Tag: வல்லமையாளர்

  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளுக்கு தருமராசன் பதில் சொல்லியே தீரவேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்து செல்லும் யமதர்மராசனின் மகன் என்று புகழ்பெற்ற யுதிர்ஷ்டிரனுக்கு அந்தச் சமயத்தில் தன் உயிர் தன் கையில் இல்லை என்று புரிகிறது. கீழே நான்கு தம்பியரும் மரணப்படுக்கையில், தானோ தனியாள்.. கேள்வி கேட்பவனோ, தங்கள் வீரத்தை விட சிறந்தவன், இல்லையென்றால் வீராதிவீரர்களை, தம் தம்பியரையே, மூர்ச்சை அடையச் செய்வானா.. தங்கள் ஞானத்தை விட சிறந்த ஞானத்தினைப் பெற்றவனாகத்தான் இருக்கவேண்டும்.. இல்லையென்றால் தன் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நீரை அருந்து எனக் கட்டளை இடுவானா.. இருந்தும் நிலைமையை தைரியமாக எதிர்கொள்கிறான் தருமன்.

    யட்சனின் கேள்விகளில் மிக முக்கியமானது ‘ஆச்சரியமானது என்பது எது’ என்பதுதான். அதற்கு தருமன் பதில்சொல்வான் ‘தானும் ஒருநாளில்லாவிட்டால் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும் எனத் தெரிந்தும் அந்தச் சமயத்தில் இறந்து போனவனுக்காக பரிதாப்படுவதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்’ என்பான் அவன்.

    மனிதனின் மரணம் என்பது நிச்சயம் என்றாலும் அது வரும் காலத்தில் அதை எதிர்கொள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம்தான். மரணகாலத்தில் மனிதனால் இறைவன் நாமம் சொல்லமுடியாது போகலாம் என்பதால் தான் நன்றாக இருக்கும்போதே ’மாதவனை தன் மார்பில் இருத்தி அனுக்கணமும் பூசை செய்தால்’ இந்தக் கடைசிகால எமபயத்தைப் போக்கிவிடலாம் என்று உபாயம் சொல்வர் பெரியாழ்வார். ஆனால் மரணம் வருபவருக்குதானே இந்தப் பிரச்னை.. முதிர்ந்த வயதில் அந்த மரணம் வரும் வேளையில் அவரைச் சார்ந்தவர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள்.. ஒரு குரூரமான நகைச்சுவைத் துணுக்கு கூட உண்டு. கணவன் இறந்துவிட்டான், தேகம் திடீரென பெரிதாக உப்பிவிடுகிறது. வெளியில் எடுத்துச் செல்ல வாசல் நிலைப்படியை இடித்து அகலப்படுத்தி எடுத்துச் செல்லவேண்டும். ஆனால் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. இறந்துபோனபின் அவன், அவள் எல்லாம் வெறும் கட்டைதானே.. இந்தக் கட்டையை வேண்டுமென்றால் அறுத்துச் செல்லவும், வீட்டு நிலைப்படிக் கட்டையை இடிக்கவேண்டாம்’ என்கிறாள்.

    ஆனால் சென்ற வார பொங்கல் வல்லமை சிறப்பிதழில் உயிர் போகும்போது கூடி உள்ள உறவினர் நிலையைத் தெளிவாக எளிமையாகச் சொல்லி இருக்கிறார் திரு ரிஷி ரவீந்திரன் அவர்கள். அந்தப் பாட்டியைப் பற்றி அகப் பார்வையாகச் சொல்லாமல் புறப்பார்வையாக சொல்லி இருப்பது சுவையாகவும் இருக்கிறது. இதோ அவரின் கைவண்ணத்தில்

    தாடி  ராமசாமி மாமா பாட்டியின் மரணமடையக்கூடிய நேரத்தை  எதிர்நோக்கி கவலையுற்றார். அடைப்பு நட்சத்திரத்தில் மரணித்தால் பிணத்தை வாசல் வழியாக எடுக்க இயலாதே !. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தால், கூரையைப் பிரித்து அதன் வழியாகவோ அல்லது சுவற்றினை இடித்து அதன் வழியாகவோதான் பிணத்தினை எடுக்கவேண்டும் என்பது நியதி.

    தனிஷ்டா பஞ்சமி என்றழைக்கப்படும் நட்சத்திரங்களில் ஏற்படும் மரணம் அடைப்பு ஆகிவிடுகின்றது. ஆவிமூலமாகவோ, கனவு மூலமாகவோ அல்லது ப்ரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி வீட்டிலுள்ளோர்களைப் பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுகையில் தள்ளிவிடும் என்றொரு ஐதீகம். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்தி எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன என்றொரு நம்பிக்கை.

    தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தவர்கள் எமலோகம்  சென்றடைய இந்த அடைப்பு என்றழைக்கப்படுகின்ற கால அவகாசம் தேவைப்படுகின்றது என கருடபுராணம் உறுதிப்படுத்துகின்றதே ? மருத்துவன் நாடி பிடித்த கணக்கினை வைத்துக் கணித்தால், கிழவி பஞ்சமி நட்சத்திரத்தில்தான் மரணிப்பாரோ…? என்ன பரிகாரம் செய்வது…? என்ற எண்ணவோட்டம் தாடி ராமசாமி மாமாவின் மனதினில் பெளர்ணமி அலைகளாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன.

    ஊரின் எல்லையில் ப்ளஷர் காரின் ஹார்ன் சப்தம் கேட்டு சின்னஞ்சிறார்கள் வழியும் மூக்கினை இடக்கையால் வழித்துக்கொண்டு வலக்கையால் கீழிறங்கும் டவுசரை இழுத்துக்கொண்டே  ஓடினர். பெரும்பாலான டவுசரின் பின்பக்கங்கள் இந்திய வரைபட  வடிவினில் கிழிந்திருந்தன.

    லட்சுமி தன் குடும்பத்துடன் வந்துவிட்டதாய் கூட்டம் அனுமானித்தது. பஜனை தாத்தா எதோ தயார் செய்ய  கூடத்தினுள்ளே சென்றார். பாட்டி தன் காதுகளைக் கூர்மையாக்கினார்.

    பேரக்குழந்தைகள் ஐவரும் ஆஜர்,  அந்த இடமே இப்பொழுது  சாவுக்கலையிலிருந்து மங்களகரமாய் மாறியிருந்தது. உற்சாகமான அதிர்வலைகள் ஜனித்திருந்தன. பாட்டியின் முகத்தினில் ஒருவித பரவசநிலை.

    ஒரு வயது நிரம்பாத கடைக்குட்டி வரதன் பாட்டியைக் கூர்மையாகப் பார்த்தான். பாட்டி இவன் பிறப்பதற்கு முன்பே பார்வை இழந்தவர், வரதன் முகத்தில் புன்னகை, ”யார்ரா…இது….?” எனத் தன் பிஞ்சுக் கரங்களினால் பாட்டியைத் தொட்டுச் சிரிக்கும்பொழுது பாட்டி மெய்சிலிர்த்துப் போனாள்.
    http://www.vallamai.com/special/pongal/1878/

    ரிஷி இப்படி யதார்த்தத்தை எளிமையாகச் சொல்லும் முறை நன்றாக இருக்கிறது. பிறப்பென்று ஒன்று இருக்கும்போது மரணம் நிச்சயம்தான். வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் பூமியிலே நமக்கிடமேது’ என்பார் கண்ணதாசன். நம்மாழ்வாரோ ஒரு படி மேலே போய், ’இந்த பூமியின் தாங்கமுடியாத ப்ளுவைக் குறைக்க ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்தாய், அதுதான் பாரதயுத்தம் கண்ணா!’ என்பார். எது எப்படியாகினும் மரணத்தைக் கண்டு பயப்படாது எல்லையில் போராடும் யுத்த வீரன் போல எல்லா மனித உயிர்களும் இருக்கவேண்டும் என்பேன் நான். நல்லதொரு சிந்தனையை அளித்த திரு ரிஷி ரவீந்திரனை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வல்லமையாளர் ரிஷி வாழ்க என வாழ்த்தி மேலும் பல கட்டுரைகளை அள்ளி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: மனோகரனின் கவிதை

    முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
    பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
    பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்  

    இந்த வாரம் எல்லோருக்கும் சுபவாரமாக ஆரம்பிக்கவேண்டுமென நிச்சயித்துத்தான் நம் பெரியோர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் போலும். அறுப்பு முடிந்து புது அரிசி எடுத்து ஆதவன் முன்னிலையில் பொங்கிச் சாப்பிட்டு ஆனந்தப் பொங்கல் விழாவும் அத்தோடு பெருமை சேர்க்க திருவள்ளுவர் விழாவும் கொண்டாடும் சுபவேளையில் இங்கே விசாகப்பட்டினத்தில் நம் தமிழினத்துக்கே பெருமை சேர்த்து தமிழ் வேதம் தந்த திருவள்ளுவருக்கு சிலை எடுக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் இதற்கேற்றாற்போலவே எல்லாமே அமைந்துவிட்டதும் கவனிக்கவேண்டும்.

    குறள் என்று பெயரில் ஒன்றரை அடிதான் அது.. ஆனால் எத்தனை சேதி சொல்கின்றதோ..  நம்மொழியில் அல்லாது எம்மொழியில் உண்டு இவை போல என்று பெருமிதப்படுகின்றோம்.. அறம் பொருள் இன்பம் எனும் மூன்று பகுதிகளாகப் பாடப்பட்ட திருக்குறள் அதன் அடுத்தப் பகுதியான வீட்டின்பத்தைப் பாடவில்லை.  இந்த கர்மயோகத் திருக்குறளை அப்படியே பின்பற்றினால் வீடு பாக்கியமும் உண்டு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் போலும். அதே சமயத்தில் இந்த குறட்பாக்களை நம் மனிதர்கள் ஒவ்வொருவரும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் வழிகளைக் கடைபிடித்தால் நல்வாழ்வு நிச்சயமாக அமையும்.. கொலையும் குற்றமும் ஒழியும், பசியும் பிணியும் தோன்றவே தோன்றாது.. காதல் பெருகும், காதலால் அன்பும் பெருகும்.. அன்பு பெருகினால் அங்கே அமைதிதான்.. யுத்தமும் துன்பமும் சாவும் போராட்டமும் இனி கிடையாது…மனிதருக்கு மனிதர் வெறுப்பு வளராது.. எங்கும் வெற்றிதான்.. எல்லோரும் நல்லவரே.. ஆஹா.. கனவு காண்கிறேனோ..

    இருந்தும் நம் நண்பர் துரை அவர்களின் புதிய குறட்பாக்களைப் படிக்கையில் இப்படியெல்லாம் கனவு காண்பது என்பது என் ஒருவனுக்கு மட்டும் சொந்தமல்ல என்பது புரிந்தது… துணைக்கு அனேகம் பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் வந்தது.. நான் காண்பது வெறுங்கனவு. துரை காண்பதோ இனிய கனவுகள். அந்தக் கனவுகளைக் குறட்பாக்கள் மூலம் வெளிப்படுத்தும் பாணியும் கூடவே ஒரு படத்தையும் போட்டு நம்மை அங்கே இழுக்கும் பாணியும் அருமை. காதலின் மீது ஒரு சில குறட்பாக்கள் துரையின் தூரிகை மூலம்:

    என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
    வந்தின்றும் சிக்கவில்லை நீர்

    நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
    நானென்ன ஆவேனாம் கூறு

    உம்வாசம் நானுணர்த்தேன்; தன்வேசம் தானுதறி
    முன்வாசல் ஓடும் மனது

    ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
    வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்

    சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
    சொல்லடா என்செய்ய வென்று

    தூத்துக்குடி துரை முன்னர் ராஜராஜசோழன் மீது வெண்பா எழுதிவந்தார். ஏனோ நடுவில் நிறுத்தி விட்டார். அவர் அதையும் முடிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த தைத்திருநாளில்  குறட்பாக்கள் எழுதி வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைச் சொல்லி வல்லமை குழுவினர் சார்பில் ஆனந்தப்படுகிறோம். துரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இன்றைய கடைசி பாரா: கவிஞர் இரா.ரவி எழுதியது.

