செண்பக ஜெகதீசன்

 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்த லரிது.

-திருக்குறள் -29(நீத்தார் பெருமை)

 

புதுக் கவிதையில்…

 

துறவு முதலாய

நற்பண்புகளாம் மலைமீது நிற்கும்

பெரியோர் கொள்ளும் சினம்,

கணப்பொழுதுதானென்றாலும்

ஆற்றல் அதிகமென்பதால்,

அதற்கு ஆளானோரால்

தடுக்கமுடியாது அதனை…!

 

குறும்பாவில்…

 

நற்பண்பெனும் மலையில் நிற்கும்

பெரியோர்தம் கோபம் கணப்பொழுதுதானென்றாலும்,

தடுக்கமுடியாது அதனை யாராலும்…!

 

மரபுக் கவிதையில்…

 

துறவு போன்ற பண்புகளாம்

தூய மலையில் நின்றிருக்கும்

அறவோர் கொள்ளும் சினமதுதான்

அதிக நேரம் நிலைப்பதில்லை,

சிறிது கால மென்றாலும்

சினமதை யங்கே தடுத்தேதான்

நிறுத்தி நலம்பெற யாராலும்

நினைத்துப் பார்க்கவும் முடியாதே…!

 

லிமரைக்கூ..

 

நற்குணப் பெரியோர்தம் சினம்,

சிலகணம்தானெனிலும் தடுத்திட முடியாது,

தாக்கியழிக்கும் தக்கோர் இனம்…!

 

கிராமிய பாணியில்…

 

நெலைக்காது கோவம் நெலைக்காது

நல்லகொணம் நெறஞ்ச

பெரியவங்க கோவம் நெலைக்காது..

 

அது

கொஞ்சநேரக் கோவமுண்ணாலும்

அதத்தடுக்க யாராலயும் முடியாதே..

 

அதுக்குக் காரணமானவன

தாக்காம உட்டுடாதே,

அவனாலயும் தடுக்கமுடியாதே..

 

நெலைக்காது கோவம் நெலைக்காது

நல்லகொணம் நெறஞ்ச

பெரியவங்க கோவம் நெலைக்காது…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *