Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 1

— முனைவர்   துரை. குணசேகரன்.

 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
முடியாத முதலோனை மூவர் பெருமானை
வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

என்னும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரிகளாலே முருகப்பெருமானைப்போற்றி, மகாவித்துவானின் இலக்கியப்பணிகள் குறித்த என்னுடைய பேருரையைத் தொடங்குகின்றேன்.

கம்பனைப்போல்
வள்ளுவர்போல்
இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

எனும் பாரதத்தில் ‘பா’ரத்தால் பவனிவந்த சாரதியாம் பாரதியின் பாடலில் சேர்க்கப்படவேண்டிய இன்னொருவர் உண்டென்றால் அவர்தாம் சிற்றிலக்கியக்களஞ்சியக் கருவூலமாம் 199 ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில்தோன்றி, மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மாமனிதர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

காலத்தொடு கற்பனை கடந்த
கருவூலத்துப் பழம்பாடல்
கலைமாச் செல்வர்

என்னும் குமரகுருபரர் சொற்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர்.

செந்தமிழ் வளர்ந்த தென்பாண்டி நாட்டில் மானிடர்போற்றும் மதுரைமா நகரில் இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்றார் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி இணையர். வாழ்வின் வளம்வேண்டி திரிசிரபுரம் எனும் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரித்தென்கரையில் உள்ள எண்ணெயூருக்கும் அதனை அடுத்து அதவத்தூருக்கும் வந்து குடியமர்கின்றனர். இணையர் நடத்திய இல்லறப்பயனாய், செய்த பெருந்தவத்தால் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம்நாள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தார்.

கல்வியும் இல்வாழ்வும்:-
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’என்று பாடிய புறநானூற்றுப்புலவர் ‘சான்றோனாக்குதலை தந்தையின் கடனென்றார். அவரின் கூற்றை மெய்ப்பிக்கும்வகையில் சிதம்பரம்பிள்ளை, மகனை மற்றவர் போற்றும் மாண்புகள் மிகுந்தவனாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

ஆம், சிறுவயதிலேயே தந்தை கற்பிக்கும் பள்ளியில் பிள்ளைக்கும் பாடஞ்சொல்லித்தரப்படுகிறது. ஐந்து வயதில் தொடங்கிய கல்வியால் ஆத்திசூடி, நீதிநூல்கள் தொடங்கி, காலஞ்செல்லச்செல்ல அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், நிகண்டு, பிரபந்தம், சதகம், மாலை, நைடதம், நன்னூல் உள்ளிட்ட இன்றியமையா சிற்றிலக்கியவகைகள் மற்றும் இலக்கணங்களையும் பிழையறக்கற்றுக்கொண்டார். பள்ளியில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டாம்பிள்ளையாக உயர்ந்தார்.

பன்னிரண்டு வயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றலைப்பெற்றார். படிக்கும் நூல்களை ஏட்டில் எழுதும் பயிற்சியையும் பெறுகிறார். சூழலைக்கொடுத்து செய்யுள் செய்யும் பழக்கத்தையும் காலஞ்செல்லச்செல்ல திரிபு, யமகம், சிலேடை அமைத்து பாவியற்றும் கலையையும் கற்றுக்கொள்கிறார். விரைந்து, குறுகிய காலத்திலேயே பிந்தைய நிலையில் கற்க வேண்டியதனைத்தும் கற்றுக்கொள்வதுடன், தந்தைசென்று பாடஞ்சொல்லும் இடத்துக்கும் உடன் சென்றுவரலானார். தந்தை செல்லமுடியாத காலத்தில் மீனாட்சிசுந்தம் அவர்களே சென்று பாடம்நடத்தி வருகிறார். பிள்ளையின் திறமறிந்தோர் தந்தைக்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கின்றனர்.

வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழிஉடைந்தாற்போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை நன்கு வளர்ந்துவரும் சூழலில், பதினைந்து வயதில் தந்தை சிதம்பரம்பிள்ளை மறைவெய்துகிறார். அதுவரை, தாம்பிறந்த அதவத்தூரில் வாழ்ந்துவந்த பிள்ளையவர்கள், திரிசிரபுரம் மலைக்கோட்டையில் உள்ள தெற்கு உள்தெருவில் வாடகை வீடொன்றில்வந்து குடியேறுகிறார். காவேரிஆச்சி என்னும் மங்கை நல்லாளை நண்பர்களும் உறவினர்களும் மணமுடித்து வைக்கின்றனர்.

தந்தை மறைந்தாலும் கல்வி கற்பதை மறக்கவில்லை. உறையூர் முத்துவீரராகவே முதலியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், வீரநாயக்கன்பாளையம் இருளாண்டிவாத்தியார் பாலக்கரை வீரராகவசெட்டியார், கோட்டடி ஆறுமுகம்பிள்ளை, கல்குடி மருதமுத்தப்பிள்ளை, வேலாயுதமுனிவர், கீழ்வேளுர் சுப்பையாபண்டாரம், திருநயம் அப்பாவையர், வேலாயுதமுதலியார், கீழ்வேளுர் சுப்பிரமணியதேசிகர், திரிசிரபுரம் கோவிந்தம்பிள்ளை போன்ற தலைசிறந்த கல்விமான்களிடம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களை ஐயமறக்கற்றுக்கொண்டார்.

ஐந்தாம் இலக்கணமாம் அணியிலக்கணத்தைக்கற்பிக்க, உரிய ஆசிரியர் கிடைக்காமையால் தண்டியலங்கார ஆசிரியரை எதிர்பார்த்துக்காத்திருந்தார். அவ்வயம் வீடுவீடாக சென்று பிச்சையேற்று வாழ்க்கைநடத்திவரும் பரதேசி ஒருவர், அணியிலக்கணம் அறிந்தவர் என்பதை அறிகிறார். ஆனால், அப்பரதேசி எவரையும் மதிக்கும் இயல்பு அற்றவர் என்பதும் தெரியவருகிறது.

தானே தரக்கொளி னல்லது தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்து மடற்பனை

என்பதனையொத்து, தம்மை நாடிவருவோருக்கு சிலதமிழ் நூற்கருத்துகளை உரைப்பார் என்பதனை அறிந்து, அவரிடம் சென்று எவ்வாறேனும் அணியிலக்கணம் கற்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார். பரதேசி பிச்கை ஏற்கும் காலமறிந்து கூடவேசென்று அவருக்குப்பிடிக்கும் பொருள் கீழ்த்தரமான ஒன்று என்று அறிந்தும், அவர்விரும்பும் போதைப்பொருளில் ஒன்றை வாங்கிச் சென்று காலமறிந்து கொடுக்கிறார். அணியிலக்கணம் மட்டுமன்றி வேறுசில நூல்களைப்பெற்றும் பிள்ளையவர்கள் தன்னை மேம்படுத்திக்கொண்டதாக உ.வே.சா. குறிப்பிடுகின்றார்.

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே’

என்னும் புறப்பாடலின் பொருளை அறிந்தவர் அன்றோ. இவ்வகையில் ஐந்திலக்கணத்தில் பிள்ளையவர்கள் தேர்ச்சி பெற்றவராகிறார். மேலும்,
நினைத்த மாத்திரத்தில் நினைத்த அளவு கவிதைபாடும் ஆசுகவி,
இனிமையாக இசையுடன் கவிபாடும் மதுரகவி,
சித்திரவடிவில் பாவியற்றும் சித்திரக்கவி,
சுருங்கிய பொருளை விரித்துப்பாடும் வித்தாரக்கவி
எனும் நால்வகையிலும் செய்யுளியற்றிப்பாடும் ஆற்றலை உரிய அறிஞர்களின்வழி கற்றுக்கொள்கிறார்.

