இலக்கியம்கவிதைகள்

மொழிகடந்த மொழி

 

பிச்சினிக்காடு இளங்கோ

 

அதிகாலையில்
அதே நேரத்தில்
அதே நிறுத்தத்தில்
அதே பேருந்தில்
ஏறுவதுண்டு

நாடு
அந்நிய நாடு
நானும்
அந்நியன்

எந்த நிலையிலும்
என்
இதயம் நழுவ
வாய்ப்பில்லை
வழியில்லை

அந்த நேரம்
எப்போதும்
நெருக்கடி நேரம்தான்

நின்றுகொண்டிருந்த
நான்
ஒரு திருப்பத்தில்
பேருந்து
திரும்பும்போது
பின்னிருக்கையிலிருந்து
ஒரு மஞ்சள் நிலா
கீற்றென
இமைகளை அசைத்து
இசைவைச்சொன்னது

தீப்பொறி
தீண்டியதுபோல்
திடுக்கிட்டேன்

பாம்பை மிதித்தவனாய்
பதறினேன்

இனம், மதம்
மொழிகடந்த
மொழியில் தவித்தேன்

வழிதெரியாது
விழித்தேன்

 

 

யாரும் அறியா
மின்னலை என்னுள்ளே
விழுங்கினேன்

அன்று
இடம்பார்த்து அமராமல்
நின்று
பயணத்தை முடித்தேன்

இன்னும் முடியவில்லை
நினைவின் பயணம்
இன்னும் உலரவில்லை
நினைவின் ஈரம்

(1990-ல் ஒருநாள் பேருந்தில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தவேளையில் 2.03.2014)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here