–தமிழ்த்தேனீ.

வேரோடு பிடுங்கிய கரும்பு

மிருகங்கள் வாழுமிடத்தை மனிதர் கைப்பற்றி அங்கே குடியேறிவிட்டு அந்த மிருகங்கள் வாழ வகையின்றி உண்ண உணவின்றி மனிதர்கள் வாழுகின்ற அவைகளுக்குச் சொந்தமான இடத்தை நாடி வரும் போது, ஐயோ! நாங்கள் வாழும் இடத்துக்கே வந்து எங்களைத் தாக்குகின்றனவே மிருகங்கள் என்று அபயக் குரல் எழுப்பும் மனிதர்களே!

நீர்நிலைகளையெல்லாம் ஆக்ரமித்து வீடுகள் கட்டிவிட்டு அங்கே நீர் நிலைகள் வீடுகளை ஆக்ரமித்து சூழும்போது, ஐயோ! எங்கள் உடமைகளெல்லாம் நீரிலே போய்விட்டனவே, நாங்கள் என்ன செய்வோம் என்று பரிதவிக்கும் மனிதர்களே!

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது“

என்று கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மனதிலே வருகின்றன.

“கரும்பு ருசி என்றால் வேரோடு பிடுங்கலாமா?“ என்றொரு சொல் வழக்கு உண்டு.

சுதந்திரக் கரும்பு நமக்குக் கிடைத்தது. அந்தச் சுதந்திரக் கரும்பை அதாவது நம் நாட்டை நம் தேசத்தை ஒரு சில தவறுகள் நாம் செய்ததன் மூலமாக நம் கையிலிருந்து இழந்து அன்னியரிடம் ஒப்படைத்து அதனால் நாம் அடிமைகளாக அதுவும் நம் தேசத்திலேயே நாம் அடிமைகளாக வாழ்ந்த சரித்திரத்தை மறந்து அந்த இழந்து போன சுதந்திரத்தை மீண்டும் நாம் கைக்கொள்ள எத்துணைப் பெரியோர்கள் தாய்மார்கள், வாலிபர்கள், குமரிகள், குழந்தைகள் எல்லோரும் எத்தனை மகத்தான தியாங்களைச் செய்தனர், எப்படியெல்லாம் பாடுபட்டு இழந்த சுதந்திரத்தை மீட்டுக் கொடுத்தனர் எனும் வரலாற்றை மறந்து தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் எனும் இயற்கையின் கட்டளையை மறந்து நாம் எப்படிக் காலடிகளை எடுத்து வைக்கிறோமோ அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும் என்பதை மறந்து அடிமைப்பட்டிருந்த காலத்தையெல்லாம் மறந்து அகங்காரம் கொண்டு தலைவிரித்து ஆடத் தொடங்கினோமோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

chennai-flood-wiki-picture2

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே

எனும் பாடலில் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ என்று பாடியதை மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தலைதெறித்து வாழத் தொடங்கினோமோ அன்றே தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

நாட்டில் மக்களுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வளங்களைச் சீரமைத்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மக்கள் நலமாக மகிழ்ச்சியாக வாழத் தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுக்கத்தான் அரசாளும் பதவிகள் என்பதை அடியோடு மறந்து நம் நாட்டு மக்களையே அடிமைகளாக நடத்த என்று தொடங்கினோமோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

மக்களை மனிதத் தன்மையோடு பாசத்தோடு, நேசத்தோடு, அன்போடு, ஆதரவாக மதிக்க வேண்டிய ஆளுவோர் எலும்புத் துண்டைப் போட்டால் கவ்விக்கொண்டு மற்றவற்றையெல்லாம் மறந்து ஓடும் நாயினைப் போல வேண்டாத இலவசங்களை அளித்து மக்களைத் திசை திருப்பி ஓடவிட்டுவிட்டுத் தனியாக வளங்களைக் கொள்ளையடிக்கும் குணத்தை அரசியல்வாதிகள் என்று கொண்டனரோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

திறமை இருந்தால், ஏமாற்றும் திறமை இருந்தால் மாட்டிக் கொள்ளாத புத்திசாலித்தனமான கள்ளத்தனம் இருந்தால், அப்படியே மாட்டிக் கொண்டாலும் கொள்ளையடித்த பணத்தை அள்ளிவீசி தப்பிக்கத் தெரிந்தால், ஈவு இரக்கமின்றிக் கொலை செய்தாலும் கொள்ளை யடித்தாலும் மனசாட்சியே இல்லாமல் அந்தக் குற்றங்களிலிருந்து மீண்டு வந்து மக்களின் மனதைத் தவறான ப்ரசாரங்களால் வசியப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வரும் நரித்தனம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கொள்ளையடியுங்கள், ஆனால் கொள்ளையடித்த செல்வத்திலே எங்களுக்கும் பங்கு கொடுங்கள் அது போதும் எனும் மனநிலைக்கு கட்டிக் காக்கவேண்டியவர்களே என்று வந்தார்களோ அன்று தொடங்கின இந்த நாட்டின் அவலங்கள்.

