-மேகலா இராமமூர்த்தி

”விரைந்து வருவேன் வரைந்துகொள்ள!” எனும் நன்மொழியைத் தலைவனிடம் எதிர்பார்த்தாள் தலைவி. அவனோ, “அன்பே! உறுபொருள் தேடிவந்தபின் உனை மணப்பேன்!” என்று சொல்லவும் திகைத்துப்போனாள் அவள்.

”அன்பரே! தாங்கள் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றல்லவோ என்னிடம் கூறியிருந்தீர். இப்போது திடீரென்று பொருள்தேடி வந்தபின் மணப்பேன் என்று சொல்கிறீரே? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றாள் குழப்பதோடு.

தோழியும் தலைவியின் கூற்றுக்கு உடன்படும் வகையில் தலையாட்டினாள்.

தலைவன் செப்பலுற்றான்…”நங்காய்! நான் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்; அதில் பொய்யில்லை. ஆனால் அது என் முன்னோர் தேடிவைத்த செல்வமாயிற்றே… நான் தேடியதில்லையே!” என்றான்.

தலைவியின் குழப்பம் மேலும் அதிகரித்தது. “தங்கள் முன்னோர் தேடிய செல்வம் தங்களுடையதுதானே அன்பரே?” என்று கேட்டாள்.

”இல்லை” என்று மறுத்தவன், “நானே உழைத்துத் தேடியதைத்தான் என்னுடையது என்று நெஞ்சைநிமிர்த்திக் கூறமுடியும். தன்னுழைப்பின்றி முன்னோர் திரட்டி வைத்திருக்கும் செல்வத்தைச் சிதைப்பவன் செல்வம் உளனாய்க் கருதப்பட மாட்டான்” என்றான்.

”நம்மவரே ஆயினும் அவர்பொருளை நமதென்று உரிமைகொண்டாடுவது முறையில்லை; அஃது அவர் பொருளே” என்ற தங்கள் உயர்ந்த விளக்கத்தை அட்டியின்றி ஏற்றுக்கொள்கிறேன் ஐயனே! எனினும் இப்போதே தாங்கள் பொருள்தேடப் புறப்படுவானேன்? என்னை மணந்தபின் செல்லலாமே!” என்ற தலைவியின் கருத்தைத் தலைவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

”மணவாழ்க்கை மணம்வீசும் வாழ்க்கையாயிருக்கவும், இல்லறம் நல்லறமாய்த் திகழவும் பொருள் வேண்டும். விருந்து புரக்கவும், இரவலர் ஓம்பவும், செறுநர் செருக்கறுக்கவும் செல்வம் வேண்டும். ஆகவே பொருள்தேடி வந்தபின் உன்னை மணப்பதே மாண்புடைய செயல்” என்று அவன் தீர்மானமாகக் கூறிவிடவே, இனியும் அவனோடு விவாதித்து அவன் மனத்தை மாற்றுவது கடினம் என உணர்ந்தாள் தலைவி.

”அப்படியானால்… பொருள்திரட்டிக்கொண்டு எப்போது வருவீர்? என்னை எப்போது மணப்பீர்?” என்று கேள்விகளை அடுக்கினாள் அவநம்பிக்கையோடு.

”நம்பிக்கை இழக்காதே நங்காய்! இப்போது முதுவேனிற் காலமல்லவா? கார் வருமுன் என் தேர்வரும் உனைத் தேடி என்று சூளுரைக்கிறேன். வாட்டம் நீக்கு! வருத்தம் போக்கு! காத்திருக்கிறது வளமான எதிர்காலம் நமக்கு” என்றான் முறுவலோடு.

அரைமனத்தோடு தலைவனுக்கு விடைகொடுத்தாள் தலைவி.

தலைவன் பொருள்தேடச் சென்றுவிட்டான்.

தன் வீட்டுவாயிலில் ஏதோ சிந்தித்தவண்ணம் நின்றுகொண்டிருந்த தலைவியைக் கண்ட தோழி, “தலைவரை நினைந்து வருந்தாதே! அவர் விரைவில் பொருளொடு மீள்வார்!” என்று ஆறுதல்மொழி பகர்ந்தாள் தலைவியின் உள்ளத்தைப் படித்தவளாய்.

