மீண்டும்
    உயிர்பெறும் கனவுகளோடு!

    Share
  • புதுவரவு !

    பா.ராஜசேகர்

     

    வீட்டுக்கு புதுவரவு வாசமல்லி
    என் பத்துவயது
    மகனுக்கு அதிகமகிழ்ச்சி .
    மண்வெட்டியைஎடுத்து
    முன்வாசலோரம்
    குழிதோண்டி பதியம்வைத்து
    கொடுத்தப்பணத்தை வாங்கிக்கொண்ட
    பூச்செடி விற்பவர்
    புள்ளைமாதிரி பாத்துக்குங்க.
    சொல்லிக்கொண்டிருக்கும்போது
    மனைவிஉரமிட முல்லைக்கு மகன்
    தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.

    வாசலின் இருமருங்கிலும்
    செழித்துவளர்ந்தாள்
    ஊஞ்சலாடிக்கொண்டே
    புன்னகையால் வாசம்பரப்பி
    என்வரவேற்பறையை
    அலங்கரித்து மகிழ்வாக்கினாள்
    வாசமல்லியின் செழுமையில்
    எங்கள் மூவரின் பங்கும் இருந்தது.
    இப்போது மகனுக்கு திருமணமாகிவிட்டது
    வீட்டுக்கு புதுவாசம்தர
    வந்திருப்பது மருமகள்.

    மருமகளின் தந்தை என்கைகளை
    பிடித்துக்கொண்டு
    உங்கபுள்ளைமாதிரி பாத்துக்குங்க
    எனக்கு புதிதாக எதுவும்தோன்றவில்லை
    வாசமல்லியின்வாசம் வீட்டில்மட்டுமல்ல
    எங்கள் மனதிலும் நிறைந்திருந்தது

    Share
  • பதியமிடும் கால்கள்

    பா.ராஜசேகர்  

     

    அன்று நான்

    நள்ளிரவுவரை

    வீடுதிரும்பாத நாளில்

    வாசலுக்கும் வீட்டுக்கும்

    அலைந்த கண்ணுக்குத்தெரியாத

    தந்தையின் கால்தடங்களை

    மகனின் வருகைக்கு

    காத்திருக்கும்

    இன்றைய பொழுதுகளில்

    தேடித்தேடி பதியமிடுகிறது

    என் கால்கள்!

     

    Share
  • அந்திமக்கால ஞானம் !

    பா.ராஜசேகர்

     

    பாலும் தண்ணீரும்
    கலந்தே சுரந்துகொண்டிருக்கிறது
    என்கிணறு

    இனிப்பிரித்து
    தேவையானதை அருந்தவேண்டும்
    என்பறவை

    கொடியமிருகங்கள்
    என்வனத்தில் அதிகமாய்
    உலவிக்கொண்டிருக்கின்றன

    என் பார்வை
    இப்போது சாதுக்களை
    நோக்கியே செல்கிறது

    கடந்தகாலங்களைவிட
    இப்போது நிறைய
    முரண்பட்டிருக்கிறேன்

    என் குடம் இப்போது
    அமைதியை நோக்கியே
    தழும்பிக்கொண்டிருக்கிறது!

    நம்பமுடியவில்லையா?
    என்மயானம்
    எதிரே இருக்கிறது!

     

     

     

    Share
  • தீபாவளி பரிசு!

     

    பா.ராஜசேகர்

    அதிகாலை இளந்தென்றல்
    காலைக்கதிரவனின் கைவிரல்கள்
    மொட்டுக்கள் கட்டவிழும் இசை
    பறவைகளின் கொஞ்சல்
    சிட்டுகளின் சிணுங்கல்
    பட்டாம்பூச்சிகளின் நடனம்
    வண்டுகளின் ரீங்காரம்
    வளர்ப்புநாய்களின் வாலாட்டல்
    வயதுவந்தோர் நடைப்பயிற்சி
    நோயாளிகளின் நிம்மதி
    எதுவுமே இல்லை
    இன்று எனக்கானநாள்
    சுகாதாரமான வாழ்வு!

     

    Share
  • லஞ்சம் பிடிபடும்!

    -பா.ராஜசேகர்

    பிரசவத்தில் பிள்ளையைக்
    கொடுக்க லஞ்சம் !
    கல்லறைக்குச் சவத்தைக்
    கொடுக்க லஞ்சம்!

    பாட்டி தாத்தா ஊதியம்
    கொடுக்க லஞ்சம்!
    பயனாளிகளுக்குப் பயன்
    பொருள் கொடுக்க லஞ்சம்!

    படுகாயம் அடைந்தோர்
    முதலுதவிக்கு லஞ்சம்!
    சட்டத்தை வளைக்க
    வேலைகள் நடக்க லஞ்சம்!

    லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
    நாட்டைக் கெடுக்குது லஞ்சம்!
    கொடுப்பதைக் கொடுத்துத்
    துடிப்பது ஏனோ?!

    கொடுப்பதை நிறுத்து
    கொதிப்பது அடங்கும்!
    கொதித்தெழு மனிதா
    பிடிபடும் லஞ்சம்!