பயத்தால் ஆட்சியாளர்களின் அதிகார வன்முறையால் மக்கள் பொறுத்துக் கொண்டனர், தட்டிக் கேட்பவரைக் கொலை செய்யத் துணிந்தவர்கள் ஊழல்வாதிகள் என்பதை வெளிச்சம் போட்டுத் திரைப்படங்கள் காட்டியும் மக்கள் மனதிலும் ஊழல்வாதிகளின் உண்மையான தோற்றம் புரிந்து போனதாலும் நமக்கெதற்கு, நாம் கண்டும் காணாமலும்போய் நம் வீட்டாரைக் காப்பாற்றுவோம் எனும் மன நிலைக்கு மக்களை என்று திசை திருப்பினார்களோ கூழல்வாதிகள் அன்று தொடங்கின இந்த நாட்டின் அவலங்கள்.

மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை நமக்கு அளித்து நம்மை ஆள விட்டிருக்கிறார்கள், இந்த தேசம், இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் தேசம், அவர்களுக்குச் சொந்தமானது என்பதை மறந்து ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தேசம் என் தேசம், என் நாடு, என்னுடைய சொத்து, இதில் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்து இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் இந்த தேசம் என்னுடையது எனக்கே சொந்தமானது, இந்த தேசத்திலிருக்கும் வளங்களெல்லாம் எனக்கே சொந்தமானவை. ஆகவே இதன் மூலமாக வரும் அனைத்துப் பயன்களும் எனக்கே சேர வேண்டும் என்று பேராசை கொண்டு மக்களை மறந்து, ஒட்டு மொத்த வளங்களையும் தனக்கே எடுத்துக் கொண்டு, வரும் வருவாயெல்லாம் தன் வீட்டிலே கொண்டு போய்ப் பதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கோ நாட்டுக்கோ ஒன்றுமே செய்யாமல் இருக்கும் ஊழல்வாதிகளின் விபரீதப் போக்கினால் விளைந்த நிலைதான் இந்த முறை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட சேதாரத்தின் அளவு.

இந்த சேதாரத்தின் அளவு கோல்தான் இனி வருங்காலங்களில் அரசாள்பவர்கள் எப்படி இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்கான அளவு கோல்.

எந்த ஒரு சிறு பொருளை நாம் உரிமையாக்கிக் கொண்டாலும் அந்தப் பொருளைப் பராமரிப்பதிலேதான் இருக்கிறது அந்தப் பொருள் மூலமாகக் நமக்கு கிடைக்கும் வளங்கள் வசதிகள். குதிரையை வைத்துக் கொள்ளலாம், அதன் மேல் ஏறி சவாரி செய்யும் போது கிடைக்கும் சுகம் பயண அனுபவங்கள் அனைத்துமே மற்ற நாட்களில் அந்தக் குதிரையைப் பராமரிப்பதில்தான் அடங்கி உள்ளது.

யானையை வைத்துக் கொண்டு இறைவனை அதன் மேலேற்றித் திருவீதிப் புறப்பாடு செய்து மக்களை மகிழ்விக்கலாம், மற்ற நாட்களில் அந்த யானையைப் பொதுமக்களிடம் வேடிக்கைப் பொருளாகக் காட்டிப் பணம் செய்யலாம் ஆனால் அந்த யானைக்குத் தேவையான உணவை அளித்து அந்த யானையின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதைப் பராமரித்தால்தான் அந்த யானையும் நலமாக இருக்கும் நமக்கும் உபயோகப்படும்.

இல்லையேல் அது மிரண்டு பொதுமக்களையும் கடைகளையும் கண்ணில் படும் பொருட்களையும் தாக்கி அழிக்கும். அது போலத்தான் நாடும் இயற்கையும் மற்ற நேரங்களில் பராமரிக்காவிட்டால். ஆறு, குளம், ஏரிகள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாரி சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் மழை பெய்யும் நாட்களில் அவை சுத்தமான தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்குத் தண்ணீர் தரும். அதை விடுத்து அவைகளை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக ஆக்ரமித்து அவற்றை அவதிப்படுத்தினால் அவை தங்கள் மேல் விழும் நீருடன் ஆக்ரமிப்பாளர்களைத் தாக்கி அழிக்கும் என்பது நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.

மக்களைத் தெளிவான கல்வி கொடுத்து அறிவாளிகளாக ஆக்குவதை விடுத்து, கல்விக்குப் பணம் பிடுங்கி சம்பாதிக்கக் கல்விக் கூடங்களைக் கட்டி அதன் மூலமாக மக்கள் பாடுபட்டு ஈட்டிய பொருளையெல்லாம் கொள்ளையடித்து அப்படியும் தரமான கல்வி அளிக்காமல் மக்களைத் தவறான திரைப்படங்கள், தொலைக் காட்சிகள் மற்றும் போதைப் பொருட்கள் மூலமாக திசைதிருப்பி அவர்களை எப்போதும் போதையிலேயே வைத்திருந்தால்தான் நாம் கொள்ளையடிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொள்ளையடித்துக் கொண்டே இருந்தால் மக்கள் வேண்டுமானால் மழுங்கிக் கிடக்கலாம் ஆனால் இயற்கை சீறி எழும் என்பதற்கு அத்தாட்சிதான் இந்த முறை பெய்த மழை.