”தோழி! ஏற்கனவே தேடிவைத்துள்ள பொருளைச் சிதைப்பவன் செல்வம் உடையவனல்லன்; பிறர் தேடிய பொருளைத் துய்த்தல் இரத்தலினும் இளிவானது எனும் வாழ்வியல் உண்மையை எனக்குத் தெளிவித்துப் போயிருக்கிறார் நம் தலைவர். ஆதலால் அவர் பிரிவுகுறித்து நான் கவலவில்லை. ஆனால் அவர் பொருள்தேடச் சென்றிருக்கும் வழி, கூற்றத்தையொத்த கொலைவேல் மறவர் பொழுதுபட்டு (இரவில்) அவ்வழிவருவோரைக் கொன்றதனாற் பட்ட தசைகளைத் தின்ன நசையொடு (விருப்பு) காத்திருக்கும் பருந்துகள் நிறைந்திருக்கும் நீரற்ற நெடும்பாதையாயிற்றே… அதை நினைத்துத்தான் அஞ்சுகிறேன்” என்றாள்.

உள்ளது  சிதைப்போர்  உளரெனப்  படாஅர்
இல்லோர்  வாழ்க்கை  இரவினும்  இளிவெனச்
சொல்லிய  வன்மை   தெளியக்  காட்டிச்
சென்றனர்  வாழி  தோழி  யென்றும்
கூற்றத்  தன்ன  கொலைவேல்  மறவர்
ஆற்றிருந்  தல்கி  வழங்குநர்ச்  செகுத்த
படுமுடை  பருந்துபார்த்  திருக்கும்
நெடுமூ  திடைய  நீரில்  ஆறே.  (குறுந்: 283 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

தலைவியின் அச்சத்தைக் கண்ட தோழி, ”தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அச்சம்விடு!” என்று அவளைத் தேற்றினாள். தலைவியும் ஒருவாறு தேறினாள்.

சிலநாள் சென்றதும் தலைவியின் மனவுறுதியை மீண்டும் சோதிக்கவிரும்பிய தோழி, ”தையலே! தைரியமாகத்தானே இருக்கிறாய்?” என்று வினவினாள்.

”ஆம்” என்ற தலைவி, ”தோழி! (இரவில்) உதிக்கின்ற மதியம் கடலினிடத்தே காணப்பட்டாற்போல் ஒழுகுகின்ற வெள்ளிய அருவியினையுடைய, உயர்ந்த மலைநாடனாகிய நம் தலைவன் கதிரவனைப் போன்றவன். மூங்கிலைப் போன்ற என் பெருந்தோள்களோ நெருஞ்சி மலரைப் போன்றவையிற்றே” என்றாள்.

எழுதரு  மதியங்  கடற்கண்  டாஅங்கு
ஒழுகுவெள் ள ருவியோங்கு மலை நாடன்
ஞாயி  றனையன்  தோழி
நெருஞ்சி  யனையவென்  பெரும்பணைத்  தோளே.  (குறுந்: 315 – தும்பிசேர்கீரனார்)

”என்ன பெண்ணே புதிர்போடுகிறாய்! சற்றுப் புரியும்படியாகச் சொல்லேன்” என்றாள் தோழி.

”நெருஞ்சியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டாள் தலைவி.

nerunji”ஆமாம்…பார்த்திருக்கிறேன். நம் பொய்கைக் கரையோரங்கூட நிறைய மண்டிக்கிடக்கிறதே. எத்தனையோமுறை அதன்முள் என் பாதத்தைப் பதம் பார்த்திருக்கிறதே!” என்றாள் தோழி வேடிக்கையாக.

”முள்ளைப் பார்த்திருக்கிறாய் சரி…அதன் பூவைப் பார்த்திருக்கிறாயோ? என்று  தலைவி கேட்கவும்,

”அதையும் பார்த்திருக்கிறேனே. மஞ்சள் வண்ணத்திலிருக்கும். அதற்கென்ன?” என்றாள் தோழி அலட்சியமாக.

