Tag: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி (135)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    23573984_1478741622180032_1160826125_n
    சத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 10

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை முதலில் அறிந்தவள் தோழியே. அதனைச் சொல்லித் தலைவியை மகிழ்விக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு தலைவியின் இல்லம்நோக்கி விரைந்துவந்தாள்.

    அயலார் தலைவியை மணம்பேசிவிட்டுச் சென்றபின் தலைவி முன்புபோல் அதிகமாய் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை; இற்செறிக்கப்பட்டாள். (இல்லத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுதல்). அவளின் மலரன்ன முகத்தில் நொதுமலர் மணம்பேசிச் சென்றதிலிருந்தே மலர்ச்சியில்லை; உடல் மெலிந்தும் உளம் நலிந்தும் ஓர் நடைப்பிணமாகவே அவள் நடமாடி வந்தாள் எனலாம்.

    தலைவியைக் கண்ட தோழி, அவள் உளமறியாது, ”இவளைச் சிறிதுநேரம் வம்புக்கிழுத்துவிட்டுத் தலைவனின் வரவைப் பின்னர் அறிவிப்போம்” என்று குறும்பாக எண்ணியபடி தலைவியைப் பார்த்தாள். ”என்ன இது? தலைவனையன்றி எனை மணக்க ஒருவராலும் ஏலாது; அவனைக் கண்டதும் கானவனின் அம்புக்கு அஞ்சியோடும் குரங்குகள்போல் மணம்பேசவந்த அயலார் சிதறுவர் என்று என்னிடம் சவால்விட்ட பெண்ணா இப்படிச் சுணங்கியிருப்பது?” என்றாள் கேலியாக.

    SONY DSCதலைவனின் வருகை தாமதமாகிக்கொண்டே இருப்பதால் மனம்நொந்திருந்த தலைவி, ” நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாது, கறக்கும் பாத்திரத்திலும் வீழாது, தரையில் சிந்தி வீணானது போல், என் மாமைப் பேரழகு எனக்கும் கவின் சேர்க்காது, என் தலைவனுக்கும் இன்பம் பயவாது, பசலையால் உண்ணப்பட்டு அழிகின்றது” என்று வேதனையோடு விளம்பவும், தோழி தன் குறும்புப் பேச்சைச் சட்டென நிறுத்தினாள்.

    கன்றும்  உண்ணாது  கலத்தினும்  படாது
    நல்லான்
     தீம்பால்  நிலத்துக்  காஅங்கு
    எனக்கும்
     ஆகாது  என்னைக்கும்  உதவாது

    பசலை  உணீஇயர்  வேண்டும்
    திதலை
     அல்குல்என்  மாமைக்  கவினே. (குறுந்: 27 – வெள்ளிவீதியார்)

    மாமைக் கவின் என்பது மாந்தளிர் வண்ணத்தைக் குறிக்கும். பெண்களுக்கு இவ்வண்ணம் பேரழகு பயக்கும் என்பது நம்மனோரின் எண்ணம்.

    பசலை என்பது என்ன? இது பெண்களின் உடலில் ஏற்படும் ஒருவகை நிறமாற்றம்; காதலரைப் பிரிந்த ஆற்றாமையால் சரியாக உண்ணாமலும் உறங்காமலுமிருக்கும் மடந்தையரின் மேனி மெலியும்; சற்றே வெளிறும். அதனால் மாறுபட்ட ஒருவகையான (பசும்)பொன்னிறம் அவர்கள் உடலில் படரும். இதனையே பசலை என்கின்றனர் பைந்தமிழ்ச் சான்றோர். (In English this condition is called Green Sickness; also known as ‘The Disease of Virgins’). பசலை படர்ந்தால் மாமைக் கவின் அழியும்.

    இப்பசலை நோய், காதலரைப் பிரிந்த பெண்டிரை மட்டுந்தான் தாக்குமா? காதலியரைப் பிரிந்த ஆடவரைத் தாக்காதா? என்றொரு கேள்வி நம்முன் எழலாம்.

    ஆடவரைப் பசலை நோயொடு தொடர்புபடுத்திய பாடல்கள் ஏதும் நம் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை.

    காரணம் என்னவாயிருக்கும்?

    ”பெருமையும் உரனும் ஆடூஉ மேன” (தொல். பொ. 98) என்று பழந்தமிழிலக்கணம் ஆடவருக்கு (வீர)இலக்கணம் வகுத்துவிட்டபடியால், ”காதலர் பிரிவால் பசலை பாய்வதும், அழகு தேய்வதும் நங்கையர்க்கே உரித்தானவை; நம்பியர்க்கு இழுக்கானவை” என்று புலவர்கள் முடிவுகட்டிவிட்டனர் போலும். இன்றுங்கூட ”ஆண்பிள்ளைஅழுவது கூடாது” எனும் சொலவடை நம்மிடம் புழக்கத்தில் இருப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பாவம் ஆண்கள்! துன்பம் நேர்கையில் அழக்கூட அவர்களுக்கு உரிமையில்லை!

    சரி…வருந்திப் புலம்பிக்கொண்டிருக்கும் தலைவியின் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்!

    தான் கவினழிந்து பொலிவிழந்து நிற்கத் தலைவனின் பிரிவாற்றாமையே காரணம் என்ற தலைவி தோழியிடம் தொடர்ந்து கூறலுற்றாள்…

    cockfight”தலைவரைக் கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளிய தீயானது, என் என்பை (எலும்பை) நலிவுறச்செய்யினும், அவரை விரும்பிச்சென்று அளவளாவுதற்கு அரிய காட்சியள் ஆகிவிட்டேன் (இற்செறிக்கப்பட்டதால்). அவரும் தாமாகவந்து என் துன்பத்தை நீங்கச் செய்தாரல்லர். இந்நிலையில் என் காமநோயானது, அதனைக் களைவோர் இன்மையால், குப்பைக்கோழிகளின் தனித்த சண்டைபோல் தானே அழியவேண்டியதுதான்!” என்றாள் குரல் தழுதழுக்க.

    ”என் நோய் களைவோர் இல்லை” என்று தலைவி பொடிவைத்துப் பேசியதன் உட்பொருள், அவள் துயர்தீரத் தோழி உதவவேண்டும் என்பதே. அவளன்றித் தலைவியின் ஆரஞர் களைவார் ஆருளர்?

    கண்தர   வந்த   காம   ஒள்ளெரி
    என்புற   நலியினும்  அவரொடு  பேணிச்
    சென்றுநாம்  முயங்கற்கு  அருங்காட்  சியமே
    வந்தஞர்  களைதலை  அவராற்  றலரே
    உய்த்தனர்  விடாஅர்  பிரித்திடை  களையார்
    குப்பைக்  கோழித்  தனிப்போர்  போல
    விளிவாங்கு  விளியின்  அல்லது
    களைவோர்  இலையான்  உற்ற  நோயே.  (குறுந்: 305 – குப்பைக்கோழியார்)

    தலைவனைக் கண்டபோதே  தலைவியின் நெஞ்சம், ஊழின் வலியால், அவன்பாற் காமங் கொண்டதாகலின், ’கண்தர வந்த காம ஒள்ளெரி’ யென்றாள்.

    கண்தாம்  கலுழ்வ  தெவன்கொலோ  தண்டாநோய்
    தாம்காட்ட
     யாம்கண்  டது. (1171)

    படலாற்றா பைதல்  உழக்கும்  கடலாற்றாக்
    காமநோய்  செய்தஎன்  கண். (1175) எனும் குறட்பாக்கள் இக்குறுந்தொகை அடியோடு ஒப்புநோக்கத்தக்கவை.

    குப்பைக்கோழியின் போரைத் தலைவி ஈண்டுக் குறிப்பிடக் காரணம், போரின்பொருட்டு வளர்க்கப்படும் சேரிக்கோழிகளின் போர், பெருந்திரளான மக்கட்கிடையே நிகழும்; ஆனால் குப்பைக்கோழிகளின் போரைக் காண்பாருமிலர்; அப்போரால் அவையுறும் துயர் களைவாருமிலர். ஆதலால் துயர்மிகுந்த தன்னிலையைக் குப்பைக்கோழியின் நிலையோடு பொருத்திப்பார்த்து வருந்துகிறாள் தலைவி. இயற்பெயர் அறியவியலா இப்பாடலின் ஆசிரியர் ’குப்பைக்கோழியார்’ என்றே குறிக்கப்படுகின்றார்.

    தலைவியின் சொற்கள் கண்ணீரில் நனைந்து வெளிப்பட்டதைக் கண்ட தோழி, இனியும் காலந்தாழ்த்தலாகாது என்று தீர்மானித்து, தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை அவளிடம் தெரியப்படுத்தினாள். அச்செய்தி தலைவியின் அகவாட்டத்தைச் சற்றேபோக்கி அவள் முகத்தில் மலர்ச்சியை வருவித்ததெனினும், வேற்று வரைவை மாற்றும் ஆற்றல் தலைவனுக்கு இப்போதிருக்குமா எனும் ஐயம் அவளுள் கிளர்ந்தெழவே, மீண்டும் அவள் முகம் கூம்பியது. தோழியிடம் தன் ஐயத்தைப் புலப்படுத்தினாள். அது நியாயமானதே என்றுணர்ந்த தோழி, இச்சிக்கலைத் தீர்க்க என்ன வழி என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.

    இருவழிகள் அவளுக்குப் புலப்பட்டன!

    ஒன்று…தலைவியின் தமரிடம் அவள் காதலைத் தெரிவித்துக் காதல் மணத்துக்குச் சம்மதம் பெறுவது; ஆனால், வேற்று மணத்தை நிகழ்த்திவிடுவதற்கான மணநாளைக் குறிப்பதில் இருவீட்டாரும் முனைந்திருக்கும் இத்தறுவாயில், தலைவியின் காதலை வீட்டுக்குச் சொல்வதால் தலைவிக்குச் சாதகமாக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை; மாறாகத் தலைவியின்மீது அவள் பெற்றோர் சினமும் சீற்றமும் கொள்ளவே அது வழிவகுக்கும். எனவே அந்தவழி பயன்படாது!

    மீதமிருக்கும் ஒரேவழி ’உடன்போக்கு’ என்று எண்ணமிட்டவள், தலைவன் தலைவியைத் தன்னூருக்கு உடனழைத்துச் சென்று மணப்பது ஒன்றே இப்போதைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒரேவழி எனும் முடிவுக்குவந்தாள். தலைவியிடம் அதைக்கூறவும் அவள் மருண்டு நோக்கினாள் தோழியை!

    அவளைத் தெளிவிக்க எண்ணிய தோழி, ”அருமைத்elephant_tiger தோழி! நீ வாழி! என்று தலைவியை வாழ்த்திவிட்டு, மிக்க வலியினையும் பிளந்த வாயினையுமுடைய பெரிய ஆண்புலியானது, மதத்தால் நனைந்த கவுளையுடைய, அண்ணல் யானையின் அழகிய முகத்தின்கண்ணே பாய, அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது குருதியால் செவ்விய கறைகொள்ளச் செய்து, மலைப் பள்ளத்திலுள்ள, மேலைக் காற்றால் வீழ்த்தப்பட்ட, கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்துகிடக்கும். அத்தகு  உயர்ந்த மலைநாட்டுத் தலைவனுடன் உடன்போவதை நீ எண்ணுவாயாக” என்றாள் உறுதிபட.

    நினையாய்  வாழி  தோழி  நனைகவுள்
    அண்ணல்  யானை  அணிமுகம்  பாய்ந்தென
    மிகுவலி  இரும்புலிப்  பகுவாய் ஏற்றை
    வெண்கொடு   செம்மறுக்  கொளீஇ  விடர்முகைக்
    கோடை  யொற்றிய  கருங்கால்  வேங்கை
    வாடுபூஞ்  சினையிற்  கிடக்கும்
    உயர்வரை  நாடனொடு  பெயரும்  ஆறே.  (குறுந்: 343 – ஈழத்துப் பூதந்தேவனார்)

    இப்பாடலில் வலிமிகு புலியொன்று தலைவன் நாட்டு யானையின்மீது தானாகப் பாய்ந்து காயப்பட்டு இறந்துபோகும் நிகழ்வு பேசப்படுகின்றது. தலைவன் நாட்டு யானை, சிரமமின்றிப் பகையை எளிதில் வீழ்த்துவதுபோல், தலைவனும் இடையூறுகளை எளிதில்வெல்லும் பேராற்றல் படைத்தவன் எனும் செய்தி இதனுள் பொதிந்துகிடக்கின்றது.

    தோழி நயந்த உடன்போக்குக்குத் தலைவி உடன்பட்டாளா?

    [தொடரும்]

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 133-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    goal and boy

    ”நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்” என்றார் அறிவிற்சிறந்த அவ்வை மூதாட்டி. அவர் வாக்கிற்கு வாழும் சான்றாய்த் திகழும் சுட்டிப் பையனையும், அவன் கையில் ஆட்டுக்குக் கொடுப்பதற்காக நீண்டிருக்கும் தழைகளையும் பார்க்கையில் மனம் பரவசத்தின் வசப்படுகின்றது. திரு. ஆய்மன் பின் முபாரக் எடுத்துத் தந்திருக்கும் இந்த அற்புதமான புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் என் பாராட்டும் நன்றியும்! 

    ஆட்டையும் அதனருகில் புன்னகை பொங்கநின்றிருக்கும் பூங்கண் மழலையையும் பாட்டிலேற்றக் காத்திருக்கின்றனர் ஆற்றல்மிகு கவிஞர் பெருமக்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! 

    *****

    ”சிறுவன் தரும் தழையை உண்ணவிரும்பாது திரும்பிநிற்கும் இதே ஆடு, தன்னை வெட்டவருபவனை நம்பிக்கையோடு நாடிச்செல்லும்” என்று ஆட்டின் உளவியலை நாடிபிடித்துப் பாட்டில் பதிவுசெய்திருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கள்ளமில்லாச் சிரிப்புடன் ஆட்டுக் கிடாவிற்கு தீனி காண்பிக்கின்றாய்
    அதுவோ உன்னைக் கண்டும் காணாமல் உன்னருகில் நிற்கின்றதே
    உன் கையில் உள்ள இலைத்தழையை சாப்பிடத் தயங்குதே
    தன்னை வெட்டுபவனை மட்டும் முழுமையாய் நம்புதே!
    ஆட்டு மந்தை போல் செல்லாதே சின்னங்சிறு சிறுவனே
    உனக்கெனப் பாதையை நீயே வகுத்து முன்னேறு சிறுவனே
    ஆடு உன் அருகில் வாராமல் எங்கோ நோக்குதே
    நீ அருகில் வந்து கொடுப்பாய் என்று எதிர்பார்க்குதே!
    உயிர்வதை கூடாது என்று சொல்கிறது ஒரு கூட்டம்
    கொன்ற பாவம் தின்னப் போகும் என அலையுது மற்றொரு கூட்டம்
    என்னதான் உரைத்தாலும், மாறாத சில மனிதர்களின் எண்ணம்
    பழி, பாவங்களுக்கு என்றுமே அஞ்சாத மனித ஜென்மம்!
    சிறுவனே, அழகிய சிரிப்புடன் நீ அதன் உணவைக் காட்டி நிற்கின்றாய்
    நாளை, இறப்பது தெரிந்தும், அந்த ஆடு பார்க்கவில்லை என்கிறாய்
    ”துன்பம் வரும்போது சிரிக்கவும்” எனச் சொன்னவனை நினைக்கின்றாயா?
    மனதுள் அழுதுகொண்டே சிரிக்கும் ஆட்டினைப் பார்த்து நீ சிரிக்கின்றாயா! 

    *****

    ”காட்டில் மேயும் ஆடும், கள்ளமில்லாப் பிள்ளை ஆசையோடு தரும் உணவுதனை விருப்பத்தோடு நாடும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை மனது…

    கள்ள மில்லாப் பிள்ளைக்கும்
    காட்டில் மேயும் ஆட்டுக்கும்
    வெள்ளை மனது என்பதாலே
    வேறே யெதுவும் தெரிவதில்லை,
    கொள்ளை யடிக்கும் மனிதனவன்
    கொடுக்க மறந்த உணவுதனைப்
    பிள்ளை யெடுத்துக் கொடுக்கையிலே
    பெரிதும் மகிழ்வர் இருவருமே…! 

    *****

    ”அன்பின் மொழியாம் புன்னகையோடு உயிரின நேயம் காட்டும் உயர்ந்த பிள்ளைக்குப் போதித்துவிடாதீர்கள் இரைதந்து இரையாக்கும் உங்கள் மானுட இயல்பை” என்று மன்றாடுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    அறியாப் பிள்ளை மனம்

    உயர்திணையா அஃறிணையா அறியாப் பிள்ளை மனம்
    உணவிடும் அன்னையாக
    கண்ணில் வழியும் கருணை
    கடவுளின் காட்சியாக
    மழலையின் கரங்கள் நீளுவது
    மழலையிடம் அல்ல
    பேதமறந்த உயிரின நேயம்
    பிள்ளைமனத்திடம் மட்டுமே
    தேசம் எதுவென்றாலும்
    பாசம் என்பது உலகப்பொதுமறையாக
    அன்பிற்குத் தெரியாது உயர்வு தாழ்வு
    அன்பிற்குப் புரிதல் மொழி புன்னகை மட்டுமே
    குழந்தை உலகுக்கு
    கற்றுக்கொடுக்க காத்திருக்கும் உள்ளங்களே!
    இரை தந்து இரையாக்கும் மானுட இயல்பை
    தயவு செய்து கற்றுத் தராதீர்
    அறியா பிள்ளை மனம்
    அவர்இயல்பில் முளைக்கட்டுமே. 

    *****

    ”குணமிருப்பவரை மதிக்கும் இக்குவலயத்தில் தணலில் வெந்தால் மட்டுமே மதிப்புப் பெறுவாய் நீ! முக்திக்கு வழிகிடைக்கும் என்று மூடர்கள் மொழிந்ததால் கத்திக்குப் பலியாகும் கதியுனக்கு வாய்த்ததே!” என்று ஆட்டின் நிலைக்கு வருந்தி இரங்கற்பா படைத்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

    அம்பியும், ஆட்டுக்குட்டியும்!

    அழகான ஆட்டுக்குட்டி அமைதியுடன் இருக்கும்..
    ……….அதனருகினிலே நீபயமின்றி விளையாடலாம் அம்பி.!
    விழலுக்குப் பாடுபட்டு விளைநிலமாக்கி உழைக்கும்..
    ……….உழவனுக்கு…அதன்சாணம்கூட நல்லுரமாகும் அம்பி.!
    பழம்கனி கொடுக்கும் மரம்செடியதன் இலைதின்னும்..
    ……….பாருக்குப் பயனுண்டாமதைப் பற்றுடன்வளர் அம்பி.!
    எழும் குளிருக்கிதமான கம்பளியென உடலங்கம்..
    ……….எல்லாமே பயனுறும் விலங்குயிராகும் அதுதம்பி.!

    வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களோடு நல்லுறவாடி..
    ……….விரும்பும் விலங்கினமாக வீட்டினருகே வளருமாம்.!
    கூட்டணியாய் சேர்ந்துதன் குடும்பம் பெருக்குமொரு..
    ……….கால்நடையாவாய் வாஞ்சையோடு வளர்ப்பதற்கே.!
    நாட்டம் கொண்டு நாளுமாசையுடன் வளருமுன்னை..
    ……….வெட்டும் அரிவாளுக்கே உன்கொம்புதான் பிடியாகும்.!
    ஆட்டுக்கு உணவாவதெலாம் சைவம்தான் எனினும்..
    ……….அம்மனிதனுக்கே ஆடு உணவாகியது அசைவமாகும்.!
    உணவுக்காக ஓடுமுயிர்களில் மனிதனும் உண்டாம்..

    ……….உணவுக்காக மட்டுமே உனையன்போடு வளர்ப்பார்.!
    பணம் சம்பாதிக்க இவ்வுலகில் பலவழியுண்டாமதிலே..
    ……….பாங்காகயுனை விற்றதில் பெரும்லாபம் கண்டிடுவார்.!
    மணமுடித்த கையுடனே மாந்தருக்கு விருந்துண்டாம்..
    ……….மணக்கு மசாலாக்கறியாக இலையில்நீ வீற்றிருப்பாய்.!
    குணமிருப்பவரைத்தான் இவ்வுலகம் மதிக்கும் நீயோ..
    ……….தணலில் வெந்தால்தானுன் விலைமதிப்பு உயருமன்றோ.!
    சக்தியின்மகனே உன்னிடத்தில் சாதுரியம் கண்டதாலே..
    ……….சக தோழனாக்கி தனக்கேயுன்னை வாகனமாக்கினான்.!
    சக்திவேண்டும் தம்முடலில் எனுமெண்ணம் கொண்டே..
    ……….சாமானியர் உனையுண்டு பலசாலியாகவே நினைப்பார்.!
    முக்திக்கு வழிகிடைக்குமென்று மூடர்கள் சொன்னதால்..
    ……….கத்திக்கு இரையாகி மடிவதேயுந்தன் தலையெழுத்தோ.!
    பக்திக்கு பலியாவதையும்….பசிக்கு உணவாவதையும்..
    ……….பெருமான் முருகனே வந்தாலும் தடுக்கவும் முடியுமோ.! 

    ***** 

    சுகப் பிரசவத்தைக்கூட கத்திவைத்துச் சோகப்பிரசவமாக மாற்றும் மருத்துவ வணிகத்தையும், ஏட்டுக்கல்விக் கூடங்களெல்லாம் ரூபாய் நோட்டுக்கு விலைபோய்விட்ட கேடுகெட்ட நிலையையும், ஊழல் பெருச்சாளிகளெல்லாம் உத்தமராய் வலம் வரும் அவலத்தையும், இன்னபிற சமூகச் சீர்கேடுகளையும் ஆத்திரத்தோடு அடுக்கிச்சொல்லும் ஆட்டைக் காண்கிறோம் திருமிகு. சொல்லின் செல்வியின் கவிதையில்.

    புன்னகையைப் பத்திரப்படுத்து கண்ணா..!

    கொம்புமில்லை வாலுமில்லை
    பயந்து ஒதுங்கத் தேவை இல்லை
    குட்டி குட்டி ஆட்டுக்குட்டிகளை
    பெற்றெடுத்த பொட்டச்சி நானடா!
    என்னை மீறிய தாய்ப் பாசத்தில்
    உன்னை அள்ளி அணைக்கத் தோணுதடா…
    மனிதப் பிறவி எடுத்துப் பாவம் செய்தாயே!
    உன் நிலை கண்டு வருந்தச் செய்தாயே….

    நான் கண்ட உன் பிறவியின்
    இழிநிலையை
    இன்றைய நிலையில்
    சொல்கிறேன் கேளடா கண்ணா..!

    பிடித்த வலியை பொறுத்துக்கொண்டு
    உந்தி பெற்றெடுக்கும் சுகப்பிரசவத்தினை
    வயித்தைக் கிழித்து உடலைத் தேய்த்து
    காசு பண்ணத் திட்டமிடும் கூட்டம் இது
    பணத்திற்காக நோயை வளர்க்கும்
    படித்த மேதைகள்
    வரிசையில் நின்று அழையுதடா…..!

    ஏட்டுக்கல்வியும் பாட்டுக்கல்வியும் போய்
    ஏசி அறைதன்னில் ஒளிப்பாடம் ஒலிக்குதிங்கே
    பள்ளிக்கூடங்களெல்லாம் பணத்திற்கு விலைபோக
    அடித்தட்டு மக்களுக்கு
    அடிவயிறு கலங்குதடா…
    பட்டப் படிப்பு படிக்க வைப்பதற்குள்
    பாதி உசுரு போகுதடா!

    வேலைக்குப் போகுமிடத்தில்
    கட்டுப்பாடும் கலாசாரமும்
    சீர்கெட்டுப்போய்
    புதிய இலக்கணம்
    புகுத்திக்கொண்டு…
    கார்ப்ரேட் நிறுவனங்கள்
    நம்மீது மோகங்கொண்டு
    பணத்தாசை காட்டியதால்
    மகுடிக்கு ஆடும்
    பாம்புகளாய்
    மயக்கநிலையில் அலைகின்றனர்
    இன்றைய இளைஞர் கூட்டம்தானே டா..!

    பொறுப்பற்ற மனிதர்களெல்லாம்
    தலைவர்களென்று உரைத்துக்கொண்டு
    பொதுக்கூட்டம் நடத்தி
    பைத்தியாகாரத்தனம் செய்கிறதடா..!

    ஊழல் செய்யும் அதிகாரிகள்
    உத்தமர் வேஷம் போட்டுக்கொண்டு
    ஊரை ஏமாற்றுவதால்
    உண்மையான அதிகாரிகளின்
    நேர்மை கேள்விக்குறி ஆகுதடா..!

    எதிர்த்து நின்று போராட
    துணிவின்றி
    கருத்தை மட்டும் சொல்லிக்கொண்டு
    ஒதுங்கி நின்று
    வேடிக்கை பார்க்கும்
    இழிநிலை மாந்தர்களடா..!

    இந்த ஒழுக்கமற்ற சமுதாயம்
    ஒன்றுக்கும் உதவாமல் போகுதடா..!

    ஜாதி வெறிப்பிடித்து
    தரங்கெட்ட கூட்டங்கள்
    கெளரவக் கொலைகள்
    செய்வதை
    பெருமை என அலையுதுடா.!

    பொருத்தம் பார்த்து
    திருமணம் செய்தாலும்
    திருத்தங் கொண்டு
    வாழ தெரியாமல்
    விவாகரத்து கோரி
    நீதிமன்ற வாசலில்
    நீளுகிறதடா பெருங்கூட்டம்.

    இப்படியாக இப்படியாக
    எண்ணிக்கை இல்லாமல்
    சொல்லிக்கொண்டே போகலாம்.
    மனிதர்களை குறித்து
    சொல்ல சொல்ல
    தீராது என் கோபமடா..!

    ஐந்தறிவு பதர்கள் நாங்கள்
    கூட்டமாய் இருக்கின்றோம்.
    ஓட்டமாய் ஓடுகிறோம்
    ஒற்றுமையாய் வாழ்கிறோம்.
    கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம்.
    வளர்த்த மனிதனுக்கு
    விசுவாசமாய்
    அன்பு அடிமையாய் இருந்தும்
    கடைசியில் கசாப்புக் கடைகளில்
    மனிதர் உண்ணும் உணவுக்காக
    விற்கப்பட்டு இறந்தும் போகிறோம்.

    களிற்றைப் போல
    இருந்தாலும்
    இறந்தாலும்
    ஆயிரம் பொன் சேவகர்களடா நாங்கள்..!

    உன் ஒட்டு மொத்த சமூகமும்
    பணத்திற்கு அடிமைகளாய்
    பண்பின்றி திரிகிறதடா
    பாசத்தை கூறுப்போட்டு
    பட்டியிலிட்டு பிரிக்கிறதடா..!

    கண்ணா.. என் அழகு மன்னா..!
    உன் அழகுச் சிரிப்பை
    உன் மழலைப் பூரிப்பை
    படம் போட்டுப்
    பத்திரமாய் வைத்துக்கொள்ளடா..!

    பெரியவனாய் நீ வளரும் போது
    இக்கேடு கெட்ட
    மனிதக் கூட்டத்தில்
    கள்ளம் கபடமற்ற
    உன் சிரிப்பு
    உன்னிடத்தில் நிலைக்காதடா…!

