தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 10.

1

திவாகர்

தேவனின் ’துப்பறியும் சாம்பு’ கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று . ‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ . இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ’ராவ்சாகிப்’ நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.

ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண்.  எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என நாக்கில் எச்சில் ஊற துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிற்து.

‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.

‘நீதான் விடு’ இது சாம்பு.

இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ ஆஹா! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடுத்துவிட்டார்.. இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்’ என்றும் கூவுகிறார்.

அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள்.

‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார்.. அவர் மந்திரவாதியோ..இட்சிணியோ.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்’ ….

அதிர்ஷ்டம் அதிர்ஷம் அதிர்ஷடம்தான் எப்போதும் சாம்புவுக்கு கைகொடுக்கும். தகுந்த சமயத்தில் சாம்புவின் முட்டாள்தனத்தையே பலமான ஆயுதமாகக் காண்பிப்பதும் இந்த அதிர்ஷ்டம்தான் அது யார் மூலம் வேண்டுமானாலும் வரலாம். ‘காணாமல் போன கணவன்’ எனும் கதையில் ஒரு அல்ப சபலத்தால் எங்கேயோ போய் சரியாக மாட்டிக்கொள்ள வேண்டியவனுக்கு அவன் மனைவி வேம்புவால் கூட அதிர்ஷ்டம் அடிக்கிறது. இதோ சாம்பு வேம்பு வேடிக்கையை தேவன் எழுத்தால் படியுங்களேன்.

நம் இரண்டு பேரில் யாருக்கு யாரிடம் பிரியம் ஜாஸ்தி? என்று கேட்டான் சாம்பு ஒரு நாள் மாலை.

எட்டுமாத கர்ப்பிணியான வேம்பு ஒரு கம்பளியைத் தரையில் விரித்துக் கொண்டு, ரவிவர்மாவின் படத்தில் கன்வ ரிஷியின் புதல்வி துஷ்யந்தனுக்குக் கடிதம் எழுதும் நிலையில் காணப்படுவது போல், படுத்துக் கொண்டிருந்தாள்.

“இதென்ன அசட்டுக்கேள்வி, போங்கோ, யாராவது ஒரு பொம்மனாட்டி வந்து இளித்தால் உடனே பதிலுக்கு இளிக்காமல் இருந்து விடுவேளாக்கும் நீங்கள்? புருஷா எல்லாம் ஒரே மாதிரிதான்” என்றாள் அவள்

“அப்படி நான் இளித்தால் நீ பொறாமைப்பட்டு மாய்ந்து போகாமல் இருந்து விடுவாயோ? ஹி..ஹி..” என்றான் சாம்பு.

“நான் ஒண்ணும் மாட்டேன்! எனக்குக் கோபமே வராது. புருஷன் சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதான் உத்தம பத்தினியின் தர்மம் என்பார் எங்கப்பா”

“அப்படியானால் உனக்கு பிள்ளை பிறக்கப் போகிறதா, பெண் பிறக்கப் போகிறதா?

“உங்களுக்கு எது வேண்டும்?”

“எனக்குப் பெண் தான் வேண்டும்” என்று வேம்புவின் பக்கம் சிறிது நகர்ந்தான் சாம்பு.

“வெட்கமாயில்லை? யாரேனும் வந்து நிக்கப்போறா! போங்கோ உங்க ரூமுக்கு” என்றாள் அவள்.

சாம்பு தன் அறைக்குப் போனபோது பட்டுப்புடவையை உடுத்தி முகத்தைப் பாதிக்கு மேல் மூடிக்கொண்டு ஒரு ஸ்திரீ அவன் மேஜையின் முன்னால் நாணமே உருவமாக நின்று கொண்டிருந்தாள்.

“உட்காருங்கள்.. நீங்கள் யார்?” என்றான் சாம்பு

மெல்ல, காது கேட்டதும் கேட்காதுமாக அவள் பதில் சொன்னாள். “உங்களை எப்படிப் பார்ப்பது என்று பயமாக உள்ளது, சங்கோஜமாகவும் இருந்தது. நான் செங்கல்பட்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருப்பவள். மேலே சொல்லட்டுமா?” என்றாள். சொல்கிறபோதே இருமுறை நாஸூக்காக மேலாக்குப் புடவையை வீசிப் போர்த்திக் கொண்டாள்.

“சொல்லுங்கள்! கேட்கிறேன்!”