    ஈராயிரம்  வயது கடந்தும்
    இளமையாக இருப்பவர்  
    திருவள்ளுவர் !   

    மரபு அன்று என்றவர்களையும்
    ஏற்க வைத்தவர்
    திருவள்ளுவர் !   

    வாசுகியின் கணவர்
    வாசகர்களின் கண் அவர்  
    திருவள்ளுவர் !

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    புதிய வருடத்தில் நான் பேச்ப்போவது மிக மிகப் பழைய விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதான்.. ஆனால் இவை மட்டும் இல்லையேல் இந்த இடங்களில் மனிதனின் ஆதி நாகரீகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எதிர்கால மக்களுக்கு எப்படித் தெரிய வரும்.. நான் சொல்வது இந்த மியூசியங்கள்தான்.

    பல வருடங்களாகவே எனது பழக்க வழக்கங்களில் இது ஒன்றுதான். இந்தியாவில் எந்த நகருக்கு செல்ல நேர்ந்தாலும் நான் அங்கே தெரிந்து கொள்ள விழைவது அந்த நகரில் மியூசியம் இருக்கிறதா என்பதுதான்.. இப்படித்தான் விஜயவாடாவில் உள்ள மியூசியத்தில் காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு நடராஜர் கற்சிலையைக் காண நேரிட்டது. அங்கேயே அந்த நகரின் மத்தியிலேயே ஒரு சிறிய பாறை மலை.. அந்த மலையினைக் குடைந்து சின்னச் சின்ன கோயில்கள். ஒரு குடைவரைக் கோயிலில் மகிஷாசுர மர்த்தனியும் நடராஜரும் செதுக்கப்பட்டுள்ளனர்.. கொஞ்சமும் தவறாமல் அதே பாணியில் இரட்டையர் போல இருந்த நடராஜரின் ஒரு கற்சிலை அந்தப் பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டு அங்கே உள்ள மியூசியத்தில் சேர்க்கப்ப்பட்டதும் இந்த கற்சிலை கலையில் ஆர்வம் உள்ளவருக்கு விருந்தாக இருந்ததும் நினைவுக்கு வருகிறது.. அதே போல இன்னொரு விஷயமும் அதன் மூலம் அறியலாம். காலத்தால் மகேந்திர பல்லவனின் குடைவரைகளுக்கு முற்பட்டதாக இருப்பதையும், நடராஜர் அந்தப் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் இந்தப் பகுதியில் வணங்கப்பட்டு வந்திருக்கிறார் என்பதும் தெரிய வரும்

    நான் வம்சதாரா எனும் முதல் நாவல் எழுதுவதற்கான ஒரு நல்வாய்ப்பையும் கொடுத்தது கூட ஒரு மியூசியம்தான். விசாகப்பட்டினத்தில் உள்ள மியூசியத்தில் அந்த பதினோராம் நூற்றாண்டின் தமிழ்க் கல்வெட்டை நான் காண நேரிடாவிட்டால் வம்சதாரா எனும் புத்தகம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கல்வெட்டைத் தொடர்ந்து சென்றதால்தானே வம்சதாரா வந்தது என்பதை ஏற்கனவே எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

    நம் பாரதமே புராதன பூமி. எத்தனையோ  நேர்த்தியான கலைச் சிற்பங்கள் நிறைந்த பூமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமோ என்று தோன்ற வைக்கும்.. இன்னமும் சொல்லப்போனால் உலகில் எந்த ஒரு நகரத்திலும் நேர்த்தியாக செயல்பட்டு வரும் ஒவ்வொரு மியூசியத்திலும் பாரத புராதனக் கலைச் சிற்பங்கள் இல்லாமல் அந்த மியூசியங்கள் புகழ் பெற்றிருக்க முடியாது.. இந்தக் கருத்தை இன்னும் வலுப்படுத்துகிறது திருமதி தேமொழி எழுதிய சான்பிராஸிஸ்கோ நகரைப் பற்றிய கட்டுரையும் அதன் அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும்.(குடதிசை மருங்கில்)

    ஆசிய நாடுகளின் கலைப்பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

    பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

    ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம். – மேலும் படிக்க http://www.vallamai.com/literature/articles/30356/

    ஒவ்வொரு நகரத்துக்கும் இந்த அருங்காட்சியகம் என தமிழில் பேசப்பட்ட மியூசியம் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் மியூசியத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இன்னமும் பல கலைச் செல்வங்களும் பண்டைய காலத்தில் வணங்கப்பட்ட பல தெய்வச் சிலைகளும் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சிதறிக் கிடக்கின்றன. ஆனால் அன்னிய நாட்டவர் அப்படியல்ல ..ஆவ்ரி ப்ரெண்டேஜ் போன்றோர் எப்படியெல்லாம அரும்பொருட்கள் சேகரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இக்கட்டுரையைப் படித்தால்தான் தெரியும். நல்லதொரு கட்டுரையை வழங்கி இப்புத்தாண்டைத் தொடக்கி வைத்த தேமொழி அவர்களை இந்த வார வல்லமையாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். தேமொழிக்கு அன்பான வாழ்த்துகள்.

    கடைசி பாரா: தேவா’வின் கவிதை வரிகள்.

    அழுகின்ற குழந்தைக்கு

    பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

    ஆலயம் கட்டி வணங்குவேன்

    வாடுகின்ற மனிதனுக்கு

    ஊக்கமூட்டி ,பகிர்ந்துண்ணும்

    இதயமே இறைவன் வாழும்

    ஆலயம் அன்றோ!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    1980 களின் ஆரம்பங்களில் எனக்கு ஒரு ஆருயிர்த்தோழி இருந்தாள். வீடு எதிர் வீடுதான். சாலை சற்று அகலமானது என்பதால் நாங்கள் இருவரும் ஏதாவது இருக்கும் இடத்திலிருந்தே பேசவேண்டுமானாலும் சைகை மொழிதான்.. எப்போதாவதுதான் என் வீட்டுக்கு வருவாள்.. ஏனெனில் வச வசவென நண்பர்கள் கூட்டத்துக்கு குறைவே கிடையாத நாட்கள் அவை. அவளுக்கு கூட்டம் பிடிக்காது, கூச்சப்படுவாள். நான் அவள் வீட்டுக்குப் போவதுண்டு.. அவ்வப்போது பலகாரம், சாப்பாடு கூட உண்டு. ஐயப்ப பூஜை சமயங்களில் மட்டும் தன் அப்பாவுடன் சாயங்காலம் பூராவும் எங்களுடனே அவள் ஆஜர்தாம்..

    இரவு எந்நேரம் படுக்கப் போனாலும் நான் கண்டிப்பாக காலை எழுந்தே ஆகவேண்டும்தான்.. காரணம் அவள் அங்கேயிருந்து என்னைக் கண்டதும் குட்மார்னிங் திவாம்மா.. (திவா மாமா) என்று கூவுவதைக் கேட்டே ஆகவேண்டும். ஆமாம்.. எதிர்வீட்டு நண்பர் திரு சுப்பாராவ் அவர்களின் குழந்தை சுசீலாவுக்கு அத்தனை பிரேமை என் மீது.. மழை நாளானாலும் பனியானாலும் அந்தக் குழந்தை ஜன்னலருகே இந்தக் கூவலுக்காக காத்துக் கிடக்கும் . அவள் தந்தையும் தாயும் என்னுடைய இனிய நண்பர்கள் ஆதலால் ஒரு செல்ல கோபத்துடன் என்னைக் கண்டிப்பார்கள்.. ‘எங்களுக்குக் கூட அவள் குட்மார்னிங் சொல்வதில்லை’ என்று குறை வேறு சொல்வார்கள்.. நாள் தவறினாலும் அவள் கூவும் குட் மார்னிங் மட்டும் தவறவே தவறாது (நாங்கள் எங்காவது வெளியூர் பயணத்தில் இருந்தால் தவிர)..

    அவள் இதை விளையாட்டாகவோ அல்லது அன்பால் ஏற்பட்ட கடமையாகவோ, இப்படி தினம் செய்யலாம். ஆனால் எனக்கு அப்போதெல்லாம் சுசீலா மிகப் பெரிய டானிக்.. ஒரு சுறுசுறுப்பும் பரபரப்பும் என்னையறியாமல் தொற்றிக்கொள்ளும். . குட் மார்னிங் சொல்வதெல்லாம் எப்படி டானிக் ஆகும் என்று கேள்வி வரும்.. அதை அந்தக் கணங்களில் அனுபவித்தவர்தாம் அதன் மகிமையையும் உணரமுடியும். நல்ல வார்த்தை நாலு சொல்லும்போது அந்த நல்லதின் விளைவும் அலைகளும் நம்மையும் தொற்றி பற்றிக் கொள்ளும். உற்சாகம் கூடவே தோன்றும். அந்த நாள் இனிய நாள்தான். இப்போதும் கூட சில நண்பர்களிடமிருந்து நல் வணக்கமும் வாழ்த்தும் எஸ் எம் எஸ் மூலமாக வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள (மிகப் பெரிய பதவியில் இருந்தாலும்) தமிழ் நண்பர் திரு முத்துசாமி அவர்கள் ’இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்று செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பார். அதைப் பார்த்ததும் நமக்குள்ளே ஒரு புது உற்சாகம் தோன்றி மறைவதை மறுக்கவே முடியாது.

    இனிய நாள் என்றதும் இந்த நாள் இனிய நாள் என்று தினம் குழுமங்களில் கூவும் நண்பர் ஜோ’வை இணைய நண்பர்களுக்கு நினைவு வந்துவிடும். ஜோ’வும் நாள் தவறாமல் இந்த நாள் இனிமையாக இருக்கட்டும் என்று எல்லோருக்கும் சொல்லி வருகிறார். விடா முயற்சியாக நாளும் அலுக்காமல் அவர் இந்த நல்ல வார்த்தைப் பதிவிடும் போதெல்லாம் பார்க்கும், படிக்கும் எல்லோருக்குமே உற்சாகம் வரத்தான் செய்யும்.

    இதோ புது வருடம் வந்துகொண்டே இருக்கிறது. சற்று திரும்பிப் பார்த்து நடந்து போன நிகழ்ச்சிகளை சற்று நினைவு கூர்ந்தால் சென்று போன வருடம் நல்லதை விட கெட்டதுகளை அதிகம் உண்டாக்கிச் சென்ற வருடமாகிவிட்டதோ எனக் கூட தோன்றலாம். இருந்தும் நாம் நல்லவைகளையே இனி எதிர்பார்ப்போம்.. நல்லவைகளையே நினைப்போம். ஜோ’வைப் போலவே அவர் தரும் இனிய செய்திகளைப் போலவே இந்த நாள் என்றல்ல, இந்தப் புதிய வருடத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைந்திட பிரார்த்திப்போம்.

    ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது உற்சாகத்தை உண்டாக்கி, இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என நினைக்க வைத்து இந்த நாள் இனிய நாளென்று நல்லதையே நாளும் நினைக்க வைத்து வரும் இனிய தோழர் ஜோ எனும் ஜோசப் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழுவினர் சார்பில் அறிவிப்பது இந்த வருடத்தில் கடைசியாக நான் செய்துகொண்டிருக்கும் செயல்களில் ஒரு மிக நல்ல செயலாகக் கருதுகிறேன். ஜோ’வுக்கு ஜே போட்டு அவருக்குப் பொது வாழ்த்தோடு புது வருட வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

    கடைசி பாரா:

    உற்றார்கள் எமக்கில்லை யாரும் என்னும்
    உற்றார்கள் எமக்கிங்கே எல்லாரும் என்னும்

    என்ற நம்மாழ்வாரின் தீர்க்கதரிசன வார்த்தைகளை, அதன் சத்தியத்தை எண்ணி எண்ணி அனுக்கணமும் வியந்து கொண்டே, உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    ஆதி காலத்தில் எல்லாம் அதிவேக வாகனங்கங்கள் இல்லை.. குதிரை, யானை எல்லாம் கூட சாதாரண மக்களுக்கு, பொது மக்களுக்கு வசதிப்படாது. சற்று வசதிப்பட்ட மக்களுக்கென ஏற்பட்ட காளைமாட்டு வண்டி கூட உள்ளூர் வரைக்கும்தான் உதவும், அதுவும் மகளிருக்கும் குழந்தைகளுக்கும்தான், ஆகவே எங்கும் எல்லோருக்கும் நடையோ நடைதான்.. அதுவும் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தால் திரும்பி வர மாதக் கணக்கில் ஆகும்.. வாணிகம் செய்ய செல்லவேண்டி வந்தால் ஊர் மண்ணைத் திரும்பவும் காண வருடக் கணக்கில் கூட ஆகும், ஒருவேளை யுத்தத்துக்கு செல்ல வேண்டி வந்தால் கேட்கவே வேண்டாம், திரும்பி வருவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகுறைவு (அப்படியும் திரும்பி வந்தால் எங்கே விழுப்புண் பெற்றாய், மார்பிலா, முதுகிலா, என்று உணர்ச்சிகட்ட வசனங்கள் பேசுவார்களாம்).

    இப்படித்தான் தலைவன் ஒருவன் தலைவியிடம் தான் வெகுதூரம் செல்லப்போவதாக பிரியா விடை கேட்பதாக ஒரு சங்கத் தமிழ்ப் பாடல் வரும். இந்தப் பாடல் பற்றி சற்று நகைச்சுவையாக எழுத்தாளர் தேவன் (புத்தகத்தின் பெயர் ‘கல்யாணி’) இப்படி எழுதினார் – தன்னை விட்டு தலைவன் பிரிய விடை கேட்கிறான் என நினைத்ததுமே தலைவி அந்த வார்த்தை தாளாமல் உடல் மெலிவாள், உடல் மெலிந்தால் கையும் மெலியும்தானே, கையில் போட்டிருந்த அழகு வளையல்கள் ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டே வர, அந்தக் காதலன் பயந்துபோய், அடடே, நான் உன் அன்பைப் பரீட்சித்துப் பார்த்தேன், மெய்யாகச் சொல்லவேண்டுமெனில் நான் அப்படியெல்லாம் வெகுதூரம் பயணப்படுவதாக இல்லவே இல்லை. நீ மெய் மெலிவதைக் கண்டு என் மனம் துன்புறுகிறது என்பானாம். இந்த சந்தோஷ வார்த்தையைக் கேட்டதும் காதலி உடனே உடல் பூரித்துப்போவாளாம். இதனால் அவள் கையும் சற்று அதிகமாக பூரித்துப் போய் மீதி அங்கே இருந்த ஒரே ஒரு வளையும் அளவு கொள்ளாமல் படா’ரென்று தெறித்து வெளியே  விழுகிறது.

    காதலர் பிரிவு என்பதே ஒரு இன்பம்தான், பிரிவுக் காலத்தில் அன்பு மேலும் கெட்டிப்படுகின்றது. அது அந்த ஆதி காலமாக இருந்தாலும் சரி, இந்த அதி வேக இயந்திரமய காலமாக இருந்தாலும் சரி. மனிதனுக்கே இயல்பானஉணர்ச்சியுள்ள வரைக்கும் காதல் இருக்கவே செய்யும். காதல் இருக்கும் வரை நற்பண்புகளை வளர்க்கவே செய்யும். அப்படிப்பட்ட காதலில் பிரிவு என்பது தேவைதான். பிரிவு முதலில் கசக்கும், ஆனால் பிரிந்தவர் கூடும்போது அதற்கான இனிமைக்கு உவமையே இல்லை.. ஆகையினால்தான் உவமைக்கு பெயர் போன கம்பன் கூட ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்று ஒரே வரியில் பிரிவின் சக்தியையும் பிரிவின் பின் கூடும் இன்பத்தையும் விவரித்து விடுகிறான்.

    காதலில் பிரிவு என்பது எல்லாக் கவிஞர்களுக்கும் தேனி ஊறிய பலாச்சுளை போல தித்திக்குமோ என்னவோ. திருக்குறளை வடித்த வள்ளுவன் முதல் இந்தக் காலக் கவிஞர் வரை இந்தக் காதல் பிரிவை ஒரு பிடி பிடித்துவிடுகின்றனர். இந்த வாரம் வல்லமைக்குள் இருந்த இந்தக் கவிதை ஒன்று இப்படித்தான் வர்ணிக்கின்றது.

    அனுதினமும் வளர்ந்திடுமே
    அளவிலா   காதலும் ….
    பிரிவதுவும் ஏற்படுத்துமே
    ஆழமான வலுவான
    அன்பின்  அஸ்திவாரம் !!!

    உந்தன் அன்பின் அருமையை
    எனக்கும் ……எந்தன் –
    காதலின் வலிமையை
    உனக்கும் ……உணர்த்திடாதோ ???
    இந்த தொலைதூரக் காதல் !!!

    இந்தக் கவிதையை எழுதிய திருமதி தமிழ்முகில் நீலமேகம் மிக எளிமையான தமிழில் காதலர் பிரிவின் மகிமையைத் தெரியப்படுத்தி இருப்பது மிக அழகாக இருக்கிறது. திருமதி தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகுக. சீக்கிரமே பிரிந்தவரை சேர்த்து வைக்கும் நற்பணியையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கடைசி பாரா: கவிஞர் தனுசுவின் ஒரு அழகான கவிதை வரிகள்

    “நிலவோடு
    நேசக்கலவையின்
    இச்சை முடியாத போது
    இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
    பச்சைப் புற்கள்
    கண்ணீர் சிந்துகிறது”

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    மனித வாழ்க்கை மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருக்குமே நேரம் கிடைப்பது இல்லை. சில நல்ல விஷயங்கள் கேட்க நேரமே கிடைப்பதில்லை. சில நல்லவர்களைப் பார்க்கப் போகலாம் என்றாலும் நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் அப்படியே சாவகாசமாய் நல்ல விஷயங்களைப் படிக்கத்தான் செய்வோமே என்றால் நேரம் ’எங்க சார் இருக்கு.. எனக்கும் படிக்கணுமுனு ஆசைதான்.. ஆனா பாருங்க.. இந்த இருபத்தி நாலு மணிநேரமும் சரியா பொழுது போயிடுது.. தூங்கறதுக்கு கூட சரியா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க..’ என்றுதான் பதில் வரும்.   இந்த நேரம் கிடைப்பதற்காக. அவர்களுக்கு உதவ 24 மணி நேரத்தை யாராவது சித்தரோ மந்திரவாதியோ அல்லது சாட்சாத் கடவுளோ திடீரென கீழே தோன்றி சற்று நீட்டித்து விட்டால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. பாருங்கள் அப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா நேரத்தை ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக ஒதுக்கிக் கொள்ளலாமே..

    ஆனால் உண்மையாகச் சொல்லப்போனால் நமக்கு நேரம் நிறைய இருக்கவே செய்கிறது. ‘டைம் மேனேஜ்மெண்ட்’ என்று வைத்துக்கொண்டு கொஞ்சம் நேர்த்தியாக திட்டமிட்டு நம் வழக்கமாக செய்யும் வேலைகளை பிரிவுபடுத்திக்கொண்டு இன்னின்ன வேலைகளுக்கு இன்னின்ன நேரம் ஒதுக்கி அதன்படி செய்வோம் என்று பார்த்தால் இன்றைய இந்த பரபரப்பான காலத்திலே நமக்கு நேரம் அதிகமாகவே மீதி இருக்கும். டைம் மேனேஜ்மெண்ட் என்பதெல்லாம் ஆகிற காரியமா.. என்றால் அதுவும் சரிதான்.. இதுக்கெல்லாம் நாம் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் நமக்கென்று இந்த விஷயங்களை ஒட்டிய ஒரு நல்ல கட்டுரையை வல்லமையில் வெளியிட்டிருக்கிறார் திரு பெருவை பார்த்தசாரதி.

    ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

    பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
    உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
    மண்டி அவ்வழி நடவாதே.

    நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

    பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
    அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

    வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் http://www.vallamai.com/paragraphs/29506/

    நல்ல விஷயங்களைப் படிக்க நாம் எப்படியாவது நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும் என நம் மனதுக்கு நாமே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும் என்றே இக்கட்டுரையைப் படித்தபின் தோன்றுகிறது அல்லவா. இப்படி ஒரு நல்ல கட்டுரையைத் தந்த திரு பெருவை பார்த்தசாரதி அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமை குழு சார்பாக தெரிவிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வல்லமையாளரான திரு பெருவை பார்த்தசாரதியிடம் மேலும் பல நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்வோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: பாகம் பிரியாள் அவர்களின் சில கவிதைத் துளிகள்.

    இதோ

    யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
    யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
    ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
    வழுக்குப் பாறையின் மீது!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    விக்கிரமாதித்தன் கதையில் மிகவும் எது முக்கியமானது என்றால் அந்த அரசனின் விடாமுயற்சி எனும் சிறப்பான குணம்தான். ஒவ்வொருநாள் இரவும் மெனக்கெட்டுப் போய் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வேதாளத்தைத் தன் தோளில் தொங்க்ப்போட்டுக்கொண்டும் அந்த வேதாளத்தின் கதையை விடாமல் கேட்டுவிட்டு அது திருப்பிக் கேட்கும் கேள்விக்கு திருப்தியாக விடை சொல்லிக்கொண்டும்,  விடை கிடைத்தாலும் உடனே அவனை விட்டு நழுவிப்போகும் வேதாளத்தை சற்றும் மனம் தளராமல் மறுபடியும் அடுத்த நாள் இரவு தேடிப் போய்ப் பிடித்து தோளில் தொங்கபோட்டுக்கொண்டு… அடடா, அவன் பொறுமையே பொறுமை என்று படிப்போர் பாராட்டத்தான் செய்வர்.

