நாளைக்குப் பண்ணலாமே!

நலம்-1
“நாளை என்பது இன்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் தினம்!”
இப்படி வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.

ஒத்திப்போடும் தன்மை பலருக்கும் இருப்பதால், அதுதான் சரி என்பதுபோல் ஆகிவிட்டது.
இக்குணம் ஏன் ஏற்படுகிறது?

சோம்பலும், எது அவசியம் என்று புரிந்துகொள்ளாததும் ஒரு முக்கிய காரணம்.

செய்யத் துணிவில்லாததை, `பிறகு பார்த்துக்கொள்ளலாம்!’ என்று அலட்சியப்படுத்துகிறோம். நாம் விரும்பாதவர்களைச் சந்திப்பதை ஒத்திப்போடுவதும் இதனால்தான்.
சில நாட்களில் ஒரே சமயத்தில் பல வேலைகள் காத்திருக்கும். எங்கு ஆரம்பிப்பது என்று புரியாது, எதையும் ஆரம்பிக்கத் துணிவின்றி விழித்ததுண்டா நீங்கள்?

`நாளை பார்த்துக்கொள்ளலாம்,’ என்று ஒத்திப்போடத் தோன்றிவிடும்.

இன்று இருப்பதைவிட நாளை புத்தி கூர்மையாகிவிடுமா? அல்லது, இன்று கடினமாக இருப்பது நாளை எளிதாகிவிடுமா? . எப்படியானாலும், பதட்டம் ஏற்பட்டிருக்குமே!
எங்காவது ஆரம்பித்தால்தான் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்பது பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்ய வேண்டியதைத் திருப்திகரமாகச் செய்ய முதலில் ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். மிக முக்கியமானதை முதலில் செய்துவிட்டு, பிறகு மற்றவைகளைக் கவனிக்கலாம். (எளிதானவற்றை முதலில் செய்து முடிப்பது நம் மீது நாமே கொண்டிருக்கும் அவநம்பிக்கையைக் காட்டுகிறது).

பாடங்களை ஒத்திப்போடுவது

பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களைவிட திரைப்படங்களும், தொலைகாட்சியும் சுவாரசியமாக இருக்கும். அதில் சந்தேகமில்லை. இரவு எத்தனை நேரமானாலும் தூக்கம் கண்ணைச் சுழற்றாது. ஏனென்றால், அப்போது மூளை கடுமையாக உழைத்து வேலை செய்ய வேண்டியதில்லை. அதனால் பாடம் படிப்பது இரண்டாம்பட்சமாகிவிடும். அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

நாம் புதிதாகக் கற்பது எதுவும் இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் நிற்கும். இதைவிட்டு, ஆசிரியை கற்பித்து சில மாதங்கள் கழித்து பரீட்சை வரும்போது புத்தகத்தை எடுத்தால், எதுவும் புரியாது. `இப்பாடம் நடத்தப்பட்டதோ?’ என்ற சந்தேகம்கூட எழும்.

சிறப்பான தேர்ச்சி பெற்ற எந்த மாணவியையாவது கேட்டுப்பாருங்கள். “சொல்லிக்கொடுக்கப்பட்ட அன்றே பாடங்களை மேலெழுந்தவாறு ஒரு பார்வை பார்ப்பேன். (அதாவது, இருபத்து நான்கு மணிக்குள்). வாராந்திர விடுமுறையின்போது கவனமாகப் படிப்பேன். அவ்வளவுதான்!” என்பாள். இம்முறையைக் கைப்பிடித்தால் அதன்பின் மறக்காது. பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டினாலே போதும்.

பெரும்பாலான மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள்தான் பாடம் படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்! இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பார்கள். எல்லாம் புரிந்ததுபோல்தான் இருக்கும். ஆனால், உடலும் மனமும் ஒருங்கே களைத்துப்போக, படித்ததில் பலவும் பரீட்சை எழுதும்போது மறந்துபோயிருக்கும். (`எல்லாரும் செய்கிறார்களே, நாமும் அப்படிச் செய்தால் என்ன?’ என்று நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்ததன் விளைவு அது).