“என் தங்கையும் நானும்தான் எங்கள் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் காலமாகி எட்டு வருஷமாகிவிட்டன. நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் பள்ளிக்கூடத்தில் உத்தியோகம் ஏற்றுக்கொண்டேன். என் தங்கை, ஷண்முகசுந்தரம் என்பவரை மணந்து கொண்டு இரண்டு வருஷம் முன்புவரையில் பம்பாயில் இருந்தாள். புருஷன்மனைவி அந்நியோந்யத்தைப்பற்றி

சொல்லவேண்டியதில்லை. நான்கு நாளைக்கு முன்பு அவர் வெளியே புறப்பட்டுப் போனவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை எனக்கு சொல்லி அனுப்பினாள் என் தங்கை. ஓடி வந்தேன். மேலும் மூன்று நாளாகிவிட்டது. இன்னும் அவர் திரும்பவில்லை.”

“அவருக்கு என்ன உத்தியோகம்?”

“உத்தியோகம் என்று ஒன்றுமில்லை. பம்பாயில் ‘பிஸினஸ்’ செய்து கொண்டிருந்தார். நல்ல லாபம் கிடைத்தது. இப்போ இங்கே வந்து சௌகரியமாக இருக்கிறார்”

“போகிறபோது எங்கே போகிறேன் என்று சொல்லவில்லையோ?”

“இல்லையே! வழக்கம்தான் வெளியே போவதும் வருவதும். ஆனால் ஒரு தினமாவது திரும்பாமல் இருந்ததில்லை. என் தங்கை கவலையிலேயே குன்றிவிட்டாள்” அவள் கண்ணில் அப்போது நீர் நிரம்பியது.

சாம்புவுக்கு அனுதாபம் பிறந்து விட்டது. “உஸ்.. வருத்தப்படாதீங்கோ.. வந்து விடுவார்!”

“நீங்கள் கவனித்து எங்களுக்குச் சொன்னால் தேவலை. நீங்கள் பார்க்க ஆரம்பித்தாலே அவர் அகப்பட்டு விடுவார் என்று எங்களுக்கு திடமான நம்பிக்கை”

“போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோ?”

“ஐயோ, வேண்டாம்.. பத்திரிகையில் வந்து சிரித்துப்போயிடும். தவிர அவர் வந்துவிட்டால், ஏன் அமர்க்களம் செய்து விட்டீர்கள் என்று கோபிப்பார் என்றும் என் தங்கை பயப்படுகிறாள். நீங்கள் கொஞ்சம் பார்க்கிறீர்களா?”

“பார்க்கிறேன்”

“அப்போ காலையில் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?”

“ஆகட்டும்”

அவள் எழுந்திருந்தாள். வெளியே ஹாலுக்கு வரும்போது சாம்புவும் பின் தொடர்ந்தான். “நான் வரட்டுமா? கோட்ஸ் ரோடு, 345ஆம் நம்பர், என் பேர் சகுந்தலா” என்று திரும்பின அந்த ஸ்திரீ, சாம்புவின் கையைப் பிடித்து, ஹிதமாக அதை ஒரு அழுத்து அழுத்தி அவன் கண்களை பிரேமையுடன் நோக்கினாள்.

பகீரென்றது சாம்புவுக்கு. ‘இதென்ன சங்கடம், இப்படி ஏன் பார்க்கிறாள் இவள்!’

ஒரு க்ஷணகாலம் தயங்கினாள் அவள். பிறகு விசுக்கென்று வாசலில் போய்விட்டாள்.

ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதே, யாராக இருக்கும் என்று வெகு நேரம் யோசனை செய்தவாறு படுத்திருந்த வேம்பு மெல்ல எழுந்து வந்ததும், சகுந்தலா சாம்புவின் கையைப் பிடித்து வீட்டு விலாசத்தைச் சொல்வதும் சரியாக இருந்தன. பளிச்சென்று அவள் கண்களில் ஒரு பொறி பறந்தது. மறு க்ஷணம் ‘சரி, இருக்கட்டும்!’ என்று உள்ளே போய்விட்டாள்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னும் இரண்டு பேர் சாம்புவைத் தேடிக்கொண்டு வந்தார்கள். இரண்டுபேரும் வந்து உட்கார்ந்ததும், “ஓர் உதவி செய்ய வேண்டும்” என்றார்கள்.

“சௌகரியப்படாது எனக்கு!” என்றான் சாம்பு.