    இந்த விக்கிரமாதித்தனின் விடாமுயற்சி போல இன்னொரு பெண்மணி இப்படித்தான் நம் தமிழ் நாட்டு தொல் மரபுகளை சேமித்து வைக்கவும், அதைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு முறையும் (யாரைப் புதிதாகப் பார்க்க நேர்ந்தாலும்) கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படி மற்றவர்களை மட்டும் கேட்டுவிட்டு நின்று விடாமல் அந்தப் பணியை தானே முன்னின்று செய்வதிலும் வல்லவர். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த மலேயத் தமிழர் திருமதி சுபாஷிணி டிரெம்மல்.

    சுபாவை கடந்த ஆறு வருடங்களாகவே தெரியும். என் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினம் வருகை தந்தவர். வந்தவர் ஒரு பொழுதும் சும்மா இராமல் தமிழ்ச்சங்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தமிழ் மரபைக் காக்க அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லிகொடுத்தார். இது அவரது இயல்பான வேலைகளில் ஒன்று என அன்றுதான் தெரிந்துகொண்டேன். எந்த ஊர் சென்றாலும் அந்த ஊருக்கே உரிய பெருமைகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற கொள்கையும் அதன் தொடர்பான அவரது விடா முயற்சியும் சென்ற இடங்களிலெல்லாம் மக்களை அதற்கேற்றவாறு ஊக்குவித்துக்கொண்டும் செல்லும் இவரது திறன் ஆற்றல் மிக்கது. இப்படித்தான் கடந்தமுறை இந்தியா வந்தபோது அவர் சென்ற ஊர்களில் கண்ட அனுபவங்களையும் தொல் பெருமையையும் சமீபத்தில் பதிவிட்டு வருகிறார். அதனுள் சென்றவாரம் பதிப்பித்த தேவகோட்டை ஜமீன் பதிவில் ஒரு விசேஷம் இருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த  குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது. http://voiceofthf.blogspot.de/2012/12/blog-post.html

    இதில் விசேஷம் என்னவென்றால் இவர் செல்லுமிடமெல்லாம் அவர்களது பேட்டியைப் பதிவு செய்வதுதான். அந்தப் பதிவின் போது பலர் அறியாத புதிய செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக நகரத்தார் ராஜாக்களுக்கு அந்தக் காலங்களில் கடன் கொடுத்து உதவுவது போன்ற விஷயங்கள், தஞ்சை போன்ற பெரிய இடங்களை அடமானமாக ராஜாக்கள் வைக்க ஒப்புக்கொண்ட விஷயங்கள், ராமேஸ்வரம் போன்ற பெரிய கோயில்களுக்கு அவர் முன்னோர் செய்த திருப்பணிகள், அந்தக் காலகட்டத்து மக்களின் வாழ்க்கை விவரங்கள், செட்டியார்களின் வாழ்க்கைப் போக்குகள் இன்னும் பல விஷயங்கள் பேட்டி எடுக்கப்பட்டு வரும்போதும் அப்படியே அவைகள் சேமிக்கப்படும்போதும் பிற்கால சந்ததியினருக்கு இந்த விஷ்யங்கள்  எப்பேர்ப்பட்ட உதவிகளை அது செய்யப்போகிறது என்பதனை நினைத்துப் பார்த்தாலே சந்தோஷம் வருகின்றது. ஏற்கனவே பாரதி பிறந்த எட்டயபுரத்தைப் பற்றி பலர் அறியாத விஷயங்களை புகைப்படங்களோடு பதிவு செய்து பாதுக்காத்து வைத்திருக்கிறார். இவர் முயற்சியால் மரபு விக்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நல்ல விஷயங்கள் மரபு விக்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. விஷயதானத்தை சிறந்த வகையில் பகிர்ந்து கொள்ள எல்லா வழிகளையும் பின்பற்றும் இவரது விடாமுயற்சியைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா?

    விக்கிரமாதித்தனின் விடாமுயற்சி கடைசியில் வேதாளத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, பின்னர் அது விக்கிரமாதித்தனுக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்யப்போவதும் கதையைப் படிப்பவர்களுக்குதான் புரியும். ஆனால் சுபாவின் விடாமுயற்சியின் பலன்கள் யாவும் பிற்கால சந்ததியினருக்கே.. அவர் மட்டுமல்ல, அவரால் ஊக்குவிக்கப்பட்டு அவரைப் போலவே மரபைப் பாதுகாக்கும் ஒவ்வொருவரின் செயலும் பிற்காலச் சந்ததியினருக்கு எத்தனையோ உதவிகள் செய்யப்போகிறதுதான். விக்கிரமாதித்தனின் விடாமுயற்சியை விட சுபாவின் விடாமுயற்சி சிறப்பாக இருக்கிறது.

    இந்த தற்கால விக்கிரமாதித்தியின் (விக்கிரமாதித்தனுக்கு பெண்பால் பெயர் கொடுத்தால் விக்கிரமாதித்திதானே) தொல் மரபைப் பாதுகாக்கும் பணிகளுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் தாராளமாகத் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் இந்த வாரத்தில் அருமையான ஒரு குரல்பதிவைத் தந்த திருமதி சுபா அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வல்லமையாளரான சுபாவால் மேலும் புதுப்புது விஷயங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படப் போகின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    கடைசிபாரா:  

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது –

    அண்ணா கண்ணனுக்கு திருமண நல்வாழ்த்துகள் இங்கே சொல்லவில்லை என்றால் எப்படி? நீண்டு நீடூழி காலம் இன்பமாய் இருவருமாய் இல்லறத்தை சுவைத்திட வேண்டுவோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    உலகில் மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று எத்தனையோ பேர் எத்தனையோ முறை சொல்லிவிட்டுச் சென்றாலும் சமூகம் மட்டும் அந்த வார்த்தைகளை ஏற்க மறுப்பது ஏன் என்று எனக்கு எப்போதும் புரியவில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் எத்தனையோ சம்பிரதாயங்கள் தோன்றி நிலைத்து மறைந்து போகும் வாழ்க்கையில் நாம் இன்னமும் சில வேண்டாத பழக்கங்களை, சம்பிராதயம் எனும் பெயரில் கைவிடாமல் கையோடு வைத்திருப்பதும், அதனால் ஒரு கொடுமையான மனத் திருப்தியடைவதும் மிகவும் விநோதமான செயலாகத்தான் இருக்கிறது.. அவற்றில் ஒன்றுதான் இந்த கைம்பெண்ணுக்கு அவள் கணவன் மரணத்தோடு இழைக்கப்படும் அநீதி.

    கணவன் இறந்த பத்தாம் நாள் கைவளை ஒடித்தல், தாலியறுப்பது, குங்குமப் பொட்டழிப்பது போன்ற தீய பழக்கங்கள் நகர வாழ்க்கையில் தற்சமய சூழ்நிலையில் காண்பது அரிது என்றாலும் குக்கிராமங்களிலும், சிறிய, பெரிய ஊர்களிலும் இந்த வழக்கம் இன்னமும் இருப்பதைக் கேள்விப்படும்போதெலாம் மனம் அந்த மரணித்தவனுக்காக அனுதாபப்படுவதை விட அவன் மனைவிக்காக பரிதவிக்கிறது. கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இப்படி நிர்ப்பந்திப்பதில் மூத்த பெண்ணினத்தோர்தான் அதிகம் என்ற உண்மை மேலும் நம்மைச் சுடுகிறது. இப்படிப்பட்ட வழக்கங்கள் நாடு முழுவதும் சட்டம் போட்டு தடை செய்யப்படவேண்டும். மனிதன் மனம் மாறினால்தான் உண்டு என்று சொல்வதை விட சட்டம் என்பது செயல்படுத்தும்போது இவை கண்டிக்கப்படுவதோடு தண்டிக்கப்படுபவை என்று மகாஜனங்களுக்குப் புரிந்தால் நிச்சயம் இதற்காகப் பயப்படுவார்கள் என்ற உண்மையும் புரியும்.

    பெண்கள் இடுகாடு வரை சென்று தகனமிடும் செயலை சென்னையில் (பெசண்ட் நகர்) என் தந்தையார் இறந்தபோது கண்டதுண்டு. சுடுகாட்டில் யாரும் இதை ஆச்சரியமாகப் பார்க்காமல் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண் வாரிசும் இதைச் செய்யலாம் என்ற மனப்பாங்கு நகரமக்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. நகர வாழ்க்கையில் சில நல்லவைகளும் இருக்கின்றன, அதே சமயம் இது நகரத்துப் போக்கு என்று புறந்தள்ளாமல் எல்லா இடங்களிலும் மக்கள் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்காக காலத்தின் தேவைக்கேற்றவாறு நாம் மாறாவிட்டால் எப்போது மாறப்போகிறோம்..

    இந்த  சமூக வேறுபாட்டை முன்னிறுத்தி நல்லதொரு கவிதையை வல்லமை குழுவில் பகிர்ந்துள்ளார் கவிஞர் வித்யாசாகர்.

    ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்
    எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்
    வந்துவிழுந்தது அவரின் மரணம்..

    மரணம்; பெரிய மரணம்
    இல்லாதுப் போவது மரணமா?
    பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்
    அவர்களென்ன பிணமா?

    பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்
    அவரின் மரணத்திற்குப் பின் அவளின்
    பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்
    மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?

    உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு
    இன்னும் உயிரோடு கொல்லும் விதவைக் கோலத்தை
    பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு

    கணவன் போனதற்கு நிகராக
    பூவும் பொட்டும் போகும் கணம்
    இன்னொரு மரணமென்று எண்ணி
    அவளுக்காக நானுமழுதேன்;

    என் கண்ணீரும்
    அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன
    நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;

    சுடட்டும் சுடட்டும்
    சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்

    அதன்பின் –
    விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்
    அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று
    பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..
    பூவை அறுத்துக்கொள்வாள்..
    உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,

    அது; அவளது உரிமை!!

    கவிஞர் வித்யாசாகர் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு வெ. சா அவர்களின் நினைவுச் சுவட்டில் http://www.vallamai.com/paragraphs/29089/  ‘அறுபது ரூபாய் படுத்திய பாடு’ படித்ததில் நான் ரசித்த இந்த வரிகள்..

    சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர்களுக்கு மாத்திரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    பொதுவாகவே தமிழர்களாகிய நாம் பெருமைப்படவேண்டிய பெருமையான விஷயம் எதுவென்றால் சிற்பக் கலையில் நாம் சிறந்தவர்களென்பதை மிகவும் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், காவியத்தில் இருப்பதைக் கண் முன்னே காட்ட சிற்பிகள் எத்தனையோ சிரமங்கள் மேற்கொண்டு கடினமாக உழைத்து உளி கொண்டு நேர்த்தியான கலைப் படைப்புடன் செதுக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

    இந்தச் சமயத்தில்தான் இந்த சிற்பங்களைப் பற்றிய ஒரு கட்டுரை குழுக்களில் காண நேர்ந்தது. நண்பர் உதயன் அவர்கள் ’மூதாதையரைத் தேடி’ என ஆரம்பித்து ஊர் ஊராகத் தேடிச் சென்ற கட்டுரை அது. இந்த வாரத்தில் அந்தக் கட்டுரையில் திருப்பரங்குன்றத்து குகைச் சிற்பங்களைப் பற்றியும் தான் தேடிய விவரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் குடைவரைச் சிற்பங்கள் காலத்தின் சிதைவில் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்னமும் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குபவை என்பதை அவைகளை நேரில் பார்த்தோர் மட்டுமே உணரலாம். புதுப்புது அர்த்தங்கள் கொடுக்கும் சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை தனது அழகிய புகைப்படக் கருவியில் பதிவு செய்து வெளியிட்ட பாங்கு மிகவும் கவர்ந்தது. இவருடைய விடாமுயற்சியைப் பற்றிய ஒரு சிறு பகுதியை அவர் எழுத்திலேயே பார்ப்போம்.

    https://groups.google.com/group/vallamai/browse_thread/thread/925727a7cf67ae52#

     

    குடைவரை கோவிலில் படம் எடுத்து முடித்ததும் அங்கிருந்த பாதுகாவலர் நிலையூர் திருப்பத்தில் படுக்கைகள் உள்ளன என்றார். அங்கேயும் போய்விடக் கிளம்பினேன். அவர் சொல்லியபடி அந்த இடம் அடைந்ததும் காம்பவுண்ட் போல் அமைந்திருந்த வீட்டைத் தாண்டி முட் செடிகளைத் தாண்டி பாதை தெரியாமல் மலையேறி நான் பாறை இடுக்கில் சரிந்து மாட்டிக் கொண்டேன். காலையிலிருந்து ஆகாரம், தண்ணீர் அருந்தாமல், சோர்வுடன்  இருந்தாலும் மலை ஏறிவிட வேண்டும் என்ற முனைப்புடன் ஏறிவிட்டேன். நிலையூர் திருப்பத்தில் இருந்த பலகை. மலை சுற்றி வரும் பாதையில் நிலையூர் திருப்பம் இடப்புறம் வரும், அதைத் தாண்டி வலப்புறமாகவே பார்த்து வந்தால் இந்தப் பலகை தெரியும், காம்பவுண்ட்,  முட்செடிகளினூடேதான் பயணிக்க வேண்டும். ….”

    திரு உதயன் அவர்கள் பழகுவதற்கு இனிய பண்பாளர்.  அவரின் விடாமுயற்சியும் உழைப்பும் நம் தமிழ் மரபைப் பற்றிய வேர்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எல்லோராலும் விரும்பத்தக்கதே.. ’திக்கெட்டும் சென்று கலைச் செல்வங்களைக் கொணர்வீர்’ என்ற நம் மகாகவியின் கட்டளைகளுக்கேற்ப சிற்பச் செல்வங்களை நமக்கு சேகரித்துத் தருவது என்ற உதயனின் சேவை மென்மேலும் தொடர வேண்டும். அவரது தேடலை, அவரது கலையார்வத்தை மகிழ்ச்சியாக வரவேற்றும், இந்த வாரம் பதிப்பித்த அவரது சிற்பச் செல்வங்களை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டும், இந்த வார வல்லமையாளர் விருதினை அதே மகிழ்ச்சியுடன் வல்லமை குழுவினர் சார்பில் வழங்கி சிறப்பிப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் (உதயன் என்றதும் ஒரு வார்த்தையில் எத்தனை மகிழ்ச்சிகள் பாருங்கள்..). வல்லமையாளரான திரு உதயன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திருமலைசோமு’வின் ‘மனிதன் எனும் விருட்சம்’ கவிதையில் வரும் வரிகள்தான் இந்த வாரக் கடைசி பாராவில் இடம் பெறுகிறது.

    துளி விந்தின்
    விருட்சம் மனிதன்…

    தன்
    நெடும் பயணத்தில்
    நீண்ட வெற்றிகளை
    நெற்றிக்குள்
    குவியலிட்டுக் கொண்டவன்
    விரல் நுனிக்குள்
    உலகை இயக்கும்
    நூதனம் அறிந்தவன்

    மனிதன்
    மனிதனாய் மட்டுமல்ல
    இறைவனாகவும்
    அவதரிப்பவன்.

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

     

    திவாகர்

    ஒரு சில திரைப்படங்களில் கடைசிக் காட்சியில் ‘ஆகையினால் சாட்சிகளின் விவரங்களினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஹீரோதான் கொலையாளி’ என்று நீதிபதி தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்குமுன் திடீரென ஒரு சாட்சி வந்து ‘இல்லை யுவர் ஹானர், நான் பார்த்தேன் இவர் கொலையாளி அல்ல’ என்று சொல்லி என்ன நடந்தது என்பதை ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் தெரிவித்து, கொலை செய்த வில்லனை சரியாகக் கண்டுபிடித்து கடைசியில் ஹீரோவைக் காப்பாற்றி படத்தின் கதையையும் சுபமாக முடிப்பதை நாம் எல்லோருமே ரசித்திருக்கிறோம்.. என்ன இது பீடிகை என்று பார்க்காமல் கீழே படியுங்கள்.

    சென்ற நூற்றாண்டின் மத்திய காலத்தில் நமக்குக் கிடைத்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள். தமிழில் கதைகளுக்கென எனப் பார்க்கும்போது கல்கிக்கு தலைமைப் பீடம் கொடுத்தே ஆகவேண்டும் எனவும் சொல்லலாம். அவரது எழுத்து நடை எல்லோராலும் விரும்பப்பட்டது. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு முன்னோடியாகவும் கூட இருந்தது. இப்படிப்பட்டவர் ஒரு மாபெரும் கதை இலக்கியத்தைப் படைத்தார். தமிழ் வாசகர்கள் என்றும் போற்றும் விதத்தில் அவர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அதை வழங்கினார். அவர்கள் மனதில் நிரந்தரமாகப் பதித்தார். அதுதான் பொன்னியின் செல்வன்.

    பொன்னியின் செல்வன் வரலாற்றுக் குழுமம் (ஆங்கிலம்) என்றொரு யாஹூ குழுமம் நம்மிடையே உள்ளது. இக்குழுமத்தில் பொன்னியின் செல்வனை விரும்பிப்பபடித்து அந்தக் கதையைப் பற்றிய விவாதங்கள் அடிக்கடி பலரால் எழுதப்படும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையையும் தீர ஆராய்ச்சி செய்து எழுதுவார்கள். இந்தக் குழுமத்தைக் கேள்விப்பட்டு புதியதாய் சேரும் அனைவரும் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்ன தெரியுமா?

    “அன்புள்ள ஐயா, நான் இந்தக் குழுமத்துக்குப் புதியவன்(ள்), ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதைத் தெரிவிக்க முடியுமா?”

    இந்தக் கேள்விக்குப் பதிலாக எத்தனையோ இழைகள் அந்தக் குழுமத்தில் உள்ளன என்றாலும் இங்கு புதிதாக வருவோர் மட்டும் ஒவ்வொரு முறையும் இதை மறக்காமல் கேட்டு விடுவர். ஆதித்த கரிகாலன் என்கிற சோழ இளவரசனைப் போல முந்தைய காலத்தில் எத்தனையோ ராஜாக்கள், இளவரசர்கள் கொலை செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆதித்த கரிகாலன் சோழன் கொலையை மட்டும் மிகப் பரவலாக தெரியப்படுத்திய பெருமையும், இந்தக் கொலைக்கு மட்டும் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்த புகழும் கல்கியைத்தான் சாரும். வாசகர்களை கொக்கிப் போட்டு இழுத்து அவர்களின் மூளையின் முக்கியமான செல் ஒன்றினைத் தேடி, அதனுள் இந்தக் கேள்வியைப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பதிலுக்காக எந்தவித உறுதியான சாட்சியத்தையும் தராமல் சென்றுவிட்டார் கல்கி. இத்தனைக்கும் இதே ஆதித்தன் பெயரில் இவனுடைய பாட்டன் ஒருவன் மிகவும் புகழோடு மிக அதிகமான அளவில் கோயில்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல், கல்கியால் பேசப்பட்ட ஆதித்தகரிகாலனை விட, வீராதி வீரனாக, சோழகுலத்தையே மீட்டெடுத்த நாயகனாக சரித்திரக் கல்வெட்டில் புகழ்பாடப்பட்டவன், அவனும் பேச்சு வார்த்தைக்காக சென்றபோது எதிரிகளால் நயவஞ்சகமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டவன், ஆனால் இப்படிப்பட்டவனுக்குக் கிடைக்காத ஒரு புகழை இந்த இளவரசன் ஆதித்தகரிகாலனுக்கு வழங்கிவிட்டார் கல்கி.

    அவனைக் கொலை செய்தது யாராக இருக்கும்? இது எல்லா வாசகர்களையும் சிந்திக்க வைத்த கேள்விதான். பலர் பலவிதமாக ஆராய்ந்து சரித்திரக் கல்வெட்டுகளோடு இணைத்து பொன்னியின் செல்வன் குழுமத்தில் எழுதினாலும், கல்கி எவ்வாறு உண்மையுடன் சற்று கற்பனையும் கலந்து மிகப் பெரிய விருந்து படைத்தாரோ, அதே கோணத்தில் இந்தக் கொலையைப் பற்றி சிந்தித்து, இந்த காலத்துக்கேற்றவாறு அதன் நடையை மாற்றி, இதற்கான விடையை தன் பாணியில் சொல்லியிருக்கிறார் திருமதி பர்வதவர்தினி.

    ஒரு கதையை பழைய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாசகரை நம்பவைக்கவேண்டியது ஒரு எழுத்தாளரின் திறமை. கொலை நடந்த இடத்தே நான்கு பேர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவரை நாம் கொலையாளி என்று சான்றுகளுடன் காண்பிக்கவேண்டும் என்று தானே நேரில் சென்று பார்த்துச் சொல்வது போன்ற ஒரு சாட்சியத்தை தகுந்த பாத்திரத்தின் மூலமாக (சாரு)  மிகவும் ருசிகரமான பாணியில் தெரிவித்திருக்கிறார் பர்வதவர்தினி.

    மேலே முதலில் கண்ட வரிகளுக்கு வருவோம். பொன்னியின் செல்வனில் நாயகர்களில் ஒருவனாகப் படைக்கப்பட்டிருந்த வந்தியத்தேவனைக் குற்றவாளியாக காண்பித்து விடுவித்திருந்தாலும் கொலையை இன்னமும் மர்மமாகவே வைத்த வாசக நீதிபதிகளுக்கு விடை சொல்லும் வகையில் பர்வத வர்தினி நேரே கண்ட சாட்சியமாகத்  தன் கால இயந்திரம் கதையைத் தந்திருக்கிறார் (http://www.vallamai.com/literature/serial/28213/) இடும்பன்காரியைக் காட்டிக் கொடுத்து கொலைக்கு சுப முடிவாகக் காட்டியிருந்த இந்தப் பாணி மிக நன்றாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட ருசிகரமான கதையை வல்லமையில் வழங்கிய் திருமதி பர்வதவர்தினியை வல்லமை குழுவினர் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று சொல்லவும் வேண்டுமோ..

    க்டைசி பாரா: திரு சம்பத் அவர்களின் பின்னூட்டம் ஒன்று:

    ”சாதாரணமாக ஒரு சீருந்து நம்மைத் தாண்டி செல்லும்போது நாம் அந்த காரின் பின் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார் என்றுதான் பார்ப்போம். ஆனால் அர்ஜுனன் அமர்ந்த ரதம் ஓடும்போது எல்லோர் பார்வையும் அவன் தேரோட்டிமீதுதான் பட்டது. கண்ணன் பார்த்தசாரதி மட்டும் அல்ல. எல்லோரும் ’பார்த்த’ சாரதி கூட!”


    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    ”உள்ளம் என்பது ஆமை – அதில் 

    உண்மை என்பது ஊமை,

    சொல்லில் வருவது பாதி, 

    நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி” 

    கவியரசு கண்ணதாசனின் இந்த அருமையான பாடலை யாராவது அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திக் கொ0ண்டிருப்பார்கள் போலும்!


     உள்ளம் அல்லது மனதில் ஊறும் சிந்தனைகளை யாரும் அப்படியே வெளியே சொல்ல முடியாதுதான்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான விசித்திர உருவகங்கள், எத்தனை விதமான சிந்தனைகள், எத்தனை விதமான விருப்பங்கள்.. ஒரு தனி மனிதனின் விருப்பமான விஷயங்கள் பற்றி ஒரு உண்மை அறிய கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு கேட்டால் ஏகப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது தீனி போடும்.. ஏகப்பட்ட சினிமாப் படங்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உருவாகி ( இந்தியாவைப் பொறுத்த வரை மலையாளிகள்தானே உண்மையான திரைப் படைப்புகளை இன்னமும் தருகின்றார்கள்!) மேலும் மேலும் மனிதனை வியக்க வைக்கும்.


    தனி மனிதன சிந்தனைப் போக்குக்கு தடையே இல்லைதான்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளாகட்டும் மெய்ஞ்ஞான நீதியாகட்டும் அவனின் தனிப்பட்ட சிந்தனைப்போக்கில்தான் அது உருவாகிறது.. வேதாந்த சித்தாந்தங்களும் கூட அவன் சிந்தனையின் ஒரு கட்டம்தான். விருப்பமும் வெறுப்பும் கூட அவன் தனி மனிதப் போக்குதான். ஒருவனுக்கு ஒன்றைக் கண்டால் காரணமில்லாமலே பிடிக்காது.. ஒருவனுக்கு அந்த குறிப்பிட்ட ஒருவனைக் கண்டாலே பிடிக்காது. இதற்கெல்லாம் காரணம் அவனிடம் நிச்சயமாகக் கிடையாது. மனம் சொல்கிறது.. பிடிக்கவில்லை.. அவனால் அந்த உணர்ச்சியை மாற்றிக்கொள்ள முடியவே முடியாது போலத்தான் தோன்றும். மனமாற்றம் என்பது எளிதில் பெறக்கூடியது அல்லவே அல்ல. மனமாற்றம் என்பது பல சோதனைக் கட்டங்களைத் தாண்டித்தான் ஏற்படும்.. 


    இப்படித்தான் மனத்தில் தோன்றும் ஒரு விசித்திரமான விருப்பத்தின் பேரில் ஒரு கதையை எழுதி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் திரு அரவிந்த சச்சிதானந்தம். http://www.vallamai.com/literature/short-stories/28531/ இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெண்கள் அணியும் ஆடையிலிருந்து கைக்குட்டை வரை உள்ள தனிப்பட்ட பிரியத்தை அழகாக விளக்கி இருக்கிறார். இது சாதாரணமாகப் படிக்கும்போது இந்தக் கதாபாத்திரத்தில் சாயல் மாறுபட வாய்ப்புள்ளது. ஆனால் இப்படி மாறுபடாமல் உள்ளத்திலேயே ஊற வைத்துக்கொண்டு மறைமுகமாக தன் உள்ளத்து ஆசைகளைத் திருப்திப்படுத்துவதாக எழுதி இருக்கிறார். மெல்லிய கயிறின் மேல் நடப்பதாக இந்தக் கதாபாத்திரம் காணப்பட்டாலும் கயிறு அறுக்கப்படாமல் பாத்திரத்தின் நடையை நகர்த்தி செல்லும் திரு அரவிந்த் சச்சிதானந்தந்தத்தை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் அறிவிக்கிறோம். இது போன்ற மனோவியல் சம்பந்தப்பட்ட கதைகளை அடிக்கடி எழுதவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்..


    திரு அரவிந்த அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.


    கடைசி பாரா: 

    வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து…

    சதம் அடித்த திருமதி விசாலம் அம்மையாருக்கு வாழ்த்துகள்
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    ஆங்கில எழுத்தாளர்கள் பலர் கடந்த கால சரித்திர நாயகர்களை – குறிப்பாக இருபதாம் நூற்றாண்டு சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை மிகச் சீரிய வகையிலும், மிக ஆழமாகவும் ஆராய்ந்து அதையே கதை போல எழுதி எத்தனையோ வாசகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இர்விங் வால்லஸ், இவர் எழுதிய கதை ஒன்றில் ஜெர்மனியின் ஹிட்லரைப் பற்றிய விவரங்களை மிக ஆராய்ந்து ஹிட்லர் 1945 இல் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் 1962 இல் இயற்கையாக இறந்ததாகவும், மனைவி ஈவா இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் எழுதி பரபரப்பு ஏற்படுத்துவார். அதற்காக அவர் கொடுத்த தரவுகள் மிகப் பலமான சான்றுகளாக கதையோடு ஒன்றி இருக்கும். இருந்தும் உண்மையில் அது கற்பனைதான் என்பதே உண்மை. நான் விரும்பிப் படித்த புத்தக்ங்களில் இது ஒன்று.

    ஆனால் இந்தியாவில் இர்விங் வாலஸுக்கும் முன்பாகவே ஒரு எழுத்தாளர்  இதே போல தோற்றம் கொண்ட கதையை ஆங்கிலத்தில் எழுதினார். அவர்தான் பாரதிய வித்யா பவனின் ஸ்தாபகரான மறைந்த கே. எம். முன்ஷி. இவர் எழுத்தின் கதாநாயகன் வேறு யாருமல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரத மக்களின் உணர்வோடு ஒன்று கலந்து புகழப்பட்டு வரும் மதுராபுரி மாயன் அந்தக் கண்ணபிரானே. ஆனால் புராணங்கள் வழியாகப் போகாமல் புராணங்களை ஒரு அடிப்படையாக மட்டும் வைத்துக் கொண்டு கண்ணன் எப்படி இந்த உலகுக்கு வந்திருப்பான், எப்படி சிந்தித்திருப்பான், எப்படி பாரதப் போரை முடித்திருப்பான் என்ற தீர்க்க சிந்தனையின் பேரில் ஒரு புத்தகம் எழுதினார். கிருஷ்ணா சீரிஸ் என்ற பெயரில் ஏழு புத்தக்ங்களாக அவரே வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் கண்ணன் தெய்வீகப் பிறவி அல்லவே அல்ல. சாதாரண மானுடன். ஆனால் ஒவ்வொரு சாகசத்தையும் அவன் வெற்றியுடன் முடித்துக்கொடுக்கும்போது அவன் மகுடத்தில் மயிலிறகு ஒன்றொன்றாக ஏறும். மிக அருமையாக இப்படித்தான் நடந்தது என்பதை நமக்கு அடித்துச் சொல்வது போல ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கும். திரௌபதி சுயம்வரமும் அவள் ஏன் ஐவரை மணக்க ஒப்புக் கொண்டாள் என்பதையும் தன் பாணியில் இவர் விவரிக்க விவரிக்க, அட, அனைத்தும் சரிதான் என்றுதான் நமக்குத் தோன்றும்.
     
    இந்த கிருஷ்ணா கதையைத் தமிழில் எழுதி வருகிறார் திருமதி கீதா சாம்பசிவம். வாரா வாரம் இவர் பிளாக்கில் வந்து கொண்டிருக்கிறது.http://kannanvaruvan.blogspot.in/ இந்த வார அத்தியாயத்தில் இயற்கையை வர்ணித்திருப்பார். எத்தனைதான் முன்ஷி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் அந்த வர்ணனையைப் படிக்கும்போதே அந்த இடத்தையே நாம் உணர்வது போல ஒரு நினைவலை..

    கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

    எழுத்துப் பணிகளை ஆரவாரமில்லாமல் செய்து வருபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கீதாம்மா என நான் பிரியமுடன் அழைக்கும் திருமதி கீதா சாம்பசிவம். இவர் எழுத்துகள் அனைத்தும் ஆன்மீக சம்பந்தப்பட்டதாக இருப்பினும் விவரங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அவைகளில் இவரது கடின உழைப்பு தெரியும். சிதம்பர ரகசியம் எனும் தல வரலாற்றினை மிக அருமையாக எழுதினார். பல சமயங்களில் எனக்கு ஆச்சரியம் வருவது உண்டு என்றால் அது இந்த கீதா சாம்பசிவம் அவர்களின் சில அயராத பணிகளைக் கண்டுதான். எல்லோருக்கும் சலிக்காமல் ஊக்குவித்து பின்னூட்டம் இடுவது, தன்னிடம் கிடைக்கப்பெற்ற எல்லாவற்றையும் கூர்ந்து படிப்பது (இது மிகவும் முக்கியம்),

    ஆனாலும் சென்றவாரம் அவர் முன்ஷியின் கிருஷ்ணா அத்தியாயத்தில் இயற்கைக் காட்சிகள் எழுதிய விதம் என்னை  மிகவும் ஆர்வத்துக்குள்ளாக்கினதான். இந்த வார வல்லமையாளராக திருமதி கீதா சாம்பசிவத்தைத் தேர்வு செய்வதில் வல்லமையாளர் குழு பெருமை கொள்கிறது. வாழ்க அவரது எழுத்துப் பணி!

    இந்த வார கடை பாரா: எனக்கு மிகவும் பிடித்த திருமூலர் பாடல். பாடலுக்கு உள்ளார்ந்த விளக்கத்தோடு கூடிய பொருளோடு வல்லமையில் வெளியிட்ட சுலோச்சனா அவர்களுக்கு நன்றி. http://www.vallamai.com/literature/articles/28444/

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    நாம் பல திருத்தலங்களுக்குச் செல்கிறோம். அங்கே சென்றவுடன் கோயில் தரிசனத்தில் பெரும்பகுதியை சுவாமி தரிசனத்திலேயே செலவிட்டு வந்து விடுகிறோம். அப்படி  அந்தக் கோயிலுக்குள் சென்று சுவாமியையும் அம்பிகையையும் தரிசித்ததோடு மட்டுமல்லாமல், அக்கோயிலுள்ள பழம் பெருமை மிக்க சிற்பங்கள், அந்தத் தலம் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்றிருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டோமேயானால் நாம் சென்று வந்துள்ள தலத்தின் முக்கியத்துவம் நம் மனதுக்குள் மிக அதிகமாக எழுந்து ஒரு அசாதாரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.

    இப்படித்தான் சென்ற வாரம் திருவக்கரை – தேவாரப் பாடல் பெற்ற தலத்தினுக்கு சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கோயிலில் முதலில் நாம் தரிசனம் செய்வது கருணாமயியான வக்கிரகாளி அம்மன்தான். அம்மனைப் பற்றிய விவரங்கள் பிறகு ஓர் சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன் என்றாலும் நாம் இந்த அம்மனை திருவக்கரை காளி என்றே அழைக்க வேண்டும் என்ற விவரத்தினை அந்தக் கோயில் உட்புறம் சென்றபின் அங்குள்ள திருமுறைப் பாடல் கல்வெட்டின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    திருவக்கரை எனும் தலத்தில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் சொரூபமான சிவபெருமானை சம்பந்த சுவாமிகள் வழிபடும்போது தம் பதிகத்தில் அத்தலத்தை ‘திருவக்கரை’ என்றே அழைக்கிறார். ஆகையினால் இங்குள்ள காளி தேவியைக் கூட திருவக்கரை காளி என்பது மருவி வக்கர காளி என்று வந்திருக்கவேண்டும் என்ற குறிப்பினையும் உணர்ந்துகொண்டேன். வக்ர காளியோ, வக்கிர காளி அல்லது வக்கர காளியென்றோ (கோயில் போர்டில் அப்படித்தான் தெரிவித்திருக்கிறார்கள்)  அழைப்பது உசிதம் அல்ல என்ற உண்மையும் புரிந்தது.

    நம் தமிழ்மொழியில் பண்டைய கால இலக்கியங்களில் மிக அதிகமாக மக்கள் வழக்கத்தில் இன்றளவும் உள்ள பாடல்களில் திருமுறைப்பாடல்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது என்பதும் உண்மைதானே. தேவாரப் பாடல் எல்லாமே உள்ளத்துக்கு மிக மிக ஆறுதலாகவும் நம்முடைய மனத்துயர் நீக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் அந்த 1400 வருடங்களுக்கு முன் உள்ள இயற்கை காட்சிகளையும், பாடல் பெற்றுள்ள ஒவ்வொரு தலத்தில் வாழும் மக்கள் வாழ்க்கை நெறிகளையும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பையும் பெருகிறோம்.

    அதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்தக் காலகட்டத்திலே விளைந்த ஏராளமான விளைபயிர், பூக்கள், மரங்கள். செடிகள் என்பன அந்தக் காலத்திலே வழங்கப்பட்ட செய்திகளுடனே நமக்கு தேவாரப் பாடல் மூலம் கிடைக்கிறது. மயிலை நூ.த.லோகசுந்தரம் அவர்கள் திருமுறை பாடல் பெற்ற தலங்களை அநேகமாக அத்தனை தலங்களையும் சேவித்தவர் மட்டுமின்றி வைப்புத் தலங்கள் உட்பட அனைத்துத் தலங்கள் பற்றியும் அதிகமான அளவில் குறிப்பு எடுத்துக் கொண்டு அத்தலங்களப் பற்றி எழுதி வருகிறார். இப்படி ஒரு திருத்தலமான மாந்துறையைப் பற்றி அவரது விளக்கம் அத்தலத்துப் பாடலிலிருந்து நமக்குத் தருகிறார். http://www.vallamai.com/paragraphs/28023/

    இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்.

    இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகை மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.

    வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.

    தேவாரத் திருத்தலங்கள் பற்றிய செய்திகளையெல்லாம் நாம் நன்றாக அறிய வேண்டும். நம் தெய்வத் திருத்தலங்கள் எத்தனை பெருமைமிக்கவை என்பதை திரு நூ.த. லோகசுந்தரம் அவர்கள் தெரிவிக்கும்போது ஆச்சரியமும் அத்தலத்தை நேரில் காணும் ஆர்வமும் உண்டாகிறது. வல்லமை குழுவின் சார்பில் பெரியவர் திரு நூ.த.லோகசுந்தரம் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் நாம் பெருமை அடைகிறோம். வல்லமையாளருக்கும் நாம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா:

    விஜயதசமி திருநாளில் தமிழ் வகுப்பு ஒன்றினை ஆரம்பித்து வைத்திருக்கும் திரு இன்னம்புரான் அவர்களின் ‘தமிழார்வம்’ கட்டுரைத் தொடரில் உள்ள ஒரு உன்னதமான கருத்து ஒன்று இந்த வாரத்தில் கடைசி பாராவில் இடம் பெறுகிறது.

    செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.     நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    இனி வரும் பத்துப் பதினைந்து நாட்கள் உலகம் முழுதுமே பேசப்போகும் செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பற்றிதான். இந்தியர்களுக்கு பொதுவாக பத்து வருடங்களுக்கு முன்பு இந்த அமெரிக்கா தேர்தல் விவகாரங்களில் எல்லாம் அவர்களுக்கு விருப்பம் கிடையாது. ஆனால் இந்த மென்பொருள் தொழிலில் எப்போது இந்தியா மேன்மை அடையத் தொடங்கியதோ, எப்போது மென்பொருள் ஏற்றுமதி மூலம் தன் வளர்ச்சி விகிதத்தை மிக அதிகமாக உலகுக்குக் காட்டத் தொடங்கியதோ, எப்போது அமெரிக்கா இந்த இந்திய மென்பொருள் வித்த்கர்கள் மூலம் பலனடையத் தொடங்கியதோ, எப்போது இந்தியாவில் உள்ள மத்தியதரக் குடும்பங்கள் ஏராளமாக மென்பொருள் வித்தகர்களை உருவாக்கி அவர்கள் மூலம் வளர்ச்சி அடையத் தொடங்கியதோ, அப்போதே அமெரிக்காவும் அமெரிக்க அரசியலும் அமெரிக்க ஆட்சியர்களின் சாதக் பாதக முடிவுகளிலும் இந்தியர்களுக்கு  ஒரு தனிப்பட்ட விருப்பத்தை உண்டாக்கிவிட்டது எனச் சொல்லலாம்.

    இந்த 2000 ஆம் ஆண்டு வருமுன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கடுஞ்சிக்கலான Y2K (Data memory loss) ஏற்பட்டபோது அதைப் பெருமளவில் சரிசெய்ய இந்திய மென்பொருள் பொறியாளர்கள் உதவினார்கள். அதன்பிறகு மென்பொருள் ஏற்றுமதியும் இந்தியாவில் சூடு பிடித்தது. அமெரிக்கா முதற்கொண்டு பல மேலை நாடுகள் இந்திய மென்பொருள் கம்பெனிகள் மூலம் காண்டிராக்ட் வேலைகளைக் கொடுத்து அதன் மூலம் அனைவரும் பலன் பெற வேண்டிய ஒரு நல்ல ஏற்பாட்டை ஏற்படுத்தினர். குறிப்பாக இந்தியா இதனால் பொருளாதாரத்தில் மிகப் பரவலாக பலன் அடைந்து வருவதை நாம் மறுக்க முடியாது.

    இதனால் அமெரிக்கா எடுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரக் கொள்கை ஒவ்வொன்றும் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமானவையாகப்படுகிறது. அங்கு செயல்படும் ஜனாதிபதி எவ்வாறு செயல்படுகிறார் என்பது நமக்கு முக்கியமானவையாகப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தெரிந்தும் தெரியாதது போல தற்போதைய ஜனாதிபதி ஒபாமா இந்தியர்களுக்கு எதிரான சூழ்நிலையில் இருப்பதாக பல்நோக்கர்கள் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இத்தகைய சூநிலையில்தான் நம் தமிழ் குழுமங்களில் ஒரு சுவையான விவாதக் களம் படித்தேன். நண்பர்கள் வேந்தன் அரசு, பழைமைபேசி, செல்வன் போன்றோர் மிகச் சுவையான விவரங்களையும் குடியரசு-ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதங்களையும் அழகாகத் தொகுத்து நமக்கு தந்து வருகிறார்கள். மூவரில் இருவர் ஒபாமாவுக்காகவும், செல்வன் ரோம்னிக்காகவும் வாதாடி வருவதும் சுவையாக உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளர் பொதுவாக இந்தியர்களுக்கு சாதகமானவர் போல ஒரு போக்கினை உருவாக்கி வருவதும் தெரிய வருகிறது, என்றாலும் ஒபாமாவின் அமெரிக்க மக்களின் நலம் என்ற போர்வையில் அவர் ஓட்டுக் கேட்டு வருவதை ரோம்னியாலும் எதிர்க்கவும் முடியாது.. முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழ்நிலை பொதுவாகக் காணப்படும் இந்த நேரத்தில் நம் இந்திய பணநாயகத் தேர்தலை விட (அமெரிக்காவிலும் பணம் நன்றாகவே விளையாடும், ஆனாலும் வெளிப்படையாகத்தான்) நமக்குத் தனிப்பட்ட விருப்பத்தை இந்தமுறை இந்தத் தேர்தல் உருவாக்கி வருகிறது.

    நம்மைப் பொறுத்தவரை, ரோம்னியானாலும் சரி, ஒபாமாவானாலும் சரி, யார் ஆண்டாலும் நம்மைப் பாதிக்காத அளவில் ஆளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இவர்கள் இருவருமே நண்பர்களுமல்ல, எதிரிகளுமல்ல.. ஒரு நல்ல பிஸிநஸ் ரிலேஷன், நமக்கு நல்ல பயனளிக்கும் உறவு, மேலும் வலுப்பெறவேண்டும் – இதுதான் நமது விருப்பம்.

    செல்வன் ஒரு தனியாளாக நின்று இந்த விவாதக் களத்தில் நன்றாகவே சமாளித்து வருகிறார் என்றுதான் படுகிறது. அவர் கொடுத்து வரும் தகவலின் ஒரு பகுதியை இங்கே உங்களுக்காகத் தருகிறேன்.

    மக்கள் தீர்ப்பை பற்றி ஒபாமா என்றும் கவலைபட்டது இல்லை. “மக்கள் யார் எனக்கு உத்தரவு போட?நான் போடுவது தான் சட்டம்..பிடிங்கடா ஒபாமா கேரை” என நான்சி பெலோஸி, ஹேரி ரீடுடன் இணைந்து வல்லடியாக ஒபாமகேரை மக்களின் அத்தனை எதிர்ப்பையும் மீறி சர்வாதிகாரமாக திணித்தவர் ஒபாமா. அதனால் மக்கள் தீர்ப்பை பற்றி நாம் இங்கே பேசுவதில் பொருளே இல்லை. மக்கள் திரிப்பை மதிக்கணும் எனில் ஒபாமகேரை அடுத்த நிமிடம் தூக்குவதுதான் முறை.

    மற்றபடி ஒபாமகேர் மிக பெரும் பொய்களாலும், பிராடுதனத்தாலும் கட்டப்பட்ட சீட்டுகட்டு மாளிகை. மெடிகேரில் இருந்து 716 பில்லியன் டாலரை தூக்கி ஒபாமாகேரில் போட்டு “நான் மெடிகேரையும் காப்பாற்றுகிறேன், ஒபாமம்கேரையும் பண்ட் செய்கிறேன்” என டபுள் கவுண்ட் செய்தது ஒரு மிகபெரிய பொருளாதார மோசடி. அடுத்து “தனியார் கம்பெனியில் ஒரு பொருளை வாங்காதவருக்கு பைன் மற்றும் ஜெயில்” என உலக வரலாற்றில் எங்கும் இல்லாத தண்டனையை விதித்தது அடுத்த மோசடி

    மூன்றாவது “ஆட்சிக்கு வந்தால் வருடம் $250,000 கீழாக வருமானம் உள்ளவருக்கு வரி விதிக்க மாட்டேன்” என வீதி வீதியாக முழங்கி ஆட்சியை பிடித்தபின் வருடம் $15,000 சம்பாதிப்பவர்கள் “இன்சூரன்சு வாங்கணும், அல்லது வரி கட்டணும்” என வரி விதிப்பில் ஈடுபட்டது மூன்றாவது மோசடி. இந்த வரிவிதிப்பு திட்டம் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா? இல்லை.  காரணம் என்னவெனில் வருடம் பதினைந்தாயிரம் சம்பாதிப்பவர்கள் ஒபாமாவின் சப்சிடியுடன் மாதம் ஐம்பது டாலர் கட்டணம் அதாவது வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு எடுப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை. அதனால் அவர்களுக்கு பணம் மிச்சமாகுமா? இல்லை. காரணம் அபப்டியே இன்சூரன்சு எடுத்தாலும் டிடக்டபிள் ஏழாயிரம் டாலர், எட்டாயிரம் டாலர் என இருக்கும். வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு எடுத்தாலும் எட்டயிரம் டாலர் வரை கைகாசு போட்டு தான் சிகிச்சை எடுக்கணும். சிகிச்சை செலவு ஏழாயிரம், எட்டாயிரம் டாலரை தான்டினால் தான் இன்சூரன்சு கம்பெனி பணம் கட்டும். பெரிய ஆபரேஷன், ஆக்சிடெண்ட் நடக்காமல் இருந்தால் இளைஞர்களுக்கு வருடம் எட்டாயிரம், ஏழாயிரம் டாலர் செலவு ஆகப் போவது இல்லை. அதனால் அவர்கள் அந்த ரிஸ்க்கை எடுத்து வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு ப்ரீமியம் வாங்குவது இல்லை.

