கலையாத கனவொன்று …
-கவிநயா
கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!
வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!
சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!
படத்துக்கு நன்றி: http://armanoluk.blogspot.com/2010/06/radha-krishna-by-mahima-3.html
மென்மையான எண்ணத்தை வெளிப்படுத்தும் அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.
“மனமெங்கும் உனை நிரப்பி வைத்தேன்
பூ
மணம் வீசும் உன் பெயரில் உயிர் எழுதி வைத்தேன்”
இந்த இரண்டே வரிகளில் கவிதையின் கரு தெளிவாகி விடுகிறது. அவன் யார் என்பதை சொல்லாமல் அவனை படம் போட்டு காட்டியதும் புதுக்கவிதையின் ஒரு வெற்றி தான்.சபாஷ் கவிநயா!
‘சுனைபோலப் பெருகுமென்னன்பு’ எனத் தொடங்கும் வரிகளில் மிக அரிதான தத்துவம் ஒன்று ஒளிந்திருக்கிறது. கண்ணன் பால் பேரன்பு பொங்கும் வரிகளில் பக்தியின் பொற்கவாடம் திறக்கிறது. மிக்க நன்றி.
கவிதை அருமை கவிநயா. வார்த்தைகளில் விளையாடி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்!
-மேகலா
அன்பின் கவிநயா, வாழ்த்துகள்!
தொடர்பில்லாமல் எதையோ உளறுகிறேன் என்று எண்ணவேண்டாம். உண்மையிலேயே உங்கள் கவிதையில் ஒளிந்திருந்த இசை எனக்கு மிகவும் பிடித்தது.
//உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!//
இதை இப்படிப் பாடிப் பாருங்கள்: (‘அழகென்ற சொல்லுக்கு முருகா ‘ பாடல் வரிகள்)
“குன்றாறும் குடிகொண்ட முருகா – பக்தர்
குறைநீக்கும் வள்ளல்நீ அல்லவோ முருகா!”
இதையும்..
//சுனைபோலப் பெருகுமென் னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!//
இப்படி..
“சக்திஉமை பாலனே முருகா – மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா”
“அழகென்ற சொல்லுக்கு” பாடலின் தொடர்ச்சியாகவே இதை நான் காண்கிறேன். கண்ணனைவிட முருகன் படம் பொருத்தமாக இருக்கும். 🙂
ஒசைநயத்தோடு எழுதுகிறீர்கள்! அருமை. வாழ்த்துகள்!
//மென்மையான எண்ணத்தை வெளிப்படுத்தும் அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.//
ரசித்தமைக்கு மிக்க நன்றி, திரு.சச்சிதானந்தம்!
//சபாஷ் கவிநயா!//
ரசித்துப் போட்ட சபாஷுக்கு மிக்க நன்றி, தனுசு!
// பக்தியின் பொற்கவாடம் திறக்கிறது. மிக்க நன்றி.//
உங்களிடமிருந்து புதிதாய் ஒரு சொல் கற்றுக் கொண்டேன் 🙂 அதற்கும், கவிதை பற்றின புரிதலுக்கும் மிக்க நன்றி, பார்வதி!
//கவிதை அருமை கவிநயா. வார்த்தைகளில் விளையாடி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்!//
நன்றி மேகலா 🙂
//தொடர்பில்லாமல் எதையோ உளறுகிறேன் என்று எண்ணவேண்டாம். உண்மையிலேயே உங்கள் கவிதையில் ஒளிந்திருந்த இசை எனக்கு மிகவும் பிடித்தது. //
என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள். சந்தத்துடன் எழுதுவதே என் விருப்பமாகவும், அப்படி எழுத முயற்சிப்பதே என் பழக்கமாகவும் இருந்து வருகிறது. அதனால் நீங்கள் கவிதையின் ஓசை நயத்தை ரசித்ததில் எனக்கு மெத்த மகிழ்ச்சியே 🙂
//“அழகென்ற சொல்லுக்கு” பாடலின் தொடர்ச்சியாகவே இதை நான் காண்கிறேன். கண்ணனைவிட முருகன் படம் பொருத்தமாக இருக்கும்.//
நீங்கள் சொன்ன பிறகே இதை உணர்ந்தேன். இதை எழுதுகையில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பாடல்தான் என் மனதில் இருந்தது 🙂
உங்கள் ரசனைக்கு மீண்டும் மிகவும் நன்றி, மாதவன் இளங்கோ!
கலையாதக் கனவொன்று தந்தாய் – நீயே
கலையாது நனவென்று நெஞ்சில் புகுந்தாய்!
கவிநயத் தமிழென்று வந்தாய் – ஆடிக்
களிப்பாக கோவிந்தா! மூச்சில் கலந்தாய்!!
//கலையாதக் கனவொன்று தந்தாய் – நீயே
கலையாது நனவென்று நெஞ்சில் புகுந்தாய்!
கவிநயத் தமிழென்று வந்தாய் – ஆடிக்
களிப்பாக கோவிந்தா! மூச்சில் கலந்தாய்!!//
மிக அழகான கவிதை வரிகளுக்கு மிக்க நன்றி, சத்திய மணி!