“தகுந்த மரியாதை செய்வோம் ஸார், நாங்கள். எங்கள் சிநேகிதர் ஒருவர் – ஷண்முகசுந்தரம் என்பது அவர் பெயர். திடீரென்று நான்கு நாட்களாகக் காணப்படவில்லை. வீட்டைவிட்டுக் கிளம்பி எலெக்ட்ரிக் ரயிலில் ஏறினவர்தான். அப்புறம் திரும்பவில்லை. அவர் குடும்பத்தார்கள் அவரைக் கண்டுபிடிக்க என்ன ஏற்பாடு செய்கிறார்களோ, எங்களுக்குத் தெரியாது. அவர் ஜாக்கிரதையாக திரும்பவேண்டும் என்பது ஒன்றே எங்கள் கவலை. என்ன செலவானாலும் பரவாயில்லை. நாங்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தெரியவேண்டியதில்லை.. நீங்கள் மட்டும் தயவு செய்யவேண்டும்”

“போலீஸில் சொல்லுங்கள்”

“அதுதான் வேண்டாம் சார்.. உங்களிடம் காதில் போட்டுவைத்தால் காதும் காதும் வைத்தாற்போல் காரியம் நடக்கும்”

சாம்புவின் முன்னால் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் நகர்ந்தன.

சரி, கதை உங்களுக்குப் பாதிதான் சொல்லி இருக்கிறேன். இரண்டும் ஒரே கேஸ்தானே என்று ஒப்புக்கொன்டு அந்த இருவரையும் அப்புறமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறான் சாம்பு. அன்று ராத்திரி இன்ஸ்பெக்டர் கோபாலன் இவன் வீட்டுக்கு வந்து அப்போதுதான் அசந்து தூங்க ஆரம்பித்தவனை எழுப்புகிறார். ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயிலில் நகைகளும் வைரக்கற்களும் திருடுபோய்விட்டன என்றும், குருக்கள்  வீட்டில் சோதனை போட்டதில் ஒரு சின்ன நகை மட்டும் கிடைத்தாலும் அவர் தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார், அழுகிறார் என்றும் சொல்லிய இன்ஸ்பெக்டர் எப்படியாவது சாம்பு உடனடியாக இந்த கேஸில் தலையிட்டு நகைகளையும் கண்டுபிடித்து இந்த அபவாதத்தில் ஒரு நல்ல குருக்களை விடுவிக்கவேண்டுமென்றும் சொல்கிறார். ஆனால் சாம்பு மறுக்கிறான். எப்படியாவது நாளைக்காவது வந்து பாருமேன்’ என்கிறார். ‘நாளைக்கு தான் பிஸி’ என்று பிகுவுடன் உள்ளே ஓடிவிடுகிறான்.

அடுத்தநாள் காலை சகுந்தலா வீட்டில் அந்த ஒய்யார ஸ்திரீயைக் கண்டு மயங்கிக்கொண்டே அசடு வழிந்து கொண்டே ஏதோ பரிசோதிப்பது போல வீடெல்லாம் பார்க்கிறான். தங்கையுடன் இருக்கும் அவளும் அவனுடன் ‘ஈஷி’க்கொண்டே இவனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறாள். மறுபடியும் அன்று இரவு  வருமாறு அவள் சாம்புவை ‘அன்போடு’ அழைக்கிறாள். அப்படியே எனச் சொல்லி வீடு திரும்புகிறான். வேம்புவுக்கு ஏதோ சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் அவளும் காண்பித்துக் கொள்ளவில்லை. இதன் மத்தியில் மத்தியில் இவன் வீட்டுக்கு முதல்நாள் வந்து இருநூறு ரூபாய் கொடுத்த அந்த இருவரும் அவனிடம் ஏதாவது துப்பு துலங்கியதா என்று கேட்கிறார்கள். ஆனால் என்ன சொல்வது அவர்களிடம். இன்ஸ்பெக்டர் இரவு கூறிய ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயில் கொள்ளை கேஸ் ஞாபகம் வருகிறது. தான் அந்தக் கேஸ்’ இல் பிஸியாக நடத்துவதாகவும், இவர்கள் விஷயத்தையும் கவனிப்பதாகவும் பொய் சொல்லி கழட்டி விடுகிறான். மத்தியானம் ஒரு தூக்கம் போடும்போது போன் வருகிறது. வேம்பு எடுக்கிறாள். எதிர் போனில் அந்த சகுந்தலா எப்படியாவது இரவு வரவேண்டுமென்று அழைப்பு விடுப்பதைக் கேட்டு வேம்புவுக்கு ஏதோ புரிகிறது. குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்த கணவன் பேசுவது போன்ற குரலில் ‘அப்படியே’ என்று சொல்லி போனை வைத்து விடுகிறாள். மாலை ஷோக்காக டிரஸ் செய்து கொண்டு ஒரு தலைப்பாகையும் வைத்துக்கொண்டு, வேம்புவிடம் ஒரு நாடகம் போகிறேன், நடிக்கப்போகிறேன் என்று பொய் சொல்லி ஜாலியாக சகுந்தலா வீட்டுக்கு நடையைக் கட்டுகிறான். கணவன் புளுகுகிறானே என்று பயப்பட்ட வேம்பு உடனே போனில் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ‘கம்ப்ளைண்ட்’ அவனைப் பற்றிப் போட்டு வைக்கிறாள். மனைவி கணவனிடம் சொல்ல இன்ஸ்பெக்டர் கோபாலனும் அவளுக்கு உதவுவதாகவும், சாம்பு அப்படிப்பட்டவன் இல்லையென்றும் ஆறுதல் சொல்கிறார். இனி தேவன் எழுத்தால் தொடரலாமா..

