காணாமல்போன பொங்கல்
பா.ராஜசேகர்
உனக்கு மட்டும்தெரியும்
நாம் சந்திக்கும்போதெல்லாம்
பொங்கல் வந்துபோவது.
வளைந்து நெளிந்துதான்
கீழிறங்குகிறது அருவி
மலைமுகட்டிலிருந்து
நீ கீழிறங்குவதுபோல்.
வயல் வரப்பின் புல்வெளிகள்
பஞ்சுமெத்தையாய்
உன்பாதங்களை தாங்கிக்கொள்கிறது
என்னிதயத்தில்
நீயும் அப்படித்தான்.
நெல்மணிகள் வெட்கித்
தலைகுனிந்து நிற்கின்றன
உன்னழகில்.
நீ என் கண்சிமிட்டலில்
வெட்கத்தில் தலைகுனிகிறாய்.
நான் பறித்துவந்த
நாவல்பழத்தை இருவரும் ருசித்தோம்
நாவல்பழம் உன்னை ருசித்ததை
நான் மட்டும் கவனித்தேன்
நீ எங்கிருக்கிறாய்
எனக்குத்தெரியாது
அருவி என்கண்களில்
கீழிறங்குகிறது.
நாவல் பழம் இப்போது
கசந்துகிடக்கிறது
அது உன்னை ருசிப்பதை
இப்போது காண்பதற்கில்லை.
வரப்புகளில் புற்களில்லை
என்மனசைப்போல்
சருகாகிக்கிடக்கிறது.
என்எதிர்காலம் வெடித்துச்சிதறி
சின்னாபின்னமாய் கிடக்கிறது
நெல்மணிகள்
நிறைந்திருந்த வயல்.
நீயில்லாத பொங்கலை
கடந்துகொண்டிருக்கிறேன்
நிலவில்லாத வானமாய்!