க. பாலசுப்பிரமணியன்

ஒலியும் உணர்வும்

education

ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பல படிகள் உள்ளன. இவற்றை நாம் வளர்ச்சியின் மைல் கற்கள் என்றே சொல்லலாம். உதாரணமாக ஒலிகளை அறிதலும் அந்த ஒலிகளுக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துதலும் முக்கியமான நிகழ்வு.  சில வாரங்களே ஆன ஒரு குழந்தை ஒரு ஒலியைக்கேட்டதும் அதன் கண்கள் அந்த ஒலி வரும் திசையை நோக்கிச் செல்கின்றன. (sensory Response). அந்த ஒலியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தக் குழந்தைக்கு வருவதற்குமுன் அதைப் பற்றிய ஒரு பய உணர்வு அதன் மனத்தில் தோன்றுகிறது. இந்த நேரத்தில் அந்த பய உணர்வை நீக்கி ஒரு பாதுக்காப்பான செய்தியைத் தருதல் தாயின் முக்கிய கடமை. வரும் ஒலிகளுக்கு ஏற்றவாறு அந்தக் குழந்தையின் விழிகளின் நகர்வுகளைக் கவனித்து செயல் படுதல் அவசியம்.

சில நேரங்களில் அந்த ஒலி அதிர்வுகள் குழந்தைக்குத் தாங்கமுடியாத பய உணர்வை ஏற்படுத்தும் பொழுது தன் துயரத்தை அழுகை மூலமாகமும் உடல் நகர்வுகளின் மூலமாகவும் வெளிப்படுத்தும். தாய் அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு குழந்தையோடு உறவாட வேண்டும். குழந்தைகளை அணைத்தும் கொஞ்சியும் பேசியும் சிரித்தும் பயமான சூழ்நிலையிருந்து வெளிக் கொணர வேண்டும்.

ஒரு குழந்தை ஒரு ஒலியைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது அந்த ஒலி அலைகளும் அதனைச் சார்ந்த உணர்வுகளும் குழந்தையின் மூளையில் அழுத்தமாகப் பதிவாகின்றன. அந்த நிலையில் குழந்தை முந்தைய பய உணர்வுகளிலிருந்து விடுபட்டு அந்த ஒலி அதிர்வுகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது, பொதுவாக குழந்தைகளோடு உறவாடும் பொழுது சத்தமாகப் பேசுதல், அலறுதல், கத்துதல் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் நீண்ட காலம் வரை தொடரும் வாய்ப்புகள் உண்டு.

முந்தைய நாட்களில் குழந்தைக்குத் தொட்டிலிட்டு தாயோ உறவினரோ பாடிய தாலாட்டுக்கள் குழந்தைகளின் மன நலத்தை வளர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இசை, இனிய குரல், ஒலி வளம் மற்றும் சொல் நயங்கள் குழந்தையின் உணர்வுகளோடு நல்லுறவை ஏற்படுத்தி அன்பான அமைதியான பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. குழந்தையின் வளர்ச்சிப்பாதையில் இசைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் இசையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் மற்றும் அதை வளர்ச்சிப் பாதையில் இணைக்க வேண்டும்.

இசை என்று சொல்லும் பொழுது அது படங்களில்; வருகின்ற பாடல்களைக் குறிக்காது. ஆக்கப்பூர்வமான உணர்வுகளை மென்மைப்படுத்துகின்றவற்றை குறிக்கும். தற்போது நடந்து வரும் மன நலம் பற்றிய ஆராய்ச்சிகளில் எவ்வாறு ஒலியும் சொற்களும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, எவ்வாறு அவை ஒரு தனி மனிதனின் சிந்தனையையும் உணர்வுகளையும் பாதித்து அவன் வாழ்க்கை முறைகள் மீது தங்கள் பாதச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன என்று வெளிப்பட்டிருக்கின்றது.

ஆகவே வளரும் பருவத்தில் நல்ல மன நலத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மன நலத்தை பேணக்கூடிய ஒலிகளையும் இசை வடிவில் அளித்தால் குழந்தைகள் பிற காலத்தில் சிறப்பான உணர்வுகளோடு வாழ வழி வகுக்கும்.

தொடருவோம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க