சூர்யா பவன் ஹோட்டலைத் தாண்டும்போது சாம்பு தயங்கி நின்றான். அதனுள்ளிருந்து இரண்டு பேர்வழிகள் இறங்கி வெளியே வந்தார்கள். பெரிய விளக்கொளியில் அவர்கள் முகத்தைச் சாம்பு நிமிஷத்தில் கண்டுகொண்டான் (200 ரூபாய் கொடுத்த பழைய ஆசாமிகள்தான்). டவாலி உடையிலிருந்த சாம்புவைக் கவனிக்காமலே அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.

“கிடக்கிறான் சாம்பு! அவன் எதையும் கண்டுபிடிப்பான் என்று தோன்றவில்லை. என்னைக் கேட்டால் ஏதானும் தொந்தரைதான் வருமென்று இருக்கிறது”

“பின் என்னதான் செய்யலாம்?”

“இனிமேல் உழப்புவதில் பிரயோசனம் இல்லை. இன்றைக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அந்த ஷண்முகசுந்தரம் வீட்டிலே புகுந்து இரண்டு பெண்பிள்ளைகளையும் கட்டிப்போடுகிறேன். விரலில் பந்தம் கட்டிக்கொண்டு கேட்டேனானால் கதறிக்கொண்டு விஷயத்தைக் கக்கி விட மாட்டார்களா?”

சாம்பு அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. கோட்ஸ் ரோடுக்குப் பறந்தான். போனதுமே விஷயத்தை சகுந்தலாவிடம் சொன்னான். “சாமான்கள் கிடக்கிறபடிம் கிடக்கட்டும்! நீங்கள் நம்ம வீட்டுக்கு வாருங்கள். முக்கியமானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் யோசனை வேண்டாம்!” என்றான்.

தங்கை ஸ்டவ்வை மூட்டி கொஞ்சம் ஓவல்டின் போடுவதாகச் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

சகுந்தலா சாம்புவை நெருங்கினாள். “உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றாள் உணர்ச்சியுடன்.

சாம்பு அவளை அணைத்தாற்போல் நின்றான். ஒருபுறம் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருபுறம் விவரிக்க முடியாத ஆனந்தம். “சகுந்தலா! அவசியமானால் உனக்கு ஆண் வேஷம் போட்டுக்கூட உன்னைக் கொண்டு போவேன்! பயப்படாதே!” என்றான் சாம்பு.

சகுந்தலா சாம்புவை விறைக்கப் பார்த்தாள். அவன் முகத்தில் வழிந்த அசட்டைப் பார்த்து, கபகபவென்று சிரித்து விட்டாள். தங்கை ஓவல்டினைக் கொண்டு வைத்துவிட்டு கதவைச் சார்த்திக்கொண்டு மாடிக்குப் போனாள்.

சகுந்தலாவுடன் நெருக்கமாக ஹாலிலிருந்த ஸோபாவில் உட்கார்ந்துகொண்டான் சாம்பு. வேம்புவின் நினைவு மாறி மாறி வந்தது. பரமசாதுவாச்சே அவள்! அவளுக்கு துரோகம் செய்வதா? ஆனால் சகுந்தலாவின் கண்களோ அவன் மூளையை மயக்கின. ஒரு கையை அவள் கழுத்தில் அணையவிட்டு, பவுடர் பூசின கன்னத்தை இச்சையுடன் வருடினான். இதென்ன கூத்து. சொரசொர என்கிறது கன்னம்! வேம்புவின் கன்னம் இப்படி இராதே!

வெடுக்கென்று அவன் கையை உதறி எறிந்துவிட்டு எழுந்தாள் சகுந்தலா. “போக்கிரி கழுதை! உன் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறாயா?” என்று கர்ஜித்தாள். குரல் முற்றும் மாறி இருந்தது. சாம்பு நடுநடுங்கிப் போனான. ‘ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது.. ஓடிவிடு! என்று அந்தராத்மா கூறிற்று. ஒரே பாய்ச்சலில் ஓடி வாசற்கதவைத் திறந்துவிட்டான்.

மின்சார விளக்கு வெளிச்சத்தில் பளபளவென்று மின்னல் வேகத்தில் ஒரு சூர்க்கத்தி அவனைத் தாண்டி வாசலில் விழுந்தது. அப்போதுதான் நுழைந்த இன்ஸ்பெக்டர்  கோபாலன் குனிந்து அதை எடுத்தார். “என்ன ஓய்! கத்தி விளையாட்டு நடக்கிறதோ இங்கே! ஹூம்..” என்றார்.

சாம்புவின் நா குழறிற்று. “அவள் கன்னம் சொர சொரவென்றிருக்கிறது என்று தொட்டேன்.. கோவிச்சுண்டுட்டாள்” என்று உளறினான்.

கோபாலன் புருவத்தை நெரித்துக்கொண்டு பார்த்தார். சகுந்தலா ஸ்தம்பித்துப் போய் நின்றாள். அந்தச் சமயத்தில் தங்கை, ஷண்முகசுந்தரத்தின் படத்துடன் வந்தவள் கல்லாகச் சமைந்து போய் விட்டாள்.

“ஏன் சாம்பு! யாரையோ காணோமென்று வந்தீராமே.. எனக்கானால் வைரத்தைப் பார்த்துத் தருகிறேன் என்கிறீர். ஹூம்..” என்று கேட்டார்.

“அதோ! அந்தப் படத்தை முதலில் கையில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான் சாம்பு.

“அடப் பாவி மனுஷா! என்றாள் சகுந்தலா. அவள் குரல் இப்போது புருஷக் குரலாக இருந்தது.

“ஓஹோ! அப்படியா?” என்று இன்ஸ்பெக்டர் சகுந்தலாவின் ஜடையைப் பிடித்து இழுத்தார். பின்னல் கையோடு வந்துவிட்டது. சாம்பு மூக்கைத் தடவிக்கொண்டு அசட்டு விழி விழித்தான். போட்டோவிலிருந்த ஷண்முகசுந்தரம்தான் அது. அவனைக் காதலித்த’ சகுந்தலா ஆண்பிள்ளையா?’

“ஓய் சாம்பு! இது பெண்பிள்ளை அல்ல என்பதை ஊர்ஜிதம் பண்ணிக்கொள்ளத்தான் மெல்ல மோவாய்க்கட்டையைத் தடவிக்கொடுத்தீரோ? அதில் கோபம் வந்துவிட்டதாக்கும் இவருக்கு!” என்று சிரித்தார் கோபாலன்.

போட்டோவின் ஃபிரேமை பிரித்தபோது, மெழுகை உள்ளே சமமாக ஊற்றி அதில் எல்லா வைரக் கற்களையும் பதித்திருந்தது. சாம்புவுக்கு ஓவல்டினில் மயக்க மருந்தைக் கொடுத்திருப்பாள் என்றே தைரியமாக தங்கை படத்தைக் கொண்டு வந்திருக்கிறாள். ஆனால் நடந்திருந்தது வேறு.