    *****

    ஆட்டினை வைத்து அரும்பொருள் பலவற்றைப் பாட்டில் உரைத்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு உரித்தாகின்றது. 

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது… 

    மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நான்
    இன்றைய பொழுது எனக்கிப்
    பிஞ்சுக் குழந்தையுடன்,
    இனிமையாய்க் கழிகிறது
    குழந்தைக்குத் தெரியாது என்னைக்
    கொல்லப் போகிறார்களென்று!
    கள்ளமில்லா அவன்
    பிஞ்சு மனம் அதை அறிந்தால்….!?
    நெஞ்சுடைந்து போவான்.
    கையில் கிடைத்ததை மகிழ்வோடு
    கொண்டு வந்து நீட்டுகிறான்.
    வாங்கிக் கொள்வதுதான்
    அவனை மகிழ்விக்கும்.

    நாளை நடக்கப்போவதையெண்ணி
    இன்றைய வாழ்வின் மகிழ்ச்சிகளைத்
    தூக்கியெறிய முடியுமா?
    குழந்தையோடு குதூகலமாய்க்
    கழிகின்றன என் கணப் பொழுதுகள்.
    வாழும்போது மகிழ்வாக
    வாழ்ந்து விடவேண்டும்!
    அப்போதுதான், போகும்போது,
    மகிழ்வாக வாழ்ந்துவிட்ட
    திருப்தியாவது இருக்கும்!

    கொலைக்களத்திற்குக் கூட்டிப் போகும்போது – என்
    குழந்தை நண்பனுக்குத் தெரியக் கூடாது
    ஏனழைத்துச் செல்கிறார்களென்று!
    அவன் முகத்தில் மலரும் புன்சிரிப்பு
    என்றும் மாறாதிருக்கட்டும்!

    ”நாளை நடப்பதையெண்ணி இன்றைய மகிழ்ச்சியைத் தொலைப்பது அறிவுடைமையன்று; ஆதலால் என் மழலைத் தோழனோடு இன்றைய பொழுதை இனிமையாய்க் கழிப்பேன்” என்று அறிவின் முதிர்ச்சியோடு ஓர் ஆடு மொழிவது,

    ”…இன்னாதம்ம இவ்வுலகம்
    இனிய காண்கஇதன் இயல்புணர்ந்தோரே” (உலகம் துன்பம் நிறைந்ததுதான்; அத்துன்பத்துக்கிடையே இன்பத்தைக் காண்பதுதான் உலகின் இயல்புணர்ந்தோர் செயல்) என்ற புறநானூற்றுப் புலவர் பக்குடுக்கை நன்கணியாரின் பொன்மொழிகளை எனக்கு நினைவூட்டுகின்றது. அரிய செய்தியை எளிய பாட்டில் பதிவுசெய்திருக்கும் திரு எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (134)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22883441_1465870270133834_601823443_n

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 9

    -மேகலா இராமமூர்த்தி 

    தலைவியின் எழில்நலத்தையும் குடிப்பெருமையையும் அறிந்த அவ்வூரில்வாழும் வேறொரு குடும்பம் தலைவியை மணம்பேச அவள் இல்லத்துக்கு வந்துவிட்டது. மேலும் சோதனையாக மணம் பேசவந்த அந்தக் குடும்பத்தையும், மணமகனையும் தலைவியின் தந்தைக்கும் தமையன்மார்க்கும் பிடித்தும் போய்விட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக மணநாள் பற்றிய பேச்சுவார்த்தையில் இருவீட்டாரும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

    தன்னுளம் மகிழத் தலைவனொடு தனக்குக் காதற் கடிமணம் நிகழும் என்று தலைவி கனவுகண்டிருக்க, நொதுமலர் (அயலார்) மணம்பேசவந்த நிகழ்வு அப்பூங்கொடியாளை வாடச் செய்தது. அவ்வேளை பார்த்துத் ”தலைவனின் நட்பு பொய்த்துவிடுமோ? அயல்மணம் உனக்கு வாய்த்துவிடுமோ?” எனத் தோழியும் அடுக்கடுக்காய் ஐயங்களை எழுப்ப, ”தைரியத்தை இழக்கலாகாது” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்ட தலைவி,

    ”வலைஞன் குளத்தே மீனுக்கு வலைவிரிக்க, அதில் நீர்நாய் அகப்பட்டால் அதனால் அவனுக்கென்ன பயன்? அதுபோல் நொதுமலர் என்னை வரைய முற்படுவதும் பயனின்றி முடியும். தலைவன் நிச்சயம் எனைவந்து மணப்பான்” என்ற தன் நம்பிக்கையைத் தோழியிடம் வெளிப்படுத்தினாள் தலைவி.

    காணினி  வாழி  தோழி  யாணர்க்
    கடும்புனல்
     அடைகரை  நெடுங்கயத்  திட்ட
    மீன்வலை
     மாப்பட்  டாஅங்கு
    இதுமற்
     றெவனோ  நொதுமலர்  தலையே. (குறுந்: 171 – பூங்கணுத்திரையார்)

    ”பெண்ணே! உன் நெஞ்சுரம் வெல்லவேண்டும்; தலைவன் உன்னைக் கரம்பற்றிச் செல்லவேண்டும் என்பதே என் வேணவா. ஆயினும் சில நேரங்களில் நாமொன்று நினைக்க வேறொன்று நிகழ்ந்துவிடுவதும் உண்டே! அதுகுறித்துத்தான் கவல்கிறேன்” என்றாள் தோழி.

    ”அவ்வாறு ஒன்றும் நடவாது; நடக்கவும் விடமாட்டேன்” என்று உறுதிபட மொழிந்த தலைமகள்,

    பலாமரத்திற் பழங்களைத் தின்னக் கூட்டமாகத்monkey-eating-jackfruit திரண்டிருக்கும் ஆண் குரங்குகள், சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய வேட்டுவனது குறிபிழையாச் செம்மையுடைய அம்புகளுக்கு அஞ்சி, போர்க்களத்தை அடைந்த குதிரையைப் போல மேலெழுந்து சாரலிலுள்ள பெரிய மூங்கிலினது நீண்டகோல் அசையுமாறு பாய்கின்ற பெரிய மலையடுக்குகளையுடைய தலைவன், அன்றிருந்ததைப் போலவே மாறுபாடின்றி எப்போதுமிருக்கும் நட்பினையுடையவன். அங்ஙனம் இருப்பவும்,  ஆரவாரமிக்க இந்த ஊரானது என் மணங்குறித்து வந்த புதியவர்களை உடையதாயிருக்கின்றது.” என்றாள் தலைவி. அவள் சொற்களில் எள்ளல் துள்ளியது!

    பலவிற்  சேர்ந்த  பழமா  ரினக்கலை
    சிலைவிற்
     கானவன்  செந்தொடை  வெரீஇச்
    செருவுறு
     குதிரையிற்  பொங்கிச்  சாரல்
    இருவெதிர்
     நீடமை  தயங்கப்  பாயும்
    பெருவரை
     யடுக்கத்துக்  கிழவ  னென்றும்
    அன்றை  யன்ன  நட்பினன்
    புதுவோர்த்  தம்மவிவ்  வழுங்க  லூரே.  (குறுந்: 385 – கபிலர்)

    கலைகள் பாய்வதால் வளைந்து நிமிரும் மூங்கிலானது போர்க்களத்தில் குதிரைகள் பொங்கிப் பாய்தலுக்கு ஈண்டு உவமையாய்க் கூறப்பட்டுள்ளது. கானவன் அம்பைக் குறிதப்பாமல் எய்யும்வேளையில் குரங்குகள் எப்படிப் பாய்ந்தோடுமோ அதுபோல் தலைவன் தன்னை மணம்பேச வரும்போது தன்னை வரைந்துகொள்ள விரும்பும் இப்புதியவர்களும் விரைந்தோடுவர் எனும் உள்ளுறை தலைவியின் சொல்லில் ஒளிந்திருக்கின்றது.

    மூங்கில் வளைந்து நிமிர்வதற்குக் குதிரை துள்ளியெழுவதை மேற்கண்ட குறுந்தொகைப் பாடலேயன்றி, குறுந்தொகை 74ஆம் பாடலும், புறம் 302ஆம் பாடலுங்கூட உவமையாய்ச் சுட்டியிருப்பது ’சான்றோர் சான்றோர் பாலர் ஆப’ எனும் நன்மொழிக்குச் சான்றாகின்றது.

    ”விட்ட  குதிரை  விசைப்பி  னன்ன
    விசும்புதோய்
     பசுங்கழைக்  குன்ற  நாடன்….”     (குறுந். 74:1-2) 

    ”வெடிவேய் கொள்வது போல வோடித்
    தாவுபு உகளு மாவே…  (புறம்: 302: 1-2)

    தோழியிடம் வீரவசனம் பேசிவிட்டாளே தவிர எங்கே தனக்கு அயல்மணம் நிகழ்ந்துவிடுமோ எனும் விசனம் தலைவிக்கும் உள்ளூற இருக்கத்தான் செய்தது.தலைவியின் மனத்திண்மையையும், தலைவன்மீது அவள் கொண்டிருக்கும் உண்மையான நம்பிக்கையையும் உளமாரப் பாராட்டினாள் தோழி.

    இதற்கிடையில் பொருள்தேட மொழிபெயர்தேயம் (வேற்றுமொழி பேசும் பகுதி) சென்ற தலைவன் வேண்டிய பொருளைத் திரட்டிக்கொண்டு ஊர்திரும்ப ஆயத்தமானான். தொடலைக் குறுந்தொடியாளை உடனே காணவேண்டும் எனும் வேட்கை அந்த விடலையைப் பிடர்பிடித்து உந்திற்று. தேரேறினான். விரைந்து; தேர்ப்பாகன் தேரைச் செலுத்த, தலைவனோ தன் உள்ளத்தைத் தலைவிபால் செலுத்தலானான்.

    அன்றொரு நாள் இரவுக்குறியில் தன்னைக் காணவந்த தலைவி, மாறுபடு வலிமையுடைய செவ்வேல் மலையனின் (மலையமான் திருமுடிக்காரி) முள்ளூர்க் கானத்தில் வீசும் நறுமணத்தைப்போல் மணம்வீசும்படி தன்னருகில் வந்து மகிழ்ந்திருந்ததையும், பின்னர்ப் பொழுதுபுலரும் வைகறையில் தலையில் தான் சூட்டியிருந்த விரவுமலர்களைக் களைந்துவிட்டு, நறிய கூந்தலில் நெய்தடவி, தலைவனை அறியாதவள்போல் காட்டிக்கொண்டு, தன் வீட்டாரின் இயல்புக்கேற்ப மாறிய கள்ளத்தனத்தையும் மீண்டும் இப்போது நினைவுகூர்ந்தான். அவன் முகத்தில் குறுநகை அரும்பியது.  

    இரண்டறி  கள்விநங்  காத  லோளே
    முரண்கொள் துடுப்பின்
    செவ்வேல்  மலையன்
    முள்ளூர்க்
     கானம்  நாற  வந்து
    நள்ளென்  கங்குல்  நம்மோ  ரன்னள்
    கூந்தல்  வேய்ந்த  விரவுமலர்  உதிர்த்துச்
    சாந்துளர்
     நறுங்கதுப்பு  எண்ணெய்  நீவி
    அமரா
     முகத்த  ளாகித்
    தமரோர்  அன்னள்  வைகறை  யானே.   (குறுந்: 312 – கபிலர்)

    தலைவனுக்கேற்றபடி இரவிலும், தன் சுற்றத்தாருக்கேற்றபடி பகலிலும் தன்னியல்பை மாற்றிக்கொள்ளும் தலைவியை ’இரண்டறி கள்வி’ என்று தலைவன் குறித்தது சரிதானே?

    ”ஐய! தங்களுக்கு அட்டியில்லையேல் தலைவியின் ஊர்பற்றி எனக்கும் சிறிது அறியத் தாருங்களேன்!” எனும் பாகனின் குரல் கனவுலகில் காதலியோடு மனங்கலந்திருந்த தலைவனை நனவுலக்கு மீட்டுவந்தது.

    kondrai”அதற்கென்ன…கேள் பாக! பெரியவர்களுக்கு நீரொடு தானம் செய்து எஞ்சியபொருளையும், யாவர்க்கும் தடையில்லாச் சோற்றையும் உடைய, வரிசையான, திரண்ட குறிய வளைகளை அணிந்த தலைவியின் தந்தை ஊரானது, கவலைக் கிழங்கைக் கல்லியதனால் உண்டான அகன்ற வாயுடைய சிறிய குழி, கொன்றையினது ஒளிபொருந்திய மலர் பரவப்பெற்று செல்வர்க்குரிய பொன்வைக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றமுடைய, கார்காலத்தை ஏற்றெதிர்கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது” என்றான்.

    தலைவியை மணந்துகொள்ளப் போகிறோம் எனும் பெருமிதத்தில் தலைவியின் தந்தை ஊரை (அதாவது தலைவியின் ஊரை) உவகைபொங்கப் பாகனுக்கு விளக்குகின்றான் தலைவன்.

    கவலை  கெண்டிய  அகல்வாய்ச்  சிறுகுழிgold
    கொன்றை
     யொள்வீ  தாஅய்ச்  செல்வர்
    பொன்பெய்
     பேழை  மூய்திறந்  தன்ன
    காரெதிர்
     புறவின்  அதுவே  உயர்ந்தோர்க்கு
    நீரொடு  சொரிந்த  மிச்சில்  யாவர்க்கும்
    வரைகோள்  அறியாச்  சொன்றி
    நிரைகோற்
     குறுந்தொடி  தந்தை  யூரே.  ( குறுந்: 233 – பேயன்)

    கொன்றை மலரைப் பொற்காசோடு உவமித்தலை,
    “….காசி னன்ன போதீன் கொன்றை”    (குறுந். 148:3)  எனும் மற்றொரு குறுந்தொகைப் பாடலிலும் நாம் காணலாம்.