கதை

ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் ஒரு வாரத்திற்குள் ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். மூன்று நாட்களில் எழுதி அனுப்பினேன்.
அடுத்த முறை என்னைச் சந்தித்தபோது, “என்னங்க, இப்படிப் பண்ணிட்டீங்களே!” என்றார், குற்றம் சாட்டுவதுபோல்.
“உடனே எழுதி அனுப்பினேனே! கிடைக்கலே?” என்றேன்.
“கிடைச்சிச்சு. அதான் சொல்றேன்!”

எனக்குப் புரியவில்லை. நன்றி சொல்வதற்குப் பதிலாக ஏன் தாக்குகிறார்?
அவரே தொடர்ந்தார்: “எல்லாரும் அனுப்பறேம்பாங்க. ஆனா அனுப்பமாட்டாங்க. நீங்க என்னடான்னா..!”

நான் சிரித்தேன். “இந்தக் காலத்திலே நல்லவளா இருக்கிறதுகூட தப்பு!”
அவரும் என் சிரிப்பில் கலந்துகொண்டார்.

பலருக்கும் ஒத்திப்போடும் குணம் இருக்கிறது. கேட்டால், `சோம்பல்,’ `மறதி,’ `வேறு வேலை வந்துவிட்டது’ என்று சமாளிப்பார்கள்.

அதை அவர்கள் மாற்றிக்கொள்ள விரும்பாததற்குக் காரணம் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்க வேண்டாம் என்பதுதானோ?

`ஊருடன் ஒத்து வாழ்!’ என்று சொல்லிப்போனவர் கட்டாயம் இதை எதிர்பார்த்துச் சொல்லி இருக்கமாட்டார்.

கதை

பல வருடங்களுக்குமுன் நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டபோது, ஒரு பாடத் திட்டத்தைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்கள். ஒரு மாதத்திற்குமேல் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

அடுத்த நாளே வாசகசாலைக்குச் சென்று, வேண்டிய புத்தகங்களைத் தேடி எடுத்துக்கொண்டேன்.
முடிவு நாளுக்கு முன்னரே விரிவுரையாளரிடம் என் உழைப்பின் பலனைக் கொடுக்கச் சென்றேன்.
அங்கு உடன் படித்த பல மாணவ மாணவிகள் நின்றிருந்தார்கள், சண்டை பிடிப்பவர்கள்போல்.
அவர்களுடைய விவாதம்: கொடுக்கப்பட்ட நேரம் போதவில்லை. ஒரே சமயத்தில் எல்லாருக்கும் தேவைப்படுவதால், வாசகசாலையில் அப்புத்தகங்கள் கிடைப்பதில்லை.

அவர்கள் கோரிக்கையை ஏற்று, முடிவு நாள் இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நான் ஒருத்திதான் உரிய காலத்தில் வேலையை முடித்திருந்தேன்.

அதற்காக பாராட்டினார்களா?

பாராட்டாவது!
விரிவுரையாளர் என்னைக் கேலியாகப் பார்த்து, “This one is an early bird!” என்றார்!

ஒரு சிலர் பொறாமையாக என்னை வெறித்தார்கள். சிலர் கேலியாகப் பார்த்தார்கள், நான் ஏதோ தவறு செய்துவிட்டவள்போல. `பிறருடன் ஒத்துப்போக வேண்டாமா! இவளுக்கு மட்டும் என்ன அவசரம்!’ என்று உள்ளுக்குள் ஆத்திரப்பட்டிருப்பார்கள்.

நாளை என்பது நமனது கையில்
`நினைச்சதை உடனே சாதிச்சுடணும் ஒனக்கு!’
இந்த வசவை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.

இப்படிக் கண்டனம் செய்பவர்களிடம், “நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனோ, என்னவோ!” என்று சொல்லிவிடுவேன், சிறு சிரிப்புடன்.

உண்மைதானே! இன்று செய்ய வேண்டியதை உடனுக்குடன் செய்தால் நம் அமைதியும், நிம்மதியும் கெடாது, அல்லவா?

ஒரு வேளை, உயிர் போகாது பிழைத்துக் கிடந்தால், நாளைக்கும் ஏதாவது வேலை வரும். செய்துவிட்டுப்போகிறது!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.