கண்ணதாசன் கூறும் வாழ்வியல் நெறிகள்
-த.அமுதஜோதி
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகக் கண்ணதாசன் விளங்குகின்றார். புராண இதிகாச, காப்பியங்களை எளிமையாக்கித் தமது பாடல்களில் சாரமாகத் தந்தவர். இவர் திரைப்பாடல்களில் வைத்துப் பாடாத துறைகளே இல்லை எனலாம். தமிழ் இலக்கியத்தைப் பாடல் வடிவில் மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழர்கள் மத்தியில் அவர்கள் மனதில் மக்கள் நேசக்கவிஞனாக என்றென்றும் நம்மோடு வாழும் கவியரசாக இடம் பெற்றவர். இவருடைய பாடல், கவிதை முதலாக அனைத்துப் படைப்புகளிலும் இலக்கியத்தாக்கமும், வாழ்வியல் சிந்தனையும் அதிகம் இடம் பெற்றுள்ளன. அவருடைய இறைநம்பிக்கை, காதல், கனவு, சமூக உணர்வு எனும் பொருண்மையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
இறை நம்பிக்கை
மனித வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது. வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும், மணியும், நாளும் நம்மை வாழ வைப்பது நம்பிக்கையே ஆகும். மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருபவர் இறைவன் என்பதை கண்ணதாசன்,
”நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைதீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு”என்று இறைஅருளின் சிறப்பினை உணர்த்தியுள்ளார்.
வேத வடிவிலுள்ள இறைவனையும், இறை வடிவிலுள்ள வேதத்தையும் நம்ப வேண்டும். யாரைப் பார்த்து உலக உயிர்கள் வணங்கும் என்பதற்குச் சான்றாக,
”உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்.” என்று பாடியுள்ளார்.
மனிதனைத் தாண்டிய சக்தி ஒன்று உள்ளது. அந்தச் சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது. மனஅமைதியை உண்டாக்குகிறது என்று கடவுள் நம்பிக்கை குறித்தும் கூறியுள்ளார்.
திருமூலர் திருவள்ளுவரின் கருத்துகள் இவரின் பாடல்களில் காணப்படுகிறது.
மனிதன் தவறு செய்வதற்கு ஆசைதான் மூலகாரணமாயிருக்கின்றது. ஆசைகள் இல்லாத இடத்தில் குற்றங்கள் குறைகின்றன. குற்றங்களும் பாவங்களும் இல்லாவிட்டால் மனிதனுக்கு இறைஅனுபவம் ஏற்படுகிறது. இதனைத் திருமூலர்,
ஆசை அறுமின் ஆசைஅறுமின்
ஈசனோடாயினும் ஆசைஅறுமின் (திருமந்திரம் -2570 )
என்று பாடியுள்ளார். உலகப் பொருட்கள் மீதுள்ள ஆசைகளை விடுவதற்கு இறைவனைத் துணையாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனைப்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. எனும் குறட்பா மூலம் அறியலாம்.
இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து, ஆசையைத் துறந்து குற்றம் இல்லாத வாழ்வை வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார்.
காதல்
இலக்கியம் என்ற சொல் முதலில் வாழ்க்கையைத் தான் குறிக்கும். வாழ்க்கையை பிரதிபலிப்பதே இலக்கியம் என்பதைக் கவியரசரின் ஒவ்வொரு படைப்பிலும் உணரலாம். சங்க இலக்கியத்தில் வாழ்வின் அனைத்துக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் இதனை,
உண்டற்குரிய வல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே (தொல் -1156 )
என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் கவியரசரின் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகளைக் காணலாம். கண்ணதாசன் காதலைப்பற்றிப் பாடும்போது,
தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி –அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி என்கிறார்.
அந்தி நேரத்தில் காதலன் வராததை எண்ணி ஏங்குகிறாள். ஐயோ தென்றல் என் உடலைத் தின்று விட்டதே என வருந்திக் குறிப்பிடுகிறார். இப்பாடல் வரி,
”பயலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்” எனும் கலித்தொகைப் பாடல்வரியைச் சார்ந்து பாடப்பட்டதாகும்.
இருவருடைய உணர்வுகளும் ஒன்றுபடும் பொழுது காதல் பிறக்கிறது என்பதை கண்ணதாசன்,
நீ யாரோ நான் யாரோ தெரியாது – இன்று
நேர்ந்தது என்னவென்று புரியாது
என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் வரி குறுந்தொகைப் பாடலொன்றைச் சார்ந்து பாடியது என்பதை,
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே குறுந் -40) எனும் பாடல் மூலம் அறியலாம்.
சங்க கால மக்கள் அந்தந்த நிலத்துக்குரிய ஒழுகலாறுகளின் அடிப்படையில் வாழ்வை மேற்கொண்டிருந்தனர். காதலால் ஒன்றுபட்ட அன்பு வாழ்வை மேற்கொள்ளுவதே இல்வாழ்கை எனப்படும். அந்த அன்பு வாழ்க்கையைத் தங்களுடைய முதுமைக்காலத்திலும் தொடர்ந்து வைத்திருந்ததைச் சங்க இலக்கியம் விவரிப்பதைக் கண்ணதாசன் கவிதைகளில் பார்க்க முடிகிறது.
கனவு
மனம் என்பது உள்மனம், வெளிமனம் என இரண்டு வகைப்படும் என்பர். வெளிமனத்தில் உதயமாகின்ற அழுத்தமான நினைவுகள் பதிவாகின்றன. அவ்வாறு பதிவு பெற்ற நினைவுகளில் சில முன்பின் தொடர்பில்லாத சிறுசிறு பகுதிகளாக வெளிப்படும். இதனைத்தான் கனவு என்று குறிப்பிடுவர். இதனைக் குறுந்தொகைப் பாடலைச் சான்றாகக் கொண்டு ஆராயலாம்.
கேட்டிசின் வாழி தோழி அல்கல்
பொய்வ லாளன் மெய்உற மரீஇய
வாய்தகைப் பொய்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே. (குறுந் -30)
என்ற பாடல் பிரிந்து சென்ற தலைவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்ற தலைவி, கனவு காண்பதாகக் குறிப்பிடுகிறது. எனவே இதன் மூலம் அழுத்தமாகத் தன் நெஞ்சில் படுகின்ற எண்ணங்களே கனவுகளாக வெளிப்படும் என்ற உண்மை புலப்படுகின்றது.
கவிஞர் கண்ணதாசனிடத்தும் இத்தொடருக்குப் பொருத்தமான ஒரு பாடலைக் காணமுடிகிறது.
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி?
என்று அவர் பாடியுள்ளமை தெளிவாகும். இரு பாடல்களிலும் கனவை உண்மை என்று நம்பி ஏமாற்றம் அடைந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக உணர்வு
மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமமாகப் பண்படுத்தப்பட்ட நிலத்தில்தான், எங்கும் ஒரே சீராக நீர் பாய்ச்ச முடியும். அப்பொழுதுதான் பயிர் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும். அதுபோல மனித சமுதாயத்தில் சாதியின வேறுபாடு, பாகுபாடு இருக்ககூடாது; அனைவரும் ஒருதாய் மக்கள் என்று எண்ண வேண்டும். இந்தக் கருத்தின் அடிப்படையை உணர்ந்த பாரதியார்,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –இங்கு
ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் –இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கது வேண்டும்
என்று பாடுகிறார். இதனையே கண்ணதாசன் ,
வெள்ளை மனிதன் வியர்வையும்
கறுப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
என்று பாடுகிறார். பல்வேறு இடங்களில் தோன்றக் கூடிய நதிகள் அனைத்தும் கடல் தாயிடமே சங்கமமாகின்றன. இந்நிலை மனிதனிடமும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டியுள்ளார்.
மனிதனுக்கு மாற்றம் தேவை தான். மானுடத்தையே அழிக்கும் மாற்றம் கூடாது. சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற இயல்போடு குற்றங்களைச் சுட்டிக் காட்டும் அங்கதக் குறிப்புப் பொருள் நிரம்பிய பாடல்கள் சங்க இலக்கியத்திலும் கண்ணதாசன் கவிதைகளிலும் நிரம்பி இருப்பதை மேற்கண்ட பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
*****
துணைநூல்கள்:
1. தொல்காப்பியம்
2. திருமந்திரம்
3. குறுந்தொகை
*****
கட்டுரையாளர்
தமிழ்த்துறைப் பேராசிரியர்,
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சாவூர்.
Excellent Illustrations. – by R.Parthasarathy