Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 201

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 08. துன்ப மாலை

    ஆய்மகள் உண்மை உரைத்தல்

    fadd9cb2-4e13-49ba-8494-ca1de7c0b98b

    முதுமகள் கூறியது:

    அரசன் வாசம் செய்யும்
    அரண்மனையில் இருந்த
    அழகான சிலம்பினைக்
    கவர்ந்த கள்வன்  இவனே என்று,
    சத்தமாய் ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த காவலர்
    கோவலனைக் கொலை செய்ய எண்ணினர்.

    கண்ணகியின் துயர நிலை

    முதுமகளின் மொழிகேட்ட கண்ணகி
    சீறிப் பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்;
    கதிர்கள் பொழியும் திங்கள்,
    கரிய பெரிய மேகங்களுடன்
    தரையில் வீழ்வது போல வீழ்ந்தாள்.
    சிவந்த கண்கள் மேலும் சிவக்கும்படி அழுதாள்;
    தன் காதலன்  எங்கே எங்கே எனக்கேட்டு
    ஏக்கமுற்று புலம்பி வருந்தி மயங்கி விழுந்தாள்.

    தம்மோடு கூடி இன்பமுற்ற கணவன்மார்
    மடிந்து தீயில் மூழ்க,
    அவர்களோடு தீயில் மூழ்காது
    கைம்மை நோன்பு நோற்றுத்
    துயரப்படும் பெண்கள் போல,
    உலகத்து மக்கள் அனைவரும்
    தூற்றிப் பழிகூறும் வண்ணம்
    பாண்டிய மன்னன் செய்த தவற்றினால்,
    காதல் கணவனை இழந்த நானும்
    துயரம் கொண்டு மடிவேனோ?
    இங்ஙனம் புலம்பினாள். 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 200

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 08: துன்ப மாலை 

    ஆய மகளிருடன் மாதரி நீராடப் போவதும், கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து விரைந்து வருவதும் 

    குரவைக் கூத்து முடிந்தவுடன்
    ஆயர் குலத்தவள் முதுமகள் மாதரி
    தளர்ந்த நடையுடன்
    மலரும் புகையும் புனையும் சாந்தும் பூமாலையும்
    எடுத்துக் கொண்டு
    இடையறாது ஒழுகும் நீரையுடைய                            kaNNagi
    வைகை ஆற்றின் கரையில் எழுந்தருளியுள்ள
    திருமாலை வழிபடுவதற்காக
    வைகைத் துறைக்குச் சென்றாள்.

    அப்போது பெண்ணொருத்தி
    மதுரையில் நடந்த
    ஓர் அவலச் செய்தி கேட்டு
    அதை உரைக்க வந்தாள்.

    கொலைச்செய்தி அறிந்து வந்த ஆயமகள் பேசாது நிற்க, கண்ணகி அவளை நோக்கி ஐயமுற்றுப் பேசுதல் 

    அங்ஙனம் ஓடிவந்த அவள்,
    கண்ணகியைக் கண்டதும்
    சொல்ல வந்ததைச் சொல்ல வார்த்தையின்றிப்
    பேசாமல் நின்றாள்.

    அதைக் கண்ட கண்ணகி
    அவளிடம் கூறலானாள்.
    ஓ தோழி!
    நகருக்குள் சென்ற என் கணவனை
    இன்னும் காண முடியாமல் இருக்கிறேன்;|
    எனவே என் உள்ளம் பெரிதும் கலங்குகிறது.

    கொல்லன் உலையில் ஊதுகின்ற தீயைவிடத்
    தகிக்கின்றது என் நெஞ்சம்;
    இத்தகைய துன்பத்தில் நான் வருந்துவதால்
    உனக்குப் பிறர் கூறிய செய்தி என்னவென்று
    உடனே கூறுவாயாக!

    ஓ தோழி!
    நல்ல பகல்பொழுதுதான் என்றாலும்
    என் காதலனைக் காணாமல்
    என் நெஞ்சம் நடுங்குகிறது.
    உள்ளம் கலங்குகிறது.
    உடலும் நடுங்குகிறது.
    இத்தகைய துன்பத்தில் நான் வருந்துவதால்
    உனக்குப் பிறர் கூறிய செய்தி என்னவென்று
    உடனே கூறுவாயாக!

    ஓ தோழி!
    என் தலைவன் வரக் காண்கிலேன்;
    எனவே அடைக்கலமின்றி நிற்கிறேன்;
    நீங்கள் அனைவரும் உள்ளே ஏதோவைத்து
    உண்மையை மறைத்து வஞ்சகமாகப் பேசுவதால்
    என் நெஞ்சம் கலங்குகிறது.

    இங்ஙனம் என் மனம் கலங்குவதால்
    விளைவு எங்ஙனம் இருக்குமோ!
    இத்தகைய துன்பத்தில் நான் வருந்துவதால்
    உனக்குப் பிறர் கூறிய செய்தி என்னவென்று
    உடனே கூறுவாயாக!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 199

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    படர்க்கைப் பரவல் 

    மூன்று உலகங்களையும்
    தன் இரண்டு அடிகளுக்குள் அடக்கி அளந்ததால்
    சிவந்த பாதங்கள் மேலும் சிவக்கும் வண்ணம்,
    தன் தம்பியாகிய இலக்குவனோடு
    காட்டிற்குச் சென்றவன்;
    ‘சோ’ என்னும் அரணும்
    அதனுள்ளே இருந்த அரக்கர்களும்            Vaamanaa
    அழிந்து போகச் செய்தவன்;
    பழமையான இலங்கை நகரின்
    காவலையும் அழித்தவன்;
    இத்தகைய சிறப்புடைய
    திருமாலின் புகழையும் சிறப்பையும்
    கேட்காத செவியும் ஒரு செவியா?! 

    தேவர்கள் எல்லார்க்கும் பெரியவன்;
    மாயங்களில் வல்லவன்;
    உலகங்கள் யாவையும் படைக்கின்ற
    உந்திக் கமலத்தை உடையவன்;
    கண்களும் திருவடிகளும் கைகளும்
    அழகிய வாயும்
    சிவந்து விளங்கும் கரிய நிறமுடையவன்;
    இவனைக் காணாத கண்களும்
    என்ன கண்களோ?!
    கண்டது இமைத்திடும் கண்களும்
    என்ன கண்களோ?! 

    அறியாமை கொண்ட மனத்தினை உடைய
    மாமன் கம்சன் புரிந்த
    வஞ்சகச் செயல்களில் இருந்து தப்பி,
    அவனை வென்றவன்;
    நான்கு திசைகளிலும் உள்ளவர் போற்ற,
    பின்தொடர்ந்து வந்த வேதங்கள் முழங்க,
    பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம்
    தூது சென்ற ஆயக் கண்ணனைப்
    போற்றாத நாவும் என்ன நாவோ?!
    ‘நாராயணா’ என்று கூறாத
    நாவும் என்ன நாவோ?! 

    வாழ்த்து 

    நாம் குரவைக் கூத்தில் போற்றிய கடவுள்
    நமது ஆநிரைகளுக்கு நேரக்கூடிய
    துன்பத்தைப் போக்கிடுக!
    வெற்றி தரும் இடியைப் படையாகக் கொண்ட,
    இந்திரனின் தலையில் உள்ள
    முடியணியை அணிந்ததால்
    கொண்ட வெற்றியையும்,
    தொடி அணிந்த தோளினையும் உடைய
    பாண்டியனின் குறுந்தடியால் அறையப்படும்
    வெற்றி முரசானது
    வேற்றரசர்கள் நடுங்கும்படி
    நாள்தோறும் பகைவர்களைக் கொன்று
    வெற்றியைக் குவித்து விளங்குவதாக…
    என்றே வாழ்த்தினர். 

    ஆய்ச்சியர் குரவை முற்றியது; அடுத்து வருவதுதுன்ப மாலை 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  •  நான் அறிந்த சிலம்பு – 198

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை 

    முன்னிலைப் பரவல் 

    மந்தர மலையை மத்தாக நிறுத்தி,
    வாசுகிப் பாம்பினைக் கடையும் கயிறாக்கி,
    கடலின் நிறம்கொண்ட கண்ணனே!
    நீ முன்பொருநாள்
    பாற்கடலைக் கடைந்தாய்!                                           krishna eating butter
    இவ்வாறு கடைந்த உன் வலிமையான கைகள்தான்
    யசோதைத் தாயின் கடை கயிற்றில் கட்டுண்ட
    அந்தக் கைகளோ?
    இது என்ன மாயம்?
    நான்முகனை ஈன்ற மலர் போன்ற
    உந்தியை உடையவனே!
    எமக்கு மிகவும் வியப்பாகிறதே!

    அரும்பொருள் முதற்பொருள் இவனே என்று
    தேவர்கள் வணங்கிப் போற்றும் வண்ணம்
    நீ மிக்க பசி ஏதுமில்லாமலேயே
    உலகம் முழுவதையும் உண்டாய்!
    வளமான துளசி மாலை அணிந்தவனே!
    இவ்வாறு உலகை உண்ட இந்த வாய்தான்
    அன்று ஆய்ச்சியர் உறியில் சேமித்த
    வெண்ணெயை உண்ட திருவாயோ?
    இது என்ன மாயமோ?
    எமக்கு மிகவும் வியப்பாகிறதே!

    அனைவரும் போற்றி வணங்கும் திருமாலே!
    தாமரை போன்ற உன் பாதத்தின் இரு அடிகளால்
    மூவுலகையும் அளந்தாயே!
    இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே!
    இவ்வாறு நடந்த அடிகள்தான்
    பின்னர்ப் பாண்டவர்க்குத் தூதாக
    நடந்துசென்ற அடிகளோ?
    நரசிம்ம அவதாரமாய்ப் பகைவனை அழித்தவனே!
    இது என்ன மாயமோ?
    எமக்கு மிகவும் வியப்பாகிறதே!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 196

    — மலர்சபா.

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    ஆடுநர்ப் புகழ்தல்

    krishna

    கண்ணன் தன் தமையன் பலராமனோடும்
    அழகிய வளையல்கள் அணிந்த நப்பின்னையோடும்
    இடையர்குலச் சிறுமியருடனும் சேர்ந்து
    குரவைக் கூத்தாடினான்.

    அப்போது,
    அப்பெண்டிர் சூடிய மலர்கள்
    கட்டவிழ்ந்து கீழே வீழ்ந்தன.

    நடனமாடும் போது
    அப்பெண்களின் அழகிய வளைகள்
    ஒலித்த சத்தங்கள்
    இசைத்த தாளங்களுக்கு ஏற்ப,
    தன் திருவடிகள் அசைய,
    யசோதைப் பிராட்டி
    பெருமையுற்று வியக்க
    துவாரகையில் ஆடிய கூத்து
    மிக்க பெருமையுடையது.

    அது போலவே
    இன்று இங்கு ஆடிய குரவைக்கூத்தும்
    மிக்க பெருமையுடையது
    என்று மாதரி கூறினாள்.

    தோழியரே!
    நாம் அனைவரும் இப்போது
    கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலை
    இக்குரவையின்
    உள்வரியாகிய ஒரு பாட்டினால்
    போற்றுவோம்! புகழ்வோம்!

     

     

     

     

     

     

     
    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

    படத்துக்கு நன்றி:  கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 195

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    ஒன்றன் பகுதி

    am

    கட்டவிழ்ந்த மலர்களால் ஆன மாலையைத்
    தன் கூந்தலில் அணிந்த நப்பின்னை,
    கதிரவனைத் தன் சக்கரத்தால் மறைத்த
    கடல் போன்ற வண்ணம் கொண்ட
    கண்ணனுக்கு இடதுபுறமாகவும்,
    திங்கள் போன்ற வெண்ணிற மேனியான்
    கண்ணன் தமையன்
    பலராமனுக்கு வலதுபுறமாகவும் நின்றாள்.

    அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப்
    புறமிருந்து காத்து நிற்பவர்,
    மறைப்பொருளை ஆராய்ச்சி செய்தவரும்
    அதனை நன்கு உணர்ந்தவருமான
    நாரதர் ஆவார்.

    சிறுபுறக் கழுத்தாகிய
    பிடரை வளைத்து நிற்கும் நப்பின்னை,
    ஆண்மயிலின் புறக்கழுத்தை ஒத்த
    நீல நிறமுடைய கண்ணனுக்கு வலதுபுறமாகவும்,
    வெண்ணிற மலர்கள் ஒத்த மேனியுடைய
    கண்ணன் தமையன்
    பலராமனுக்கு இடதுபுறமாகவும் நின்றாள்.

    அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப்
    புறமிருந்து காப்பவர்
    குயிலுவருள் சிறந்தவரும்
    பண்ணோடு இயைந்த தாளத்துக்கு ஏற்ப
    யாழிசை மீட்டுகின்ற
    நாரதர் ஆவார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 194

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை  

    பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்

    யமுனைத் துறையில்
    கண்ணனுடன் விளையாடும் பின்னையின்
    அழகையும் நிறத்தையும்
    இனி நாம் பாடுவோம். 

    மிகவும் மென்மையான இடை                     krishna radha
    ஒடிந்து போகுமோ எனக்
    காண்பவர் எண்ணும் வண்ணம்
    இடை அசைய நடந்து வருபவளின்
    ஆடையை ஒளித்து வைத்த
    கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா!  

    அல்லது… 

    அவள் ஆடையை ஒளித்துவைத்து
    ஆடையின்றி இருக்கும் அவளைக்
    கண்டு மயங்கும் கண்ணனைக் கண்டு
    தானும் மயங்கி நிற்கும் அவள் அழகிய
    மென்சாயல் முகத்தைக் கொண்ட
    பின்னையின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    ஆற்றில் விளையாடும்போது
    வஞ்சித்துப் பின்னையின் ஆடை கவர்ந்த
    கண்ணன் அவன் உள்ளம் கவர்ந்த
    பின்னையின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    அல்லது… 

    அங்ஙனம் தன் உள்ளம் கவர்ந்தவளின்
    அழகையும் வளையல்களையும்
    ஒன்றாகக் கவர்ந்து நின்ற
    கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    ஆடையையும் வளையலையும் இழந்து
    நாணம் மிகுந்து தன் கையால்
    முகத்தை மறைத்துக் கொண்ட
    அவள் முகத்தின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    அல்லது… 

    அவள் கைகளால் முகத்தை மறைத்து நின்ற
    அழகில் மயங்கிக் காதலுற்று உழன்ற
    கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 192

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    குரலை முதலாகக் கொண்டு
    புனையப்பட்ட பெயர்களுடைய அப்பெண்கள்,
    முதலில் சமமாக நின்றும்
    பின் வட்டமான வடிவில் நின்றும்
    நண்டின் வடிவமாய் நின்று
    கைகளைக் கோத்துக் கொண்டு
    கூத்தாட்டத்தின் தாள உறுப்புகளை ஆராய்ந்தனர். kuravai

    அவர்களுள் குரல் என்ற பெயர் உடைய
    பூங்கொடி போன்றவள்,
    தமது கிளையாகிய துத்த நரம்பின்
    பெயர் கொண்டவளைப் பார்த்து
    “அகன்ற கொல்லைப் புனத்தில்
    நின்ற குருத்த மரத்தினை
    வஞ்சத்தால் முறித்த மாயவனைப்பற்றி
    முல்லைப் பண் இசைத்துப் பாடுவோம்” என்றாள்.

    பின் முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்கினர்.
    குரல் எனும் பெயர் கொண்டவளின் ராகம்
    மந்தமாக இருக்க,
    இளி எனும் பெயர் கொண்டவளின் ராகம்
    சமமாக இருக்க
    துத்தம் எனும் பெயர் கொண்டவளின் ராகம்
    சற்றே வலிமையாக
    முறைப்படி ஒலித்தன.
    விளரி எனும் பெயர் கொண்டவள்
    வலிமையில்லாத மந்தமான ராகமாய்த்
    துத்தம் என்பவளுக்குச் சுருதி பாடத் தொடங்கினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 191 

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    படைத்துக்கோள் பெயர்

    குரல் நரம்பை
    மாயவன் என்று அழைத்தாள்;
    இளி நரம்பினை வீரம் மிக்க
    பலராமன் என்று அழைத்தாள்;
    துத்த நரம்பினை
    நப்பின்னை என்று அழைத்தாள்;
    மற்றைய நரம்புகள்
    முன்னர் இருந்த மரபுப்படியே
    ஏற்ற பெயர்களைப் பெறும் என்றாள்.

    மாயவன் என்றழைக்கப்பட்ட
    நரம்புக்கு அடுத்து,
    பின்னை என்றழைக்கப்படும்
    துத்தமும் தாரமும் நின்றன.