     

    Share
  • தேசம் காப்போம்!

    -பா.ராஜசேகர்

    அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் போதும்!
    துஞ்சித் துஞ்சி வீழ்ந்தகதை எப்போ மாறும்?

    பொய்மூட்டை புளுகைக்காட்டி ஓட்டுக் கேட்டான்!
    பொன்முட்டை வாத்துத் தரேன் மாற்றம் கேட்டான்!

    ஏமாந்தவன் எல்லோரும் ஓட்டுப் போட்டாங்கையா!
    எடுபட்டவன் ஆட்சியைப் புடிச்சிட்டான்யா!

    கூறுபோட்டு நாட்டையே விற்கிறாண்டா!
    காசைவாங்கிக் காற்றைக்கூடக் கெடுக்கிறாண்டா!

    இயற்கை தந்த தண்ணீருக்கும் விலையை  வச்சான்!
    ஏழையோட வயத்திலே உலையை வச்சான்!

    சொல்லச்சொல்ல வேதனைகள் என்னசொல்ல?
    போதைவிற்று ’கஜானா’ நிரப்பும் அரசுதாண்டா!

    அரசியலில் நல்லவர்கள் ஒதுங்கிநின்றால்
    குள்ளநரிக் கூட்டம் நின்று ஆட்டம் போடும்!

    வெட்கம் வேண்டாம் நல்லோரே சுத்தம் செய்வோம்!
    நாட்டைக்காக்கக் குள்ளநரிக் கூட்டம் வெல்வோம்!

     

    Share
  • குருவே சரணம்!

     -பா. ராஜசேகர்

    விரல்
    பிடித்தாய் போற்றி!
    மொழி கொடுத்தாய்
    போற்றி போற்றி!

    அறிவு
    அளித்தாய் போற்றி!
    அறியாமை இருளகலப்
    போற்றி போற்றி!

    அறிவொளி
    கொடுத்தாய் போற்றி!
    ஆக்கமும் ஊக்கமும்நீயே
    போற்றி போற்றி!

    அறிவினைப்
    பகிர்ந்தளித்தாய் போற்றி!
    அறிவின் சிகரமே
    போற்றி போற்றி!

    சூரியனாய்
    ஒளிர்ந்தாய் போற்றி!
    நிலவொளியாய் மிளிர்ந்தோம்
    போற்றி போற்றி!

    ஒழுக்கத்தின்
    சிறப்பே போற்றி!
    சீரிய நல்லறிவே குருவே
    போற்றி போற்றி!

    அறிவு பெற்றோம்
    வாழ்க்கை
    முழுமை பெற்றோம்
    போற்றி! போற்றி!! போற்றி!!!

     

    Share
  • கனவு காண்கிறேன்

    -பா.ராஜசேகர்

    தினம் காலைப்பொழுது
    இனிதாக விடியவேண்டும்!
    அசைந்தாடும் செடிகொடிகள்
    குளிர நல்மழைவேண்டும்!

    நதி நீரெல்லாம் முழு
    தேசம் பகிரவேண்டும்!
    பந்தபாசம் மனிதரிலே
    பெருகவேண்டும்!

    சாதிமத பேதமில்லா நாடென்று
    உலகம் காணவேண்டும்!
    பசிக்கொடுமை பகல்
    கனவாய் மாறவேண்டும்!

    நடிகர்களைத் தெய்வமாக்கும்
    நிலை மாறவேண்டும்!
    நல்மனிதர்களை மதிக்கும்
    நிலை உயரவேண்டும்!

    தமிழன் தலைநிமிர்ந்து
    பவனிவரும் வரம்வேண்டும்!
    பரதத்தாயை பார்புகழப் பார்த்ததுமே
    என்னுயிர் போகவேண்டும்!

     

    Share
  • சுதந்திரம் காத்திடு !

    -பா.ராஜசேகர்  

    சுதந்திரம் எல்லோர்க்கும்
    சமமென நினைத்திடு
    சாதி சமயத்தால் பிரிப்பதை
    இன்றோடு நிறுத்திடு !

    எத்தனை தியாகங்கள்
    செய்ததாலே வந்தது ?
    சதையும் இரத்தமும்
    கலந்த மண்ணு நினைத்திடு !

    ஒன்றுபட்ட பாரதம்
    உயர்வாகும் புறப்படு
    உலக நாடுகளுக்கு
    உணர்த்தவேணும் தோள்கொடு !

    நீதி நியாயங்கள்

    நிலைப்பதற்குக் குரல் கொடு
    நீரை விலைகொடுக்கும்
    நிலையை மாற்றப் போர்த்தொடு !

    பணத்தாசையிலே நாட்டுக்குக்
    கேடுசெய்வோரை நோக்கி வாளெடு
    பதவி அதிகாரம் பழி சேர்க்கும்
    கூட்டம் வேண்டாம் ஓட்டிடு!

    பசியே இல்லாமை பாரதம்
    பெறவேண்டும் பயிரிடு
    சொர்க்கம் வேறில்லை பாரத
    மண்ணேதான் உணர்ந்திடு !

     

    Share