செய்யுள் இயற்றும் பயிற்சி:-
பாடங்களை உரிய ஆசிரியர்களை நாடிக்கேட்டு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிள்ளையவர்கள், நல்லவாய்ப்புகள் வழி அவற்றைச்செயல்படுத்தும் பயிற்சியைப் பெறுகிறார். தந்தையார் காலத்தில் பாடஞ்சொல்லி முடித்தபின் பிள்ளையுடன் உடன் பயின்ற மாணவர்களையும் கடைக்கு அனுப்பி, வீட்டிற்குத்தேவையான பொருள்களை வாங்கிவரச்சொல்வது பழக்கம். அப்போது பிள்ளையவர்களும் மாணவர்களும் ஒருசெய்யுளை ஒருவர் சொல்ல, அதன் இறுதிச்சொல்லை முதலாகக்கொண்டு அந்தாதி முறையில் வேறொருவர் வேறாருசெய்யுளைக் கூறுவர். இவ்வகையில் அவரவர் அறிந்த செய்யுளை அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

சங்கச்சாவடியைக்கடந்து பிள்ளைகள் செல்லும் பொழுது அங்குப்பணிபுரியும் அரங்கபிள்ளை என்பவர், சிதம்பரம் பிள்ளையின் மாணவர்கள் என்பதை அறிந்து அப்போது நடைபெற்றுவரும் பாடங்கள் குறித்தும் மனப்பாடம் செய்துள்ள பாடல்கள் குறித்தும் வினவுவார். செய்யுள் இயற்றும் வழியை அறிந்திருக்கிறீர்களா? என்ற வினவலுடன் ஒருமுறை விநாயகர் குறித்து ஒரு வெண்பாவைச்செய்யுங்கள் என்றாராம். அவ்வமயம் அனைவரும் அதுகுறித்து சிந்தனை செய்து கொண்டிருக்கையில் பிள்ளையவர்கள்,

“பாரதத்தை மேருப்பருப் பதத்திலே எழுதி
மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் சீருடையோய்
நற்றழிழை யாங்கணயந்து கற்றுத் தேறமனத்
துற்றருளை எங்கட் குதவு”

எனும் வெண்பாவை விரைந்து எழுதித்தருகிறார். இதே போன்ற வழக்கத்தை ஒவ்வொருமுறையும் செய்யவைத்து, வெண்பாவிற்கு ஒரு பணமாகிய இரண்டு அணா கொடுத்து அனுப்புவாராம். இப்பயிற்சி பிள்ளையவர்கள் எதிர்காலத்தில் கடல்திறந்த மடையாக, பாக்களைக்கொட்டுவதற்குக்களனாக – பயிற்சிக்களமாக அமைந்தது.

இதேபோன்று திரிசிரபுரம் மலையாண்டிப்பிள்ளை என்பவர் பிள்ளையவர்களின் ஆற்றலை அறிந்து, தம் ஊரிலுள்ள மிராசுதார் ஒருவரின் இல்லம் அழைத்துச்சென்று சிறப்பாக அறிமுகம் செய்தார். அருகில் இருந்த ஒருவர் ஒருபாடலைக்கூறி ‘இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று கேட்க, உடனே பொருளுரைக்கிறார். இதனையே ஈற்றடியாகக்கொண்டு ஒருவெண்பாப்பாடு என்று சொல்ல, ‘சொல்’ என்பதற்கு ‘நெல்’ என்னும் பொருள் கொண்டு எழுத, அது பொருந்தாமையால் ‘தூய’ என்பதனை முன்னே வைத்து, உடனே பாடிமுடிக்கிறார். கேட்ட மிராசுதாரர் ஒருவண்டிநெல் கொடுத்தனுப்புகிறார். இது பிள்ளைக்கு மட்டுமன்றி, ‘தன் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தந்தைக்கும்’ நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன.

தந்தையார் சோமரசம்பேட்டை எனும் ஊரில் மறைந்தார். மறைந்த ஆண்டு ‘விரோதி’ என்பதாகும். வேதனையின் விளிம்பிற்கே சென்ற பிள்ளையவர்கள்,

“முந்தை அறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
தந்தை எனைப்பிரியத் தான்செய்த – நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனும் அப்பெயர்நிற்கே தகுமால்
ஈண்டேது செய்யாய் இனி”

என்று வெண்பாப்பாடுகிறார். இப்பயிற்சிகள் பிற்காலத்தில் படைப்புலக அரிமாவாகத் தமிழகத்தில் பிள்ளையவர்கள் வலம்வர பேருதவியாய் இருந்தது.

சென்னைப்பயணம்:-

“நவில்தொறும் நூனயம் போன்று பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”

எனும் மொழிக்கேற்ப எண்ணற்ற நூல்களைப்பயின்று தமது அறிவெல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். தாம் வாழும் இடத்தைச்சுற்றியுள்ள தமிழறிஞர்களிடம் மட்டும் கற்றகல்வி போதாது என்று எண்ணினார். சென்னையில் கல்விச்சங்கம் ஒன்று நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமிழ் வித்துவான்களை வரவழைத்து மாணாக்கர்களுக்குப்பாடம் புகட்டுதல், பழைய தமிழ்நூல்களைப்புதிப்பித்தல், செய்யுள் வடிவிலான நூல்களை எழுதுவித்தல், கல்விநிலையங்களுக்கு ஏற்றவகையில் உரைநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றச்செய்தல், வடமொழி உள்ளிட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் முதலான பணிகளைச்செய்து வருவதை அறிந்துகொள்கிறார். சென்னை செல்லுவதற்கும் அங்கே தங்கித் தமிழறிஞர்களைச் சந்தித்து வருவதற்கும் பொருட்செலவு குறித்து சிந்தித்து வருகிறார்.

இலக்குமணப்பிள்ளை மகாவித்துவானை ஆதரித்து வருபவர்களில் ஒருவராவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரின் வழக்கை நடத்துவதற்குரிய சரியான நபர் யார்’ என்பதை சிந்தித்து, மகாவித்துவானின் நினைவு வரவே, அவரை அனுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறார். காலம் கனிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது இதுதான் போலும் இதனை,

நித்தியத் தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத் துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

என்று புரட்சிக்கவியில் பாவேந்தர் பாடுவாரே அந்த இன்பத்தினை மகாவித்துவான் அடைந்திருப்பார்.

சென்னையை அடைந்த பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஸ்ரீதாண்டவராயத்தம்பிரான், காஞ்சிபுரம் சபாபதிமுதலியார், எழும்பூர் திருவேங்கடாசலமுதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை, சென்னையில் விநாயகப்புராணத்தை கச்சியப்ப முனிவர் அரங்கேற்றம்செய்தபொழுது அதற்குசிறப்புப்பாயிரம் அளித்த போரூர் வாத்தியார், அட்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசைஅட்டாவதானம் சபாபதி முதலியார் போன்றவர்களிடம் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிபுராணம், சைவப்பிரபந்தங்கள், திருவாரூர்த்தலபுராணம் உள்ளிட்ட நூல்களில் ஏற்பட்ட ஐயங்களைத்தீர்த்துக்கொண்டார்.

கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, கம்பராமாயணம், பாகவதம், திவ்வியப்பிரபந்தம் போன்ற நூல்கள் தொடர்பான பாடங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டார். ஒவ்வொரு நாளையும் மூன்றாகப்படுத்திக்கொண்டு முற்பாகத்தில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தும், பிற்பகலில் எழும்பூர்த்திருவேங்கடாசல முதலியாரிடத்தும் கதிரவன் மறைவிற்குப் பின் மயிலை திருவண்ணாமலைமடத்துதிருவம்பலத்தின்னமுதம்பிள்ளையிடத்தும் சென்று அவர்களுக்கு ஆகவேண்டிய எழுதுதல், ஒப்புநோக்குதல் முதலான பணிகளைச் செய்துவிட்டு, தக்கநேரத்தில் பாடங்கேட்டுவருதலை வழக்கமாகிக்கொண்டிருந்தாராம். இவர்களில் எவருக்கேனும் பாடஞ்சொல்ல நேரமில்லையாயின் அதனை முன்பே தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் பிறஅறிஞர்களிடம் பாடம் கேட்கச்சென்று விடுவாராம்.

பிள்ளையவர்கள் மேற்படிக்காலத்தை எவ்வாறு பொன்னான காலமாக எண்ணிச்செயல்பட்டுள்ளார் என்பதை உ.வே.சா. போன்ற மாணவர்களுக்குச் சொல்லுவாராம். திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பொழுது அருள்மிகு கபாலீசுவரர்கோவில் வாயில் வழியாகத்தான் போவார்களாம். உள்ளே சென்று வழிபட விருப்பம் இருந்தும் நேரம்போய்விடுமே என்னும் கவலையால் வெளியில்நின்றே வழிபட்டுச் செல்வதாக உ.வே.சா பிள்ளையவர்கள் குறித்த வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.

அறிஞர் பாராட்டு:-
‘அடக்கம் அமரருள் உயக்கும்’ என்பது வள்ளுவரின் வாக்கு அல்லவா? இது பிள்ளையவர்களுக்கு மிகவும் பொருந்தும். சென்னையில் இருந்தநேரம் சபாபதி முதலியார் அவர்கள் பிள்ளையவர்களை மகாலிங்கையர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் தமிழ்மலைகள். நீங்கள் எந்த நூலை வாசித்திருக்கின்றீர்? அவற்றில் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச்சொல்லுங்கள் என்றாராம். உடனே,

இரசத வரையமர் பவள விலங்கல்
இடம்படர் பைங்கொடியே
இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத்
திமயம் வரும்பிடியே….

என்று தொடங்கி,

மதுரித நவரசம் ஒழுகக் கனியும்
வளத்த நறுங்கனியே
தரணி மிசைப்பொலி தருமக்குயிலே
தாலே தாலேலோ
தழையும் தந்தி வனத்தமர் மயிலே
தாலே தாலேலோ

என்று நிறைவு செய்கிறார். பொருளையும் தக்கவாறு எடுத்துரைக்கிறார். கேட்ட மகாலிங்கயைர், ‘இப்பாடல் ஒரு பிள்ளைத்தமிழில் உள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பட உள்ளன. இது திரிசிரபுரம் முதலிட இடங்களில் மட்டும்தான் வழங்குகிறது போலும். இதன்பெயரையாவது ஒருவரும் நம்மிடம் சொல்லவில்லையே’ என்று ஏக்கத்துடன், ‘இச்செய்யுள் எந்தநூலில் உள்ளது? இயற்றியவர் யார்?’ என்று வினவுகிறார்.

மிகவும் அடக்கத்தோடு, ‘இது அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது’ என்கிறார். ‘இவ்வளவு அருமையான நூலைப்படைத்தவர் அடங்கியிருப்பது வியப்பாக உள்ளது. இதைப்படைக்க எவ்வளவு நூல்பயிற்சியைப்பெற்றிருக்க வேண்டும் என்று பலவாறாகப்பராட்டி பலமுறை அச்செய்யுளைக்கூறச்சொல்லிக்கேட்டுமகிழ்ந்தாராம். இந்நூல் இதுவரை அச்சேறவில்லையென்றால் உடனே அம்முயற்சியில் இறங்குங்கள் என்று கூறியதுடன், ‘இந்த நகரில் எவ்வளவுநாள்; தங்கினாலும் என்னுடன்தான் தங்கவேண்டும். யோசிக்க வேண்டாம். ஆகவேண்டிய காரியம் எதுவாக இருப்பினும் முடித்துத்தர ஏற்பாடு செய்கிறேன்’ என்று அன்பொழுக வேண்டிக்கொண்டாராம். கற்றோருக்குச்சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்களே அது இதுதான் போலும்.