    பலதேவன் என்றழைக்கப்பட்ட
    இளி நரம்பினைச் சேர
    உளரியும் விழையும் நின்றன.

    கைக்கிளை நரம்பு பின்னைக்கு
    இடப்பக்கம் நின்றது.

    விளரி நரம்பு தாரத்துக்கு
    வலப்பக்கம் நின்றது.

    வளம்பொருந்திய துளப மாலையை
    மாயவன் எனும் கண்ணன் தோளில் சார்த்தி,
    கூத்து நூல் பகரும் இயல்பில் இருந்து நீங்காது
    குரவைக் கூத்தாடத் தொடங்கினாள்.

    உலகினை அளந்த திருமால் தன் மார்பில் இருக்கும்
    இலக்குமியை நோக்காததற்குக் காரணமான
    வளையணிந்த கைகளையுடைய
    நப்பின்னைதானே யாம் என்று மாதரி வியந்தாள்.

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 190

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    நுண்ணிய புள்ளிகளையுடைய
    இந்த ஏற்றின் வலிமை அடக்கியவனுக்கே
    இக்கொடி போன்ற பெண்ணின்
    காதல் தோள்கள் உரியனவாகும்.

    அழகிய இந்த ஏற்றினை அடக்கியவனுக்கே
    இந்த அழகிய கொடி போன்ற பெண்ணின்
    மென்மார்புகள் உரியனவாகும்.

    வெற்றி பெறும் திறமையுடைய
    அழகிய இந்த ஏற்றினை
    அடக்கி நின்றவனுக்கே
    கொன்றைப்பழம் போல் மின்னும்
    கூந்தலையுடைய இவள் உரியவள். 

    தூய வெள்ளை நிறமுடைய
    இந்த ஏற்றின் சீற்றத்தை அழித்தவனுக்குக்
    காயாம்பூ நிறத்தவள் இவள் உரியவள். 

    எடுத்துக்காட்டு 

    தொழுவில் உள்ள ஏழு வகை ஏறுகளை
    ஏழு கன்னிப்பெண்கள்
    திருமணத்துக்கென்று வளர்த்தனர்.
    இவ்வாறு தன் மகள் ஐயையிடம்
    கூறினாள் மாதரி. 

    இம்மகளிரை
    பழைய நரம்புகள் நிற்கும்
    முறைமைகளிலே நிறுத்தி
    இடையர்குலப் பிறப்பாகிய மாதரி
    இம்மகளிருக்கு
    எடுத்துக்காட்டாய்க் கூறிப்பெயரிட்டாள். 

    குடதிசையில் குரல் நரம்பு முதல்
    இடமுறையாக
    குரல் துத்தம் கைக்கிளை உழை
    இளி விளரி தாரம் என்ற பெயர்களே
    அந்தப் பூங்குழல் பெண்களுக்கு
    மாதரி விரும்பிய பெயர்களாம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 189

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    தீங்கு நேரும் என மாதரி கூறக்கேட்டு
    மயங்கி நின்றாள் ஐயை;
    அவளிடம் மாதரி, “மகளே! மயங்காதே;
    இச்சகுனங்களுக்கு வருந்தாமல்
    அமைதி காணும் தீர்வும் உள்ளது;

    இவ்வுலகில் பிறந்த பெண்களுக்கெல்லாம்
    அணியாக விளங்குகின்ற
    கண்ணகி கண்டு மகிழும்படி
    யாம் இடைக்குலப் பெண்டிர்
    அனைவரும் ஒன்றுகூடி
    முன்னொருநாள் ஆயற்பாடியில்
    தன் தமையன் பலதேவனோடு
    கண்ணன் நிகழ்த்திய
    இளம்பருவத்தின் செயல்களைப் பற்றிய
    நாடகங்கள் பலவற்றுள்
    நப்பின்னையோடு அவர்கள் நிகழ்த்திய
    நாடகத்தை இப்போது ஆடுவோமாக;
    இத்தீய சகுனங்கள் காரணமாக
    நம் ஆநிரைகளுக்குத்
    துன்பம் நேராமல் காத்திடுக” என்று
    அத்தெய்வங்களிடம் வேண்டுவோமாக!

    கொளு

    கரிய நிறமுடைய ஆண் ஏற்றின்
    சினத்துக்கு அஞ்சாமல்
    அதன்மீது பாய்ந்து அடக்குகின்ற ஆயனை,
    தேன்நிறைந்த இந்த மலர்மாலையை
    ஏந்தியவள் விரும்புவாள்.

    சுட்டு

    நெற்றியின்கண் சிவந்த சுட்டியினை உடைய
    ஆண்ஏற்றை அடக்கிய அந்தத் தலைவனுக்கு,
    இப்பொன் வளையல்களை அணிந்த ஆயமகளின்
    தோள்கள் உரியனவாம்.

    வீரமும் இளமையும் உடைய இந்த ஏற்றினை அடக்கி
    அதன் முதுகின்மேல் ஏறி
    அதனைச் செலுத்திய ஆயனுக்கு
    முல்லைப்பூக்கள் சூடிய கூந்தலை உடைய
    இந்த ஆய்ச்சி வாழ்க்கைத் துணைவியாவாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 188

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07:  ஆய்ச்சியர் குரவை 

    கயிறும் மத்தும் கொண்டு மாதரி தயிர் கடைய முற்படுதல் 

    இமயத்தின் உச்சியில் எழுதிய
    கயல்மீன் அருகே எழுதப்பட்ட
    வில்லும் புலியும் உடைய
    சேரனும் சோழனும்,
    நாவலந்தீவிலுள்ள பிற அரசர்களும்,      silambu
    தம் ஏவல்கேட்டு அதன்படி நடக்க
    நிலவுலகம் முழுவதையும் ஆட்சிபுரிந்த
    முத்துமாலை பொருந்திய
    வெண்கொற்றக் குடையினை உடைய
    பாண்டிய மன்னனின் அரண்மனையில்
    காலை ஒலிக்கும் பள்ளியெழுச்சி முரசம்
    மிகவும் சத்தமாக முழங்கியது. 

    எனவே, தமக்கு இன்று கோயிலுக்கு
    நெய்யளக்கும் பணி என்று கருதிய
    இடையர்குல முதுமகளாம் மாதரி
    ஐயை எனப்படும் தன் மகளை அழைத்து,
    கடையும் கயிற்றினையும் மத்தினையும்
    எடுத்துக்கொண்டு வந்து
    தயிர்ப்பானைமுன் நின்றாள். 

    “உரைப்பாட்டு மடை மாதரி கண்ட உற்பாதங்கள்” 

    நாம் உறையிட்ட தாழிகளில்
    பால் உறையவில்லை;
    திரண்ட முரிப்பு உடைய
    ஆண் ஏற்றின் கண்களில் இருந்து
    கண்ணீர் வழிகின்றது;
    எனவே நமக்கு ஒரு
    தீங்குவரும் வாய்ப்புள்ளது. 

    உறியில் முதல்நாள் உருகுவதற்காக வைத்த
    வெண்ணெய் உருகவில்லை;
    ஆட்டுக் கிடாக்களும் துள்ளி விளையாடாமல்
    சோர்ந்து நிற்கின்றன;
    எனவே நமக்கு ஒரு
    தீங்குவரும் வாய்ப்புள்ளது. 

    நான்கு முலைகளையுடைய
    பசுக்கூட்டம் மெய்நடுங்க
    அரற்றி நிற்கின்றன;
    அப்பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள்
    அறுந்து நிலத்தில் வீழ்கின்றன.
    எனவே நமக்கு ஒரு
    தீங்குவரும் வாய்ப்புள்ளது. 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai 

    கொலைக்களக் காதை முற்றியது. அடுத்து வருவது ஆய்ச்சியர் குரவை

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 187

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

    கல்லாக் களிமகன் ஒருவன் வாளால் எறிய, கோவலன் குருதி சோர மண்ணின் மேல் மாண்டு விழுதல்

    அதனைக் கேட்ட கல்வியறிவில்லாத
    கொலைபாதகத்துக்கு அஞ்சாத
    மூடன் ஒருவன்
    தன் கையில் உள்ள வெள்ளிய வாளால்
    கோவலனை வெட்டினான்.

    அவ்வெட்டானது கோவலன் உடலில்
    குறுக்கே பாய்ந்து அறுத்தது.
    வெட்டுப்பட்ட புண்ணிலிருந்து
    குருதி கொப்பளித்து சுற்றிலும் பரவியது.