    முல்லை நிலத்திலுள்ள தலைவியின் ஊரெழிலையும், அவள் தந்தையின் வள்ளன்மையையும் அறிந்து வியந்த பாகன், அவ்வூரின்கண்ணே கவலைக்கிழங்குகள் அகழ்ந்த குழிகளில் நிறைந்திருக்கும் பொன்னிறக் கொன்றைமலர்கள், செல்வர்வீட்டுப் பேழையில் பெய்துவைத்த பொற்காசுகளை ஒத்திருக்கும் எனும் தலைவனின் கருத்தைத் தன்னுள் இரசித்தபடியே தேரைச் செலுத்த, வளியைக் கிழித்தவண்ணம் விரைந்துகொண்டிருந்தன புரவிகள்.

    [தொடரும்]

    Share
  • படக்கவிதைப் போட்டி 132-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    kids with a young lady

    கண்ணைக் கவரும் வண்ணப் பசுமைக்குமுன் காண்போர் எண்ணம் கவரும் வன்ன மழலையர் மாநாடு நடத்த, அதனைக் கைகோத்து வேடிக்கை பார்க்கிறார் இளம்பெண்ணொருவர்! ஆர்வத்தைத் தூண்டும் இந்த இனிய காட்சியைத் தன் படப்பிடிப்புக் கருவியில் அள்ளிவந்திருப்பவர் திரு. கோகுல்நாத். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    நம் உளம் களிக்கும் வண்ணம், விழிகள் குளுமையில் குளிக்கும் வண்ணம் எங்கும் படர்ந்திருக்கின்றது இச்சையூட்டும் மரகதப் பச்சை வண்ணம்!

    எங்கெங்கு காணினும் பசுமையடா – அங்கே
    தங்க மழலையர் பேசிடும் காட்சி அருமையடா! என்று பாடத்தோன்றுகிறது இவ்வெழிற் காட்சிகண்டு!

    இனி, கவிதையெனும் பொற்தூரிகையால் இக்காட்சிக்கு மேலும் வலிவும் பொலிவும் சேர்க்கப் புறப்பட்டு வருகிறார்கள் பாவலர்கள்.

    *****

    மருள்நீக்கியை நாவுக்கரசர் ஆக்கினார் அக்கை திலகவதியார்; அருள்மொழியை இராசராசன் ஆக்கினார் அவர் தமக்கை குந்தவை நாச்சியார். அதுபோல் அன்னையாய் அறிவுரை பகரும் அக்கை சொல் கேட்டால் அகிலத்தை வெல்லலாம் எனும் வாழ்வியல் உண்மையைத் தன் கவிதையில் சிறப்பாய்ப் செப்பியிருக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    தமக்கையும் தாயாவாள்:

    பச்சை வண்ண ஆடைகட்டிய மலை மகள்!
    மலைமகள் அருகே குழந்தைகளோடு நிற்கும் தாய் இவள்!
    பிள்ளைகளைப் பெற்றுத் தந்ததால் அவள் பெற்றவள்!
    அன்னையாய் இவளை அடைந்ததால்
    இப்பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்!
    கல்விச்சாலைக்கு செல்லக் காத்திருக்கும் பிள்ளைகள்!
    நாளைய நல்ல பாரதத்தை நிர்மாணிக்கக் ,
    காத்திருக்கும் சிற்பிகள்!
    பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடம் கட்டிவைத்து
    கல்விக் கண் திறந்து வைத்த கர்ம வீரன் காமராசர்!
    கனவுகளை நனவாக்க வந்த நல்முத்துக்கள்!
    அக்கா வார்த்தைகளை அப்படியே கேட்கின்ற
    அன்புத் தம்பிதனை இங்கே பாருங்கள்!
    தமக்கையும், இன்னொரு தாய், தம்பிக்கென்ற
    உண்மையை உணருங்கள்!.
    திலகவதியார் வளர்ப்பாலே, மருள் நீக்கியார்
    நாவுக்கரசரானது நாமறிவோம்!
    குந்தவை வளர்ப்பாலே, ராச ராச சோழன்
    சிகரம் தொட்டதை நாமறிவோம்!
    அருணகிரி நாதர், முருகன் அருள் பெற்றதும்
    அக்கா வளர்ப்பாலே நாமறிவோம்!
    தமக்கை இருந்துவிட்டால் தம்பியர் வாழ்க்கை எல்லாம்
    தரணியில் உயர்ந்தோங்கும்!

    *****

    சோலையில் விளையாட விரும்பும் தம்பியைப் பார்த்து, ”கல்விச்சாலைக்கு வா அன்புத் தம்பி! ஒழுங்காய்ப் படித்தால்தான் ’நீட்’ தேர்வில் நாம் பெறலாம் வெற்றி!” என்று மனமுதிர்ச்சியோடு வாழ்வில் வெல்லும் வழிசொல்லும் அறிவார்ந்த அக்காவைக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்.

    கொழுந்தெடுக்க யாருமின்னும்
    கூடிடாத காலையில்
    குழந்தைகளைப் பள்ளிக் கூடம்
    கூட்டிச் செல்லும் தாயுடன்
    விளைந்த தேயிலைப் பரப்பின்
    விளிம்பிலுள்ள வீதியில்
    விருப்ப மின்றிப் பள்ளி போக
    வெறுத்த தம்பி சொல்கிறான்

    தம்பி-
    பச்சைவயல் அழகாகப் படர்ந்திருக்கு தேக் கொழுந்துப்
    பற்றையெல்லாம் ஓடி விளையாடி – நாம
    இச்சைப்படி இன்பமாக இந்த நாளைக் கழிச்சிடலாம்
    என்னோட நீயும் கூட வாடி!

    அக்கா-
    நீட்டுத் தேர்வில் நீயும் நானும்
    நெறைய மார்க்கு வாங்க வேணும் தம்பி -அதுக்கு
    நேரகாலத்தோட நாம
    பாதை போட்டு வச்சுக்கணும் தம்பி.
    ஆட்டுவிக்கிற அம்மாவுக்கும்
    அது தாண்டா ஆனந்தம் தம்பி
    அதுக்காச்சும் பள்ளிக்கூடம்
    அலுப்பில்லாமப் போக வேணும் தம்பி.

    அடை மழை வந்தாலு மெண்ணு
    கொடயக் கையில எடுத்துக்கிட்டு
    கூட்டிப் போற அம்மாவுக்குத் தம்பி-நல்ல
    பாட்டி போட மார்க் கெடுத்து
    பரீட்சையில பாஸு பண்ணி
    காட்ட வேணும் திறமையெல்லாம் தம்பி.

    இப்பருந்தே படிச்சாத்தான்
    எதிர்காலம் நமக்கிருக்கும்
    தப்ப விட்டா தோத்துப் போவம் தம்பி-நாம
    எப்ப வேணு முண்ணாலும்
    எறங்கி விளையாடிக்கலாம்
    இப்ப போவம் பள்ளிக்கூடம் தம்பி.

    அன்னை-
    நெஞ்சமெங்கும் தன் குழந்தை
    நீட்டுத் தேர்வில் வெல்லணும்
    கொஞ்சமும் குறைந்திடாது
    மார்க்கு வாங்கிக் கொள்ளணும்
    தஞ்சமது கல்விதான் தமக்கு என்று தாயவள்
    தன்குழந்தை சொல்லும் வார்த்தை
    தன்னிலே மகிழ்கிறாள்.

    *****

    ”தேயிலை பறித்து நமைக் காக்கும் தாயிலையேல் நம் வாழ்வு என்னாகும் தம்பி? அந்த அன்னைக்கு நாம் செய்யும் கைம்மாறு, நன்கு கற்று வாழ்வில் நல்லபெயர் பெற்று வாழ்வதே!” என்று இளவலுக்கு இன்மொழி கூறும் தமக்கையின் உருவில் தோன்றுகிறாள் மற்றோர் அன்னை!” என்று சிலிர்க்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்னொரு அன்னை…

    வெளியூரு போன அப்பா
    வரவில்லை நெடுநாளா..
    வெளியே காட்டாமல் துக்கத்தை,

    வெயிலினிலும் மழையினிலும்
    தேயிலை பறித்துத் தேய்ந்து
    வேலை பார்த்து நம்மைப்
    படிக்கவைக்கிறாள் அம்மா..

    வேடிக்கை விளையாட்டு
    வேண்டாமடா தம்பி இப்போது,
    நன்றாய் நாம் படித்து
    நல்லபெயர் எடுப்போம்,
    பொல்லாத உலகத்தில்
    பெற்ற தாய்க்குப்
    பெருந்துணையாய் இருப்போம்
    அவள்
    பேர் சிறக்க வாழ்வோம்..

    அங்கே பிறக்கிறாள்
    அக்கா உருவிலோர்
    அன்னை…!

    *****

    குறும்பாவில் தேனிதழ் மழலையரைப் போற்றியிருக்கிறார் திரு. பா.வசிம். (பிழைநீக்கிப் பதிவிடுக கவிதைகளை). 

    தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்த முகத்திற்கு பின்னால் நிற்கும்
    தேன்இதழ்ச் செல்வங்கள்…

    *****

    அன்னையவள் தன் பிள்ளைகளை ஒழுக்கத்தோடும், நல்லநெறியோடும் வளர்ப்பதிலேயே குறியாயிருந்து குவலயம் போற்றும் உயர்ந்தோராய் அவர்கள் விளங்கப் பாடுபடும் திறத்தைச் சிறப்பாய்த் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    எங்கள் அன்னை..!

    எழில்கொஞ்சும் பசுமைத் தோட்ட மருகே..
    …………எதிர்காலக் கனவுகளை ஏந்திய நினைவுடன்.!
    அழகாய் மகிழும் குழந்தைகள் அவளருகே..
    …………ஆனந்தமாய்ப் பள்ளி செல்லும் எண்ணமுடன்.!
    ஒழுக்கமுடன் வளர்ந்து அவர்கள் உலகிலோங்க..
    …………உற்றதுணையாக என்று மிருப்பார் அன்னை.!
    நிழலாய்த் தம் பிள்ளைகளைத் தொடருவார்..
    …………நெறியாய் வளர்ப்பதில் கவனமிகு கொள்வார்.!

    கண்ணாகப் பெற்ற குழந்தையுடன் மகிழ்வார்..
    …………கனிவான அன்பை அளவின்றிக் கொடுப்பார்.!
    கண்ணசையா கவனமுடன் அவரைக் காத்து..
    …………கருத்துடனே பள்ளிசெல்ல தினம் அனுப்புவார்.!
    வண்ணச் சீருடையில் பள்ளிசெலும் அவர்களை..
    …………வாழ்த்துடன் முத்தம் பொழிந்து அனுப்புவார்.!
    எண்ணமுதச் செய்கையால் அன்னை என்பவள்..
    …………எப்போதும் இதயத்தில் நிறைந்தே இருப்பாள்.!

    *****

    நல்ல கருத்துக்களைக் கனிமழலையருக்குத் தம் கவிதைகள்வழிச் சொல்லியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    இன்றைய இயந்திர உலகில் இயற்கையை இரசிப்பதற்கோ, மழலையரோடு மனம் மகிழ்வதற்கோ யாருக்கும் நேரமில்லை. உருண்டோடும் செல்வத்தைத் துரத்திக்கொண்டே மக்கள் திரண்டோடுகின்றனர். அதனால் அன்பினால் நிரப்பப்படவேண்டிய இல்லங்கள்கூட வெறும் உறங்குமிடங்களாக (dormitories) மாறிவிட்டிருப்பது கண்கூடு. கணவனும் மனைவியும் காசைத் தேடுவதிலேயே கவனமாயிருப்பதால் அவர்தம் மாசற்ற மழலையரைத் தாங்க, அவர்களோடு விளையாட, கதைபேசப் பணிப்பெண்கள் தேவைப்படுகின்றார்கள். ஆம், அவர்களே இன்றைய மழலையர்க்குச் ’செவிலித் தாயர்.’ அந்த மாற்றுத் தாயின் அன்பு(ம்), அன்னையெனும் பொன்னில்லா இடத்தில் வைக்கப்படும் பூவைப்போல் நறுநாற்றமுடையதே (மணம்) என்பதைத் தன் தம்பிக்குப் பொறுப்போடு விளக்கும் சிறந்த அக்கையைத் தன் கவிதையில் அடையாளப்படுத்தியிருக்கும் திருமிகு. சொல்லின் செல்வியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    அவருடைய கவிதை…

    மாற்றுத் தாய் இவளடா..தம்பி..!

    வெறுப்பு காட்டாதேயடா தம்பி…
    இவள் வேலைக்கு வந்தவள்தானே என்று!
    அக்கா நான் கூறும் பேச்சைக் கேள் அமைதியாய் நீ நின்று!

    அன்னைக்கோ நேரமில்லை அன்புகாட்ட
    தந்தைக்கு நேரமில்லை பாசம் காட்ட

    வேலைக்கு ஆளிருக்கு என்று அடிமையென இவளை ஏவி விட்டு
    காசுக்கு அடிமைகளாய்
    கம்பெனிக்குச் சென்றுவிட்டார் நம் பெற்றோர்!

    நாம் கண்விழிக்கும் காலை முதல் கால்பதித்த பள்ளிவரை
    உணவு ஊட்டி உறக்கம் காட்டி,
    காசு வாங்கிப் பாசம் காட்டும் கண்ணியமான அன்னையிவள்!

    பட்டுத்துணியும் கட்டுப் பணமும் தராத பாசத்தைத்
    தட்டுநிறை உணவு தீர்க்காத நம் பசியை,
    தேக்குக் கட்டிலும், பஞ்சு மெத்தையும் கொடுக்காத உறக்கத்தை
    அடிமையென வந்தஇவள் அற்புதமாய்த் தந்தனளே!

