நான் அறிந்த சிலம்பு – 191 

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

படைத்துக்கோள் பெயர்

குரல் நரம்பை
மாயவன் என்று அழைத்தாள்;
இளி நரம்பினை வீரம் மிக்க
பலராமன் என்று அழைத்தாள்;
துத்த நரம்பினை
நப்பின்னை என்று அழைத்தாள்;
மற்றைய நரம்புகள்
முன்னர் இருந்த மரபுப்படியே
ஏற்ற பெயர்களைப் பெறும் என்றாள்.

மாயவன் என்றழைக்கப்பட்ட
நரம்புக்கு அடுத்து,
பின்னை என்றழைக்கப்படும்
துத்தமும் தாரமும் நின்றன.

பலதேவன் என்றழைக்கப்பட்ட
இளி நரம்பினைச் சேர
உளரியும் விழையும் நின்றன.

கைக்கிளை நரம்பு பின்னைக்கு
இடப்பக்கம் நின்றது.

விளரி நரம்பு தாரத்துக்கு
வலப்பக்கம் நின்றது.

வளம்பொருந்திய துளப மாலையை
மாயவன் எனும் கண்ணன் தோளில் சார்த்தி,
கூத்து நூல் பகரும் இயல்பில் இருந்து நீங்காது
குரவைக் கூத்தாடத் தொடங்கினாள்.

உலகினை அளந்த திருமால் தன் மார்பில் இருக்கும்
இலக்குமியை நோக்காததற்குக் காரணமான
வளையணிந்த கைகளையுடைய
நப்பின்னைதானே யாம் என்று மாதரி வியந்தாள்.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க