படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
வெண்துகிலென அருவியது பாய்ந்துவர, அவ்வருவி நீரில் குளித்த பாறைகள் பளிச்சென்று பளபளக்க, இவ்வெழிற் காட்சிகளிடையே மரத்தின்மீது ஏகாந்தமாய்ச் சாய்ந்திருக்கும் மனிதரை அழகுறப் படம்பிடித்து வந்திருக்கிறார் திரு. முத்துகுமார். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
இயற்கை அன்னையின் இன்ப அணைப்பினில் மயங்கிநிற்கும் வேளையிலே,
”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்குச்
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் அழகுகள் சமைத்தாய்” என்று நமதுள்ளம் துள்ளும்; ஆனந்தக்களி கொள்ளும்.
இந்த அழகின் சிரிப்பு நம் கவிஞர்களின் சிந்தனைக்கும் சேர்த்திடும் சிறப்பு எனும் நம்பிக்கையோடு அவர்களைக் கவிபாட அழைப்போம்!
*****
”தம்பி! நீ படுத்திருக்கும் இடம் உனக்குப் பாதுகாப்பானதில்லை; சறுக்கி விழுந்திடாதே; சுருக்காய் எழுந்திடு” என்று அன்போடு எச்சரிக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.
தம்பி கவனமடா சறுக்கி விழப் போகின்றாய்
ஆனை அடிசறுக்கி அதலபாதாளத்தில்
போனது போல் நீயும் பொறி கலங்க வீழ்ந்திட்டால்
முட்டுக்கால் பேந்த மொடமாய்ப் பொழப்பின்றி
கட்டிலில் வீழ்ந்து கவலைமிக வுற்று
துட்டுக்கலையும் துயர்சேர எப்போதும்
தட்டுப்பாட்டோடு தவிக்கு நிலை வரலாம்
மெல்ல இறங்கு வேண்டாமிவ் வீண்வேலை
கல்லெல்லாம் ஈரம் கவனம்.
*****
”மரத்தின்மேல் மல்லாந்துபடுத்த கரணியம் என்ன தம்பி? கரணம் தப்பினால் மரணம் என்பதை நீ அறியாயோ? அலட்சியத்தை விடுத்து இலட்சியத்தில் உறுதிகொண்டு உலகை வெல்வாய்!” என்று படுத்திருக்கும் இளைஞனை எழுச்சிகொள வைக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.
எழுச்சி கொள் தம்பி:
வனம் பூமித்தாய் தந்த சீதனம் தம்பி!
அருவி ஆண்டவனின் அருட்கொடை தம்பி!
மரங்கள் பூமித்தாய் பெற்றெடுத்த அழகுப் பெண்கள் தம்பி!
இத்தனையும் ரசிப்பதற்கு இப்பிறவி போதாது தம்பி!
இளங்கன்று பயமறியாது, நான் அறிவேன் தம்பி!
காட்டாறு கிணற்றுக்கள் அடங்காது,
நான் அறிவேன் தம்பி!
ஏகாந்தம் இனிமை தரும்,
நான் அறிவேன் தம்பி!
மரத்தின் மேல் ஏன் படுத்தாய் தம்பி!
கரணம் தப்பினால் மரணம், எச்சரிக்கை தம்பி!
அச்சமின்மை ஆண்மைக்கு அழகு,
நான் அறிவேன் தம்பி!
விவேகம் இல்லா வீரம் விபரீதம் தம்பி!
நான் உரைக்கும் வார்த்தைகளை
செவிமடுப்பாய் தம்பி!
பாரதியின் கனவுகளை மறந்தாயோ தம்பி!
அய்யா கலாம் சொன்னதை
நீ மறந்தாயோ தம்பி!
உன் லட்சியத்தைக் கனவாக்கு தம்பி!
சாதனைகள் படைத்திட
உடனே எழுந்திடுவாய் தம்பி!
நாளைய உலகம் இருக்குது, இளைஞர்களை நம்பி!
பாரதம், பார் புகழ வளரட்டும் தம்பி!
*****
”நிலையிலா மனிதா…மரத்தின்மேல் துஞ்சிடாதே! நீ கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சிடாதே!” என்று அக்கறையோடு அறிவுரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மலை மேலே…
மலையினில் பெய்த மழையதுதான்
மகிழ்ந்தே ஆறாய் ஓடியபின்,
மலையி லிருந்தே குதித்தாலும்
மகிழ்ந்தே நாமும் அருவியென்போம்,
நிலையில் கொஞ்சம் மாறிடினும்
நீரில் மாற்றம் ஏதுமில்லை,
நிலையிலா மனிதனே நெஞ்சில்கொள்
நீவிழ எதுவும் மிஞ்சிடாதே…!
*****
”கண்விழிக்கும்போதே கணினியைக் கையில்கட்டிக்கொண்டு விழிக்கவேண்டிய அவசர யுகத்தில், இயற்கையோடு இயைந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே மனம் பெருமகிழ்வு கொள்கிறது” என்று எதார்த்தம் பேசும் கவிதையைத் தந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.
எந்திர வாழ்க்கை...!
காலை எழும்போதே கணிணியைக் கையில்
……….கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.!
மாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்
……….மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.!
வேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக
……….வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.!
களைப்பாற நேரமில்லை..! தகுந்த இடமில்லை..
……….கண்டதெலாம் நாகரிக நகரமாகிப் போனதாலே.!
சற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்
……….சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.!
பற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது
……….படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.!
கற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்
……….கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.!
எற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென
……….எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.!
உதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்
……….உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.!
அதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை
……….ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.!
மதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை
……….மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.!
இயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா
……….இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.!
*****
நல்ல சிந்தனைகளை வழக்கம்போலவே தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டுக்கள்!
இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
எனக்குள்ளும் இருக்கின்றான்!
மனம் பறக்கிறது
மரக்கிளையில் சாய்ந்த
மறுகணம்
மனம் பறக்கிறது….
கவலைகள்
ரணங்கள்
இயலாமைகள்
தவிப்புகள்
அனைத்தையும் மறந்து
ஆனந்த லயத்தில்
மனம் பறக்கிறது
காட்டாற்று
வெள்ளம் கண்ட
வேளையில்தான்
ஆரவாரமிக்க மனம்
அமைதியை
அரவணைத்தது
பெரும் பாறைகளைவிடப்
பாறையாய் இருந்த மனம்
காட்டாற்று வெள்ளத்தைப்போல
கருணையை உள்ளத்தில் கொண்டு
காலங்கள் பின்னோக்கி ஒடுகின்றது
கண்ணீரைக்
கண்கள் விரும்பிச் சூடுகின்றது
இசைக்கின்ற ஆறு
இனிய மரங்கள்
ஈரக்காற்று
ரசித்த பிறகுதான்
தெரிகிறது…
எனக்குள்ளும் இருக்கின்றான்
இறைவன்!
வெள்ளத்தின் ஓட்டம்
தீர்ந்தது
உள்ளத்தின் வாட்டம்
இயற்கையை
தரிசிக்க வந்தவனைத்
தன்னை,
தன்னிலையைத் தானே
தரிசிக்க செய்தது இயற்கை!
கவலை எனும் சிலந்தி வலை மனித மனத்தைச் சுற்றிப் பின்னி, அதனைத் துன்புறுத்தும் வேளையில், கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பாய் விரிந்துகிடக்கும் இயற்கையொன்றே அம்மனத்துக்கு மகிழ்ச்சியெனும் ஒத்தடத்தை நல்கவல்லது. பாய்ந்துவரும் ஆற்றுவெள்ளம் மகிழ்ச்சிவெள்ளத்தை மனித உள்ளத்திலும் ஊற்றெடுக்க வைப்பது எனும் உண்மையைத் தன் கவிதையில் உரக்கச் சொல்லியிருக்கும் திரு. வி. மணிகண்டனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.