‘வியர்வையூர்’ எனும் தொடர் கவிதை நடையில் அமைந்த காவியம்.. சிங்கப்பூரில் வாழ்ந்த பட்டறிவைச் சொல்லும் பெட்டகம். எதுவுமே கற்பனையில்லை. மொழிவேண்டுமானால்அழகைக் கூட்டியிருக்கலாம். எங்கேயும் எதையும் கூட்டிச் சொல்லவில்லை. ஓரு தமிழ்க் குடிமகனின் சிங்கப்பூர் வாழ்க்கை இது. அனைத்தும் அவனுடையதல்ல. அவனைச் சேர்ந்தவர்களின் பட்டறிவும் இதில் வலம் வருகின்றன. ஒட்டுமொத்த பட்டறிவின் பெட்டகம்..

அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ
அந்த வீடுகளில்
இப்போது
இரவிலும் வெளிச்சம்
ஒவ்வொருவர்
முகத்திலும் வெளிச்சம்

ஒவ்வொருவர் முகத்திலும்
குதித்து விளையடும்
குதூகலம்

அதாவது இப்போது
அங்கே
இல்லத்திலும் வெளிச்சம்
உள்ளத்திலும் வெளிச்சம்

ஒவ்வொரு வீட்டிலும்
ஒலிக்கிறது தொலைபேசி
இது
பழையசெய்தி
இப்போது
ஒவ்வொருவர் கையிலும்
கைப்பேசி

தீர்க்கப்படாத தேவைகள்
குறைந்து
கவலைப்படாத ஒரு காலம்
கைக்குவந்திருக்கிறது

கீற்றுக்குடிசைகள்
மண்சுவர் வீடுகள்
பனைஓலைக்கூரைகள்

சாணத்தில் மெழுகி
தீத்துக்கல்கொண்டு தீட்டி
தீட்டி
சலவைக்கல்போல்
முகம்பார்க்கும் தரைகள்
எல்லாம் இப்போது
பளிங்குகளாக பரிணாமம்

மலையில் கிடைத்த
கிரானைட்களாக அலங்காரம்

மாட்டுத்தொழுவமும்
வீடும்
என்றிருந்த நிலைமாறி
ஒவ்வொருவரும்
வீடுபேறு பெற்றநிலை

தெருவில் எங்கும்
குடிசைகள் இல்லை

என்பிள்ளைப்பிராயத்தில்
ஊருக்குள்ளே
ஒழுங்கை இருந்தது

இப்போது எல்லாம்
தார்சாலைகள்
சிமெண்ட் சாலைகள்

கரிபிடித்த
வறுமைப்பானைகளை
உடைத்துவிட்டு
வெள்ளிப்பாத்திரங்கள்
குடியேறிவிட்டன

எப்போதும் (ever silver)
வெள்ளிகளுக்குத்தான்
இப்போது
வீட்டில் இடம்

கொஞ்சம்
பொன்நகைகளும் வந்து
கழுத்தில் கனத்தன

காய்ந்த முகங்களிலும்
புன்னகைக்கூடின

ஆடைகளிலும் தெரிந்தன
அந்த அந்நியநாட்டு
அடையாளங்கள்

காலணி
சோப்பு
சீப்பு
கண்ணாடி எல்லாம்

 

இப்போது
வெளிநாட்டினுடையது
குறிப்பாக
அந்த நாட்டினுடையது

இந்தியாவில்
இல்லாததில்லைதான்
ஆனால்
இந்தியா
வீட்டில் இல்லைதான்

இந்தியாவில்
அவன்
வீடு இருந்தது
அவன் வீட்டில்
இந்தியா இல்லை

வாசனை திரவியங்கள்
வானொலிகள்
ஒலிப்பதிவுப்பெட்டிகள்
தொலைக்காட்சிப்பெட்டி
கடிகாரம்
பேனா
மூக்குக்கண்ணாடி
படுக்கும் பாய்

கோடரி மார்க்
டைகர் பாம் மருந்துகள்
ஒடிகோலன்
கிளிதைலம்
மீசைக்காரத்தைலம் போன்ற
முன்னெச்சரிக்கை மருந்துகள்

கைலிகள்(லுங்கிகள்)
கைவிளக்குகள்
கைக்குடைகள்
கைக்குட்டைகள்
ரொட்டிகள்
படுக்கை விரிப்புகள்
துண்டுகள்
மான்மார்க் குடைகள்

வெந்நீர் குடுவைகள்
சவரப்பெட்டிகள்
முகப்பூச்சுத்தூள்கள்

 

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *