நான் அறிந்த சிலம்பு – 198
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
முன்னிலைப் பரவல்
மந்தர மலையை மத்தாக நிறுத்தி,
வாசுகிப் பாம்பினைக் கடையும் கயிறாக்கி,
கடலின் நிறம்கொண்ட கண்ணனே!
நீ முன்பொருநாள்
பாற்கடலைக் கடைந்தாய்!
இவ்வாறு கடைந்த உன் வலிமையான கைகள்தான்
யசோதைத் தாயின் கடை கயிற்றில் கட்டுண்ட
அந்தக் கைகளோ?
இது என்ன மாயம்?
நான்முகனை ஈன்ற மலர் போன்ற
உந்தியை உடையவனே!
எமக்கு மிகவும் வியப்பாகிறதே!
அரும்பொருள் முதற்பொருள் இவனே என்று
தேவர்கள் வணங்கிப் போற்றும் வண்ணம்
நீ மிக்க பசி ஏதுமில்லாமலேயே
உலகம் முழுவதையும் உண்டாய்!
வளமான துளசி மாலை அணிந்தவனே!
இவ்வாறு உலகை உண்ட இந்த வாய்தான்
அன்று ஆய்ச்சியர் உறியில் சேமித்த
வெண்ணெயை உண்ட திருவாயோ?
இது என்ன மாயமோ?
எமக்கு மிகவும் வியப்பாகிறதே!
அனைவரும் போற்றி வணங்கும் திருமாலே!
தாமரை போன்ற உன் பாதத்தின் இரு அடிகளால்
மூவுலகையும் அளந்தாயே!
இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே!
இவ்வாறு நடந்த அடிகள்தான்
பின்னர்ப் பாண்டவர்க்குத் தூதாக
நடந்துசென்ற அடிகளோ?
நரசிம்ம அவதாரமாய்ப் பகைவனை அழித்தவனே!
இது என்ன மாயமோ?
எமக்கு மிகவும் வியப்பாகிறதே!
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html