இயற்கையை எப்படிப்பட்ட குறுக்குபுத்தி உள்ளவரும் அரசியல் சூழ்ச்சிகள் செய்வோரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்த்திய மழை.

கடல் கொந்தளித்தால் சுனாமியாக உருவெடுத்து நாட்டின் உள்ளே சீறிப் பாய்ந்து அழிக்கும் என்று நினைத்திருந்தோமே,
அப்படி அல்ல, கடலுக்குச் சென்று கலக்க வேண்டிய ஆறுகள், கழிவு நீர்க் குழாய்களின் கழிவு நீர் ஆகியவை கடலுக்குச் சென்று கலக்க முறையான பாதைகள் இல்லாவிட்டாலும் நாட்டின் உள்ளே இருக்கும் நீர் நிலைகளே நிரம்பி குடியிருப்புகள் வீடுகள் வழியாகவும் சாலைகளிலேயும் புகுந்து நாட்டை அழிக்கும் என்று உணர்த்திய மழை.

சுயநலவாதிகள் தூண்டிவிடும் ஜாதி வெறி தேவையில்லாத ஒன்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய மழை.

தவறு செய்வோரைத் தட்டிக் கேட்கும் உரிமை இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்திய மழை
அப்படித் தட்டிக் கேட்காவிட்டால் நாடும் நாமும் எப்படி அவதிப்படுவோம் என்று உணர்த்திய மழை.

இயற்கையின் முன்னால் அனைவரும் சமமே. பாதிப்பு எல்லோருக்கும் தான் வரும் என்று உணர்த்திய மழை.

அண்டை மாநிலங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவித்தான் ஆக வேண்டும் மனிதாபிமானமே உயரிய உணர்வு என்று மக்களுக்கு உணர்த்திய மழை.

நாம் அளிக்கும் வாக்குகளின் உயர்வை மதிப்பை உணர்ந்து அந்த வாக்குகளினால் ஆட்சிக்கு வருவோர் அவர்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் இல்லையென்றால் நமக்குத்தான் அவதி என்று மக்களுக்கு உணர்த்திய மழை.

ஆட்சிக்கு வந்தால் போதாது, மக்களுக்கு நலம் செய்யவே வந்திருக்கிறோம் என்பதை மறந்து ஊழலில் திளைத்தால் பேதம் பார்க்காமல் எல்லோரையுமே அவதிக்குள்ளாக்கும் என்று ஆளுவோருக்கு உணர்த்திய மழை.

இப்படி இயற்கை மழை மூலமாக நமக்கெல்லாம் மனிதத்தை மழை இந்த முறை உணர்த்தியுள்ளது.

ஆனாலும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆட்பட்டு உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றிப் பச்சிளங் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி, வயது முதிர்ந்தோர் நோயுற்றோர் மருந்துகளின்றி, மொட்டை மாடியிலும் மார்பு வரையில் சாக்கடை நீரிலும் சொத்துக்களையெல்லாம் இழந்து சாலைகளிலே நடுத்தெருவிலே நின்று சொந்த பந்தங்களின் நிலை என்ன என்றே அறியாமல் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் அகதிகளாக அவதிப்படும் இந்த நேரத்திலே என்னைப் போன்ற முதியவர்களும் நாம் சென்று உதவ முடியவில்லையே என்று ஏங்கி ஏதோ எங்களால் இயன்றவரை இறைவனை வேண்டிக்கொண்டு உதவ முயல்கிறோம். ஆனால் சில சுயநலவாதிகள் எரிகிற கூரையில் பிடுங்கின வரையில் லாபம் என்று பால் பாக்கெட்டை 100 ரூபாய்க்கும் காய்கறிகளை அநியாய விலைக்கும் விற்றுப் பொருள் ஈட்டுகிறார்கள். சில துரோகிகள் அதற்கும் மேலே பூட்டியிருக்கும் வீடுகளில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.

மனிதம் செத்துப் போனால் உலகம் இருந்தும் உபயோகமில்லை.

ஆபத்துக் காலங்களில் பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் ஆனால் பணமே வாழ்க்கையல்ல.

எவ்வளவு பணம் இருந்தாலும் சென்ற உயிரை மீட்க முடியாது. போகும் உயிரை நிறுத்த முடியாது. இதை உணராமல் நடக்கும் மனித மிருகங்களை என்ன செய்வது?

உணருங்கள் மனிதர்களே!

இயற்கைதான் கடவுள். அவற்றைப் பராமரிக்காவிட்டால் அவற்றின் சீற்றத்தை நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணருங்கள். மனிதம் காக்கப்பட வேண்டுமானால் இயற்கையைக் காக்கப் பழகுங்கள். அப்போதுதான் இயற்கை நம்மைக் காக்கும்.

இது இயற்கையின் விதி!

அன்புடன் தமிழ்த்தேனீ

படம் உதவி: விக்கி பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *