Tag: பிச்சினிக்காடு இளங்கோ

  • நான்

    பிச்சினிக்காடு இளங்கோimages

    யாரோ ஒருவருக்கு
    இதமூட்டும் தென்றல் நான்
    யாரோ ஒருவருக்குக்
    கால்வைக்கும் படிக்கல் நான்

    யாரோ ஒருவருக்குக்
    கைகொடுக்கும் கைநான்
    யாரோ ஒருவருக்கு
    முதலில்  வருமுதவி நான்

    யாரோ ஒருவரின்
    புண்ணுக்கு மருந்து நான்
    யாரோ ஒருவரின்
    புன்னகைக்குக் காரணம் நான்

    யாரோ  ஒருவரின்
    சுமை தாங்கி நான்
    யாரோ ஒருவரின்
    கை விளக்கு  நான்

    யாருக்கோ  ஒருவனாய்
    யாவர்க்கும் கவிஞனாய்
    வாழும் ஆசையில்
    வாழ்கின்ற மனிதன் நான்

    http://online.wsj.com/news/articles/SB10001424052702303753904577450841336465230

    Share
  • சொல்லும் சொல்லும் கவிதை

     

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    எங்கே

    என்

    குறிப்புப்பெட்டகங்கள்  ?

     

    அவை

    தோண்டக்கிடைக்காத

    வைரங்கள்

    வேண்டக்கிடைக்காத

    வரங்கள்

     

    தேடிக்கொணருங்கள்

    அத்திரவியத்தை

     

    கழித்துக்கட்டும்

    கடைக்குப்போடும்

    பழைய சரக்கல்ல

     

    அவை

    மின்னல்களின்

    சேகரிப்பு

     

    மின்சாரக்

    கிடங்கு

     

    பற்றும்

    கற்பூரம்

     

    மணக்கும்

    ஊதுவத்தி

     

    சிரிக்கும்

    மெழுகுவத்தி

     

    ஒவ்வொரு பக்கத்தையும்

    பவ்யமாய்ப் புரட்டுங்கள்

     

    ஒவ்வொரு பக்கத்திலும்

    உறங்கிக்கொண்டிருக்கும்

    என் கவிதை

     

    உறைந்துகிடக்கும்

    என் கற்பனை

     

    சிறைபட்டிருக்கும்

    என் சிந்தனை

     

    சொற்களெல்லாம்

    சிக்கிமுக்கிக் கற்கள்

    விருட்சமாய்

    விளையும் விதைகள்

     

    ஒவ்வொரு சொல்லும்

    வாமன வடிவம்

    ஒவ்வொரு சொல்லும்

    சுரங்கம்

    ஒவ்வொரு சொல்லும்

    ஒரு

    சூத்திரம்

     

    சூத்திரம் விரிந்தால்

    சூட்சுமம் விளங்கும்

     

    விளக்காய் எரியும்

    ஒவ்வொரு சொல்லும்

    சொல்லும் எனக்குக்

    கவிதை

    (07.03.2014 பிற்பகல் 12.50க்கு)

    Share
  • மொழிகடந்த மொழி

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    அதிகாலையில்
    அதே நேரத்தில்
    அதே நிறுத்தத்தில்
    அதே பேருந்தில்
    ஏறுவதுண்டு

    நாடு
    அந்நிய நாடு
    நானும்
    அந்நியன்

    எந்த நிலையிலும்
    என்
    இதயம் நழுவ
    வாய்ப்பில்லை
    வழியில்லை

    அந்த நேரம்
    எப்போதும்
    நெருக்கடி நேரம்தான்

    நின்றுகொண்டிருந்த
    நான்
    ஒரு திருப்பத்தில்
    பேருந்து
    திரும்பும்போது
    பின்னிருக்கையிலிருந்து
    ஒரு மஞ்சள் நிலா
    கீற்றென
    இமைகளை அசைத்து
    இசைவைச்சொன்னது

    தீப்பொறி
    தீண்டியதுபோல்
    திடுக்கிட்டேன்

    பாம்பை மிதித்தவனாய்
    பதறினேன்

    இனம், மதம்
    மொழிகடந்த
    மொழியில் தவித்தேன்

    வழிதெரியாது
    விழித்தேன்

     

     

    யாரும் அறியா
    மின்னலை என்னுள்ளே
    விழுங்கினேன்

    அன்று
    இடம்பார்த்து அமராமல்
    நின்று
    பயணத்தை முடித்தேன்

    இன்னும் முடியவில்லை
    நினைவின் பயணம்
    இன்னும் உலரவில்லை
    நினைவின் ஈரம்

    (1990-ல் ஒருநாள் பேருந்தில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தவேளையில் 2.03.2014)

    Share
  • வியர்வையூர் – (2)

    பிச்சினிக்காடு இளங்கோ 

     