(கோயில்) திருட்டுக்குக் காரணமாய் இருந்தவர்கள் இரண்டு பக்தர்கள்தான். பக்கத்து பிரகாரத்தில் ‘பஜனை’ பண்ணி ஜனங்கள் கவனத்தை ஒருபுறமாக இழுத்துவிட்டு அந்தச் சமயத்தில் ஷண்முக சுந்தரத்தைக் கொண்டு எல்லா கற்களையும் திருடவைத்திருக்கிறார்கள். தங்கள் மீது சந்தேகமே வராமல் இருப்பதற்காக குருக்கள் வீட்டில் ஒரே ஒரு நகையை மட்டும் வீசியிருக்கிறார்கள். ஆனால் ஷண்முகசுந்தரத்துக்கு எல்லாக் கற்களையும் சேர்ந்தாற்போல பார்த்த போது தானே அவற்றை வைத்துக் கொள்ளவேணுமென்ற ஆசை வந்துவிட்டது. தான் ஓடி விட்டதைப் போல பாசாங்கு செய்து பெண் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்து மனைவியுடன் ஓடிவிட யத்தனம் செய்திருக்கிறான். சாம்புவிடம் கேஸ் வந்துவிடுமென்று பயந்து, அவனை முதலில் மடக்கிப் போடவே இந்தக் காதல் நாடகம் நடத்தி இருக்கிறான்.

“அந்த பக்தர்களுக்கு என்ன ஏற்பாடு? என்றார் கோபாலன்.

“அவர்களையும் இங்கே பன்னிரெண்டு மணிக்கு வரவழைக்க இந்த மனுஷன் சூழ்ச்சி செய்திருக்கிறான்” என்றான் ஷண்முகசுந்தரம் குரோதமாக.

”ஏன் காணும்! சாம்பு! என்னை இப்போ இங்கே வரவழைக்கக்கூட சூழ்ச்சிதான் செய்தீரோ வேம்புவிடம் சொல்லி!” என்றார் கோபாலன்.

அன்றிரவு சாம்பு வேம்புவிடம் தான் ஏகபத்தினி விரதத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு நிகர் என்று மன்றாடிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எனக்குத் தெரியாதா.. நீங்கள் சொல்லவேண்டுமா? எனக்கு சந்தேகமே கிடையாதே” என்றாள் வேம்பு.

ஒவ்வொரு சாம்பு கதையும் ஒவ்வொரு மாதிரிதான். இந்த சாம்புவை முதல் முதல் சித்திரமாக வரைந்தவர் ராஜு என்றும் பின்னால் வந்த சித்திரக் கதைக்கு ‘கோபுலு’வும் என்று முன்பேயே குறிப்பிட்டிருந்தேன் இல்லையா. ஆனால் சாம்புவுக்கு எத்தனை அதிர்ஷ்டமோ.. நிறைய சித்திரக் காரர்கள் மிகவும் இஷ்டப்பட்டு வரையப்பட்டவன் என்று தெரிகிறது. பின்னால் (1991 ஆம் ஆண்டில்) சாம்பு வை முழுநீளப் புத்தகமாகக் கொண்டு வந்த அல்லையன்ஸ் கம்பெனி, துப்பறியும் சாம்பு அட்டைப்படத்தில் பிரபல ஓவியர் நடனம் அவர்களின் கைவண்ணத்தில் சாம்புவைக் காட்டினர். சாம்புவின் ஒவ்வொரு கதைக்கும் ஓவியர் ‘கலா’ மூலம் கருப்பு வெள்ளைப் படத்தில் சாம்புவைக் காட்டி மகிழ்வித்தனர்.  தேவன் கல்கி காலங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான ஓவியர் சில்பி. இத்தனைக்கும் இவரும் தேவனும் நண்பர்கள் என்பதால் இவர் சாம்புவை ஓவியமாக வரைந்திருக்கிறாரா என்று பார்க்கவேண்டும். ஆனால் சில்பியுடன் தேவன் இணைந்து ஆனந்த விகடனில் தொடராக வழங்கிய அந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரைகளை எத்தனை போற்றினாலும் கலைத்தாயானவள் திருப்தி அடையமாட்டாள்தான்.. இதைப் பற்றியும் ஒரு சுற்று வருவோம்.

(தொடர்ந்து வரும்)

படங்கள்: சாம்பு வண்ணப்படம் : நடனம்

சாம்பு கருப்பு வெள்ளை படங்கள் : கலா

நன்றி : அலையன்ஸ் கம்பெனி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 10.

  1. சாம்புவும், வேம்புவும் படிக்கப்படிக்க இன்பம். ஆஹா, அடுத்துத் தென்னாட்டுச் செல்வங்களா? வெளுத்துக் கட்டலாம். விகடனில் எப்போ வந்ததுனு தெரியாது.  ஆனால் பைன்டாகப் படித்திருக்கிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.