அங்குசம் காணா யானை
பிச்சினிக்காடு இளங்கோ
எது என்று தெரியாதவர்கள்
நினைத்தபடி
ஆடி முடித்துவிடுகிறார்கள்
தெரியாதவர்கள்
தெரிந்துகொள்ள விழைந்தால்
திருந்திவிடுவார்கள்
விழையாதவர்கள்
இறுதிவரை
விளங்காதவர்களாகிவிடுகிறார்கள்
விளங்காதவர்கள்
விலங்காகும் வாய்ப்புமுண்டு
மனிதர்களோ
அடிப்படையில் சமூக விலங்குகள்
அவர்கள்
வெண்மையின் உச்சத்தை
வெளிச்சப்படுத்துகிறார்கள்
பாகன் பழக்காத
யானையாகிவிடுகிறார்கள்
அவர்களால்தான்
தீவினைகளும்
தீராக்கொடுமைகளும்…
ஈடற்ற இழப்புகளை
எண்ணும்போதெல்லாம்
விலங்குகளைத்தான்
எண்ணவேண்டியிருக்கிறது
எண்ணம் விரிவடையாதவர்களை
எண்ணும்போதெல்லாம்
மனதுக்குள்
என்னமோபோல் இருக்கிறது
என்ன செய்ய..?
எல்லாம் எண்ணம்தான்
படத்துக்கு நன்றி: http://jemikam.deviantart.com/art/Man-is-an-animal-301917360