    இவையும்
    இன்னபிறவும் இருக்கும்
    இல்லமாய் மாறியது
    கொஞ்சநாட்களாகத்தான்

    இரண்டு ஆண்டுகளுக்குமுன்
    அந்தவீட்டில்
    மனம் திறந்த சிரிப்பில்லை

    மகிழ்ச்சி விளைந்த
    முகமில்லை

    கையில் செலவுக்குப்
    பணமில்லை

    நிலம் கொஞ்சம்
    இருந்தது
    மாடும் மனையும்
    இருந்தன
    சொந்தங்கள் எல்லாம்
    உண்டு பெரிதாய்…. (more…)

    Share
  • வியர்வையூர்

     

    ‘வியர்வையூர்’ எனும் தொடர் கவிதை நடையில் அமைந்த காவியம்.. சிங்கப்பூரில் வாழ்ந்த பட்டறிவைச் சொல்லும் பெட்டகம். எதுவுமே கற்பனையில்லை. மொழிவேண்டுமானால்அழகைக் கூட்டியிருக்கலாம். எங்கேயும் எதையும் கூட்டிச் சொல்லவில்லை. ஓரு தமிழ்க் குடிமகனின் சிங்கப்பூர் வாழ்க்கை இது. அனைத்தும் அவனுடையதல்ல. அவனைச் சேர்ந்தவர்களின் பட்டறிவும் இதில் வலம் வருகின்றன. ஒட்டுமொத்த பட்டறிவின் பெட்டகம்..

    அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ
    அந்த வீடுகளில்
    இப்போது
    இரவிலும் வெளிச்சம்
    ஒவ்வொருவர்
    முகத்திலும் வெளிச்சம்

    ஒவ்வொருவர் முகத்திலும்
    குதித்து விளையடும்
    குதூகலம்

    அதாவது இப்போது
    அங்கே
    இல்லத்திலும் வெளிச்சம்
    உள்ளத்திலும் வெளிச்சம்

    ஒவ்வொரு வீட்டிலும்
    ஒலிக்கிறது தொலைபேசி
    இது
    பழையசெய்தி
    இப்போது
    ஒவ்வொருவர் கையிலும்
    கைப்பேசி

    தீர்க்கப்படாத தேவைகள்
    குறைந்து
    கவலைப்படாத ஒரு காலம்
    கைக்குவந்திருக்கிறது

    கீற்றுக்குடிசைகள்
    மண்சுவர் வீடுகள்
    பனைஓலைக்கூரைகள்

    சாணத்தில் மெழுகி
    தீத்துக்கல்கொண்டு தீட்டி
    தீட்டி
    சலவைக்கல்போல்
    முகம்பார்க்கும் தரைகள்
    எல்லாம் இப்போது
    பளிங்குகளாக பரிணாமம்

    மலையில் கிடைத்த
    கிரானைட்களாக அலங்காரம்

    மாட்டுத்தொழுவமும்
    வீடும்
    என்றிருந்த நிலைமாறி
    ஒவ்வொருவரும்
    வீடுபேறு பெற்றநிலை

    தெருவில் எங்கும்
    குடிசைகள் இல்லை

    என்பிள்ளைப்பிராயத்தில்
    ஊருக்குள்ளே
    ஒழுங்கை இருந்தது

    இப்போது எல்லாம்
    தார்சாலைகள்
    சிமெண்ட் சாலைகள்

    கரிபிடித்த
    வறுமைப்பானைகளை
    உடைத்துவிட்டு
    வெள்ளிப்பாத்திரங்கள்
    குடியேறிவிட்டன

    எப்போதும் (ever silver)
    வெள்ளிகளுக்குத்தான்
    இப்போது
    வீட்டில் இடம்

    கொஞ்சம்
    பொன்நகைகளும் வந்து
    கழுத்தில் கனத்தன

    காய்ந்த முகங்களிலும்
    புன்னகைக்கூடின

    ஆடைகளிலும் தெரிந்தன
    அந்த அந்நியநாட்டு
    அடையாளங்கள்

    காலணி
    சோப்பு
    சீப்பு
    கண்ணாடி எல்லாம்

     

    இப்போது
    வெளிநாட்டினுடையது
    குறிப்பாக
    அந்த நாட்டினுடையது

    இந்தியாவில்
    இல்லாததில்லைதான்
    ஆனால்
    இந்தியா
    வீட்டில் இல்லைதான்

    இந்தியாவில்
    அவன்
    வீடு இருந்தது
    அவன் வீட்டில்
    இந்தியா இல்லை

    வாசனை திரவியங்கள்
    வானொலிகள்
    ஒலிப்பதிவுப்பெட்டிகள்
    தொலைக்காட்சிப்பெட்டி
    கடிகாரம்
    பேனா
    மூக்குக்கண்ணாடி
    படுக்கும் பாய்

    கோடரி மார்க்
    டைகர் பாம் மருந்துகள்
    ஒடிகோலன்
    கிளிதைலம்
    மீசைக்காரத்தைலம் போன்ற
    முன்னெச்சரிக்கை மருந்துகள்

    கைலிகள்(லுங்கிகள்)
    கைவிளக்குகள்
    கைக்குடைகள்
    கைக்குட்டைகள்
    ரொட்டிகள்
    படுக்கை விரிப்புகள்
    துண்டுகள்
    மான்மார்க் குடைகள்

    வெந்நீர் குடுவைகள்
    சவரப்பெட்டிகள்
    முகப்பூச்சுத்தூள்கள்

     

    தொடரும்

    Share
  • குரங்குமனம்

    பிச்சினிக்காடு இளங்கோ

    அன்று…

    இரங்கற்பா படித்து

    இதயத்தைப்பிழிந்து

    கண்ணீர் கசியவைத்தேன்

    வாழ்த்த அழைத்தபோதும்

    வளமானச்சொற்களால் வாழ்த்தி

    வாழ்த்திடப்பெற்றேன்

    கலந்துரையாடும்போதும்

    கரைந்துரையாடி

    கவனிக்கப்பெற்றேன்

    முடிந்ததைச்செய்யும்போதும்

    முழுமையாய்ச்செய்தேன்

    என

    முன்னுரை கிடைக்கப்பெற்றேன்

    ஆசையே இல்லா

    புத்தரைப்போல பேசி

    அனைவராலும் கவரப்பெற்றேன்

    பெண்களோடும் அப்படித்தான்

    பெருமைப்பட நடந்துகொண்டேன்

    பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

    எல்லா இடத்திலும்

    எனக்குப்பேர் என்றாலும்

    எல்லார் இதயத்திலும்

    என்பேர் நின்றாலும்

    குரங்கு மனசுமட்டும்

    குறைபடவைக்கிறது என்னை

    (09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. மகன் கலைக்கோவனின் நண்பன் ரவியின் மனைவி மைதிலிக்கு கேகே மருத்துவமனையில் பெண்குழந்தை பிறந்தது.

    67 எண் பேருந்தில் சுவாசுகாங்கிலிருந்து புறப்படும்போது படித்த கதை திரு எம்.சேகர் எழுதிய ‘முகம் தெரியாத மனம்’ படித்துக்கொண்டிருந்தேன். முடிவு கவர்ந்தது. முடிவில் எழுதிய கவிதையே இது பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது.

    Share
  • சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு

     

    பிச்சினிக்காடு இளங்கோ
    சந்தமென்றும் சிந்துஎன்றும்

    சங்கதிகள் தெரியாமல்

    சத்தமிட்டுப் பேசுகிறான் பேச்சு-அது

    சரக்கில்லா வெத்துவேட்டு ஆச்சு
    பந்தமென்றும் சொந்தமென்றும்

    பங்கமிலா நண்பரென்றும்

    கொண்டாடும் மனநிலையை விட்டு-அவன்

    குண்டரெனக் காட்டுகிறான் மட்டு

     

    வண்டாடும் சோலையிலும்

    செண்டாடும் மாலையிலும்

    கொண்டாடும் புள்ளினமாய் மாறு- அதில்

    திண்டாடும் மனநிலையே வேறு

     

    சிந்தனைத்தேன் ஊறுவதை

    சிந்தித்தே மாறுவதை

    சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு- அதுவே

    சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

     

    போதிமரம் சேதிதரும்

    சோதியென நீதிதரும்

    வேதமெனும் மந்திரம்போல் பாடு- சூது

    பேதமெனும் தந்திரத்தைச் சாடு

     

    மானுடத்தைப் பாடுகிற

    மாந்தரினம் தேடுகிற

    ஞானமது பாட்டினிலே வேண்டும்-தமிழ்த்

    தேனமது பருகிடவே மீண்டும்

     

    Share
  • நீ நீதான்

     

    பிச்சினிக்காடு இளங்கோ 

     

    மரமே உன்னைrq518f9998

    பலமுறை

    பல்வேறுவகையில்

    பாராட்டியிருக்கிறேன்

     

    செங்கல்லில்

    பளிங்கில்

    கிரானைட்டில்

    எத்தனைஎத்தனை

    கட்டடங்கள் மாளிகைகள்

    எழுப்பினும்

    அங்கே

    . ஒவ்வொரு கதவைத்திறக்கும்போதும்

    என் மனகதவுகள் திறக்கின்றன

     

    உன்னில் ஆன

    நாற்காலிகளில்

    அமரும்போதெல்லாம்

    என்மனத்தில்

    நீ நாற்காலிபோட்டு

    அமர்கிறாய்

     

    மெத்தை விரிக்கும்

    படுக்கையும் உன்மீதுதான்

     

    படுத்தால் போதும்

    படுத்துவிடுகிறது மனமும்

     

    புத்தகங்கள் கோப்புகள்

    உடைகள்

    தங்கம்வெள்ளி அணிகலன்கள்

    இன்னபிற எல்லாம்

    இருக்குமிடம்

    உன்னிலானது

     

    அலுவலகம் என்றால்

    அங்கே அழகுசேர்ப்பது

    நீதான்

     

    அவதாரங்கள்

    அதிகம் எடுப்பது

    ஆண்டவனல்ல

    நீதான்

     

    மனிதனுக்குத்தான் மரணம்

    மரங்களுக்கில்லை

     

    மனிதர்களின் மரணத்தில்

    உடன்கட்டை ஏறுவது

    மனைவியல்ல மரம்தான்

     

    நீ

    நின்றால் நிழல்

    கைவிரித்தால்

    காய் கனி

    வீழ்ந்தால் அது

    வீழ்ச்சியல்ல

    நீ எடுப்பது எழுச்சி

    அதுதான் விசுபரூபம்

     

    எல்லாவகையிலும்

    எல்லாநிலையிலும்

    நீ எங்களுக்காகவே

    வாழ்கிறாய்

     

    ஒன்றுக்கும் உதவாதவர்கள்

    உங்களில் ஒருவருமில்லை

     

    எந்தக்கோணத்தில்

    பார்த்தாலும்

    ஒரு கோணலுமில்லாத

    உன்னதம் நீ

     

    நெருப்பு தீண்டாதவரை

    நீ நீதான்
    ( தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அவர்களுடன் 04.10.2013 நாள் நிவன் சாலை பர்னிச்சர் கடையில் நுழையும்போது தோன்றியது)

    படத்திற்கு நன்றி:

    http://www.google.com/imgres?imgurl=http://files.abovetopsecret.com/files/img/rq518f9998.jpg&imgrefurl=http://www.abovetopsecret.com/forum/thread946684/pg1&h=1138&w=1000&sz=84&tbnid=M09LXKfwVeaLBM:&tbnh=127&tbnw=112&zoom=1&usg=__9U51mNU__1rqkSmZGc7DvZ8r27I=&docid=vRw-myTab_LJrM&sa=X&ei=T_NPUsmAA8uHrgfM7oGQDw&ved=0CDIQ9QEwAw

     

    Share
  • சிற்பம் சிதைக்கும் உளி

    பிச்சினிக்காடு இளங்கோ

    sculptor-23974105

    அன்று

            இரங்கற்பா படித்து

            இதயத்தைப்பிழிந்து

            கண்ணீர் கசியவைத்தேன்

     

            வாழ்த்த அழைத்தபோதும்

            வளமானச்சொற்களால் வாழ்த்தி

            வாழ்த்திடப்பெற்றேன்

     

            கலந்துரையாடும்போதும்

            கரைந்துரையாடி

            கவனிக்கப்பெற்றேன்

     

            முடிந்ததைச்செய்யும்போதும்

            முழுமையாய்ச்செய்தேன்

            என

            முன்னுரை கிடைக்கப்பெற்றேன்

           

            ஆசையே இல்லா

            புத்தரைப்போல பேசி

            அனைவராலும் கவரப்பெற்றேன்

     

            பெண்களோடும் அப்படித்தான்

            பெருமைப்பட நடந்துகொண்டேன்

            பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

     

            எல்லா இடத்திலும்

            எனக்குப்பேர் என்றாலும்

            எல்லார் இதயத்திலும்

            என்பேர் நின்றாலும்

            குரங்கு மனசுமட்டும்

            குறைபடவைக்கிறது என்னை

     

    (09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. எழுத்தாளர் எம் சேகரின் கதையை முடித்து எழுதிய கவிதை. பேருந்து 67இல் எழுதியது. பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது. )

    படத்துக்கு நன்றி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-sculptor-image23974105

    Share
  • பயணத்தில் ஒரு பயணம்

    பிச்சினிக்காடு இளங்கோbag-images

    எல்லோரும் இருக்கிறார்கள்
    இங்கே
    இங்கேயே அவர்கள்
    எங்கேயோ இருக்கிறார்கள்

    எதிரில் இருக்கிறார்கள்
    எனினும்
    எதிரிலும் இல்லை
    எதிரியாகவும் இல்லை

    இது
    இன்றைக்கு
    எல்லைகள் கடந்த நிலை

    எல்லா நாட்டிலும்
    இதுதான் நிலை

    கைப்பேசி
    கையடக்கக்கணினி
    பண்பலை வானொலி
    காரணங்கள்

    தோற்றமாயையோடுதான்
    தொடர்கிறது வாழ்க்கை

    சுருக்கமாய்ச்சொன்னால்
    இசைபடவாழ்கிறார்கள்

    பயணத்தில் இருக்கிறார்கள்
    எனினும்
    அவர்கள்
    இன்னொரு பயணத்தில் இருகிறார்கள்

    பேருந்தில்
    ஏறும்போதும்
    இறங்கும்போதும்
    பயண அட்டையைத்
    தேடுவதைவைத்துத்தான்
    தெளிவானது முடிவு

    ( சிங்கப்பூர் பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போது  பயணஅட்டையை கையில்வைத்துக்கொள்ளாமல் அதுவரை எதையோ கேட்டுவிட்டு அவசர அவசரமாக தேடுவதைப்பார்த்து எழுதியது. 17.07.2013)

    படத்துக்கு நன்றி

    http://www.photoanswers.co.uk/Gear/Search-Results/Photo-Accessories/Hama-Daytour-230/

    Share
  • மரங்களைப்போல்…

    பிச்சினிக்காடு இளங்கோnew-oldimages

    அருவியென அன்புமழை பொழிந்த பெற்றோர்
    அரவணைத்து  மனம்குளிர வளர்த்த வர்கள்
    உருவிழந்து முதுமைவந்து கொடிபி டிக்க
    உள்ளத்தில் தளர்ச்சிவர உடல்ந டுங்க
    கருவிகளால் துணைக்கோலால் பார்த்தும் கேட்டும்
    கடத்துகிற வாழ்க்கையிலே இறுதி நாளில்
    மருவுகிற குழைந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்
    மரங்களைப்போல் நிழல்தந்தால் பெருமை கொள்ளும்

    நீரூற்றி வளர்த்தபெரு மரங்க ளெல்லாம்
    நிழல்வழங்கி அரவணைக்கும் கனிகொ டுக்கும்
    யாரூற்றி வளர்த்தார்கள் பார்ப்ப தில்லை
    யாரென்றும் எவரென்றும் கேட்ப தில்லை
    வேரூன்றிப் போராடி வளர்ந்த பின்னே
    விளைகின்ற பயன்களெல்லாம் மக்க ளுக்கே
    பாருக்கே மழைவழங்கும் பசுமை கொஞ்சும்
    பறவைகளும் விலங்குகளும் புசித்தும் மிஞ்சும்

    நிழல்கேட்டு மரமலைதல் நீதி யாமோ
    நீர்கேட்டு கடல்வாடி போக லாமோ
    உழல்கின்ற மனத்தோடு பெற்றோ ரெல்லாம்
    உருக்குலைந்து போவதற்கா பெற்றார் பிள்ளை
    நிழலாக உடனிருந்து காக்க வேண்டும்
    நிம்மதிதான் அவர்முகத்தில் மின்ன வேண்டும்
    விழலுக்கு இறைத்ததென எண்ண லாமா
    விதைத்ததெல்லாம் பதர்களென நோக லாமா

    மனம்கனிந்து கருணையுடன் அணுக வேண்டும்
    மனம்குளிர்ந்து பெற்றோர்கள் மகிழ வேண்டும்
    குணமுடைய குழந்தைக ளேநிலைத்த சொத்தாம்
    குன்றாத புகழுக்கும் அதுவே வித்தாம்
    தனம்வேண்டாம்  தனக்குமிகு வளங்கள் வேண்டாம்
    தம்மைப்பார்க்க கேட்கதம்பிள் ளைஇருக் கின்றார்
    எனஎண்ணும் மனநிலையே போதும் போதும்
    ஏங்காது வாழ்ந்திடுவார் நாளும் நாளும்

    படத்துக்கு நன்றி

    http://www.stockphotopro.com/photo_of/old/767938GDF/South_Asian_Indian_happy

    Share
  • வாக்குமூலம்பற்றிய என் எழுத்துமூலம்

             

                     பிச்சினிக்காடு இளங்கோ

     

     அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய சமஸ்காராஎன்ற புதினம், தமயந்தி எழுதிய வாக்குமூலம்என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது.

                          தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன்.

     பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ  ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான்

    அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன்.

                         சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம்.

     அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

                        கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.

                          ஆண்களின் சுயநலம் இழக்காத போலி கட்டமைப்பால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் உணர்ந்த உண்மை. அரிதாரம் பூசாமல் கடைவிரித்து ஏமாற்றத்தைத்தருவது இன்றைய ஆண்போலிகளின் ஏதார்த்தமாக நான் பார்க்கிறேன். அப்படியான சூழலில்

    தமயந்தியின் பெருமுச்சு அக்னியைச்சுமந்திருக்கிறது அல்லது அடைகாக்கிறது என்பதில் அய்யமில்லை. எந்தக்கதையை எடுத்துக்கொண்டாலும் அங்கங்கே கவிதையின் கண்ணடிப்புகள், தீர்க்கமான சொல்வெட்டுகள் பளீச்சிடுவதைப் பார்க்கமுடிகிறது.

    எடுத்துக்காட்டுக்கு இதோ….

     

    உன்

    ஒற்றை ஸ்பரிசம்

    இன்னமும் ஈரத்தோடு

    மனதின் மூலையில்

    ஒட்டியிருக்கிறது

     

     

    கண்சிமிட்டும்

    பறவைகளின் பயணம்

    காற்றின் அலைக்கழிப்பால்

    ரத்தாகும் தருணங்கள்

    காயமானவை

     

    விலகி நிற்கும்

    உறவுகளைத்

    தனிமைப்பிரதேசத்தில்

    கைசுட்ட நெருப்பாய்

    ஞாபகப்படுத்துகிறது

      

    சந்தர்ப்பங்களின் வலையில்

    எல்லோரும் சரிவதுண்டு

    அப்படித்தான்

    நானும் அவளும்

     

    வெளிச்சம்

    ஒரு பறவையைபோல்

    பறந்து

    அறையெங்கும் பரவிற்று

     

    வெயில்மெல்ல

    யானைத் துதிக்கையால்

    ஜன்னலுக்குள்

    எட்டிப்பார்த்தபடி இருந்தது

     

    ஜன்னல் வழியாக

    பளிச்சென்று வெயிலாகும் வானம்

    என்னை வெறிக்கிறது

     

    சின்னவயதில்

    மழைக்காட்டி எனக்குச்

    சோறூட்டின தருணங்கள்

    என் ஞாபகத்தில்

    அச்சிடப்பட்டிருக்கின்றன

     

    சுயலாபங்களுக்காக

    கைகளைவிட்டுச்செல்லும்

    யாருக்காகவும் வருத்தப்படக்கூடாது

     

    பயத்திலேயே

    ஆண்பெண் உறவு

    நிலவுகிறது

     

     

    மழைநாளில்

    எங்கள் வீட்டுவாசல்

    விரிக்கும் குடைகள்

    எனக்காக அழும்

     

    இதை ஒரு கவிதையென்று நான் சொல்லவேண்டுமா என்ன?

    சமுகத்தைப்புரட்டிப்போடும் ஆவேசம் தமயந்திடம் குடிகொண்டிருக்கிறது என்பதின் அடையாளமாக ஆண்களின் பார்வையிலேயே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய் இந்தக்கட்டமைப்பு மனிதப்பண்புகளின்மேல் மறுகட்டமைப்பு பண்ணப்படுமெனில் அதுவே தீர்வாக இருக்கும்.”  என்ற வாக்குமூலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    நித்தியானந்தாவைவைத்து ஒரு கருத்தையும் இப்படி நாம் மறைக்கப்பட்டவற்றையே நிஜமென நம்புகிறோம்.நிர்வாணத்தை மறுக்கும்

    மனநிலை இருக்கும்வரை இதுபோன்றபோலிகளே உண்மையாகக்கருதப்படுவார்கள்என்று பதிவுசெய்கிறார்.

     

                       எல்லா கதைகளையும் எடுத்துக்கொள்ளாமல் நூலின் தலைப்பாக இருக்கிற வாக்குமூலம்கதையைமட்டும் என் சொற்களால் சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன். தொகுப்பில் எல்லா கதைகளுமே ஒரு வகையில் வாக்குமூலம்தான். பொதுவாக எதையுமே வாக்குமூலமாகத்தானே அறிகிறோம்.. தமயந்தியின் வாக்குமூலம் நேர்மையானது; தூய்மையானது;

    தாய்மையானது; சோகமானது. சுதந்தரத்தோடு வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால் சுதந்திரம் கைகூடுகிறதோ இல்லையோ சோகம் எஞ்சிவிடுகிறது. அப்படிச்சோகம் சுமந்து சுதந்தரம்கைகூடித் ததும்பும் மனநிலையில்  சொல்லப்பட்டிருக்கிறது வாக்குமூலம்தன்மகனைப்பிரிந்து வாழவேண்டிய சூழல் .விவாகரத்துக்காக காலம் கழிக்கும் நிலை. அது கிடைத்துவிடத்தான் போகிறது. அதைமிக மிக நுட்பமாக “ நீதி மன்றங்களில் உறவுகள் பிரிக்கப்படுகின்றன என்றாலும் தொப்புள்கொடிகளும் அறுத்தெறியப்படுகின்றன என்பதையும் உறுதி செய்தாகிவிட்டது. உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன்நினைவுகள் மட்டும்தான்என தமயந்தி சொல்கிறார். சோகத்தின் தொய்வும் நீதிமன்றத்தீர்ப்பும் ஒருசேர இதயத்துடிப்பாகியிருப்பதை உணரமுடிகிறது. உணர உணர நமக்கும் வலி வலுவாகவே வந்துவிடுகிறது.

