Advertisements
Featuredhome-litஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி … (53)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

24859223112_cf7b061765_z

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (5.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (10)

 1. Avatar

  அக்னியைச் சுற்றி
  அம்மி மிதித்து
  அருந்ததியைப் பார்த்து
  அனைத்து உறவுகளும் 
  அருகிலே இணைந்திருக்க
  அருமையான தருணத்தில்
  அட்சதையை கரங்களால் 
  அனைவரும் தூவ இனி
  அன்பு மனைவி இவள் என்று
  அருகில் அமர்ந்து மங்கள தாலியை
  அணிவிக்க மறக்க முடியாத நினைவுகளை
  அத்துனை சுலபத்தில் மறக்க முடியுமா
  அந்த அம்மி காத்திருக்கிறது
  அழகிய மணமகளின் கால் மிதிக்க
  அக்னி அம்மி குத்து விளக்கு மரக்காலில் நெல்
  அனைத்துடன் ஒளிஓவியக் கருவிகளும் 
  அற்புத நிமிடங்களை பதிவு செய்ய 
  அன்புடன் இணைந்துக் கொண்டது இப்போது
  அளவில்லா ஆனந்தம் எப்போதும்
  அரிய நினைவுகளை நினைவுக்கூற…

                                                     – க.கமலகண்ணன்

 2. Avatar

  எதிர்கால ஒழுக்கத்திற்கு
  அக்னி சாட்சி
  படியைத்தாண்டமாட்டேன் என்பதே
  அம்மி மிதித்தல்
  நிரந்தர கற்பு நட்சத்திரமாக மின்ன
  அருந்ததி பார்த்தல்
  பாலோடுசேர்ந்தபழம்போல் சுவைபெற
  பால் பழம் சாப்பிடல்
  பூ மணம் போல் புகழ் பரப்புவோம்என
  பூமணம் இடுவது
  ஒரு முடிச்சு கணவனுக்கு
  இரண்டாவது முடிச்சு
  தாய் தந்தையருக்கு
  மூன்றாவது முடிச்சு
  தெய்வத்துக்கு அடங்கி போக
  மூன்று முடிச்சு
  பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும்அது
  காப்பு கட்டல்
  இதன் அர்த்தம் புரிந்து
  ஆணும் பெண்ணும்
  இணைந்து வாழ்தலே நல்ல இல்லறம்
  வருவது ஒருமுறை
  அருமை புரிந்து வாழ்வது நடை முறை

 3. Avatar

  எத்தனை சாட்சிகள்
  இருந்தால் என்ன……
  ஆயிரங் காலத்துப்பயிர்
  சந்தேகப் புயலிலும்
  வரதட்சணை சுனாமியிலும்
  பொருந்தா மனப் பழுதியிலும்
  அகந்தைபிடித்தாட்டும் பனிப்பொழிவிலும்
  சின்னாபின்னப்பட்டுப் போகிறதே…..

  அம்மி மிதித்தல்
  அவ்வப்போது மனம் கல்லாதல்,
   அருந்ததி பார்த்தல்
  மின்னி மறையும நட்சத்திரமாய்த்
  தொலைந்து போதல்,

  குத்துவிளக்கேற்றி வைத்து
  அடியிலிருக்கும் 
  இருளையே மனதில் நிறைத்தல்,

  மூன்று முடிச்சு
  முடிந்தால் கழுத்தை இறுக்கும்,
  பெண்ணிற்கோ
  அவசியப்படாத அடையாளமாய்….

  எல்லாம் மங்கலமே…..
  சிதறு தேங்காயாய்
  வாழ்க்கையைப் பிரித்து மேய்ந்து
  முகநூல்களிலும், இணையங்களிலும்
  பேருக்கு வாய்க்கும்
  பொருந்தா நட்பின்
  சந்தர்ப்பவாதங்களினாலும், காமத்தாலும்
  பிரிவதற்கென்றே
  குடும்ப
  வழக்கு மன்றங்களில்
  அலைந்து கொண்டிருப்போர்க்கு
  இவை யாவும்
  அக்றிணைப் பொருட்களே…..
  அமங்கலங்களல்ல.
       
      கவிஞர்,இளவல் ஹரிஹரன், மதுரை.

 4. Avatar

  காத்திருந்து…

  சமையல் உபகரணம்
  சடங்கு உபகரணமாகி,
  வேலை முடிந்ததும்
  மூலையில் வைக்கப்படுகிறது..

  அம்மி மிதித்தவர்களும்
  அங்கே வேடிக்கை பார்த்தவர்களும்,
  அகன்றுவிட்டனர்
  அதை
  அம்போ என விட்டுவிட்டு..

  மெல்லியலார் கைகளால்
  மிளகரைத்த காலத்தையும்,
  மின் உபகரணங்கள் வரவால்
  மறக்கப்பட்டு
  புறந்தள்ளப்பட்ட கதையையும்
  எண்ணிக்
  கண்ணீர் வடித்துக் காத்திருக்கிறது-
  அடுத்த 
  கல்யாணத்திற்காக…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. Avatar

  அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றச் 
  சம்பிர தாயச் சடங்கினைக்  – நம்முன்னோர்  
  உண்டாக்கி வைத்ததெலாம் ஒப்புக்கு அல்லவே 
  கண்ணுற்றால் அர்த்தங்கள் நூறு 
  *மெய்யன் நடராஜ் 

 6. Avatar

  துன்பத்தை தூளாய் ஆக்கி 
        துயரத்தை அரைக்கும் அம்மி 
  இன்பத்தை எடுத்துக் காட்ட 
         இதம்தரும் மல்லி கைப்பூ
  அன்பென்னும் ஒளியை வீச 
         அழகான விளக்கி ரண்டு 
  என்னதான் இங்கே இல்லை 
          இருவரும் சேர்ந்து வாழ !

           –மதிபாலன் 

 7. Avatar

  பட வரிகள் 53.
  கலாச்சாரம் விலகுமோ!

  சிந்திய அறுகரிசி சிதறிய பூக்களுமாயிது
  எந்த வகையிலோ மனக்கோல முடிவிது.
  பந்தங்கள் நிற்பது சீதனப் பொருட்களின்
  பக்கமாயும் இருக்கலாம் என்றும் கொள்கிறேன்.
  அம்மியில் அரைபடும் வாழ்வாக பலரது
  செம்மையாம் திருமண வாழ்வு அமைகிறது.
  அம்மையப்பன் போல பத்திரமாக நடுவிலது
  அமைவாகும் புகைப்படக்கருவியேன் புரண்டு கிடக்கிறது!

  குளப்பத்தின் பின்னரான ஒரு ஓய்வா!
  அளப்பரிய புயலுக்குப் பின்னான அமைதியா!
  விளக்கங்கள் அம்மி, அருந்ததி, விளக்கிற்கெனவோ
  வளமாகப் பலவுண்டு, வழக்கிலிவையெங்கே போகிறதோ!
  அலைந்த ஆதிவாழ்வு அமரிக்கையாய் தாலிக்கட்டுக்குள்ளானது.
  அந்த நிலைமாறி ஆதி நிலைக்கின்றிது
  தலைகீழாகிறது தடுப்பாரெவரோ! வழி எதுவோ!
  விலையற்ற கலாச்சாரம் பேணிக் காக்கப்படவேண்டும்!

  வரிகள் வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.   
  5-3-2016

 8. Avatar

  மஞ்சள் குங்குமங் கலந்தே
  நெஞ்சக் குடிலினுள் நீ
  குடி புகுந்த வேளையதை
  சூடி விட்ட மல்லிகையும்
  கூடி நின்ற ஆன்றோரின்
  தேடி வந்த அட்சதையும்
  வாழ்க என்ற வாழ்த்துகளும்
  சூழ்ந்து வந்த சுற்றமும்
  அம்மி மிதிக்கையிலே
  அம் மெட்டி நீ சூட்டும்
  அழகிய நினைவுகளும்
  ஒழுக்கத்தில் அருந்ததியை
  முழுவதுமாய் கொண்டிரு
  என்றுன் கை பிடித்து
  வான் ஒளிரும் நட்சத்திரமொன்றை
  பகலவனின் பகலொளியில்
  அகத்தினிலே வேண்டியதும்
  அக்கினியின் சாட்சியத்தில்
  இக் கன்னியின் கழுத்தில்
  மாங்கல்யம் சூட்டியதும்
  மங்காது என்னுள்ளே இன்று
  மீண்டும் இனிமையுடன்…
  காணும் மணவிழாவில்
  தேனாய் தித்தித்தே…
  மனதை நிறைக்கிறது …
  உன் கையணைப்புள்ளே
  இன்றும் இன்ப அன்பாய்…

  புனிதா கணேசன்
  05.03.2016

 9. Avatar

  அன்றே அய்யன் திருவள்ளுவர் 
  மனத்தை மலராக உவமையாக்கினார்
  இரு மனங்களும் சேருவது திருமணம்
  மணமகன் உயிராகவும் , அச்சாணியாகவும்
  மணமகள் உடலாகவும், சக்கராமாகவும்
  வாழ்க்கை என்ற இல்லறக் கடலை
  நம்பிக்கை என்ற துடிப்புடன் கடக்கட்டும்
  தங்கம் தற்சமயத்தில் பலரக்கும் எட்டாதொன்று
  பூவோ அனைவருக்கும் எட்டுமொன்று
  அம்மியை மிதக்கிறமோ , இல்லையோ
  மம்மியை (தன் அம்மாவை) மதிக்க  வேண்டும்
  அருந்ததியை பார்க்கிறமோ , இல்லையோ
  அன்பு, அடக்கம், கருணை, கடமை
  ஆணவமின்மை, பொறுமை, கோபமின்மை
  என்ற நற்குணங்குணங்கள் இருப்பவர்களாக
  இருத்தல் அவசியம்
  மணமக்கள் ஆனந்த பாற்கடலை கடந்து
  மூன்றாவது மனத்தை (முகத்தை, குழந்தை)
  உருவாக்கி, சகல சௌபாக்கியங்களும் பெற்று
  தம்பதிகள் பல்லாண்டு , பல்லாண்டு
  பல்லாயிரம் ஆண்டுகள்
  இன்பமாக வாழட்டும்

 10. Avatar

  nest potti eppothu enru kurungal naanu kalanthukolkiren 

  thanks

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க