    நிலமங்கை மிக்க துயரம் அடைய,
    மன்னனுடைய செங்கோல் வளைந்து நிற்க,
    முன்செய்த ஊழ்வினை முதிர்ந்து நிற்கக்
    கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான்.

    வெண்பா 

    பாண்டிய மன்னன் முன்செய்த தீவினையால்
    எப்போதுமே வளைந்திடாத
    அவன் செங்கோல்
    கண்ணகியின் கணவன்
    கோவலன் கொலை காரணமாய் வளைந்தது.

    உலக மக்களே!
    இதன் மூலம் நீவிர் செய்த
    நல்வினை தீவினை
    இவ்விருவினைகளின் பயனும்
    அவற்றைச் செய்தவரைத்
    தப்பாது வந்து சேரும்,
    இதை உணர்ந்து
    நல்லதையே செய்வீர்களாக!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 212  – 218

    கொலைக்களக் காதை முற்றியது. அடுத்து வருவது ஆய்ச்சியர் குரவை

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 186

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

    கள்வன் ஒருவனின் செய்தி

    முன்னொரு நாளில் கள்வன் ஒருவன்
    பகல்பொழுதில் தூதுவன் வேடம் தரித்து
    அரண்மனையில் தங்கியிருந்து,
    இரவு நேரத்தில் பெண்வேடம் பூண்டு
    விளக்கின் இருளிலே பள்ளியறை புகுந்தான்.

    தூங்கிக் கொண்டிருந்த இளவரசன் மார்பில் அணிந்த

    வெயில்போல ஒளிவீசிக் கொண்டிருந்த வைரமாலையை
    அதனின்று வீசிய ஒளியின் வெளிச்சத்தின் துணை கொண்டு,
    மின்னலெனச் செயல்பட்டுக் களவாடிச் சென்றான்.

    உறக்கத்திலிருந்து விழித்த இளவரசன்,
    தன் மாலையைக் காணாது
    உடனே தன் வாளை உருவினான்.
    கள்வன் இளவரசனின் வாளின் உறையைத்
    தன் கையில் பற்றிக் கொண்டு,
    வாள்வீச்சு வரும் போதெல்லாம்
    உறையை வாளினுள் திணித்துத்
    தன்மீது குத்து வராதபடி
    கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

    அதனால் கோபமுற்ற இளவரசன்
    மற்போர் மூலம் அவனைத் தாக்க முயன்றான்.
    அங்கே இருந்த மணித்தூண் ஒன்றைத்
    தன்னைப் போலக் காட்டிக் கொண்டு
    தான் கற்ற களவுநூலின் பயிற்சியால்
    அங்கே இருந்து மறைந்து தப்பித்தான்.
    அங்ஙனம் மறைந்த அவனை
    இன்றுவரை யாராலும் காண முடியவில்லை.
    அப்படிக் கண்டவர் உளராயின்
    நீங்கள் எனக்குக் காட்டுங்கள்.
    இத்தகைய கள்வருக்கு ஒப்பானவர்
    உலகில் யாரும் இல்லை..
    இங்ஙனம் பொற்கொல்லன் கூறினான்.

    காவல் இளைஞன் ஒருவன் கள்வனைப் பற்றிக் கூறிய செய்தி

    அப்போது திருத்தமான வேலைத்
    தன் பெரிய கையில் ஏந்திய
    காவல் இளைஞன் ஒருவன்
    இங்ஙனம் கூறலானான்.

    “முன்னொரு நாள் கள்வன் ஒருவன்
    அணிகலன்களைத் திருடும் வேட்கையால்
    இருள் அடர்ந்த நள்ளிரவு யாமத்தில்
    உணவினைத் தேடிப் பசியால் அலையும் புலிபோல்
    என் முன்னால் தோன்றினான்.
    நிலம் தோண்டும் உளியைக் கையில் கொண்டு
    நீல நிற ஆடை உடுத்தியிருந்தான்.

    அவனைக் கொல்ல என் கைவாளை உருவிய போது,
    உடனே அவ்வாளைப் பறித்துக் கொண்டு மறைந்து விட்டான்.
    அதன் பின் அவனை யான் எவ்விடத்தும் காணவில்லை.
    இது போன்ற களவரின் செயல் யாராலும் அறிய முடியாதது.

    இவனைக் கொல்லாமல் நாம் விட்டுவிட்டால்
    அரசனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
    எனவே, கொல்லும் கருவிகளைக் கையில் ஏந்தியவர்களே!
    நாம் இப்போது என்ன செய்யலாம்என்று
    சிந்தித்துச் சொல்லுங்கள்”என்று
    பிற காவலரிடம் கூறினான்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 190 – 211

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–
     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 185

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

    கோவலன் கொலைப்படுமகன் அல்லன்என்ற காவலாளருக்குப் பொற்கொல்லன் கள்வரின் இயல்பினை எடுத்துரைத்தல்

    “இங்கு இருக்கும் இவன் இலக்கண முறையால்
    மேன்மக்களைப் போலத் தோன்றுவதால்
    இவன் கொலைபாதகக் கள்வன் அல்லன்” எனக்
    காவலர் கூறினர்.

    அவர்களைப் பார்த்து எள்ளி நகைத்த பொற்கொல்லன்
    “நீங்கள் கள்வரின் இயல்புகள் 
    அறியாதவராய் இருக்கிறீர்கள்;” என்று கூறிக்  thief
    கள்வரின் இலக்கணங்களை
    அவர்தமக்கு விரிவாக எடுத்துக் கூறலானான்.

    மந்திரம் தெய்வம் மருந்து நிமித்தம்
    தந்திரம் இடம் காலம் கருவி ஆகிய
    எட்டுச் சூழல்களையும்
    தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு
    எப்போதும் திரிவர் கள்வர்.
    இவர்களின் மருந்தில் நீங்கள்
    அகப்பட்டுக் கொண்டீர்கள் என்றால்
    புகழ்மிக்க மன்னனின் 
    தண்டனைக்கு ஆளாவீர்கள். 

    கள்வரின் எட்டுத் துணைகள்

    கள்வர் தம் நாவால் மந்திரத்தை உச்சரித்தால்
    தேவகுமாரர்களைப் போல
    நாம் காண முடியாமல் மறைந்து விடுவர். 

    தாம் வழிபடும் தெய்வத்தின் உருவை
    மனத்தில் நினைப்பாராயின்
    களவாடிய பொருளை நமக்குக் காட்டியபடியே
    தப்பி ஓடி விடுவர். 

    அவர்கள் மருந்தினாலே
    நம்மை மயக்கினால்
    நம்மால் இருக்கும் இடம்விட்டு
    அசையவே முடியாது. 

    கிடைப்பதற்கு அரிய பொருள்
    தானாகவே கையில் கிடைத்தாலும்
    நல்ல நிமித்தம் வாய்க்கவில்லையெனில்
    அதைத் தொட மாட்டார்கள். 

    களவு நூலில் கூறப்பட்ட வழியில்
    களவாடச் செல்வாராயின்
    இந்திரனின் மார்பணியைக்கூட
    எளிதில் களவாடி விடுவர். 

    இப்பொருளைக் களவாட
    இந்த இடமே சிறந்தது என்று
    அவர் எண்ணுவாராயின்
    அதன் பின் அவர்களை
    யாராலும் காண முடியாது. 

    களவு செய்வதற்கு 
    இதுதான் ஏற்ற காலம் என்று 
    அவர்கள் முடிவு செய்துவிட்டால்
    தேவர்களால் கூட
    அவர்களைத் தடுக்க முடியாது. 

    அவர்தம் கருவிகள் கொண்டு
    அரிய பொருட்களைக் களவாடினால்
    இந்தப் பெரிய உலகில்
    அவரைக் கண்டுபிடிக்க வல்லவர்
    ஒருவரும் இல்லை. 

    அவர்கள் களவுபுரிய
    இரவு பகல் நேர வேறுபாடு கிடையாது.
    அவர்கள் களவு புரியும் இடத்தை ஆராய்ந்தால்
    நாம் ஓடி ஒளிய  ஓர் இடமும் கிடைக்காது. 

    எனவே எல்லாக் காலங்களும்
    எல்லா இடங்களும்
    அவர்கள் களவாட ஏற்புடையவை
    என்று கூறினான். 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 162 – 189

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

     

    Share