”என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்? காலையில் கிழக்குத் திசையில் மலர்ந்து,  கதிரவன் இயங்கும் திசைநோக்கியே தானும் இயங்கி, மாலையில் கதிரவன் மறைந்தவுடன் தானும் கூம்பிவிடும் இயல்புடையது நெருஞ்சிப் பூ.  கதிரவனைக் காதலோடு சுற்றிவரும் சூரியகாந்திப் பூவை உலகறியும். ஆனால் அதையொத்த காதலொடு கதிரவனைச் சுற்றிவரும் நெருஞ்சிப் பூவைப் பலரறியவில்லை. என் ஆருயிர்த்தோழியான நீ உட்பட!” என்றாள் ஆதங்கத்தோடு தலைவி.

”உண்மைதான்! நெருஞ்சியின் அருமையை நான் அறியாதுதான் போனேன். வஞ்சியே… இப்போது உன்னால் அறிந்தேன்” என்று தலைவியை ஆரத்தழுவிக்கொண்டாள் தோழி.

இந்தப் பாடல் அளவிற் சிறியதாயினும் பல்வேறு சிறப்புக்களை உடையது. இதில், அருவிக்குத் திங்களின் ஒளி உவமை; மலைக்குக் கடல் உவமை; தலைவனுக்குக் கதிரவன் உவமை; தலைவியின் உள்ளத்துக்கு நெருஞ்சி மலர் உவமை. மொத்தம் நான்கு உவமைகள் கொண்ட அரிய பாடலிது.உலகக் காதற்பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது இப்பாடல். ஒரு புதினத்திற்கான கற்பனை வளமும் கருத்தாழமும்  இந்நான்கு அடிகளுள் உள.” என்று இப்பாடலைப் பாராட்டுகிறார் தமிழண்ணல் அவர்கள்.

அகநானூற்றுப் பாடலொன்றிலும் (அகம்: 336), ’வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல’ என்ற தொடரைக் காணமுடிகின்றது. புறம் 155-ஆவது பாடலும், ”பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு” என்ற தொடரைக் கையாண்டிருக்கக் காண்கிறோம். இவ்வாறு நெருஞ்சிக்கும் கதிரவனுக்குமுள்ள நெருங்கிய உறவை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியத்திலும், பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்களிலும், பிற்கால நூல்கள் சிலவற்றிலும் காணக் கிடைக்கின்றன. இயற்கையை நுண்ணிதின் நோக்கும் அன்றைய தமிழரின் நுழைபுலத்திற்கு இவை சான்றாகின்றன.

நாள்கள் உருண்டோடிக்கொண்டே இருந்தன. வாரங்கள் மாதங்களாயின. தலைவன் திரும்பிவந்தபாடில்லை. தலைவியின் நெஞ்சுரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையாக ஆரம்பித்தது.

தன் உள்ளத்து வேதனையைத் தனை நாடிவந்த தோழியிடம் செப்பலுற்றாள்…

“தோழி! குறிய அடியுடைய கூதளஞ்செடி அசைகின்ற உயர்ந்த மலையின்கண்ணுள்ள பெரிய தேனடையைக் கண்ட முடவன், (நடந்து அத் தேனடையை சென்றடையக் கால்களின்மையால்) தன் உள்ளங்கையையே சிறுபாத்திரம்போல் குவித்து, அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கிமகிழ்வதுபோல், காதலர் என்னை மணந்து தண்ணளி செய்யாராயினும், அவரைப் பலமுறை பார்ப்பது உளத்துக்கு இனிதாயிருந்தது; இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்று கூறிக் கண்ணீர் உகுத்தாள்.

குறுந்தாட்  கூதளி  யாடிய  நெடுவரைப்
பெருந்தேன்  கண்ட  இருக்கை  முடவன்
உட்கைச்  சிறுகுடை  கோலிக்  கீழிருந்து
சுட்டுபு  நக்கி  யாங்குக்  காதலர்
நல்கார்  நயவா  ராயினும்
பல்காற்  காண்டலும்  உள்ளத்துக்  கினிதே.  (குறுந்: 60 – பரணர்)

‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல்’ எனும் பழமொழியை இச் சங்கப்பாடல் நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றதன்றோ?

”பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்” (1283) எனும் குறட்பாவும் இப்பாடற் கருத்தையே (உவமைகளின்றி) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது.

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *