படக்கவிதைப் போட்டி (133)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
கள்ளமில்லா சிரிப்புடன் ஆட்டு கிடாவிற்கு தீனி காண்பிக்கின்றாய்
அதுவோ உன்னை கண்டும் காணாமல் உன்னருகில் நிற்கின்றதே
உன் கையில் உள்ள இலைத்தழையை சாப்பிட தயங்குதே
தன்னை வெட்டுபவனை மட்டும் முழுமையாய் நம்புதே !
ஆட்டு மந்தை போல் செல்லாதே சின்னங்சிறு சிறுவனே
உனக்கென பாதையை நீயே வகுத்து முன்னேறு சிறுவனே
ஆடு உன் அருகில் வாராமல் எங்கோ நோக்குதே
நீ அருகில் வந்து கொடுப்பாய் என்று எதிர்பார்க்குதே !
உயிர்வதை கூடாது என்று சொல்கிறது ஒரு கூட்டம்
கொன்ற பாவம் தின்ன போகும் என அலையுது மற்றொரு கூட்டம்
என்னதான் உரைத்தாலும், மாறாத சில மனிதர்களின் எண்ணம்
பழி, பாவங்களுக்கு என்றுமே அஞ்சாத மனித ஜென்மம்!
சிறுவனே, அழகிய சிரிப்புடன் நீ அதன் உணவை காட்டி நிற்கின்றாய்
நாளை, இறப்பது தெரிந்தும், அந்த ஆடு பார்க்கவில்லை என்கிறாய்
துன்பம் வரும்போது சிரிக்கவும் என சொன்னவனை நினைக்கின்றாயா
மனதுள் அழுதுகொண்டே சிரிக்கும் ஆட்டினை பார்த்து நீ சிரிக்கின்றாயா!
ரா.பார்த்தசாரதி
மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நான்
இன்றைய பொழுது எனக்கிப்
பிஞ்சுக் குழந்தையுடன்,
இனிமையாய்க் கழிகிறது
குழந்தைக்குத் தெரியாது என்னைக்
கொல்லப் போகிறார்களென்று
கள்ள மில்லா அவன்
பிஞ்சு மனம் அதை அறிந்தால்….!
நெஞ்சுடைந்து போவான்.
கையில் கிடைத்ததை மகிழ்வோடு
கொண்டு வந்து நீட்டுகிறான்.
வாங்கிக் கொள்வதுதான்
அவனை மகிழ்விக்கும்.
நாளை நடக்கப்போவதையெண்ணி
இன்றைய வாழ்வின் மகிழ்ச்சிகளை
தூக்கியெறிய முடியுமா?
குழந்தையோடு குதூகலமாய்
கழிகின்றன என் கணப் பொழுதுகள்.
வாழும் போது மகிழ்வாக
வாழ்ந்து விடவேண்டும்.
அப்போதுதான், போகும்போது,
மகிழ்வாக வாழ்ந்துவிட்ட
திருப்தியாவது இருக்கும்.
கொலைக்களத்திற்குக் கூட்டிப் போகும்போது –என்
குழந்தை நண்பனுக்குத் தெரியக் கூடாது
ஏனழைத்துச் செல்கிறார்களென்று.
அவன் முகத்தில் மலரும் புன்சிரிப்பு
என்றும் மாறாதிருக்கட்டும்.
பிள்ளை மனது…
கள்ள மில்லாப் பிள்ளைக்கும்
காட்டில் மேயும் ஆட்டுக்கும்
வெள்ளை மனது என்பதாலே
வேறே யெதுவும் தெரிவதில்லை,
கொள்ளை யடிக்கும் மனிதனவன்
கொடுக்க மறந்த உணவுதனைப்
பிள்ளை யெடுத்துக் கொடுக்கையிலே
பெரிதும் மகிழ்வர் இருவருமே…!
-செண்பக ஜெகதீசன்…
அறியா பிள்ளை மனம்
உயர்திணையா அஃறிணையா அறியா பிள்ளை மனம்
உணவிடும் அன்னையாக
கண்ணில் வழியும் கருணை
கடவுளின் காட்சியாக
மழலையின் கரங்கள் நீளுவது
மழலையிடம் அல்ல
பேதமறந்த உயிரின நேயம்
பிள்ளைமனத்திடம் மட்டுமே
தேசம் எதுவென்றாலும்
பாசம் என்பது உலகப்பொதுமறையாக
அன்பிற்குத் தெரியாது உயர்வு தாழ்வு
அன்பிற்குப் புரிதல் மொழி புன்னகை மட்டுமே
குழந்தை உலகுக்கு
கற்றுக்கொடுக்க காத்திருக்கும் உள்ளங்களே!