    முதல் தரத்துத் தேயிலைகள் வெளிதேசம் போவது போல்
    வெளிநாட்டுக் கம்பெனியில் அடிமையாய் போயினரே நம் பெற்றோர்!
    மூன்றாம் தரத் தேயிலைகள் தாய்நாட்டில் சுவைப்பதுபோல்
    தாய்ப்பாசம்தனைக் காட்டி நம் வாழ்வில் சுவை ஊட்டுகிறாள் வேலைக்குவந்த இவள்!

    வேசம் காட்டி நாசம் செய்யும் வஞ்சக உலகினிலே
    பாசம் காட்டும் பாமரப் பெண்ணிவளை
    நாசம் செய்யாதே உன் கடும் சொல்லால்!
    மோசம் ஒன்றும் போக மாட்டாய் அவள் அன்பை ஏற்றுக் கொண்டால்!

    எதிர்காலம் என்ற கணக்கை நோக்கிப்
    பணத்தை சேர்க்க ஒடுகின்ற பெற்றோர் நமக்கிருந்தாலும்,
    அன்னைபோல அன்புகாட்ட தந்தைபோல பாசம் காட்ட அடிமையிவள் இல்லையென்றால் அன்புக்கு ஏங்குகின்ற அனாதைகளே நாமுமின்று!

    அன்னையெனப் பாவித்து அவள் மடி நீ சாய்ந்திட்டால்
    விண்ணையும் வளைத்திட்ட சந்தோசம் கொண்டிடுவாள்
    ஆசையாய் நீ பேசிவிட்டால் அகிலத்தையே தந்திடுவாள்!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (133)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22894732_1465864570134404_1363780446_n

    ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 8

    -மேகலா இராமமூர்த்தி 

    வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவனை எண்ணியே ஏங்கிக்கொண்டிருந்தாள் தலைவி. அவனைக் காணுமின்பமும் அற்றுப்போய்விட்டதே என எண்ணுங்கால் உள்ளமுடைந்தாள்; ஊணுறக்கம் மறந்தாள்.

    விளைவு?

    அவளின் தொல்கவின் தொலைந்தது; தோள் மெலிந்தது; மேனியெங்கும் பசலை படர்ந்தது.

    தோழியைக் கண்டு, ”தலைவனின் பிரிவால் என் கைவளை நெகிழ்ந்ததையும், மெய்சோர்ந்து போனதையும் தாய் அறிந்தாளாயின் நான் உயிர்வாழ மாட்டேன்!” என்று மனம்நொந்து கூறினாள் அவள்.

    ”ஆய்வளை ஞெகிழவும் அயர்வுமெய் நிறுப்பவும்
    நோய்மலி
    வருத்தம்  அன்னை யறியின்
    உளெனோ
    வாழி தோழி….”  (குறுந்: 316 – தும்பிசேர் கீரன்)

    வேளைகிடைக்கும் போதெல்லாம் தன் அளவற்ற மன உளைச்சலை ஆருயிர்த் தோழியிடம் கொட்டித் தீர்ப்பதே தலைவியின் வேலையாகிப் போனது.

    ”பெண்ணே! என்மீது அருள்காட்டி மணம்புரிய மறுத்துப் பொருள் தேடிச்சென்றுவிட்டான் தலைவன். அவன்வரும் வழிபார்த்தே என் விழிகளும் ஒளியிழந்தன. அவன் பிரிந்தநாளைக் குறித்துத் தொட்டுத் தொட்டு என் விரல்களும் தேய்ந்தன” என்று பெருமூச்செறிந்தாள்.

    தன் உரையைத் தொடர்ந்தவள்…”தலைவன் என்னை முதன்முதலில் கண்டு காதல்கொண்ட இடத்தில் என் உள்ளங்கவர் கள்வனாகிய அவனைத் தவிர வேறு எவருமே எங்கள் காதலுக்குச் சாட்சியாக இல்லை; அவன் சூள்பொய்த்தால் நான் என் செய்வேன்?” என்று கலங்கினாள்.

    heronதிடீரென்று நினைவுவந்தவளாய், ”ஆங்…அவரன்றி இன்னோர் உயிரும் நாங்கள் இருந்த நீர்நிலைக்கு அருகே இருக்கவே செய்தது. ஆனால் அதுவோ கருமமே கண்ணாய் நீரில்வரும் ஆரல்மீனைக் கொத்தித் தின்பதிலேயே கவனமாயிருந்த தினையின் தாள்போன்ற சிறிய பசுங்காலைக்கொண்டிருந்த ஒரு நாரை! அது எம் காதலுக்குச் சாட்சி சொல்ல வருமோ?” என்றாள் உள்ளம் உடைந்து.

    யாரு  மில்லைத்  தானே  கள்(ள)வன்
    தானது
     பொய்ப்பின்  யானெவன்  செய்கோ
    தினைத்தா
     ளன்ன  சிறுபசுங்  கால
    ஒழுகுநீர்
     ஆரல்  பார்க்கும்
    குருகு
     முண்டுதான்  மணந்த  ஞான்றே. (குறுந்: 29 – கபிலர்)

    இப்பாடலைப் பொறுத்தவரை, ’தானே கள்வன்’ என்றும் ’தானே களவன்’ என்றும் இருவகைப் பாடபேதங்கள் காணப்படுகின்றன. ’கள்வன்’ என்று பொருள் கொள்ளும் உரையாசிரியர்கள், ’தலைவனே தன் நலத்தைக் களவாடிய கள்வன்’ என்று தலைவி கூறுவதாகவும், களவன் என்று பொருள்கொள்ளும் தமிழறிஞர் இரா. இராகவையங்கார் போன்றோர், ’தலைவன் ஒருவனே தங்கள் காதலுக்குக் களத்திலிருந்த ஒரே சாட்சி’ எனும் பொருளில் ’களவன்’ என்று தலைவி அவனைக் குறிப்பதாகவும் உரைவரைந்துள்ளனர். இரு கருத்துக்களும் மனங்கொளத்தக்கவையாகவே உள்ளன.

    தலைவியின் உரைகேட்ட தோழி, “அடி பைத்தியமே! நீ நினைப்பதுபோல் தலைவன் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடக்கூடியவன் அல்லன்; அப்படிப்பட்டவனாயின் நான் உன்னை அவனுடன் பழகவே அனுமதித்திருக்கமாட்டேனே!

    காந்தளினது அழகிய கொழுவிய அரும்பு தானாக மலரும் வரையில் காத்திராமல், வண்டுகள் அவற்றின் மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில், முன்பும் தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டு எதிர் கொள்ளும் கடமையுணர்ந்த மனிதரைப் போல, வண்டுகளுக்கு இடங்கொடுத்து இதழ்கள் பிணிப்பவிழ்ந்த உயர்ச்சியுடைய மலைநாட்டுத் தலைவன் தன் களவொழுக்கத்தை நீட்டிப்பதால் உனக்கு நிகழும் பாதகங்களை நான் (அவனுக்கு) எடுத்துரைத்த அளவிலேயே இக் களவொழுக்கத்தை மேலும் நீட்டித்தல் முறையன்று என்று நாணிய நன்னர்நெஞ்சத்தன். அவன் நின்னை வரைந்து கொள்ளுதற் பொருட்டே பொருள்தேடச் சென்றிருக்கிறான். வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே” என்று கடிந்துகொண்டாள்.

    காந்தளங்  கொழுமுகை  காவல்  செல்லாது
    வண்டுவாய்  திறக்கும்  பொழுதிற்  பண்டும்
    தாமறி  செம்மைச்  சான்றோர்க்  கண்ட
    கடனறி  மாக்கள்  போல  இடன்விட்டு
    இதழ்தளை  யவிழ்ந்த  ஏகல்  வெற்பன்
    நன்னர்  நெஞ்சத்தன்  தோழி  நின்னிலை
    யான்தனக்  குரைத்தனெ  னாகத்
    தான்  நாணினன் இஃ து ஆகாவாறே (குறுந்: 265 – கருவூர் கதப்பிள்ளை)

    தோழியின் நன்மொழிகள் தலைவியின் உள்ளத்தில் சற்றே தேறுதலையும், தலைவன் விரைவில் பொருள்தேடிக்கொண்டுவந்து தனக்கு அருள்செய்வான் எனும் நம்பிக்கையையும் விதைத்தன.

    இதுபோல் சிலநாள்கள் தேறியிருப்பதும் பின்னர் மீண்டும் தலைவன்மீது நம்பிக்கையிழந்து மனம்வாடுவதுமாகவே தலைவியின் நாள்கள் கழிந்தன. தலைவியின் நிலையை நன்குணர்ந்த தோழி தினமும் அவளைத் தேடிவந்து இன்மொழிகள் சொல்லிச் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.

    அன்றும் அவ்வாறே தலைவியைக் காண அவள்turtle இல்லத்துக்கு வந்தாள். அவளிடம் தலைவி, “பெண்ணே! தாய்முகம் நோக்கி வளருந் தன்மையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பலகாலம் திரும்பத் திரும்பக் காண்பதால் வளருந்தன்மையுடைய காமமானது, அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால் தாயில்லாத முட்டை உட்கிடந்து அழிவது போல, உள்ளத்துள்ளேயே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன உறுதியைத் தரக்கூடும்? என்னை இடித்துரைப்போர் (தோழியைக் குறிப்பால் உணர்த்துகிறாள்) இதனைச் சிறிதேனும் அறிந்திலர்” என்றாள் சற்றே காட்டமாக.

    யாவதும்  அறிகிலர்  கழறு  வோரே
    தாயின்  முட்டை  போலவுட்  கிடந்து
    சாயின்  அல்லது  பிறிதெவன்  உடைத்தே
    யாமைப்  பார்ப்பின்  அன்ன
    காமங்  காதலர்  கையற  விடினே.  (குறுந்: 152 – கிள்ளிமங்கலங்கிழார்)

    இதே கருத்தமைந்த பாடல் ஐங்குறுநூற்றிலும் காணக் கிடைக்கின்றது. 

    தீம்பெரும்  பொய்கை  யாமை  யிளம்பார்ப்புத்
    தாய்முக
     நோக்கி  வளர்ந்திசி  னாஅங்கு
    அதுவே
     யையநின்  மார்பே
    அறிந்தனை
     யொழுகுமதி  யறனுமா  ரதுவே”     (ஐங். 44)

    தாயின் நினைவினால் முட்டையுள் கருப் பார்ப்பாகி, பின் அப்பார்ப்புத் தாய்முகம் நோக்கிவளரும் எனும் பொருளை மேற்கண்ட இரு இலக்கியப் பாடல்களும் நமக்கு அறியத் தருகின்றன. தாயின் அன்பும் அரவணைப்பும் இன்றேல் புவியில் எவ்வுயிரும் வாழ்தல் அரிது. இக்கருத்தைத் தலைவனின் அன்பையும், அவனோடு உடனுறையும் மணவாழ்வையும் பெறாத தன்னிலைக்கு உவமையாக்குகின்றாள் தலைவி.

    ”இந்தப் பெண்ணை நான் எப்படித்தான் தேற்றுவது…?” என்று யோசனையில் ஆழ்ந்தாள் தோழி. வேறு வழியில்லை…! நயமாகத் தேற்றித்தான் ஆகவேண்டும்; அன்றேல் தலைவன் குறித்த கவலையே இவளைத் தின்றுவிடும்; உயிரோடு கொன்றுவிடும் என்று எண்ணியவளாய்,

    “தலைவன் எங்கே போய்விடப் போகிறான்? சித்தனைப்போல் பூமியைத் தோண்டி உள்ளே இறங்கிவிடப்போகிறானா? வானில் ஏறிவிடப் போகிறானா? அல்லது கடலின்மேல் நடந்துசென்றுவிடப் போகிறானா? பூமியில்தானே எங்கேனும் இருப்பான்? நாடு நாடாக, ஊர் ஊராக, முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்பட்டுவிடப் போகிறான்! நான் அவனைக் கண்டுபிடித்து உன்முன் நிறுத்துகிறேன் பார்!” என்றாள் பொய்யான கோபத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு.

    நிலந்தொட்டுப்  புகாஅர்  வானம்  ஏறார்
    விலங்கிரு  முந்நீர்  காலிற்  செல்லார்
    நாட்டின்  நாட்டின்  ஊரின்  ஊரின்
    குடிமுறை  குடிமுறை  தேரிற்
    கெடுநரும் உளரோநம் காத லோரே.  (குறுந்: 130 – வெள்ளிவீதியார்) 

    இதைக் கேட்ட தலைவிக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. வெள்ளிக்காசுகளை அள்ளிக்கொட்டியதுபோல் கலகலவென நகைத்தாள். பேச்சில், சொல்வீச்சில் வல்லவளான தோழியின் நகைச்சுவை உணர்வுக்கு இப்பாடல் நற்சான்றாகிறது.

    தலைவனின் வரவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்த தலைவியின் இல்லந்தேடி அப்போது வேறொரு சோதனை வந்துசேர்ந்தது.

    [தொடரும்]

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    man lying on tree

    வெண்துகிலென அருவியது பாய்ந்துவர, அவ்வருவி நீரில் குளித்த பாறைகள் பளிச்சென்று பளபளக்க, இவ்வெழிற் காட்சிகளிடையே மரத்தின்மீது ஏகாந்தமாய்ச் சாய்ந்திருக்கும் மனிதரை அழகுறப் படம்பிடித்து வந்திருக்கிறார் திரு. முத்துகுமார். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    இயற்கை அன்னையின் இன்ப அணைப்பினில்  மயங்கிநிற்கும் வேளையிலே,

    ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எங்கள் இறைவா இறைவா இறைவா!

    சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்குச்
    சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
    அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
    மாகப் பலபலநல் அழகுகள் சமைத்தாய்”
    என்று நமதுள்ளம் துள்ளும்; ஆனந்தக்களி கொள்ளும்.  

    இந்த அழகின் சிரிப்பு நம் கவிஞர்களின் சிந்தனைக்கும் சேர்த்திடும் சிறப்பு எனும் நம்பிக்கையோடு அவர்களைக் கவிபாட அழைப்போம்!

    *****

    ”தம்பி! நீ படுத்திருக்கும் இடம் உனக்குப் பாதுகாப்பானதில்லை; சறுக்கி விழுந்திடாதே; சுருக்காய் எழுந்திடு” என்று அன்போடு எச்சரிக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    தம்பி கவனமடா சறுக்கி விழப் போகின்றாய்
    ஆனை அடிசறுக்கி அதலபாதாளத்தில்
    போனது போல் நீயும் பொறி கலங்க வீழ்ந்திட்டால்
    முட்டுக்கால் பேந்த மொடமாய்ப் பொழப்பின்றி
    கட்டிலில் வீழ்ந்து கவலைமிக வுற்று
    துட்டுக்கலையும் துயர்சேர எப்போதும்
    தட்டுப்பாட்டோடு தவிக்கு நிலை வரலாம்
    மெல்ல இறங்கு வேண்டாமிவ் வீண்வேலை
    கல்லெல்லாம் ஈரம் கவனம்.

    *****

    ”மரத்தின்மேல் மல்லாந்துபடுத்த கரணியம் என்ன தம்பி? கரணம் தப்பினால் மரணம் என்பதை நீ அறியாயோ? அலட்சியத்தை விடுத்து இலட்சியத்தில் உறுதிகொண்டு உலகை வெல்வாய்!” என்று படுத்திருக்கும் இளைஞனை எழுச்சிகொள வைக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    எழுச்சி கொள் தம்பி:

    வனம் பூமித்தாய் தந்த சீதனம் தம்பி!
    அருவி ஆண்டவனின் அருட்கொடை தம்பி!
    மரங்கள் பூமித்தாய் பெற்றெடுத்த அழகுப் பெண்கள் தம்பி!
    இத்தனையும் ரசிப்பதற்கு இப்பிறவி போதாது தம்பி!
    இளங்கன்று பயமறியாது, நான் அறிவேன் தம்பி!
    காட்டாறு கிணற்றுக்கள் அடங்காது,
    நான் அறிவேன் தம்பி!
    ஏகாந்தம் இனிமை தரும்,
    நான் அறிவேன் தம்பி!
    மரத்தின் மேல் ஏன் படுத்தாய் தம்பி!
    கரணம் தப்பினால் மரணம், எச்சரிக்கை தம்பி!
    அச்சமின்மை ஆண்மைக்கு அழகு,
    நான் அறிவேன் தம்பி!
    விவேகம் இல்லா வீரம் விபரீதம் தம்பி!
    நான் உரைக்கும் வார்த்தைகளை
    செவிமடுப்பாய் தம்பி!
    பாரதியின் கனவுகளை மறந்தாயோ தம்பி!
    அய்யா கலாம் சொன்னதை
    நீ மறந்தாயோ தம்பி!
    உன் லட்சியத்தைக் கனவாக்கு தம்பி!
    சாதனைகள் படைத்திட
    உடனே எழுந்திடுவாய் தம்பி!
    நாளைய உலகம் இருக்குது, இளைஞர்களை நம்பி!
    பாரதம், பார் புகழ வளரட்டும் தம்பி!

    ***** 

    ”நிலையிலா மனிதா…மரத்தின்மேல் துஞ்சிடாதே! நீ கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சிடாதே!” என்று அக்கறையோடு அறிவுரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மலை மேலே…

    மலையினில் பெய்த மழையதுதான்
    மகிழ்ந்தே ஆறாய் ஓடியபின்,
    மலையி லிருந்தே குதித்தாலும்
    மகிழ்ந்தே நாமும் அருவியென்போம்,
    நிலையில் கொஞ்சம் மாறிடினும்
    நீரில் மாற்றம் ஏதுமில்லை,

    நிலையிலா மனிதனே நெஞ்சில்கொள்
    நீவிழ எதுவும் மிஞ்சிடாதே…!

    *****

    ”கண்விழிக்கும்போதே கணினியைக் கையில்கட்டிக்கொண்டு விழிக்கவேண்டிய அவசர யுகத்தில், இயற்கையோடு இயைந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே மனம் பெருமகிழ்வு கொள்கிறது” என்று எதார்த்தம் பேசும் கவிதையைத் தந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    எந்திர வாழ்க்கை...!
    காலை எழும்போதே கணிணியைக் கையில்
    ……….
    கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.!
    மாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்
    ……….
    மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.!
    வேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக
    ……….
    வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.!
    களைப்பாற நேரமில்லை..! தகுந்த இடமில்லை..
    ……….
    கண்டதெலாம் நாகரிக நகரமாகிப் போனதாலே.!

    சற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்
    ……….
    சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.!
    பற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது
    ……….
    படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.!
    கற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்
    ……….
    கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.!
    எற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென
    ……….
    எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.!

    உதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்
    ……….
    உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.!
    அதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை
    ……….
    ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.!
    மதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை
    ……….
    மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.!
    இயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா
    ……….
    இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.!

    ***** 

    நல்ல சிந்தனைகளை வழக்கம்போலவே தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எனக்குள்ளும் இருக்கின்றான்!

    மனம் பறக்கிறது
    மரக்கிளையில் சாய்ந்த
    மறுகணம்
    மனம் பறக்கிறது….
    கவலைகள்
    ரணங்கள்
    இயலாமைகள்
    தவிப்புகள்
    அனைத்தையும் மறந்து
    ஆனந்த லயத்தில்

    மனம் பறக்கிறது

    காட்டாற்று
    வெள்ளம் கண்ட
    வேளையில்தான்
    ஆரவாரமிக்க மனம்
    அமைதியை
    அரவணைத்தது

    பெரும் பாறைகளைவிடப்
    பாறையாய் இருந்த மனம்
    காட்டாற்று வெள்ளத்தைப்போல
    கருணையை உள்ளத்தில் கொண்டு
    காலங்கள் பின்னோக்கி ஒடுகின்றது
    கண்ணீரைக்
    கண்கள் விரும்பிச் சூடுகின்றது

    இசைக்கின்ற ஆறு
    இனிய மரங்கள்
    ஈரக்காற்று
    ரசித்த பிறகுதான்
    தெரிகிறது…
    எனக்குள்ளும் இருக்கின்றான்
    இறைவன்!

    வெள்ளத்தின் ஓட்டம்
    தீர்ந்தது
    உள்ளத்தின் வாட்டம்

    இயற்கையை
    தரிசிக்க வந்தவனைத்
    தன்னை,
    தன்னிலையைத் தானே
    தரிசிக்க செய்தது இயற்கை!

    கவலை எனும் சிலந்தி வலை மனித மனத்தைச் சுற்றிப் பின்னி, அதனைத் துன்புறுத்தும் வேளையில், கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பாய் விரிந்துகிடக்கும் இயற்கையொன்றே அம்மனத்துக்கு மகிழ்ச்சியெனும் ஒத்தடத்தை நல்கவல்லது. பாய்ந்துவரும் ஆற்றுவெள்ளம் மகிழ்ச்சிவெள்ளத்தை மனித உள்ளத்திலும் ஊற்றெடுக்க வைப்பது எனும் உண்மையைத் தன் கவிதையில் உரக்கச் சொல்லியிருக்கும் திரு. வி. மணிகண்டனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (132)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22359423_1449646335089561_257837991_n
    கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 7

    -மேகலா இராமமூர்த்தி

    ”விரைந்து வருவேன் வரைந்துகொள்ள!” எனும் நன்மொழியைத் தலைவனிடம் எதிர்பார்த்தாள் தலைவி. அவனோ, “அன்பே! உறுபொருள் தேடிவந்தபின் உனை மணப்பேன்!” என்று சொல்லவும் திகைத்துப்போனாள் அவள்.

    ”அன்பரே! தாங்கள் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றல்லவோ என்னிடம் கூறியிருந்தீர். இப்போது திடீரென்று பொருள்தேடி வந்தபின் மணப்பேன் என்று சொல்கிறீரே? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றாள் குழப்பதோடு.

    தோழியும் தலைவியின் கூற்றுக்கு உடன்படும் வகையில் தலையாட்டினாள்.

    தலைவன் செப்பலுற்றான்…”நங்காய்! நான் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்; அதில் பொய்யில்லை. ஆனால் அது என் முன்னோர் தேடிவைத்த செல்வமாயிற்றே… நான் தேடியதில்லையே!” என்றான்.

    தலைவியின் குழப்பம் மேலும் அதிகரித்தது. “தங்கள் முன்னோர் தேடிய செல்வம் தங்களுடையதுதானே அன்பரே?” என்று கேட்டாள்.

    ”இல்லை” என்று மறுத்தவன், “நானே உழைத்துத் தேடியதைத்தான் என்னுடையது என்று நெஞ்சைநிமிர்த்திக் கூறமுடியும். தன்னுழைப்பின்றி முன்னோர் திரட்டி வைத்திருக்கும் செல்வத்தைச் சிதைப்பவன் செல்வம் உளனாய்க் கருதப்பட மாட்டான்” என்றான்.

    ”நம்மவரே ஆயினும் அவர்பொருளை நமதென்று உரிமைகொண்டாடுவது முறையில்லை; அஃது அவர் பொருளே” என்ற தங்கள் உயர்ந்த விளக்கத்தை அட்டியின்றி ஏற்றுக்கொள்கிறேன் ஐயனே! எனினும் இப்போதே தாங்கள் பொருள்தேடப் புறப்படுவானேன்? என்னை மணந்தபின் செல்லலாமே!” என்ற தலைவியின் கருத்தைத் தலைவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

    ”மணவாழ்க்கை மணம்வீசும் வாழ்க்கையாயிருக்கவும், இல்லறம் நல்லறமாய்த் திகழவும் பொருள் வேண்டும். விருந்து புரக்கவும், இரவலர் ஓம்பவும், செறுநர் செருக்கறுக்கவும் செல்வம் வேண்டும். ஆகவே பொருள்தேடி வந்தபின் உன்னை மணப்பதே மாண்புடைய செயல்” என்று அவன் தீர்மானமாகக் கூறிவிடவே, இனியும் அவனோடு விவாதித்து அவன் மனத்தை மாற்றுவது கடினம் என உணர்ந்தாள் தலைவி.

    ”அப்படியானால்… பொருள்திரட்டிக்கொண்டு எப்போது வருவீர்? என்னை எப்போது மணப்பீர்?” என்று கேள்விகளை அடுக்கினாள் அவநம்பிக்கையோடு.

    ”நம்பிக்கை இழக்காதே நங்காய்! இப்போது முதுவேனிற் காலமல்லவா? கார் வருமுன் என் தேர்வரும் உனைத் தேடி என்று சூளுரைக்கிறேன். வாட்டம் நீக்கு! வருத்தம் போக்கு! காத்திருக்கிறது வளமான எதிர்காலம் நமக்கு” என்றான் முறுவலோடு.

    அரைமனத்தோடு தலைவனுக்கு விடைகொடுத்தாள் தலைவி.

    தலைவன் பொருள்தேடச் சென்றுவிட்டான்.

    தன் வீட்டுவாயிலில் ஏதோ சிந்தித்தவண்ணம் நின்றுகொண்டிருந்த தலைவியைக் கண்ட தோழி, “தலைவரை நினைந்து வருந்தாதே! அவர் விரைவில் பொருளொடு மீள்வார்!” என்று ஆறுதல்மொழி பகர்ந்தாள் தலைவியின் உள்ளத்தைப் படித்தவளாய்.

    ”தோழி! ஏற்கனவே தேடிவைத்துள்ள பொருளைச் சிதைப்பவன் செல்வம் உடையவனல்லன்; பிறர் தேடிய பொருளைத் துய்த்தல் இரத்தலினும் இளிவானது எனும் வாழ்வியல் உண்மையை எனக்குத் தெளிவித்துப் போயிருக்கிறார் நம் தலைவர். ஆதலால் அவர் பிரிவுகுறித்து நான் கவலவில்லை. ஆனால் அவர் பொருள்தேடச் சென்றிருக்கும் வழி, கூற்றத்தையொத்த கொலைவேல் மறவர் பொழுதுபட்டு (இரவில்) அவ்வழிவருவோரைக் கொன்றதனாற் பட்ட தசைகளைத் தின்ன நசையொடு (விருப்பு) காத்திருக்கும் பருந்துகள் நிறைந்திருக்கும் நீரற்ற நெடும்பாதையாயிற்றே… அதை நினைத்துத்தான் அஞ்சுகிறேன்” என்றாள்.

    உள்ளது  சிதைப்போர்  உளரெனப்  படாஅர்
    இல்லோர்  வாழ்க்கை  இரவினும்  இளிவெனச்
    சொல்லிய  வன்மை   தெளியக்  காட்டிச்
    சென்றனர்  வாழி  தோழி  யென்றும்
    கூற்றத்  தன்ன  கொலைவேல்  மறவர்
    ஆற்றிருந்  தல்கி  வழங்குநர்ச்  செகுத்த
    படுமுடை  பருந்துபார்த்  திருக்கும்
    நெடுமூ  திடைய  நீரில்  ஆறே.  (குறுந்: 283 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

    தலைவியின் அச்சத்தைக் கண்ட தோழி, ”தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அச்சம்விடு!” என்று அவளைத் தேற்றினாள். தலைவியும் ஒருவாறு தேறினாள்.

    சிலநாள் சென்றதும் தலைவியின் மனவுறுதியை மீண்டும் சோதிக்கவிரும்பிய தோழி, ”தையலே! தைரியமாகத்தானே இருக்கிறாய்?” என்று வினவினாள்.

    ”ஆம்” என்ற தலைவி, ”தோழி! (இரவில்) உதிக்கின்ற மதியம் கடலினிடத்தே காணப்பட்டாற்போல் ஒழுகுகின்ற வெள்ளிய அருவியினையுடைய, உயர்ந்த மலைநாடனாகிய நம் தலைவன் கதிரவனைப் போன்றவன். மூங்கிலைப் போன்ற என் பெருந்தோள்களோ நெருஞ்சி மலரைப் போன்றவையிற்றே” என்றாள்.

    எழுதரு  மதியங்  கடற்கண்  டாஅங்கு
    ஒழுகுவெள் ள ருவியோங்கு மலை நாடன்
    ஞாயி  றனையன்  தோழி
    நெருஞ்சி  யனையவென்  பெரும்பணைத்  தோளே.  (குறுந்: 315 – தும்பிசேர்கீரனார்)

    ”என்ன பெண்ணே புதிர்போடுகிறாய்! சற்றுப் புரியும்படியாகச் சொல்லேன்” என்றாள் தோழி.

    ”நெருஞ்சியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டாள் தலைவி.

    nerunji”ஆமாம்…பார்த்திருக்கிறேன். நம் பொய்கைக் கரையோரங்கூட நிறைய மண்டிக்கிடக்கிறதே. எத்தனையோமுறை அதன்முள் என் பாதத்தைப் பதம் பார்த்திருக்கிறதே!” என்றாள் தோழி வேடிக்கையாக.

    ”முள்ளைப் பார்த்திருக்கிறாய் சரி…அதன் பூவைப் பார்த்திருக்கிறாயோ? என்று  தலைவி கேட்கவும்,

    ”அதையும் பார்த்திருக்கிறேனே. மஞ்சள் வண்ணத்திலிருக்கும். அதற்கென்ன?” என்றாள் தோழி அலட்சியமாக.

    ”என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்? காலையில் கிழக்குத் திசையில் மலர்ந்து,  கதிரவன் இயங்கும் திசைநோக்கியே தானும் இயங்கி, மாலையில் கதிரவன் மறைந்தவுடன் தானும் கூம்பிவிடும் இயல்புடையது நெருஞ்சிப் பூ.  கதிரவனைக் காதலோடு சுற்றிவரும் சூரியகாந்திப் பூவை உலகறியும். ஆனால் அதையொத்த காதலொடு கதிரவனைச் சுற்றிவரும் நெருஞ்சிப் பூவைப் பலரறியவில்லை. என் ஆருயிர்த்தோழியான நீ உட்பட!” என்றாள் ஆதங்கத்தோடு தலைவி.

    ”உண்மைதான்! நெருஞ்சியின் அருமையை நான் அறியாதுதான் போனேன். வஞ்சியே… இப்போது உன்னால் அறிந்தேன்” என்று தலைவியை ஆரத்தழுவிக்கொண்டாள் தோழி.

    இந்தப் பாடல் அளவிற் சிறியதாயினும் பல்வேறு சிறப்புக்களை உடையது. இதில், அருவிக்குத் திங்களின் ஒளி உவமை; மலைக்குக் கடல் உவமை; தலைவனுக்குக் கதிரவன் உவமை; தலைவியின் உள்ளத்துக்கு நெருஞ்சி மலர் உவமை. மொத்தம் நான்கு உவமைகள் கொண்ட அரிய பாடலிது. ”உலகக் காதற்பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது இப்பாடல். ஒரு புதினத்திற்கான கற்பனை வளமும் கருத்தாழமும்  இந்நான்கு அடிகளுள் உள.” என்று இப்பாடலைப் பாராட்டுகிறார் தமிழண்ணல் அவர்கள்.

    அகநானூற்றுப் பாடலொன்றிலும் (அகம்: 336), ’வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல’ என்ற தொடரைக் காணமுடிகின்றது. புறம் 155-ஆவது பாடலும், ”பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு” என்ற தொடரைக் கையாண்டிருக்கக் காண்கிறோம். இவ்வாறு நெருஞ்சிக்கும் கதிரவனுக்குமுள்ள நெருங்கிய உறவை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியத்திலும், பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்களிலும், பிற்கால நூல்கள் சிலவற்றிலும் காணக் கிடைக்கின்றன. இயற்கையை நுண்ணிதின் நோக்கும் அன்றைய தமிழரின் நுழைபுலத்திற்கு இவை சான்றாகின்றன.

    நாள்கள் உருண்டோடிக்கொண்டே இருந்தன. வாரங்கள் மாதங்களாயின. தலைவன் திரும்பிவந்தபாடில்லை. தலைவியின் நெஞ்சுரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையாக ஆரம்பித்தது.

    தன் உள்ளத்து வேதனையைத் தனை நாடிவந்த தோழியிடம் செப்பலுற்றாள்…

    “தோழி! குறிய அடியுடைய கூதளஞ்செடி அசைகின்ற உயர்ந்த மலையின்கண்ணுள்ள பெரிய தேனடையைக் கண்ட முடவன், (நடந்து அத் தேனடையை சென்றடையக் கால்களின்மையால்) தன் உள்ளங்கையையே சிறுபாத்திரம்போல் குவித்து, அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கிமகிழ்வதுபோல், காதலர் என்னை மணந்து தண்ணளி செய்யாராயினும், அவரைப் பலமுறை பார்ப்பது உளத்துக்கு இனிதாயிருந்தது; இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்று கூறிக் கண்ணீர் உகுத்தாள்.

    குறுந்தாட்  கூதளி  யாடிய  நெடுவரைப்
    பெருந்தேன்  கண்ட  இருக்கை  முடவன்
    உட்கைச்  சிறுகுடை  கோலிக்  கீழிருந்து
    சுட்டுபு  நக்கி  யாங்குக்  காதலர்
    நல்கார்  நயவா  ராயினும்
    பல்காற்  காண்டலும்  உள்ளத்துக்  கினிதே.  (குறுந்: 60 – பரணர்)

    ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல்’ எனும் பழமொழியை இச் சங்கப்பாடல் நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றதன்றோ?

    ”பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணாது அமையல கண்” (1283) எனும் குறட்பாவும் இப்பாடற் கருத்தையே (உவமைகளின்றி) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது.

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    bangles

    தளிர்க்கர மழலைக்குத் தகவோடு வளையலிடும் பெரியவரையும், அணிஅணியாய்க் கண்ணைப் பறிக்கும் வளையல்களையும் கச்சிதமாய்ப் புகைப்படமெடுத்து வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், கவினான இந்தக் காட்சியைக் கவிதைப் போட்டிக்குத் தேர்தெடுத்துத் தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள்!

    பெண்களின் எழிலைப் பேரெழிலாக மாற்றும் மந்திரவித்தை கற்றவை  வளையல்கள். விலையுயர்ந்த பொன் வளையல்களைவிட விலைமலிவான கண்ணாடி வளையல்களும் இரப்பர் வளையல்களும் கூடுதல் பொலிவைக் கரங்களுக்குத் தரவல்லவை.

    பார்த்தவுடனேயே மனத்தில் வண்ண வண்ணக் கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் சிறப்பான புகைப்படம்! எனவே கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தயாராகியிருப்பார்கள் என எண்ணுகிறேன். 

    இதோ போட்டியை ஆரம்பித்துவிடுவோம்!

    *****

    ”ஆடம்பர விளக்கொளியில் மின்னும் பெருங்கடைகளில் வாங்கியணியும் வளையல்களைவிடக் கீற்றுவேய்ந்த எளிய திருவிழாக் கடைகளில் கிடைக்கும் வளையல்களின் அழகே அழகு!” என உளம் பூரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    எளிமை அழகு…

    அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
    அழகு விளக்குகள் ஒளியினிலே
    எடுத்துக் கொடுக்கும் காப்புகளின்
    எண்ணிலா வகையிலே இன்பமில்லை,
    தடுத்து வைத்தே கீத்துகட்டிய
    திருவிழா வளையல் கடையினிலே
    எடுத்துப் போட்டே அழகுபார்க்கும்
    எளிய வளையலுக் கீடிலையே…!

    ***** 

    வளையோசையின் சிறப்பை மெட்டியோசையோடு சேர்த்துக்கட்டித் தன் பாட்டில் ஒலிக்கவிட்டிருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    நன்மனத்துடன் வளையல்களை அணிவிக்கக் கையை நீட்டச்சொன்னார்
    கைகளின் அளவிற்குக்கேற்ப வளையலைப் பெண்ணிற்கு அணிவித்தார்
    என்றுமே வண்ணக் கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு
    இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!
    வண்ண வளையல்களைக் கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு
    அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு
    அந்த வளையோசையுடன் பிறர்க்குக் காண்பிப்பதில் பெருமையுண்டு
    வளையோசையும், மெட்டிஓசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!
    ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம் மகிழ்விக்கும்
    வளையோசையும், மெட்டி ஓசையுமே ஈர்க்கும் தன்மை அதிகம்
    பெண் வளையல்களை அணிவதன் காரணம்தான் ஏனோ?
    கணவன் தன்னை வளைய வளைய வருவதற்குத்தானோ?
    தாய்மையின் சிறப்பை வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே
    வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற தாயும் மகிழ்ச்சி அடைந்ததே
    தானும் அணிந்து, பிறர்க்கும் அவை வெகுமதியாய்க் கொடுக்கப்படுதே
    வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே!

     *****

    ”பெண்மணிகள் அணியும் அழகான அணிகலன் இந்த வளையல்; வாழ்ந்தால் இணையாகவே வாழவேண்டும் எனும் இணையற்ற பாடம் சொல்லும் அணியிது! மெட்டியும் கொலுசும் பயன்பாடின்றிப் பெட்டிக்குள் போனதுபோல் வளையலும் கைநழுவிப்போகும் காலம் வந்திடுமோ?” என்று கவலுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வளையலோ வளையல்..!
    நலமுடன் வாழமஞ்சள் குங்கும் வரிசையில்..

    நற்பொருளாய் நடுவே வளையலும் உண்டாம்.!

    மணிக்கட்டின் மேலே அழகு சேர்க்கும்..பெண்
    மணிகள் மட்டுமே அணியும் அணிகலனாம்.!

    வட்டமாய் அமைந்ததால் அது வளையலாகும்
    எட்டவிரட்டும் சக்தியால் எதிர்வினை யகலும்.!

    காதல் வலையில் மயங்கும் காளையர்கள்தன்
    காதலிக்குப் பரிசாக இதைக் கொடுப்பதுண்டு.!

    கலைநயம் கொண்ட தங்கம்வெள்ளி முத்தென
    வளையலும் வரலாறு பல சொல்லுமணிகலன்.!

    வளைந்து வருகின்ற வயிற்றின் ரகசியத்தை
    வளையல்கள் சேர்ந்து வருமுன் அறிவிக்கும்.!

    வகை வகையாய்ச் செய்தபல வண்ணங்களில்
    வளைகாப்பு எனும்பெயரில் ஓரிடத்தில் கூடும்.!

    வளையலின் உரசலில் எழும் மெல்லிசையை
    வயிற்றுளே இருக்கும் குழந்தை கேட்டுமகிழும்.!

    வாழ்ந்தால் ஜோடியாகத்தான் வாழ முடியுமென
    வாழ்வியல் பாடம் சொல்லும் அற்புதணிகலன்.!

    பத்திரமாக அணியும் வளையலுக்குக் புகழான
    உத்திரப்பிரதேச மாநிலத்தை உலகம் அறியும்.!

    அன்னமிடும் கையில் வளையலிருக்க வேணும்
    சொன்னது சாஸ்திரம்தான் யார் கேட்கிறார்கள்.?

    மெட்டியும் கொலுசும் காணோம்..வளையலும்
    எட்டியே தூரமாகக் கைநழுவிப் போய்விடுமோ.!

    *****

    ஆகா…எத்தனை வண்ண வண்ண வளையல்கள்! நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்! மாலைச்சூரியன்போல் மஞ்சள் வளையல்கள்! என வியக்கும் திரு. பழ.செல்வமாணிக்கம், வளையல்கள் பேசும் வன்னமொழி (வன்னம் – அழகு) கேளுங்கள்! வளத்தோடு வாழுங்கள்! என்று வாழ்த்துகிறார்.

    வண்ண வண்ண வளையல்கள்:

    வளையல் வியாபாரி வந்து விட்டார் வாருங்கள்!
     வண்ண வண்ண வளையல்கள் இங்கே பாருங்கள்!
    சின்னக் கை பிடித்து வளையல் மாட்டுகின்ற அழகைப்
    பாருங்கள்!
    நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்!
    கடலின் நிறம் கொண்ட ஊதா வளையல்கள்!
    கார் மேக நிறம் கொண்ட கறுப்பு வளையல்கள்!
    மாலைச் சூரியன் போல் மஞ்சள் வளையல்கள்!
    வானவில் நிறமுள்ள வண்ண வண்ண வளையல்கள்!
    பிள்ளை பிறந்தவுடன் கறுப்பு வளையல்கள்!
    பிள்ளளை கருவில் வளர்கையில் சீமந்த வளையல்கள்!
    ஆடிப் பூரத்தில் அம்மனுக்கும் வளையல்கள்!
    ஆதி முதல் அந்தம் வரை கூட வரும் வளையல்கள்!
    ஒரு முறை வளையலை அணிந்து பாருங்கள்!
    வளையல்கள் பேசுகின்ற அழகு மொழி கேளுங்கள்!
    வளை நிறை கை தரும் வளத்தோடு வாழுங்கள்!

    ***** 

    கிராமத்துத் திருவிழாவில், மக்கள் கூடிவாழும் ஒருவிழாவில், வண்ண வளையல்களை எண்ணம்போல் அணிந்துகொண்டு சுற்றிவரும் கிராமத்து மின்னலைப் பிடித்து நம்முன் நிறுத்துகிறார் திருமிகு மா. பத்ம பிரியா.

