செ.இரா. செல்வக்குமார்

இந்த வார வல்லமையாளர் கம்சாயினி குணரத்தினம்

29-02-2016

Kamsa

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்பெறுபவர் அகவை 27 நிரம்பிய செல்வி கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam) என்னும் தமிழ்ப்பெண்.  இவர் ஐரோப்பாவிலுள்ள நோர்வே நாட்டின் தலைநகரான ஓசுலோ (Oslo) நகரின் துணை நகரமுதல்வர் (Deputy Mayor) பதவியை  அடைத்திருக்கின்றார்.  உலகிலேயே மனிதவளத்தில் முதலிடத்தில் இருக்கும் நோர்வே நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிக அதிக மக்கள் தொகையும் கொண்ட இந்நகரத்தின் துணை நகரமுதல்வர்  என்பது மிகவும் பெருமைவாய்ந்த பொறுப்பு மிகுந்த பதவி.

நோர்வே நாட்டின் உழைப்பாளர் கட்சியின் (Labour Party) உறுப்பினரான இவர் முதன்முதலாக  2007 ஆம் ஆண்டில் தன் 19 -ஆவது வயதில் ஓசுலோ மாநகரதின் குழுவில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன் பின்னர் பல பொறுப்புகளுக்குப் பின் ஓசுலோவின் நகரத் துணைமுதல்வர் பதவியை எட்டினார்.

ஓசுலோவுக்கு வடமேற்கே உள்ள தைரி ஏரியில் உள்ள அதோயா (Utøya) தீவில்  ஆண்டுதோறும் உழைப்பாளர் கட்சியின் இளைஞர்களுக்கான  முகாம் ஒன்று நடைபெறும்.  2011 ஆம் ஆண்டு நடந்த இந்த முகாமில்  கம்சாயினி குணரத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். அவ்வாண்டு ஏறத்தாழ 600 இளைஞர்கள் அதில் கலந்துகொண்டனர்.  இந்த முகாமில்  சற்றும் எதிர்பாராமல் ஆந்தேசு பிரெவீக்கு (Anders Breivik ) என்பார் புகுந்து  துப்பாக்கியால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டு மாபெரும் படுகொலை செய்தார். 69 பேர் உயிரிழந்தனர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.  பலர் பாறைகளுக்கு இடுக்கில் மறைந்துகொண்டும், ஏரியில் குதித்தும் உயிர்பிழைக்க முயன்றனர். ஏரியில் குதித்து நீந்தித்தப்பிக்க முயன்றவர்களைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டிருந்தபொழுதும், கம்சாயினி குணரத்தினம் துணிவாக விடாமுயற்சியுடன் நீந்தி 500 மீட்டர் தொலைவைக் கடந்து கரையேறி தப்பித்தார். அப்பொழுது அவருக்கு வயது 23. வீரத்துடனும் நல்வாய்ப்பாகவும் இவர் உயிர்தப்பியது வியப்பூட்டுவது.

கம்சி (Kamzy ) என்னும் பெயரால் தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தனக்கு அகவை 3 இருக்கும்பொழுதே நோர்வே நாட்டுக்குத் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தார். முதலில் நோர்வே நாட்டில் வடக்கே மீன்பிடித்துறையில் இவரின் பெற்றோர்கள் பணியில் இருந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து இவருடைய தம்பியோடு இவருடைய பெற்றோர்,  தம் குழந்தைகள் தமிழ் படிக்க வசதியாக இருக்குமென நினைத்து ஓசுலோ நகரத்திற்குக் குடிபெயர்ந்தனர்.  ஓசுலோவின் தமிழ் இளைஞர் நிறுவன  (Tamil Youth Organisation) விழாவொன்றுக்கு வந்திருந்த ஓசுலோ நகர முதல்வர் இரேமந்து யோகான்சன் (Raymond Johansen) அவர்களைச் சந்திக்க  ஒரு வாய்ப்பு கிட்டியது.  அப்பொழுது யோகான்சன் அவர்கள் இவரை பெரிதும் ஊக்கப்படுத்தினார்.  அதன் பின்னர் கம்சி ஓசுலோ பல்கலைக்கழகத்தில் குமுக அமைப்பியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.  அரசியலில் பங்குபற்றி நற்பணிகள் செய்து, நற்பெயர் ஈட்டி ஐரோப்பாவின் தலைகநகரமொன்றின் நகரத் துணைமுதல்வர் பதவியை இப்பொழுது எட்டியுள்ளார்.

kam

கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கு வல்லமை குழுவின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தன் பதவியில் சிறப்பு எய்தவும்  மேலும் பல உயர்ச்சிகள் எட்டவும்  வாழ்த்துகின்றோம்.

[1] https://www.facebook.com/khamshajiny/?fref=ts
{2] https://en.wikipedia.org/wiki/Khamshajiny_Gunaratnam ; https://ta.wikipedia.org/s/4t3j
{3] http://www.theguardian.com/women-in-leadership/2015/dec/22/my-ambition-is-to-be-a-voice-for-those-who-dont-or-cant-speak-their-mind

[இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளர் கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்குப் பாராட்டுகள். அவரது திறனும் தொண்டும் ஆளுமையும் புகழும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

  2. இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் செல்வி கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  3. முதல் வரவே நன்கு அமைந்தது பற்றி மகிழ்ச்சி. வல்லமையாளர் கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கும், செ.இரா. செல்வகுமார் அவர்களுக்கும் என்  பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.