    பிள்ளைகளைப்பிரிதல் கொடுமை. பிரித்தல் அதனினும் கொடுமை. பிள்ளையைப்பிரிந்து எப்படியான வாழ்க்கை அமைந்தாலும் பிரிந்த பிள்ளையை நினைத்தால் எல்லாம் கரைந்த மணல்வீடாகும் என்பது உண்மை. அதற்காக ஒரு நரகத்தைச் சகிக்கவும் முடியாது. நரகத்தில் வாழ்ந்துகொண்டு பிள்ளையை வளர்க்கமுடியாது என்ற தெளிவான முடிவாக இருக்கலாம். பெற்றப்பிள்ளைகளை நினைத்து வாழவும்முடியாமல் சாகவும்முடியாமல் எத்துணைத் தாய்மார்கள் நரகத்தில் தம்மை அழித்துக்கொண்டிருப்பார்கள் என்பதை ஒருகணம் அசைபோடமுடிகிறது.

    மகனைப்பிரிந்ததாயின் வலி வலுவாகவும் சுயத்தின் துணையோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

     

     

    உன்கண்கள்

      மழைவரும் வானம் மாதிரி

       இருட்டுவது

       நீ பிறந்ததிலிருந்தே

        எனக்குப்பொறுக்காது.” “ என்னன்னாலும் உங்கூடதாம்மா இருப்பேன். என்றும் உன்னை நான் பார்த்த ஒரு வாரத்துக்கு முன் நீ என்மடியில் படுத்தபடியாய்சொன்னாய்” “ பால்கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன.

    அதிகாலையில் தூக்கமும் கரகரப்பும் கூடின குரலோடு ம்மாஎன்று பாலுக்காக நீ அழைப்பது என் காலை நேரங்களை நிறைத்திருக்கிறது.”

    உனக்காக இடது கையில் நான் ஹோம்வொர்க்க எழுத, அவித்த கடலை சப்பிட்டபடி என் வாயிலும் ஒன்றிரண்டைத்திணிக்கும் உன் கைவிரல்களின்

    சூடு என் மனதை நிரப்புகிறது” “ அவ்வப்போது ரப்பரைவைத்து அழிக்கும்போது நெற்றிப்புருவத்தைத் தூக்கி என் உயிரை உருக்குவதுபோலொரு பார்வை பார்ப்பாய்.உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன் நினைவுகள்மட்டும்தான்

    உன் உள்ளங்கையில் என்னைப்பற்றின ரேகைகள் பதிந்திருக்கும்.என் மூச்சுக்காற்றின் சூடு உன்னை உஷ்ணப்படுத்திகொண்டே இருக்கும். உலகிலேயே மரணத்தண்டனையைக்காட்டிலும்கொடிய தண்டனை பிள்ளைகளைப்பிரிவதுதான்என்ற வாக்குமூலங்களிலிருந்து எத்துணைச்சோகமானது என்பதை விளக்க என்னால் முடியவில்லை.

    எந்தக்குழைந்தையையும் பத்து விநாடிகளுக்குமேல் இப்போது என்னால் பார்க்கமுடியவில்லைஎன்ற தமயந்தியின் கூற்று ரணமாக்கிவிடுகிறது என்னை. இது மட்டுமா?….இல்லை….இதோ ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்போடு நீ என்னிருந்து விடுபட்டு சிணுங்கும் அழுகையோடு பிறந்ததும் உன்னை என் வயிற்றுமேட்டில் சிரித்தமுகத்தோடு டாக்டரம்மா போட்டபோது எழுந்த உணர்வை சாகும் நேரமும் என் அடி வயிறு நினைத்திருக்கும்.” எப்படி நித்திரையைக்கலைக்கும் வரிகளைத்த ந்திருக்கிறார் தமயந்தி!

                               இப்படித் தாய்மையின் வருத்தத்தைப்பிழிந்து தந்திருக்கும் தமயந்தி திருமணமுறிவுக்கான காரணத்தை எங்கேயும் சொன்னதாகப்படவில்லை. ஆனாலும் ஓரிடத்தில் வரும் வாக்குமூலம் நமக்கு வழிகாட்டுகிறது. அதாவது நீ வளர்ந்தபிறகு உன்னிடம் சொல்லவேண்டுமென நான் சேமித்தவைத்த உண்மைகள் சில உண்டு. கவிதை எழுதியதற்காக ஒடிக்கப்பட்ட என் வலதுகை நடுவிரல், தனித்தன்மைகளற்று மறத்திருந்த என் சுயம்” . கவிதை எழுதியும் சுயத்தோடு பேசியும் குடும்பவாழ்வில் ஈடுபட்டவருக்கு தனித்தன்மைகளென கருதியவைகளே கணவனுக்கு ஒவ்வாத தன்மைகளாகமாறி இல்லறத்தை இழக்க கரணங்களாகிவிட்டன என முடிவுசெய்யமுடிகிறது.

    தனித்தன்மையோடு வாழவிரும்பும் பலரின் வாழ்க்கை இப்படித்தடுமாறி சிதறும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இவர்களே துணையைத்தேடுகிறார்கள்.பின் இவர்களே முரண்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். துணையைத்தேடும்போழுது சிலவற்றை மறந்திவிட்டார்களா!. அல்லது விருப்பம்போல் நடந்து பின் ஆண்கள் ஏமாற்றி விட்டார்களா? என நினைக்க நிறைய இடமிருக்கிறது.