    கிராமத்து மின்னல் இவள்
    கிராமத்து திருவிழாவாம்
    கூடி வழும் ஒருவிழாவாம்
    பெரியவர் மகிழ்வுடனே
    சிறியவர் மகிழ்வு தான் சிந்தை மயக்குதடி
    பல்லாங்குழியாடி பாண்டி விளையாடி
    அல்லியிதழ் பறித்தாடி
    ஆலவிழுதுகளில் குதித்தாடி
    கூட்டாஞ்சோறு கதைபேசி
    குதூகலிக்கும் பிள்ளை மனம்
    பெண்ணவளின் கிள்ளைமொழி
    பேதமையைச் சுட்டுதடி

    கோயில் திருவிழாவில்
    கோதையவள் ஒய்யாரம்
    கோயில் சிலை ஊர்வலமாய்
    வீதியெல்லாம் சுற்றிவர
    கடை கடையாய் வலம் வரும்
    கன்னியவள் விழிகளிலே ஆனந்தம் பரவுமடி
    வண்ண வண்ண வளையல்களை
    வளைக்கரத்தில் அணிந்து கொண்டு
    விருந்தினர் கைப்பிடித்து
    விருந்திடுவாள் விந்தை மகள்
    பரிமாறும் அழகினிலே
    பந்தபாசம் மனம் நாடுமடி
    பூலோகம் சுற்றினாலும்
    பேரின்பம் கிட்டாது
    கண்டுகொண்டேன் கிராமத்தில்
    இயற்கையெனும் தாய்மடி.

    ***** 

    வண்ண வளையல்கள் கிறங்கவைக்கும் கவிதைகளை நமக்குப் பரிசாய்ப் பெற்றுத் தந்துள்ளன. கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

    வண்ண வண்ண வளையல்களை
    வகைவகையாய் அடுக்கி வைத்து
    பெண்ணவளின் கைப்பிடித்து யாவாரி
    அண்ண அண்ண நோகுதென்று
    அவள் இழுத்தும் போகுதென்று
    இன்னுமின்னும் போடுகிறான் யாவாரி

    அறியாப் பெண் அவள் கேட்க அதையே சாக்காய் வைத்து
    அடுக்கடுக்காய் போடுகையில் யாவாரி – அட
    புரியாமல் போடுறியே போதுமினி யென்று தந்தை
    பொக்கட்டைப் பார்த்துரைப்பான் தடுமாறி –

    ‘காப்புக் காப்புக்காப்பாய் எடுத்து அவள்
    கையினிலே மாட்டுகிறாய்
    சேப்புக் காலியாகுதடா தம்பி – ஊர்போய்
    சேர்ந்திடவும் காசுவேணும் தம்பி
    ஆப்பிழுத்த குரங்கானேன்
    அவளையிங்கு கூட்டிவந்து
    கூப்புகிறேன் கையுனக்குத் தம்பி – சேரும்
    கோடிபுண்ணியம் நிறுத்து தம்பி.‘

    சிறுவியாபாரிகளுக்குப் பெரிய வருமானம் எப்போதுமில்லை. ஆகவே, திருவிழாக் காலங்களில் தம் கடைகளுக்கு வருவோரிடம் தம் சரக்குகள் அனைத்தையும் விற்றுத் தீர்த்துவிடவேண்டும் எனும் பேரார்வம் அவர்களிடம் இருப்பது இயல்பே. அப்படித்தான் இந்த வியாபாரியும் தன் சேப்பு (pocket) காலியாகும்வரை சிறுமிக்குக் காப்புப் போடுகிறானே என்றஞ்சி, ”வளையல் போட்டது போதுமையா! நான் ஊர்போய்ச் சேரக் காசு வேணுமையா!” என்று கெஞ்சிநிற்கும் தந்தையைத் தன் கவிதையில் நகைச்சுவையாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகிறேன்.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (131)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22385220_1449644231756438_127407991_n (1)

    முத்துகுமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 6

    -மேகலா இராமமூர்த்தி

    காதலுக்காகத் தலைவன் சந்திக்கும் சங்கடங்களையெல்லாம் சங்க இலக்கியம் வாயிலாய் அறியும்போது, போர்க்களத்தில் செய்யும் வீரசாகசங்களைவிடக் காதற்களத்தில்தான் நம் ஆடவர் அதிகமாய்ச் சாகசங்களைச் செய்திருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பகற்குறிக்கண் காதலர் பொதுமக்கள் கண்ணிற்படும் அபாயத்தை யறிந்து பயந்தே தோழி இரவுக்குறி நயந்தாள். ஆனால் இரவுக்குறியோ மக்களால் நேரும் ஆபத்துக்களேயன்றி விலங்குகளாலும் அச்சந்தரு அடர்காட்டு வழிகளாலும் பகற்குறியினும் பலவாய ஆபத்துக்களைத் தருவதாயிற்று. இவைகுறித்துத் தலைவன் அஞ்சவில்லை என்றபோதும் தோழியும் தலைவியும் பெரிதும் அஞ்சத் தொடங்கினர்.

    இரவில் தன்னைச் சந்திக்கவரும் தலைவனுக்கு ஏதேனும் ஏதம் நேர்ந்துவிடுமோ என்று ஒவ்வொரு நாளும் அஞ்சிய தலைவி தோழியை நோக்கி,

    ”குன்றத்துக் கூகை (ஆந்தை) தன் பேடையைக் கூவியழைப்பினும், பலாமரத்தின் பெருங்கொம்பில் முசுக்கலை பாய்ந்து விளையாடினும் முன்பு அஞ்சுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தது என்னுள்ளம்; அது கழிந்தது! இப்போதோ நள்ளிரவில் நமை நாடிவரும் தலைவனின் நீண்ட வழிச்செலவு குறித்தும் அதிலுள்ள இன்னல்கள் குறித்துமே என் நெஞ்சு பெரிதும் அஞ்சி நிற்கின்றது” என்று ஆற்றாமையோடு புலம்பினாள்.

    குன்றக்  கூகை  குழறினும்  முன்றிற்
    பலவின்  இருஞ்சினைக்  கலைபாய்ந்  துகளினும்
    அஞ்சுமன்  அளித்தென்  நெஞ்சம்  இனியே
    ஆரிருட்  கங்குல்  அவர்வயிற்
    சாரல்  நீளிடைச்  செலவா  னாதே. (153 – கபிலர்)

    எப்படியேனும் தலைவனின் இரவுக்குறிக்கு(ம்) முற்றுப்புள்ளி வைத்துவிடுவதே நல்லது எனும் தலைவியின் உளவியலை இப்பாடல் மறைமுகமாய் உறைத்து நிற்கின்றது. தோழியின் எண்ணமும் அதுவேயாதலால், அடுத்தமுறை தலைவன் தலைவியைச் சந்திக்க இரவில் வரும்போது இதுகுறித்து அவனிடம் தீர்மானமாகப் பேசிவிடுவது எனும் முடிவுக்கு வந்தாள்.

    அவ்வாறே இரவில் தலைவியைக் காணவந்த தலைவனிடம் ஒருநாள்,  ”கரிய கண்களும், தாவுதலில் Monkeyதிறனுமுடைய ஆண்குரங்கு (கலை) இறந்துபட்டதென்று அறிந்த பெண்குரங்கானது (மந்தி), கணவனையிழந்து கைம்மையுற்று வாழவிரும்பாது, மரமேறுதல், தாவுதல் முதலிய தம்மினத்துக்குரிய தொழில்களை இன்னும் பழகாத பறழை (குரங்குக்குட்டி) தம் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்குமலையிற் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவ! நீர் வரும்வழியில் உமக்கு நேரும் ஏதங்களை எண்ணியெண்ணித் தலைவியும் நானும் பெரிதும் வருந்துகின்றோம். ஆதலால் தலைவியைச் சந்திக்க இனி நள்ளிரவில் வாரற்க!” என்றாள்.

    இப்பாடலில் பயின்றுவரும் ’கருங்கண் தாக்கலை’ எனும் தொடருக்குக் கருங்கண்களையுடைய தாவிய கலை என்று உரையாசிரியர் சிலரும், கரிய இருளின்கண் தாவிய கலை என்றும் வேறுசிலரும் பொருளுரைக்கின்றனர். தாவிய கலை இறந்துபோனதை நோக்குகையில் இருளில் தாவிய கலை என்பதே சாலப் பொருத்தமாய்ப் படுகின்றது.

    கருங்கண்  தாக்கலை  பெரும்பிறிது  உற்றேனக்
    கைம்மை
     உய்யாக்  காமர்  மந்தி
    கல்லா
     வன்பறழ்  கிளைமுதற்  சேர்த்தி
    ஓங்குவரை
     அடுக்கத்துப்  பாய்ந்துயிர்  செகுக்கும்
    சாரல்
     நாட  நடுநாள்
    வாரல்
     வாழியோ  வருந்துதும்  யாமே.  (குறுந்: 69 – கடுந்தோட் கரவீரனார்)

    தலைவன் உயிருக்கு ஊறு நேருமாயின் தலைவியும் உயிர்தரித்திருக்க மாட்டாள் என்பதனை விலங்குகளின் செயல் வாயிலாகத் தோழி விளக்குந் திறன் அவளின் நுண்மாண் நுழைபுலத்துக்குக் கட்டியம் கூறுகின்றது. நேரடியாகக் கூறவியலாத அமங்கலச் செய்திகளை இன்னொரு நிகழ்வின்மூலம் உள்ளுறையாகவும், இறைச்சியாகவும் ஏற்றிக்கூறுவதில் நம் சங்கப் புலவோர் சமர்த்தர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பதை இப்பாடலும் மெய்ப்பிக்கின்றது.

    அத்தோடு அன்றைய சமூகத்தில் கணவனை இழந்த மகளிர் பலர் இறந்த கணவனோடு தாமும் உடன்கட்டை ஏறுதலையே சிறந்த கற்பாக எண்ணியிருந்தமையும் இதன்வாயிலாய்ப் புலனாகின்றது. பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் இறந்தபோது அவனுடைய மனைவியும் அறிவிற்சிறந்த அரசியுமான பெருங்கோப்பெண்டு, கணவனை இழந்து கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழவிரும்பாது, “என் தலைவன் போனபின்னே வள்ளிதழ் விரிந்த தாமரையையுடைய நள்ளிரும் பொய்கையும், தீயும் தனக்கு ஒத்த தன்மையனவே” என்றுகூறித் தீப்பாய்ந்தமை ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    இச்சங்க மகளிரை இருபத்தோராம் நூற்றாண்டின் ’பகுத்தறிவு’ப் பார்வையோடு நாம் அணுகுதலும், விமரிசித்தலும் பொருத்தப்பாடுடையதன்று. அற்றை நாளைய வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தனர்; அவ்வளவே! இன்று அக்கொடிய வழக்கம் நடைமுறையில் இல்லை என்பதையறிந்து மகிழ்வோம்.

    மீண்டும் நம் பார்வையை நல்ல குறுந்தொகையில் பதிப்போம்…

    இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன், “அப்படியாயின் இனி நான் தலைவியைச் சந்திக்கவே வழியில்லையா? என்றான் ஏக்கத்தோடு.

    அவனை நோக்கி வருத்தப் புன்னகை புரிந்த தோழி, ”ஐய!
    இதுகுறித்து நீர் படும் வேதனையைவிடத் தலைவியின் மனவேதனை நனிபெரிது. மூங்கிலை வேலியாக உடைய, Jackfruit1வேரில் பலாக்குலைகளையுடைய மலை நாட! நின் சாரற்கண்ணே பலாவின் சிறுகொம்பில் பெரிய கனி பற்றுக்கோடு ஏதுமின்றிப் பரு(ழு)த்துத் தொங்குவதுபோல், எம் தலைவியின் உயிராகிய சிறிய கொம்பில் காமம் எனும் பெரிய கனி தொங்கிக்கொண்டிருக்கின்றது. இக்கனியை இன்னும் முதிரவிட்டால் அது கீழேவீழ்ந்து சிதைந்தழியும். அவ்வாறு நிகழாமுன்னர் அதன் செவ்வியறிந்து சுவைப்பதுதானே அறிவுடைமை! ஆகவே, தலைவியை விரைந்து வரைந்து கொள்க!” (வரைவு – திருமணம்) என்று கூறி நிறுத்தினாள்.

    பலாவில் வேர்ப்பலா, கிளைப் பலா என இருவகைகள் இருப்பதை இப்பாடல்வழி அறிகிறோம். ஒரேபாடலில் எத்தனைச் செய்திகளைப் பலாச்சுளைபோல் பக்குவமாய்ப் பொதிந்து வைத்துள்ளார் கபிலர்!

    வேரல்  வேலி  வேர்க்கோட்  பலவின்
    சாரல்  நாட  செவ்வியை  ஆகுமதி
    யாரஃ  தறிந்திசி  னோரே  சாரல்
    சிறுகோட்டுப்  பெரும்பழந்  தூங்கி  யாங்கிவள்
    உயிர்தவச்  சிறிது  காமமோ  பெரிதே.    (குறுந்: 18 – கபிலர்)
     

    ’பெரிதே காமம் உயிர்தவச் சிறிதே’ எனும் கலித்தொகை வரிகள்  (கலி – 137) இதனோடு ஒப்புநோக்கத்தக்கவை. 

    செவ்வியறிந்து காமத்தைத் துய்க்கவேண்டும் என்று (தோழி கூற்றாய்) கபிலர் இப்பாடலில் உரைப்பதுபோலவே நம் குறளாசானும்,

    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்
    (1289) என்று கூறிக் கபிலரின் கருத்துக்கு அரண் சேர்க்கிறார்.

    தலைவியை விரைவாய் மணந்துகொள்வது ஒன்றே அவளைப் பிரியாதிருப்பதற்கான நிரந்தர வழி என்ற தோழியின் மொழிகேட்ட தலைவன் அதுகுறித்துத் தீவிரமாய்ச் சிந்திக்கலானான்.

    அவன் எண்ணத்தை அறிந்துகொள்ளும் ஆவலில் தலைவியும் தோழியும் காத்திருந்தனர்; அவன்முகம் பார்த்திருந்தனர்!

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (130)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22386294_1449648895089305_585560320_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share