குறளின் கதிர்களாய்…(100)
–செண்பக ஜெகதீசன்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (திருக்குறள் -253: புலால்மறுத்தல்)
புதுக் கவிதையில்…
கொலைக் கருவியைக்
கொண்டவனிடத்தில்
கொஞ்சமுமிருக்காது இரக்கம்!
அதுபோல்,
மற்ற உயிரழித்து
மாமிசம் உண்போர்
மனத்திலும் இருக்காது
நல்லதாம் அருள்!
குறும்பாவில்…
வாளுடையானிடம் இருக்காது இரக்கம்,
உயிர்வதைத்து ஊனுண்போரிடம்
உறையாது அருள்!
மரபுக் கவிதையில்…
கரத்தினில் ஆயுதம் எடுத்தேதான்
–காவு கொள்ள நிற்போர்க்கே
இரக்கம் என்றும் இருப்பதில்லை
–இதயம் கல்லாய்ப் போய்விடுமே,
தெரிந்திடு இதுதான் கதையாகும்
–துடிக்கத் துடிக்க உயிர்வதைத்துத்
தெரிந்தே மாமிசம் உண்போரிடம்
தங்கா துண்மை அருளதுவே!
லிமரைக்கூ…
கொலைவாளன் மனமது ஈரமிலா இருளே,
கொன்ற உடலை உண்போரிடம்
என்றும் தங்காது மனதினில் அருளே!
கிராமிய பாணியில்…
கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
திங்காத திங்காத ஒடம்பத்திங்காத…
எரக்கமில்ல எரக்கமில்ல,
அடுத்தவன அழிச்சிடவே
ஆயிதத்த எடுத்தவங்கிட்ட
எரக்கமில்ல எரக்கமில்ல
மனசுலத்தான் எரக்கமில்ல…
அதுபோல
உயிரக்கொன்னு ஒடம்பத்தின்னா
அருளுயில்ல இருளேதான்…
அதால
கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
திங்காத திங்காத ஒடம்பத்திங்காத!
புலால் மறத்தலை பற்றி திருக்குறள், புதுக்கவிதை, குறும்பா, மற்றும் கிராமிய பாணில் எடுத்துக் கூறியதற்கு நன்றி வணக்கம்
‘குறளின் கதிர்கள்’க்குக் கருத்துரை வழங்கிய திரு.நீலமேகம் ராமலிங்கம் சஹ்ஸ்ரநாமன் அவர்களுக்கு, மிக்க நன்றி…!