மார்கழி மணாளன் – 5 திருமலை (திருப்பதி) ஸ்ரீ வேங்கடாசலபதி  

0

 க.பாலசுப்பிரமணியன்

96acbbf9-6813-401e-8ad1-f1f7968c3116

விழித்தாலும் வேங்கடத்தில் விழிக்கவேண்டும்

விழியிரண்டும் வேங்கடனைப்  பார்க்கவேண்டும்

கோவிந்தாவெனக் குரல்கொடுக்க வேண்டும்

குறைகளெல்லாம் அவனிடமே சொல்லவேண்டும் !

 

ஆனந்த நிலையம் அவன் கோவில்

ஆறுதல் அடைந்திட அவன் பாதம்

அருள் வெள்ளம் அவன் திருமேனி

அணைத்திடுமே அவன் அபயக்கரம் !

 

ஏழுமலை ஏறிவந்தால் போதும்

ஊழ்வினைகள் உருக்குலைந்து ஓடும்

ஏழ்மையின் பொருளறிந்த வாசன்

எழுபிறப்பும்  உயிர் காக்கும் நேசன் !

 

பிரபந்தங்கள் பாடி வந்த பெரியோர்கள்

பிரபஞ்சத்தில் வியந்து நின்ற தெய்வமன்றோ !

தங்காத தங்கத்தை அவனுக்குத் தந்தாலும்

தங்கி நின்று அருள் செய்யும் திருமாலன்றோ !

 

திருமங்கை வாழ்கின்ற திருமார்பை

தாளால் மிதித்திட்ட தவத்தோன்

தாள் பிடித்த தெய்வமன்றோ நீ !

தந்தருள்வாய் நின் தாளை நான் பிடிக்க !

 

தானழித்து தலைமழித்துத்  தாள்தேடி வந்துவிட்டால்

தந்தையாக நீயிருப்பாய் திருமாலே! தாமோதரா !

மலையேறி வந்தோர் தம் மனம் கொள்வாய்

மங்கையுடன் வந்தே நீ அருள் தருவாய் !

 

அலர்மேல் மங்கையவள் அருள்பார்வை ஒரு பக்கம்

அன்புடனே இலக்குமியும் இதயத்தின் ஒரு பக்கம்

கண்மூடியே காதல் செய்யும் கள்வனவன் கண்ணன்

கார்மேகன் கொடுப்பதிலே குறையில்லா குபேரன் !

 

ஏழுமலைவாசன் இதயத்தில் இருந்தால்

எழுகின்ற கதிரவனாய் ஒளி தருவான்

ஏழு பிறப்பிற்கும் தருவான் செல்வம்

ஏழ்மையால் வலிக்காத வாழ்வின் வண்ணம் !

 

மலர்வாசம் கனிவாசம் மாதவன் பெயர்வாசம்

மார்கழி வைகறை வாசலில் மண்வாசம்

மனங்குளிரக் காலையில் பாவைக் குரல்வாசம்

மனிதங்கள் காத்திடுமே திருமலை ஸ்ரீனிவாசம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *