நான் அறிந்த சிலம்பு – 189
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
தீங்கு நேரும் என மாதரி கூறக்கேட்டு
மயங்கி நின்றாள் ஐயை;
அவளிடம் மாதரி, “மகளே! மயங்காதே;
இச்சகுனங்களுக்கு வருந்தாமல்
அமைதி காணும் தீர்வும் உள்ளது;
இவ்வுலகில் பிறந்த பெண்களுக்கெல்லாம்
அணியாக விளங்குகின்ற
கண்ணகி கண்டு மகிழும்படி
யாம் இடைக்குலப் பெண்டிர்
அனைவரும் ஒன்றுகூடி
முன்னொருநாள் ஆயற்பாடியில்
தன் தமையன் பலதேவனோடு
கண்ணன் நிகழ்த்திய
இளம்பருவத்தின் செயல்களைப் பற்றிய
நாடகங்கள் பலவற்றுள்
நப்பின்னையோடு அவர்கள் நிகழ்த்திய
நாடகத்தை இப்போது ஆடுவோமாக;
இத்தீய சகுனங்கள் காரணமாக
நம் ஆநிரைகளுக்குத்
துன்பம் நேராமல் காத்திடுக” என்று
அத்தெய்வங்களிடம் வேண்டுவோமாக!
கொளு
கரிய நிறமுடைய ஆண் ஏற்றின்
சினத்துக்கு அஞ்சாமல்
அதன்மீது பாய்ந்து அடக்குகின்ற ஆயனை,
தேன்நிறைந்த இந்த மலர்மாலையை
ஏந்தியவள் விரும்புவாள்.
சுட்டு
நெற்றியின்கண் சிவந்த சுட்டியினை உடைய
ஆண்ஏற்றை அடக்கிய அந்தத் தலைவனுக்கு,
இப்பொன் வளையல்களை அணிந்த ஆயமகளின்
தோள்கள் உரியனவாம்.
வீரமும் இளமையும் உடைய இந்த ஏற்றினை அடக்கி
அதன் முதுகின்மேல் ஏறி
அதனைச் செலுத்திய ஆயனுக்கு
முல்லைப்பூக்கள் சூடிய கூந்தலை உடைய
இந்த ஆய்ச்சி வாழ்க்கைத் துணைவியாவாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
