குறுந்தொகை நறுந்தேன் – 9
-மேகலா இராமமூர்த்தி
தலைவியின் எழில்நலத்தையும் குடிப்பெருமையையும் அறிந்த அவ்வூரில்வாழும் வேறொரு குடும்பம் தலைவியை மணம்பேச அவள் இல்லத்துக்கு வந்துவிட்டது. மேலும் சோதனையாக மணம் பேசவந்த அந்தக் குடும்பத்தையும், மணமகனையும் தலைவியின் தந்தைக்கும் தமையன்மார்க்கும் பிடித்தும் போய்விட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக மணநாள் பற்றிய பேச்சுவார்த்தையில் இருவீட்டாரும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
தன்னுளம் மகிழத் தலைவனொடு தனக்குக் காதற் கடிமணம் நிகழும் என்று தலைவி கனவுகண்டிருக்க, நொதுமலர் (அயலார்) மணம்பேசவந்த நிகழ்வு அப்பூங்கொடியாளை வாடச் செய்தது. அவ்வேளை பார்த்துத் ”தலைவனின் நட்பு பொய்த்துவிடுமோ? அயல்மணம் உனக்கு வாய்த்துவிடுமோ?” எனத் தோழியும் அடுக்கடுக்காய் ஐயங்களை எழுப்ப, ”தைரியத்தை இழக்கலாகாது” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்ட தலைவி,
”வலைஞன் குளத்தே மீனுக்கு வலைவிரிக்க, அதில் நீர்நாய் அகப்பட்டால் அதனால் அவனுக்கென்ன பயன்? அதுபோல் நொதுமலர் என்னை வரைய முற்படுவதும் பயனின்றி முடியும். தலைவன் நிச்சயம் எனைவந்து மணப்பான்” என்ற தன் நம்பிக்கையைத் தோழியிடம் வெளிப்படுத்தினாள் தலைவி.
காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங்கயத் திட்ட
மீன்வலை மாப்பட் டாஅங்கு
இதுமற் றெவனோ நொதுமலர் தலையே. (குறுந்: 171 – பூங்கணுத்திரையார்)
”பெண்ணே! உன் நெஞ்சுரம் வெல்லவேண்டும்; தலைவன் உன்னைக் கரம்பற்றிச் செல்லவேண்டும் என்பதே என் வேணவா. ஆயினும் சில நேரங்களில் நாமொன்று நினைக்க வேறொன்று நிகழ்ந்துவிடுவதும் உண்டே! அதுகுறித்துத்தான் கவல்கிறேன்” என்றாள் தோழி.
”அவ்வாறு ஒன்றும் நடவாது; நடக்கவும் விடமாட்டேன்” என்று உறுதிபட மொழிந்த தலைமகள்,
பலாமரத்திற் பழங்களைத் தின்னக் கூட்டமாகத்
திரண்டிருக்கும் ஆண் குரங்குகள், சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய வேட்டுவனது குறிபிழையாச் செம்மையுடைய அம்புகளுக்கு அஞ்சி, போர்க்களத்தை அடைந்த குதிரையைப் போல மேலெழுந்து சாரலிலுள்ள பெரிய மூங்கிலினது நீண்டகோல் அசையுமாறு பாய்கின்ற பெரிய மலையடுக்குகளையுடைய தலைவன், அன்றிருந்ததைப் போலவே மாறுபாடின்றி எப்போதுமிருக்கும் நட்பினையுடையவன். அங்ஙனம் இருப்பவும், ஆரவாரமிக்க இந்த ஊரானது என் மணங்குறித்து வந்த புதியவர்களை உடையதாயிருக்கின்றது.” என்றாள் தலைவி. அவள் சொற்களில் எள்ளல் துள்ளியது!
பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்
பெருவரை யடுக்கத்துக் கிழவ னென்றும்
அன்றை யன்ன நட்பினன்
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. (குறுந்: 385 – கபிலர்)
கலைகள் பாய்வதால் வளைந்து நிமிரும் மூங்கிலானது போர்க்களத்தில் குதிரைகள் பொங்கிப் பாய்தலுக்கு ஈண்டு உவமையாய்க் கூறப்பட்டுள்ளது. கானவன் அம்பைக் குறிதப்பாமல் எய்யும்வேளையில் குரங்குகள் எப்படிப் பாய்ந்தோடுமோ அதுபோல் தலைவன் தன்னை மணம்பேச வரும்போது தன்னை வரைந்துகொள்ள விரும்பும் இப்புதியவர்களும் விரைந்தோடுவர் எனும் உள்ளுறை தலைவியின் சொல்லில் ஒளிந்திருக்கின்றது.
மூங்கில் வளைந்து நிமிர்வதற்குக் குதிரை துள்ளியெழுவதை மேற்கண்ட குறுந்தொகைப் பாடலேயன்றி, குறுந்தொகை 74ஆம் பாடலும், புறம் 302ஆம் பாடலுங்கூட உவமையாய்ச் சுட்டியிருப்பது ’சான்றோர் சான்றோர் பாலர் ஆப’ எனும் நன்மொழிக்குச் சான்றாகின்றது.
”விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்….” (குறுந். 74:1-2)
”வெடிவேய் கொள்வது போல வோடித்
தாவுபு உகளு மாவே… (புறம்: 302: 1-2)
தோழியிடம் வீரவசனம் பேசிவிட்டாளே தவிர எங்கே தனக்கு அயல்மணம் நிகழ்ந்துவிடுமோ எனும் விசனம் தலைவிக்கும் உள்ளூற இருக்கத்தான் செய்தது.தலைவியின் மனத்திண்மையையும், தலைவன்மீது அவள் கொண்டிருக்கும் உண்மையான நம்பிக்கையையும் உளமாரப் பாராட்டினாள் தோழி.
இதற்கிடையில் பொருள்தேட மொழிபெயர்தேயம் (வேற்றுமொழி பேசும் பகுதி) சென்ற தலைவன் வேண்டிய பொருளைத் திரட்டிக்கொண்டு ஊர்திரும்ப ஆயத்தமானான். தொடலைக் குறுந்தொடியாளை உடனே காணவேண்டும் எனும் வேட்கை அந்த விடலையைப் பிடர்பிடித்து உந்திற்று. தேரேறினான். விரைந்து; தேர்ப்பாகன் தேரைச் செலுத்த, தலைவனோ தன் உள்ளத்தைத் தலைவிபால் செலுத்தலானான்.
அன்றொரு நாள் இரவுக்குறியில் தன்னைக் காணவந்த தலைவி, மாறுபடு வலிமையுடைய செவ்வேல் மலையனின் (மலையமான் திருமுடிக்காரி) முள்ளூர்க் கானத்தில் வீசும் நறுமணத்தைப்போல் மணம்வீசும்படி தன்னருகில் வந்து மகிழ்ந்திருந்ததையும், பின்னர்ப் பொழுதுபுலரும் வைகறையில் தலையில் தான் சூட்டியிருந்த விரவுமலர்களைக் களைந்துவிட்டு, நறிய கூந்தலில் நெய்தடவி, தலைவனை அறியாதவள்போல் காட்டிக்கொண்டு, தன் வீட்டாரின் இயல்புக்கேற்ப மாறிய கள்ளத்தனத்தையும் மீண்டும் இப்போது நினைவுகூர்ந்தான். அவன் முகத்தில் குறுநகை அரும்பியது.
இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துடுப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோர் அன்னள் வைகறை யானே. (குறுந்: 312 – கபிலர்)
தலைவனுக்கேற்றபடி இரவிலும், தன் சுற்றத்தாருக்கேற்றபடி பகலிலும் தன்னியல்பை மாற்றிக்கொள்ளும் தலைவியை ’இரண்டறி கள்வி’ என்று தலைவன் குறித்தது சரிதானே?
”ஐய! தங்களுக்கு அட்டியில்லையேல் தலைவியின் ஊர்பற்றி எனக்கும் சிறிது அறியத் தாருங்களேன்!” எனும் பாகனின் குரல் கனவுலகில் காதலியோடு மனங்கலந்திருந்த தலைவனை நனவுலக்கு மீட்டுவந்தது.
”அதற்கென்ன…கேள் பாக! பெரியவர்களுக்கு நீரொடு தானம் செய்து எஞ்சியபொருளையும், யாவர்க்கும் தடையில்லாச் சோற்றையும் உடைய, வரிசையான, திரண்ட குறிய வளைகளை அணிந்த தலைவியின் தந்தை ஊரானது, கவலைக் கிழங்கைக் கல்லியதனால் உண்டான அகன்ற வாயுடைய சிறிய குழி, கொன்றையினது ஒளிபொருந்திய மலர் பரவப்பெற்று செல்வர்க்குரிய பொன்வைக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றமுடைய, கார்காலத்தை ஏற்றெதிர்கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது” என்றான்.
தலைவியை மணந்துகொள்ளப் போகிறோம் எனும் பெருமிதத்தில் தலைவியின் தந்தை ஊரை (அதாவது தலைவியின் ஊரை) உவகைபொங்கப் பாகனுக்கு விளக்குகின்றான் தலைவன்.
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவின் அதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே. ( குறுந்: 233 – பேயன்)
கொன்றை மலரைப் பொற்காசோடு உவமித்தலை,
“….காசி னன்ன போதீன் கொன்றை” (குறுந். 148:3) எனும் மற்றொரு குறுந்தொகைப் பாடலிலும் நாம் காணலாம்.
முல்லை நிலத்திலுள்ள தலைவியின் ஊரெழிலையும், அவள் தந்தையின் வள்ளன்மையையும் அறிந்து வியந்த பாகன், அவ்வூரின்கண்ணே கவலைக்கிழங்குகள் அகழ்ந்த குழிகளில் நிறைந்திருக்கும் பொன்னிறக் கொன்றைமலர்கள், செல்வர்வீட்டுப் பேழையில் பெய்துவைத்த பொற்காசுகளை ஒத்திருக்கும் எனும் தலைவனின் கருத்தைத் தன்னுள் இரசித்தபடியே தேரைச் செலுத்த, வளியைக் கிழித்தவண்ணம் விரைந்துகொண்டிருந்தன புரவிகள்.
[தொடரும்]
