வல்லமையாளர்!
திவாகர்
நாம் பல திருத்தலங்களுக்குச் செல்கிறோம். அங்கே சென்றவுடன் கோயில் தரிசனத்தில் பெரும்பகுதியை சுவாமி தரிசனத்திலேயே செலவிட்டு வந்து விடுகிறோம். அப்படி அந்தக் கோயிலுக்குள் சென்று சுவாமியையும் அம்பிகையையும் தரிசித்ததோடு மட்டுமல்லாமல், அக்கோயிலுள்ள பழம் பெருமை மிக்க சிற்பங்கள், அந்தத் தலம் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்றிருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டோமேயானால் நாம் சென்று வந்துள்ள தலத்தின் முக்கியத்துவம் நம் மனதுக்குள் மிக அதிகமாக எழுந்து ஒரு அசாதாரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.
இப்படித்தான் சென்ற வாரம் திருவக்கரை – தேவாரப் பாடல் பெற்ற தலத்தினுக்கு சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கோயிலில் முதலில் நாம் தரிசனம் செய்வது கருணாமயியான வக்கிரகாளி அம்மன்தான். அம்மனைப் பற்றிய விவரங்கள் பிறகு ஓர் சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன் என்றாலும் நாம் இந்த அம்மனை திருவக்கரை காளி என்றே அழைக்க வேண்டும் என்ற விவரத்தினை அந்தக் கோயில் உட்புறம் சென்றபின் அங்குள்ள திருமுறைப் பாடல் கல்வெட்டின் மூலம் தெரிந்து கொண்டேன்.
திருவக்கரை எனும் தலத்தில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் சொரூபமான சிவபெருமானை சம்பந்த சுவாமிகள் வழிபடும்போது தம் பதிகத்தில் அத்தலத்தை ‘திருவக்கரை’ என்றே அழைக்கிறார். ஆகையினால் இங்குள்ள காளி தேவியைக் கூட திருவக்கரை காளி என்பது மருவி வக்கர காளி என்று வந்திருக்கவேண்டும் என்ற குறிப்பினையும் உணர்ந்துகொண்டேன். வக்ர காளியோ, வக்கிர காளி அல்லது வக்கர காளியென்றோ (கோயில் போர்டில் அப்படித்தான் தெரிவித்திருக்கிறார்கள்) அழைப்பது உசிதம் அல்ல என்ற உண்மையும் புரிந்தது.
நம் தமிழ்மொழியில் பண்டைய கால இலக்கியங்களில் மிக அதிகமாக மக்கள் வழக்கத்தில் இன்றளவும் உள்ள பாடல்களில் திருமுறைப்பாடல்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது என்பதும் உண்மைதானே. தேவாரப் பாடல் எல்லாமே உள்ளத்துக்கு மிக மிக ஆறுதலாகவும் நம்முடைய மனத்துயர் நீக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் அந்த 1400 வருடங்களுக்கு முன் உள்ள இயற்கை காட்சிகளையும், பாடல் பெற்றுள்ள ஒவ்வொரு தலத்தில் வாழும் மக்கள் வாழ்க்கை நெறிகளையும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பையும் பெருகிறோம்.
அதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்தக் காலகட்டத்திலே விளைந்த ஏராளமான விளைபயிர், பூக்கள், மரங்கள். செடிகள் என்பன அந்தக் காலத்திலே வழங்கப்பட்ட செய்திகளுடனே நமக்கு தேவாரப் பாடல் மூலம் கிடைக்கிறது. மயிலை நூ.த.லோகசுந்தரம் அவர்கள் திருமுறை பாடல் பெற்ற தலங்களை அநேகமாக அத்தனை தலங்களையும் சேவித்தவர் மட்டுமின்றி வைப்புத் தலங்கள் உட்பட அனைத்துத் தலங்கள் பற்றியும் அதிகமான அளவில் குறிப்பு எடுத்துக் கொண்டு அத்தலங்களப் பற்றி எழுதி வருகிறார். இப்படி ஒரு திருத்தலமான மாந்துறையைப் பற்றி அவரது விளக்கம் அத்தலத்துப் பாடலிலிருந்து நமக்குத் தருகிறார். https://www.vallamai.com/paragraphs/28023/
இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்.
இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகை மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.
வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.
தேவாரத் திருத்தலங்கள் பற்றிய செய்திகளையெல்லாம் நாம் நன்றாக அறிய வேண்டும். நம் தெய்வத் திருத்தலங்கள் எத்தனை பெருமைமிக்கவை என்பதை திரு நூ.த. லோகசுந்தரம் அவர்கள் தெரிவிக்கும்போது ஆச்சரியமும் அத்தலத்தை நேரில் காணும் ஆர்வமும் உண்டாகிறது. வல்லமை குழுவின் சார்பில் பெரியவர் திரு நூ.த.லோகசுந்தரம் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் நாம் பெருமை அடைகிறோம். வல்லமையாளருக்கும் நாம் வாழ்த்துகள்.
கடைசி பாரா:
விஜயதசமி திருநாளில் தமிழ் வகுப்பு ஒன்றினை ஆரம்பித்து வைத்திருக்கும் திரு இன்னம்புரான் அவர்களின் ‘தமிழார்வம்’ கட்டுரைத் தொடரில் உள்ள ஒரு உன்னதமான கருத்து ஒன்று இந்த வாரத்தில் கடைசி பாராவில் இடம் பெறுகிறது.
செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன். நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.
திரு நு த லோகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தமிழ் வகுப்பை பற்றி பாராட்டியதற்கு நன்றி, திரு, திவாகர்.
நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.
இன்னம்பூரான்
வல்லமை வார விருது பெற்ற திரு மயிலை லோகசுந்தரம் அவர்களுக்குப் பாராட்டுக்கள். விருது அளித்த மதிப்பிற்குறிய திவாகர் மற்றும் தமிழ் வகுப்பு நடத்தத் தொடங்கியிருக்கும் இன்னம்பூரான் அய்யா அவர்களுக்கும் எனது மனமகிழ்ந்த பாராட்டுக்கள்.
திரு ,லோகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,அவரை தேர்ந்தெடுத்த திவாகர் அவர்களே !உங்களை என் இரு கை கூப்பி வணங்குகிறேன்… ,ஒருமாபெரும்எழுத்தாளன் பலகோயில்,கோயிலாக திரிந்தவர நீங்கள்,,, ,உண்மையை சொல்ல வேண்டும் என்றல்,காஷாயம் கட்டாத மா முனி நீங்கள் ,எங்களை போன்றவர்களை சனி பிடித்து,அதனால் பினிபிடித்து வாடும் போதெல்லாம் தங்களை போன்ற மேதைகளின் ,வார்த்தையால் தான் நாங்கள் முழு மனிதாகிறோம் ,,தங்கள் எழுத்தை மறவாத,உங்கள் அபிமானி ….
******தேவா ****