    விபத்து நடந்தால், ஹார்ட் அட்டாக் வந்தால் எமெர்ஜென்சி ரூமில் இலவச சிகிச்சை. அப்புறம் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணத்தைக் கேட்பார்கள். பணத்தைக் கட்டவில்லை எனில் நஷ்டம் கோடிகளில் குளிக்கும் ஆஸ்பத்திரிகளுக்கே ஒழிய எமெர்ஜென்சி ரூமில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு அல்ல. ஆக இந்த இன்டிவிஜுவல் மெண்டேட் கோடீஸ்வர ஆஸ்பத்திரிகளின் நன்மைக்கு என சொன்னால் அதில் பொருள் உண்டு. ஏழைகளின் நன்மைக்கு என கூறுவதில் எந்த பொருளும் இல்லை.

    தான் அளித்த வாக்குறுதிப்படி ஒபாமா ஏழைகளின் மேல் வரி விதிக்காமல் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கவேண்டும். அதை செய்யாததால் இத்திட்டம் மகக்ளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. ஏழைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பது நல்ல விஷயம் தான் என்றாலும் அதை இம்மாதிரி மெடிகேரை சூறையாடாமலும், ஏழைகள் மேல் வரி விதிக்காமலும் செய்திருக்கவேண்டும்.

    ரிபப்ளிக்கன்கள் திட்டப்படி “ஸ்டேட் லைன்களைத் தாண்டி இன்சூரன்சு வாங்க அனுமதிப்பது” மற்றும் “டார்ட் ரிஃபார்ம்” ஆகியவற்றை கொண்டு வந்து இன்சூரன்சு செலவை பெருமளவு குறைத்திருக்க முடியும். ஆனால் வக்கீல்கள் ஒபாமா கட்சி ஆதரவாளர்கள் என்பதால் அதைச் செய்ய மறுத்து மெடிக்கல் இன்சூரன்சு கட்டணத்தை பெருமளவு உயர்த்தியுள்ளார் ஒபாமா.

    இவர் வாதங்களில் ஒரு சிறுபகுதிதான் கொடுத்திருக்கிறேன். செல்வன் இப்படியெல்லாம் சொல்வதனால் ரோம்னி நாளை ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் ஒபாமாவின் இதே செய்கைகளை அவரும் அமெரிக்க நன்மை என்ற பெயரில் செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வி கேட்கத் தோன்றினாலும், நல்ல சுவையான கருத்துக்களைக் கொடுத்து அங்குள்ள அரசியலையும் தெளிவாகத்தந்த திரு செல்வன் அவர்களை இந்த வார வல்லமையாளராக நம் வல்லமைக் குழு தேர்ந்தெடுக்கிறது.  திரு செல்வன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

     

    கடைசி பாரா: இசைக்கவி ரமணன் அவர்களின் தேவி நவராத்திரி கவிதைக் கொலுவில் இசைக்கவி எழுதின பொன் வரிகள்தான் இந்த வாரக் கடைசி பாராவில் இடம்பெறுகிறது. பிரபஞ்சத்தை ஆளும் அன்னையை எப்படி வர்ணித்தாலும், எத்தனை முறை வர்ணித்தாலும் போத மாட்டேங்குதுதான்

        காலு வச்ச எடமெங்கும்  தாமரை
        கையி தொட்ட எடமெங்கும் பூமழை
        கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
        கன்னு முட்ட முட்டவரும் பால்மடி

        இவ எட்ட முடியாத பைரவி
        எவனும் கிட்ட நெருங்காத பேரொளி

        அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
        அது தொட்ட கணத்துல பூக்குமே

        இது கட்டுக் கடங்காத வெள்ளமே
        அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே

     

    Share
  • வல்லமையாளர்

     

     

    திவாகர்

    கடுதாசி எழுதுவது என்பதே ஒரு இன்பம். அது போல கடுதாசி நமக்கு வரும்போதெல்லாம் அதைப் படிக்குபோதெல்லாம் ஒரு இன்பம் வரும். உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் செய்திகள் உடனுக்குடன் வரும்  இந்த அதி நவீன காலத்தில், எங்கு நோக்கினும் எல்லோரிடமும் கைபேசி இருக்கும் இந்தக் காலத்தில், அறிந்தவர் அறியாதவர் என்று  எந்நேரமும் நம் காதுகள் ஒரே பிஸி பிஸிதான். மொபைல் வந்தாலும் வந்தது.. போயே போய் விட்டது எழுத்தால் செய்தி தெரிவிப்பது என்பது.. புருஷன் ஊருக்குப் போகிறான். உள்ளூர் ஸ்டேஷன் போய் வண்டி ஏறுமுன்பு மனைவிக்கு ஒரு கால், ஸ்டேஷன் வந்தாச்சு, வண்டிக்கு காத்திருக்கிறேன் என்று, சரி, வண்டி வந்து விட்டது – வண்டி ஏறிவிட்டேன்.. வேற? என்று  இன்னொரு கால், பிறகு வண்டியில் போய்க்கொண்டிருக்குபோதே நிறைய பேச்சுகள், இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் பேச்சுகள்.. பேச்சுகள்.. இந்த உலகில் ஒருத்தரை ஒருத்தர் பிரிவது என்பது சாத்தியமே இல்லை என்பதாக ஆகிவிட்டது

    பிரிவு என்பது அன்பை வலுப்படுத்த மிகவும் அவசியம் என்றெல்லாம் ஒரு காலத்தில் சொல்வார்கள். அந்தப் பிரிவெல்லாம் இனி இல்லை.. ஒருவரை ஒருவர் பிரிந்தால் கூட பிரிவு நேரத்தில் வசதியாக . மொபைல் போன் இருக்கவே இருக்கிறது. எந்நேரமும் பேசலாம், கொஞ்சலாம், சண்டை போடலாம், திட்டலாம், எரிச்சல் படலாம்.. தாம் என்னென்ன அந்தந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கலாம்.. ஆஹா எத்தனை வசதிகள்..

    ஆனாலும் கொஞ்சம் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். அதே மனைவி, அதே கணவன்.. வீட்டை விட்டு வெளியூர் சென்ற கணவன் திரும்பி வரும் வரை காத்திருப்புதான், மனையாளுக்கு எத்தனையோ கவலைதான்.. அதோ தபால்காரர் வருகிறார்.. கணவர்தான் கடிதம் எழுதியிருப்பார்.. ஆமாம்.. அவரோட கடிதம்தான்.. அடடா.. இரண்டு வரியில் எத்தனை அன்பு வெளிப்படுகிறது அவரிடம்.. இவள் இல்லாமல் பொழுதும் கொஞ்சமும் நகர்வது இல்லையாமே.. இங்கு மாத்திரம் என்ன வாழுகிறதாம்.. உடனுக்குடன் பதில் எழுதவேண்டும் என்று அவள் கை துடிக்கிறது.. முதல்நாள் வாங்கி வைத்திருந்த அந்த இன்லாண்ட் லெட்டர் உடனுக்குடன் மேசையிலிருந்து உருவப்பட்டு அவள் தன் ஆசை எண்ணங்களால் அன்பு எனும் மை கொண்டு நிரப்பப்படுகிறது. பிரிவுதான் எத்தனையோ இன்பத்தை அவன் திரும்பி வரும்போதுதான் அதிகம் வெளிப்படுத்தும், இடையில் இந்தக் கடிதங்களின் இன்ப உலா.. ஆஹா!!

    ஆனால் இந்தக் கடிதங்களெல்லாம் கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே இனி காணலாம். கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தால் இரவில் கனவு கூட வரலாம்தான்.. யாருக்காவது கனவில் தான் கடிதம் எழுதுவது போல கண்டால் காலையில் ஞாபகம் வைத்துக் கொண்டு வெளியேயும் சொல்லி விடுங்கள்.. இவர்  கனவில் கடிதம் எழுதினாராம் என்று அதிசயப் பிறவியாகப் பார்க்கலாம்.

    அப்படிப்பட்ட அதிசயம் படைத்த ஒரு கடிதத்தை இந்த வாரம் திரு பழமைபேசி வல்லமையில் http://www.vallamai.com/literature/short-stories/27373/ அம்மாவுக்குக் கடிதம்’ என் சிறுகதையில் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் ஒரு வகையில் மாறுபட்ட உணர்ச்சியில் எழுதப்பட்ட கடிதம் என்றாலும், மனதில் எழுந்த கருத்துக்களை அழகாக வெளிப்படுத்தி  எழுதப்பட்டது என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

    அன்புடன் அம்மாவுக்கு,

    சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

    நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.

    எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.

    என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.

    என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.

    அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.

    வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.”

     பாருங்களேன், ஒரு சிறு கடிதத்திலே ஒரு உணர்ச்சிக்காவியமே நடந்து முடிந்துள்ளது. உணர்ச்சிகள் மட்டும் மனிதனுக்கு இல்லையென்றால் மனித வாழ்க்கையே நமக்கு தேவையில்லாததுதான். அழகான கதையில் ஒரு கருத்துள்ள கடிதத்தை உணர்ச்சிக் கலவையோடு கலந்து கொடுத்த திரு பழமை பேசி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதோடு பழமையை அதன் தரம் அறிந்து வெளியிட்டு வாசகர்களை தன்னோடு கூடவே அழைத்துச் செல்லும் பாணிக்காக அவருக்கும் நம் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: இசைக்கவி ரமணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நவராத்திரி கவிதைக் கொலுவில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பொன்னூஞ்சல் கவிதைதான் இந்தக் கடைசி பாராவில் இடம் பெறுகிறது. அன்னையிடம்தான் இவருக்கு எத்தனைப் பிரியம் பாருங்கள்:

    அல்லைப் பழிக்கும் அடர்நிறத்தாள்-என்
    அல்லல்கள் தீர்க்கும் அபிராமி
    தில்லைக் கரசனின் தாண்டவத்தில்-நல்ல
    தாளமென்றானவள் சிவகாமி
    சொல்லைக் கள்ளாய் மாற்றித்தரும்-அருள்
    சொக்கன் மகிழ்கிற மாதங்கி
    தொல்லை வினைகள் தொலைத்தெறிந்தே-உயிர்
    துடைத்துக் கொடுக்கும் சாமுண்டி

    விண்வரை அசைகிற பொன்னூஞ்சல்-அந்த
    விதியை உதைக்கும் அதிசயமாம்
    மண்வரை வந்த உயிர்களுக்கோ-அவள்
    மலரடி நிழலே பெரும்சுகமாம்

     

    Share