இரை தந்து இரையாக்கும் மானுட இயல்பை
தயவு செய்து கற்றுத் தராதீர்
அறியா பிள்ளை மனம்
அவர்இயல்பில் முளைக்கட்டுமே.
அம்பியும்.!….ஆட்டுக்குட்டியும்
அழகான ஆட்டுக்குட்டி அமைதியுடன் இருக்கும்..
……….அதனருகினிலே நீபயமின்றி விளையாடலாம் அம்பி.!
விழலுக்குப் பாடுபட்டு விளைநிலமாக்கி உழைக்கும்..
……….உழவனுக்கு…அதன்சாணம்கூட நல்லுரமாகும் அம்பி.!
பழம்கனி கொடுக்கும் மரம்செடியதன் இலைதின்னும்..
……….பாருக்குப் பயனுண்டாமதைப் பற்றுடன்வளர் அம்பி.!
எழும் குளிருக்கிதமான கம்பளியென உடலங்கம்..
……….எல்லாமே பயனுறும் விலங்குயிராகும் அதுதம்பி.!
வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களோடு நல்லுறவாடி..
……….விரும்பும் விலங்கினமாக வீட்டினருகே வளருமாம்.!
கூட்டணியாய் சேர்ந்துதன் குடும்பம் பெருக்குமொரு..
……….கால்நடையாவாய் வாஞ்சையோடு வளர்ப்பதற்கே.!
நாட்டம் கொண்டு நாளுமாசையுடன் வளருமுன்னை..
……….வெட்டும் அறுவாளுக்கே உன்கொம்புதான் பிடியாகும்.!
ஆட்டுக்கு உணவாவதெலாம் சைவம்தான் எனினும்..
……….அம்மனிதனுக்கே ஆடு உணவாகியது அசைவமாகும்.!
உணவுக்காக ஓடுமுயிர்களில் மனிதனும் உண்டாம்..
……….உணவுக்காக மட்டுமே உனையன்போடு வளர்ப்பார்.!
பணம் சம்பாதிக்க இவ்வுலகில் பலவழியுண்டாமதிலே..
……….பாங்காகயுனை விற்றதில் பெரும்லாபம் கண்டிடுவார்.!
மணமுடித்த கையுடனே மாந்தருக்கு விருந்துண்டாம்..
……….மணக்கு மசாலாக்கறியாக இலையில்நீ வீற்றிருப்பாய்.!
குணமிருப்பவரைத்தான் இவ்வுலகம் மதிக்கும் நீயோ..
……….தணலில் வெந்தால்தானுன் விலைமதிப்பு உயருமன்றோ.!
சக்தியின்மகனே உன்னிடத்தில் சாதுரியம் கண்டதாலே..
……….சக தோழனாக்கி தனக்கேயுன்னை வாகனமாக்கினான்.!
சக்திவேண்டும் தம்முடலில் எனுமெண்ணம் கொண்டே..
……….சாமானியர் உனையுண்டு பலசாலியாகவே நினைப்பார்.!
முக்திக்கு வழிகிடைக்குமென்று மூடர்கள் சொன்னதால்..
……….கத்திக்கு இரையாகி மடிவதேயுந்தன் தலையெழுத்தோ.!
பக்திக்கு பலியாவதையும்….பசிக்கு உணவாவதையும்..
……….பெருமான் முருகனே வந்தாலும் தடுக்கவும் முடியுமோ.!
புன்னகையை பத்திரப்படுத்து கண்ணா..!
————————
கொம்புமில்லை வாலுமில்லை
பயந்து ஒதுங்க தேவை இல்லை
குட்டி குட்டி ஆட்டுக்குட்டிகளை
பெற்றெடுத்த பொட்டச்சி நானடா !
என்னை மீறிய தாய் பாசத்தில்
உன்னை அள்ளி அணைக்க தோணுதடா….
மனித பிறவி எடுத்து பாவம் செய்தாயே
உன் நிலை கண்டு வருந்த செய்தாயே….
நான் கண்ட உன் பிறவியின்
இழிநிலையை
இன்றைய நிலையில்
சொல்கிறேன் கேளடா கண்ணா..!