    ஆனாலும் தாய்க்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆசிரியர் கரன்சி நோட்டுக்களின் வாடை புழங்கும் இடங்கள் உன்னைத்தீண்டாதென்பதில் நான் திடமாக இருக்கிறேன்என்ற வாக்குமூலத்தை ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். கதை முழுவதும் மகனைப்பிரிந்ததாயின் துயர், தன்னிடமிருக்கும் சுயத்தின் துணையோடு வெளிப்படும் வெறுமையை ஆசிரியர் தமயந்தி சொல்லுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் மகனைப்பிரிந்த தோல்வியை அவர் அடைந்திருக்கிறார் என்பதில் நமக்கும் வலி. கதையின் வெற்றியை, கதாசிரியரின் வெற்றியை சமூகத்தின் தோல்வியாக கருதவேண்டியிருக்கிறது. சொல்லும் திறனாலும் சொல்வதிலுள்ள உண்மையாலும் சமூகத்தை உணரவைத்தலில், வாசிப்போரின் இதயத்தைக் கனக்கவைத்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்.

                          பிள்ளையைப்பிரியும் மனமுறிவு கூடாதென்பதை தானடைந்த மனமுறிவின்வழி வலியைக்கொடுத்து நம்மை உணரவைத்திருக்கிறார் தமயந்தி. ஒருமுறை தாயின் உடல்நலம் மோசமானபோதுமகனை பார்க்க விருபியபோது மகனைக்கடத்த தாய் தீர்மானித்ததாக எச்சரிக்கை நோட்டிசு அனுப்பப்படுகிறது. அப்போது தாய் சொல்லுகிறாள்.. “பெற்ற மகனைக்கடத்த விரும்பும் தாயாகப்பார்க்கப்பட்டவள் உலகத்தில் நான் மட்டுமே இருக்கக்கூடும்என்று. தாய் பேருந்துகளில் வேலைக்குச்சென்றுவந்த பயணச்சீட்டுகளை மகன் சேகரித்து வைத்திருந்ததை நினைவுப்படுத்தித் தாய் கூறுகிறாள்  இப்போது நினைவுகளின் சேகரிப்பில் திளைத்திருக்கிறோம் இருவரும்“. நினைவின் அடையாளங்கள் துருப்பிடிக்காதென்று நினைக்கிறேன்திடீரென்று கனவு வருகிறது.கனவில் மரணம் வாவா என்றழைப்பதாகக்கூறும் தாய், “நீ பிறந்தபோது என்னை முதலில் பார்த்ததுபோல நான் இறக்கையில் உன்னைக்கடைசியாய் பார்க்கவேண்டும்என உருக்கமாக,ஏக்கமிகு வாக்குமூலத்தை வழங்குகிறார். அன்புள்ள மகனுக்கு என்று தொடங்கி, கடிதத்தை முடிக்கும் கடைசிவரியில்  உன் முகம்தேடிவழியும் கண்ணோரத்துத்துளிகளுடன் அம்மா“. கண்ணீர் துளியின்றி கடந்துபோகமுடியாத கதை வாக்குமூலம் என்ற தமயந்தியின் கருத்தை முன்மொழிந்து முடிக்கிறேன்.

     

    Share
  • மீன் சமையல்காரன்

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    வலையை விரிக்கிறேன்

    விழித்து

    விழிமூடும்வரை

     

    வலையில் விழவேண்டும்

    என்பதற்காக அல்ல

     

    விழுபவை

    வீணாகிவிடக்கூடாதே

    என்பதற்காக

     

    இருந்தநிலையில்

    வந்துசேர்வதில்லை

    அனைத்தும்

     

    அவசர அவசியத்திற்காக

    சந்தைக்கும்

    சென்று திரும்புவதுண்டு

     

    வலைவிரிக்கத்தெரியாதவர்களுக்கு

    அரிய தருணங்கள்

    அறியாத்தருணங்களே

     

    கணமும் வலைகளோடு

    கவனமாய்த்திரிகிறேன்

    கர்வமடைகிறேன்

     

    இருந்தும் தேடியும்

    பெறவேண்டியதைப்

    பெறவேண்டும் என்பதே

    பெருநோக்கம்

     

    படத்துக்கு நன்றி: http://pdnphotooftheday.com/2009/01/288

     

    Share
  • அங்குசம் காணா யானை

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    நிலைத்தது

    எது என்று தெரியாதவர்கள்

    நினைத்தபடி

    ஆடி முடித்துவிடுகிறார்கள்

     

    தெரியாதவர்கள்

    தெரிந்துகொள்ள விழைந்தால்

    திருந்திவிடுவார்கள் (more…)

    Share