பிறகு மகாலிங்கையருடன் பழகும் வாய்ப்பினை மிகுதிப்படுத்திக்கொண்டார். நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை தண்டியலங்காரவுரை நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலான நூல்களில் தமக்கிருந்த ஐயங்களைப்போக்கிக் கொண்டார். அதுவரை அவருக்குக்கிடைக்காமலிருந்த இலக்கணக்கொத்துரையையும் பெற்றுக்கொண்டார். அதனைக் கொடுக்கும்பொழுது, ‘இந்நூல் கிடைக்காமல் பலவிடங்களில் அலைந்தேன். திருவாவடுதுறை மடத்திலும் இல்லை. பின் தாண்டவராயத்தம் பிரானிடத்தே பெற்றேன். இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று கொடுத்தாராம். அதனை உடனே படியெடுத்துக்கொண்டதாகக்குறிப்பு உள்ளது. மகாலிங்கையரின் வேண்டுகோளான அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ், திரிசிரபுரம் இலக்குமணப்பிள்ளையின் பொருளுதவியால் அச்சிடப்பெற்றது. இதுகுறித்து என் உரையில் பின்னால் சொல்லவிருக்கிறேன். இதேபோன்று பிள்ளையவர்களின் அச்சான படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. உரையின் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்

என்னும் குறள்நெறிக்கேற்ப, கற்ற கல்வியின் சிறப்பே எடுத்துரைக்கும் ஆற்றலில்தான் உள்ளது. அவ்வகையில் தந்தைஅளித்த பயிற்சியாலும் தாம் செய்த முயற்சியினாலும் பிள்ளையவர்கள் கல்விச்செல்வம் நிரம்பிய நிறைகுடமாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்சான்றோராய் விளங்கினார். தான்பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பெருக பாடம்சொல்லும் செயலில் இறங்கினார்.

பெரியபுராண விரிவுரை:-
பிள்ளையவர்கள் பெரியபுராணத்தின்மீது ஈடுபாடு கொண்டு அதனை ஐயமற அறிந்து கொண்டார்கள். அதனை விரிவுரையாக நிகழ்த்தினால் தமிழ்ச்சுவையையும் பக்தியின் மேன்மையையும் பலரறியக்கூடும் என்பதால் தக்காரை அணுகி விரிவுரையை நிகழ்த்திவருகிறார். சமயக்காழ்ப்புணர்ச்சியால் பொறாமைகொண்ட சிலரால் விரிவுரை தடைபடுகிறது. காரணம் பெரியபுராணத்தில் வரும் ஒவ்வோர் அடியவரின் புராணத்திலும் அவரின் மரணம் குறித்து செய்திவருவதால் அமங்கலமுடிவாயிருக்கின்ற இந்த நிகழ்வை ஒரு வீட்டில் நடத்தலாமா? என்று இல்லத்து உரிமயாளரை கலைத்துவிடுகிறார்கள். மொழிப்பற்று இல்லாதவரிடத்து இவ்விரிவுரை பயன்தராது என்று உரை நிறுத்தப்படுகிறது. சிலரின் வேண்டுகோளுக்கேற்ப பின்பு வேறொரு இடத்தில் எஞ்சிய பகுதி தொடங்கப்பெற்று நிறைவடைகிறது.

இதேபோல பிள்ளையவர்களின் சீர்காழிக்கோவை உள்ளிட்ட ஒருசிலபடைப்புகளில் அரங்கேற்றத்தின்பொழுதும் இப்படிப்பட்ட இடர்பாடுகளைச் சந்தித்துள்ளார். காலப்போக்கில் அவையெல்லாம் நீங்கியது மட்டுமன்றி, ‘பிள்ளையவர்கள் நம்பகுதிக்கு வரமாட்டார்களா? நம்மூரைப்பற்றித்தலபுராணங்கள் பாடமாட்டார்களா’ என்று மக்கள் ஏங்கித்தவித்த காலம் உருவாயிற்று.

(தொடரும்)

குறிப்பு:-
இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

 

 

 

முனைவர் துரை. குணசேகரன்
தலைவர் தமிழாய்வுத்துறை
அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
மன்னன்பந்தல்,மயிலாடுதுறை

*********************

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க