பிடித்த வலியை பொறுத்துக்கொண்டு
உந்தி பெற்றெடுக்கும் சுகப்பிரசவத்தினை
வயித்தைக் கிழித்து உடலை தேய்த்து
காசு பண்ண திட்டமிடும் கூட்டம் இது
பணத்திற்காக நோயை வளர்க்கும்
படித்த மேதைகள்
வரிசையில் நின்று அழையுதடா…..!
ஏட்டுக்கல்வியும் பாட்டுக்கல்வியும் போய்
ஏசி அறைதன்னில் ஒளிப்பாடம் ஒலிக்குதிங்கே
பள்ளிக்கூடங்களெல்லாம் பணத்திற்கு விலைபோக
அடித்தட்டு மக்களுக்கு
அடிவயிறு கலங்குதடா….
பட்டப் படிப்பு படிக்க வைப்பதற்குள்
பாதி உசுரு போகுதடா !
வேலைக்கு போகுமிடத்தில்
கட்டுப்பாடும் கலாசாரமும்
சீர்கெட்டுப்போய்
புதிய இலக்கணம்
புகுத்திக்கொண்டு..
கார்ப்ரேட் நிறுவனங்கள்
நம்மீது மோகங்கொண்டு
பணத்தாசை காட்டியதால்
மகுடிக்கு ஆடும்
பாம்புகளாய்
மயக்கநிலையில் அலைகின்றனர்
இன்றைய இளைஞர் கூட்டம்தானே டா..!
பொறுப்பற்ற மனிதர்களெல்லாம்
தலைவர்களென்று உரைத்துக்கொண்டு
பொதுக்கூட்டம் நடத்தி
பைத்தியாகாரத்தனம் செய்கிறதடா..!
ஊழல் செய்யும் அதிகாரிகள்
உத்தமர் வேஷம் போட்டுக்கொண்டு
ஊரை ஏமாற்றுவதால்
உண்மையான அதிகாரிகளின்
நேர்மை கேள்விக்குறி ஆகுதடா..!
எதிர்த்து நின்று போராட
துணிவின்றி
கருத்தை மட்டும் சொல்லிக்கொண்டு
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கும்
இழிநிலை மாந்தர்களடா..!
இந்த ஒழுக்கமற்ற சமுதாயம்
ஒன்றுக்கும் உதவாமல் போகுதடா..!
ஜாதி வெறிப்பிடித்து
தரங்கெட்ட கூட்டங்கள்
கெளரவக் கொலைகள்
செய்வதை
பெருமை என அலையுதுடா.!
பொருத்தம் பார்த்து
திருமணம் செய்தாலும்
திருத்தங் கொண்டு
வாழ தெரியாமல்
விவாகரத்து கோரி
நீதிமன்ற வாசலில்
நீளுகிறதடா பெருங்கூட்டம்.
இப்படியாக இப்படியாக
எண்ணிக்கை இல்லாமல்
சொல்லிக்கொண்டே போகலாம்.
மனிதர்களை குறித்து
சொல்ல சொல்ல
தீராது என் கோபமடா..!
ஐந்தறிவு பதர்கள் நாங்கள்
கூட்டமாய் இருக்கின்றோம்.
ஓட்டமாய் ஓடுகிறோம்
ஒற்றுமையாய் வாழ்கிறோம்.
கட்டளைக்கு கட்டுப்படுகிறோம்.
வளர்த்த மனிதனுக்கு
விசுவாசமாய்
அன்பு அடிமையாய் இருந்தும்
கடைசியில் கசாப்பு கடைகளில்
மனித உண்ணும் உணவுக்காக
விற்கப்பட்டு இறந்தும் போகிறோம்.
களிறைப் போல
இருந்தாலும்
இறந்தாலும்
ஆயிரம் பொன் சேவகர்களடா நாங்கள்..!
உன் ஒட்டு மொத்த சமூகமும்
பணத்திற்கு அடிமைகளாய்
பண்பின்றி திரிகிறதடா
பாசத்தை கூறுப்போட்டு
பட்டியிலிட்டு பிரிக்கிறதடா..!
கண்ணா.. என் அழகு மன்னா..!
உன் அழகு சிரிப்பை
உன் மழலை பூரிப்பை
படம் போட்டு
பத்திரமாய் வைத்துக்கொள்ளடா..!
பெரியவனாய் நீ வளரும் போது
இக்கேடு கெட்ட
மனித கூட்டத்தில்
கள்ளம் கபடமற்ற
உன் சிரிப்பு
உன்னிடத்தில் நிலைக்காதடா…!
—-
– சொல்லின் செல்வி.