இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
இந்த வாரம் எல்லோருக்கும் சுபவாரமாக ஆரம்பிக்கவேண்டுமென நிச்சயித்துத்தான் நம் பெரியோர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் போலும். அறுப்பு முடிந்து புது அரிசி எடுத்து ஆதவன் முன்னிலையில் பொங்கிச் சாப்பிட்டு ஆனந்தப் பொங்கல் விழாவும் அத்தோடு பெருமை சேர்க்க திருவள்ளுவர் விழாவும் கொண்டாடும் சுபவேளையில் இங்கே விசாகப்பட்டினத்தில் நம் தமிழினத்துக்கே பெருமை சேர்த்து தமிழ் வேதம் தந்த திருவள்ளுவருக்கு சிலை எடுக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் இதற்கேற்றாற்போலவே எல்லாமே அமைந்துவிட்டதும் கவனிக்கவேண்டும்.
குறள் என்று பெயரில் ஒன்றரை அடிதான் அது.. ஆனால் எத்தனை சேதி சொல்கின்றதோ.. நம்மொழியில் அல்லாது எம்மொழியில் உண்டு இவை போல என்று பெருமிதப்படுகின்றோம்.. அறம் பொருள் இன்பம் எனும் மூன்று பகுதிகளாகப் பாடப்பட்ட திருக்குறள் அதன் அடுத்தப் பகுதியான வீட்டின்பத்தைப் பாடவில்லை. இந்த கர்மயோகத் திருக்குறளை அப்படியே பின்பற்றினால் வீடு பாக்கியமும் உண்டு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் போலும். அதே சமயத்தில் இந்த குறட்பாக்களை நம் மனிதர்கள் ஒவ்வொருவரும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் வழிகளைக் கடைபிடித்தால் நல்வாழ்வு நிச்சயமாக அமையும்.. கொலையும் குற்றமும் ஒழியும், பசியும் பிணியும் தோன்றவே தோன்றாது.. காதல் பெருகும், காதலால் அன்பும் பெருகும்.. அன்பு பெருகினால் அங்கே அமைதிதான்.. யுத்தமும் துன்பமும் சாவும் போராட்டமும் இனி கிடையாது…மனிதருக்கு மனிதர் வெறுப்பு வளராது.. எங்கும் வெற்றிதான்.. எல்லோரும் நல்லவரே.. ஆஹா.. கனவு காண்கிறேனோ..
இருந்தும் நம் நண்பர் துரை அவர்களின் புதிய குறட்பாக்களைப் படிக்கையில் இப்படியெல்லாம் கனவு காண்பது என்பது என் ஒருவனுக்கு மட்டும் சொந்தமல்ல என்பது புரிந்தது… துணைக்கு அனேகம் பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் வந்தது.. நான் காண்பது வெறுங்கனவு. துரை காண்பதோ இனிய கனவுகள். அந்தக் கனவுகளைக் குறட்பாக்கள் மூலம் வெளிப்படுத்தும் பாணியும் கூடவே ஒரு படத்தையும் போட்டு நம்மை அங்கே இழுக்கும் பாணியும் அருமை. காதலின் மீது ஒரு சில குறட்பாக்கள் துரையின் தூரிகை மூலம்:
என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
வந்தின்றும் சிக்கவில்லை நீர்
நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
நானென்ன ஆவேனாம் கூறு
உம்வாசம் நானுணர்த்தேன்; தன்வேசம் தானுதறி
முன்வாசல் ஓடும் மனது
ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்
சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
சொல்லடா என்செய்ய வென்று
தூத்துக்குடி துரை முன்னர் ராஜராஜசோழன் மீது வெண்பா எழுதிவந்தார். ஏனோ நடுவில் நிறுத்தி விட்டார். அவர் அதையும் முடிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த தைத்திருநாளில் குறட்பாக்கள் எழுதி வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைச் சொல்லி வல்லமை குழுவினர் சார்பில் ஆனந்தப்படுகிறோம். துரை அவர்களுக்கு வாழ்த்துகள்.
இன்றைய கடைசி பாரா: கவிஞர் இரா.ரவி எழுதியது.
ஈராயிரம் வயது கடந்தும்
இளமையாக இருப்பவர்
திருவள்ளுவர் !
மரபு அன்று என்றவர்களையும்
ஏற்க வைத்தவர்
திருவள்ளுவர் !
வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர் !
வாழ்த்துகள் நண்ப!!
ஆஹா! எங்க தின்னவேலி/தூத்துக்குடி மண்ணின் மைந்தர்! வாழ்க! வாழ்த்தும் பாராட்டும்!
படம் மட்டும் கொஞ்சம் சேமுசு பாண்டு (James Bond) போல!
அன்புடன்,
ராஜம்
http://www.letsgrammar.org
http://viruntu.blogspot.com/
http://mytamil-rasikai.blogspot.com/