நிர்மலா ராகவன்

முழுமையான கல்வி

உனையறிந்தால்
கேள்வி: பதின்ம வயதினருக்கு இயற்கையாகவே ஆண்-பெண் உறவு, கர்ப்பம், குழந்தைப்பேறு இவைகளைப்பற்றி இயல்பாகவே தெரியவேண்டுமே! தெரியாததுபோல் ஏதாவது கேட்டு, பெரியவர்களை ஆழம்பார்க்கிறார்களா?

விளக்கம்: சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நண்பர்களிடமிருந்து அரைகுறையாக அறிவார்கள். ஆனால் அது பெற்றோரோ, ஆசிரியரோ தகுந்த முறையில் சொல்லிக்கொடுப்பதுபோல் ஆகாது.

விஞ்ஞான பாடத்தை ஒட்டி, தொலைகாட்சியில் கர்ப்பத்தைப்பற்றிய ஒரு வீடியோ காண்பித்தேன் என் மாணவிகளுக்கு. அவர்கள் குழம்பிப்போனார்கள்.

`கருவின் தலை மேலே இருக்கிறது. ஆனால், பிறக்கும்போது எப்படி தலை கீழே வருகிறது?’ என்று ஒருத்தி கேட்டாள். எனக்கு அவளைவிட ஆச்சரியம்.

`உனக்குத் தம்பி, தங்கைகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.
`ஆம்,’ என்றாள்.
`அம்மா வயிற்றில் அவர்கள் இருந்தபோது, நீ தொட்டுப் பார்த்ததில்லை?’

`அம்மா விடமாட்டார்கள். ஏன் தலை வேறு விதமாக வெளிவருகிறது என்று அவர்களுக்கே தெரியாது!’

கரு வயிற்றில் உருளும், தாயின் தொப்புளுடன் அதன் தொப்புள் கொடி இணைந்திருக்கிறது, அதன்வழிதான் ஆகாரத்தின் சத்து கருவுக்குள் சென்று அது பெரிதாக வளரச் செய்கிறது என்றெல்லாம் விளக்கினேன்.

எனக்கு இன்னொரு சந்தேகம் முளைத்தது. மாத விலக்குபற்றிதான். தவறான உணவை உட்கொள்ளுவதால், அல்லது பாவம் செய்ததால் என்று சிலர் நினைத்திருக்க, பிறர் அதைப்பற்றி எதுவும் தெரியாதென்றார்கள்.

ஆண்களுடன் கைகுலுக்கினால் கர்ப்பம் அடைவோமா என்ற சந்தேகம் சிலருக்கு. ரகசியமாகக் கேட்டார்கள். மாணவர்களோ, பெண்களுடன் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று கேட்டார்கள்.

`கூடாது’ என்ற விஷயத்தில்தான் இளைஞர்களின் ஆர்வம் அதிகரிக்கும். உலகில் பாதி பேர் இன்னொரு பாலர் என்றிருக்க, ஒரு பெண் ஆண்களைப் பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ள முடியுமா, என்ன?

என் வகுப்பறையில் பையன்கள் ஒரு புறமும், பெண்கள் இன்னொரு புறமும் உட்கார்ந்திருந்தார்கள். வகுப்பில் இருப்பவர்களுடன் மட்டும் பேசுவார்கள். `பிறரைப் பார்த்தால், ஹலோ என்று சொல்லுங்கள். மரியாதையாகப் பழகுங்கள். விசில் எல்லாம் அடிக்கக்கூடாது,’ என்றேன். அவரவர் மேசைக்கு ஏதாவது கனமான சாமானைத் தூக்கிப்போக வேண்டியிருந்தபோது, `டீச்சர்! பெண்களுக்கு உதவலாமா?’ என்று அனுமதி வேண்டுவார்கள் சில துணிச்சலான பையன்கள். புன்சிரிப்புடன் அனுமதி கொடுப்பேன்.

`அனேகமாக எல்லாருக்கும் கல்யாணம் ஆகிறது. இப்போதே பெண்களைப்பற்றிப் பேசி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? முன்னுக்கு வருகிற வழியைப் பாருங்கள்!’ வளரும் பருவத்திலிருப்பவர்களுக்கு என் அறிவுரை.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிய இயற்கையான ஆர்வம் இருக்கிறது. அதைச் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். பெண்களுடன் பேசுவதே தவறு, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று வளர்த்தால், நாற்பது வயதுக்கு மேலாகியும், பெண்களைப் பார்த்தால் விடலைப் பையன் மாதிரிதான் நடந்துகொள்வார்கள்.

கதை: எனக்குப் பத்து வயதானபோது, எங்கள் வீட்டு மாடியில் சேஷாத்ரி என்று ஒரு பையன். என்னைவிட இரண்டு வயது பெரியவன். என் அண்ணனுடன் அவன் விளையாட வரும்போது, நானும் கலந்துகொள்வேன். (அவர்களுடன் மோதி, எந்த விளையாட்டிலும் நான் ஜெயித்ததில்லை. முதலில் தோற்பது நானாகத்தான் இருக்கும். இதனாலேயே பையன்களுக்கு என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப் பிடிக்கும்! `அழுகுண்ணி ஆட்டம்!’ என்று அழுதபடியே நானும் நாள்தவறாது விளையாடுவேன்).

`இனிமே சேஷாத்ரியோட விளையாடாதே. பாவம், அவனோட அப்பா அடிக்கிறார், பொண்களோட என்ன விளையாட்டுன்னு!’ என்ற என் தாயார் கூறியபோது, எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் என்னுடன் விளையாடக் கூடாது?

நான் வீட்டு வாசலில் நின்றிருந்தால், சேஷாத்ரி தலையைச் சற்று அதிகமாகவே குனிந்துகொண்டு விரைந்துவிடுவான். எனக்கு ரோஷமாக இருக்கும். அவன் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடுவேன். அவன் தலை இன்னும் அதிகமாகக் குனியும்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்: விவரமறியாப் பருவத்திலேயே பெண்களைப் பார்ப்பதுகூட இழுக்கு என்பதுபோல் வளர்க்கப்பட்ட ஒருவன் பெண்களுடைய குணாதிசயங்களைப்பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியாதே! மனைவியுடன் நட்புடன் பழக முடியுமா? இதேபோல்தான் பல இல்லங்களில் பெண்களும் வளர்க்கப்படுகிறார்கள் — ஆண் என்றாலே பயந்து ஒதுங்க வேண்டும் என்பதுபோல். இப்படிப்பட்ட இருவர் திருமணத்தால் இணைந்தால், அறியாமையே அச்சத்தையோ, அதிகாரத்தையோ விதைக்கும்.

பழகத் தெரியாததால்தான், `நான் ஆண்!’ என்று, பெருமிதத்துடன் மனைவியை அடக்கியாள நினைக்கிறார்களோ, பலர்?
`என் பெண் கூடப்படிக்கும் பையன்களுடன் பழகுகிறாள். நம் காலம் போலில்லை. அவள் என்ன செய்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது!’ என்று ஒரு தாய் என்னிடம் கூற, `நாம் வளர்த்த பெண் தப்பு செய்வாளா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்!’ என்றேன். தாயின் முகம் தெளிந்தது.

`ஆண்களுடன் எந்த அளவு பழகலாம்?’ என்று ஒரு பெண் அறியாமையுடன் கேட்கும்போது, எல்லையை வகுக்கலாம். தாய் தடுமாறி, தன் சங்கடத்தை மறைக்க கோபத்தை வெளிக்காட்டினால், பெண்ணின் குழப்பம் அதிகரிக்குமே! வெளிப்படையாகப் பேசுவது பூசி மெழுகுவதைக் காட்டிலும் சிறந்தது.

தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உன்னையறிந்தால் ….. (34)

  1. காலத்திற்குத் தேவையான கருத்துள்ள கட்டுரை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *