நான் அறிந்த சிலம்பு – 188
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
கயிறும் மத்தும் கொண்டு மாதரி தயிர் கடைய முற்படுதல்
இமயத்தின் உச்சியில் எழுதிய
கயல்மீன் அருகே எழுதப்பட்ட
வில்லும் புலியும் உடைய
சேரனும் சோழனும்,
நாவலந்தீவிலுள்ள பிற அரசர்களும்,
தம் ஏவல்கேட்டு அதன்படி நடக்க
நிலவுலகம் முழுவதையும் ஆட்சிபுரிந்த
முத்துமாலை பொருந்திய
வெண்கொற்றக் குடையினை உடைய
பாண்டிய மன்னனின் அரண்மனையில்
காலை ஒலிக்கும் பள்ளியெழுச்சி முரசம்
மிகவும் சத்தமாக முழங்கியது.
எனவே, தமக்கு இன்று கோயிலுக்கு
நெய்யளக்கும் பணி என்று கருதிய
இடையர்குல முதுமகளாம் மாதரி
ஐயை எனப்படும் தன் மகளை அழைத்து,
கடையும் கயிற்றினையும் மத்தினையும்
எடுத்துக்கொண்டு வந்து
தயிர்ப்பானைமுன் நின்றாள்.
“உரைப்பாட்டு மடை மாதரி கண்ட உற்பாதங்கள்”
நாம் உறையிட்ட தாழிகளில்
பால் உறையவில்லை;
திரண்ட முரிப்பு உடைய
ஆண் ஏற்றின் கண்களில் இருந்து
கண்ணீர் வழிகின்றது;
எனவே நமக்கு ஒரு
தீங்குவரும் வாய்ப்புள்ளது.
உறியில் முதல்நாள் உருகுவதற்காக வைத்த
வெண்ணெய் உருகவில்லை;
ஆட்டுக் கிடாக்களும் துள்ளி விளையாடாமல்
சோர்ந்து நிற்கின்றன;
எனவே நமக்கு ஒரு
தீங்குவரும் வாய்ப்புள்ளது.
நான்கு முலைகளையுடைய
பசுக்கூட்டம் மெய்நடுங்க
அரற்றி நிற்கின்றன;
அப்பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள்
அறுந்து நிலத்தில் வீழ்கின்றன.
எனவே நமக்கு ஒரு
தீங்குவரும் வாய்ப்புள்ளது.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
கொலைக்களக் காதை முற்றியது. அடுத்து வருவது ஆய்ச்சியர் குரவை