Tag: வல்லமையாளர்

  • இந்த வார வல்லமையாளர் (274)

    இந்த வார வல்லமையாளராகக் கலைஞர் மு. கருணாநிதி (1924-2018) அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிய இசை வேளாளர் குடும்பத்தில், திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு.க. தமிழக அரசியலை 60 ஆண்டுகளாக வழிநடத்திய மாபெரும் சக்திகளில் ஒருவராக இருந்தார். எப்பொழுதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும், வன்முறைப் பாதையைத் தூண்டும் அரசியலைக் கையில் எடுக்காதவர் ஆகவும் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தை அமைத்தார்.

    சமூக நீதியை அனைவர்க்கும் பரப்பிய கருணாநிதி, மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று மாநில அரசில் பணிபுரிவோருக்கும் செய்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் வருமானத்தை வெகுவாகக் கூட்டினார், ரிக்‌ஷா ஒழிப்புத் திட்டத்தை அமல்படுத்தினார்.

    கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், பூம்புகாரில் இளங்கோ அடிகளின் காப்பியத்திற்கு எழுநிலை மாடம், .. இவரது குறிப்பிடத்தக்க சாதனைகள். கோவையில் கோலாகலமான செம்மொழி மாநாடு, சென்னையில் நிரந்தரமாக செந்தமிழ் ஆய்வுக்கென மத்திய அரசாங்க நிறுவனம் என, பரிதிமாற் கலைஞர் தொடங்கிய செம்மொழி கோரிக்கையை வெற்றியுடன் நிறைவேற்றினார்.

    தமிழர்களில் ஒரு சிலர் வட எழுத்து ஒன்றுகூட இருக்கக்கூடாது என வாதிடுவர். அவரது கல்லறைப்பெட்டியில் ஜூன், ஆகஸ்ட் என்று எழுதிக்காட்டி, மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டு அழைத்தவர். செம்மொழி மாநாட்டில் தான் இன்று செல்பேசிகளிலும், வலைத்தளங்களிலும், எல்லா பத்திரிகைகள், தினத்தாள்களில் வழங்கும் யூனிக்கோடு என்னும் ஐஎஸ்ஓ 10646 குறியேற்றம் தமிழுக்கான அரசாங்கக் குறியேற்றம் என அறிவித்தார். பேரா. வா. செ. குழந்தைசாமி தலைமையில், பேரா. மு. அனந்தகிருஷ்ணன் பொறுமையாகப் பல ஆண்டுகள் தமிழர்களிடம் ஆலோசித்துச் செய்த முடிவு இது. யூனிகோடில் தமிழ்மக்கள் ஹிந்தி, தெலுங்கு போன்ற தமிழல்லாத பிற இந்திய மொழிகள், திருக் குரான், வேதம், … போன்ற சமய சாத்திரங்கள் தமிழ் எழுத்தில் எல்லோரும் எழுதி எளிய வழியில் பயில, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த ஐந்து வடவெழுத்துகள் (ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ) இன்று தேவைப்படும்போது பயன்பாட்டில் எல்லா கணினிகளிலும், அச்சிலும், செல்போன்களிலும் உள்ளது. எழுத்துபெயர்ப்பு மூலம் இந்திய மொழிகளின் இலக்கியங்களைத் தமிழர்கள் அதன் உச்சரிப்புடன் ஒலித்துப் பழகத் தமிழருக்கு அளித்ததில் கலைஞருக்கும் பங்குண்டு.

    பெரியார் வழியில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர் கலைஞர். இன்று திராவிட இயக்கத்தின் இரண்டு பெருங் கட்சிகளும் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மூவரும் மறைந்துவிட்டனர். தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லி அரசாங்கத்திடம் பெறுவதற்கும், நல்ல உயர் அதிகாரிகள், துணைவேந்தர்களாக அறிஞர்கள் நியமனம், தொல்லாய்வுகளுக்கு ஆதரவு, மொழியியல் துறையில் உலக நிபுணர்களுடன் கூடிய மாநாடுகள், … எனச் செய்தலுக்கு வாய்ப்பு. பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்திருத்தம் முழுமை பெறவில்லை. மலையாளிகள் செய்துவிட்டனர். அதுபோல, விரும்புவோர் உ,ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம் என ஆணையை தமிழ்நாட்டு அரசாங்கம் வெளியிட்டால் திராவிட இயக்கம் அளிக்கும் கொடையாகும். இதனைச் செய்யலாம் என்று கி.வா.ஜகந்நாதன், சிலம்புச் செல்வர் மபொசி போன்றோரும் கட்டுரைகள் எழுதி அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுக இரு கட்சித் தலைவர்களும் சேர்ந்து அறிவிக்கலாம்.

    மனோன்மணீயம் பெ. சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து இந்திய மொழியியல் குடும்பங்களைப் பற்றிய அறிவு வந்தவுடன் ஏற்பட்டது. அந்தச் செய்யுளுக்கு அரசாங்கத் தமிழ்த்தெய்வ வணக்கம் எனச் செய்துவிட்டார் கலைஞர். உலகெங்கிலும் தமிழர் கூடும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்ரன. பள்ளிகளில் குழந்தைகள் கற்கின்றனர். வேத காலத்தில் தை 1 புத்தாண்டாக இருந்ததற்கான சான்றுகள் உண்டு. இன்றும் நேப்பாளத்தில் விவசாயிகள் தை 1 (மகர சங்கராந்தி) புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாளை திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு தினமாக அதிகாரபூர்வமாகச் செய்தவர் கலைஞர் தான். தமிழ்ப் பெருமை, பீடு என்பதனை இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அறியச் செய்ததில் கலைஞரின் பங்கு அளப்பரியது.

    ஹிந்தி எழுத்தை மைல்கல்களில் கூட திணிக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது. பல நாடுகளில் ரோமன்/ஆங்கில எழுத்துகள் பல்வேறு மொழிக் குடும்பங்களை எழுதப் பயன்படுகிறது. வியட்நாம், மலாயா, இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, …. எல்லாவற்றிலும் ரோமன் லிபி. இந்திய பிரதேச எழுத்துக்கள் பல. ஆனால், பாரத மொழிகளுக்குள் பல்வேறு தொடர்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பவை. பொருளாதாரம், கலைகள் (சினிமா, …), வாழ்க்கை, திருமணங்கள், … என்று இந்திய மாநில மக்கள் பிணைந்துவருகின்றனர். வருமானத்தில் மத்திய, உயர் வகுப்பார் விரும்பும் கல்வியாக ஆங்கிலக் கல்வி வளர்ச்சி பெற்றுவருகிறது. கம்பர், சங்கப் புலவர் போன்று எழுதுவோர் இன்று மிகக் குறைவாகவே உள்ளனர். ஆங்கில எழுத்திலும் கூட எல்லா இந்திய மொழிகளும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட வேண்டும். தமிழை, ஹிந்தியை ஆங்கில எழுத்தில் எழுதலாம் என்பதும் கற்பிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் ஸ்கிரிப்ட்டுக்கும் (lipi), மொழிக்கும் உள்ள வித்தியாசம் மக்கள் பரவலாக அறிந்துகொள்வர். ரயிலில், ரயில் நிலைகளில், மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி எழுத்துடன், அதன் ஆங்கில (ISO 15919) வடிவமும் இடம்பெற வேண்டும். பல மாநில மக்களும், வெளிநாட்டவர்களும் படிக்க ஹிந்தி இலிபி மட்டும் போதாது, அதன் ஆங்கில வடிவமும் தரவேண்டும் என்று ஹிந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களின் முதல்வர்கள் டெல்லி அரசிடம் கேட்கவேண்டும். இந்த மாற்றத்திற்கு வருங்கால தமிழ்நாட்டு முதல்வர்கள் தலைமை ஏற்க வேண்டும்,

     

     

    அமெரிக்காவிலே ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான கொடி உண்டு. நாட்டுக் கொடியுடன், மாநிலக் கொடிகளை எப்படி ஏற்ற வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு. அதுபோல் இந்தியாவில் வரவேண்டும். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி காட்டும் கலைஞர் மு.க.

    இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மு. கருணாநிதியும்


    அண்ணாதுரை அமைத்த திமுக மந்திரிசபை, 1967

    இந்தியாவில் நடுவணரசு மிகப்பலம் வாய்ந்தது. அதனையும் மீறி, சோனியா காந்தியின் ஆட்சியில் ஈழத்தீவில் தமிழர்க்கு தனிநாடு கலைஞர் அமைத்திருக்க முடியுமா என்பது ஐயமே. ஆனால், டெல்லி சர்க்காரிடம் பதவிகளில் இருந்து விலகி, எம்.பிக்களை ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தால் இலங்கையில் இறுதிப்போரின் போக்கும், தமிழ் உயிர்ச் சேதாரமும் வெகு அளவில் குறைந்திருக்கும் என்பர். இது கலைஞர் மீது உலகத் தமிழர்கள் வைக்கும் விமரிசனங்களுள் முக்கியமானது. அவருக்கு அப்போது என்ன நெருக்கடி எனப் புரியவில்லை என்பர்.
    ———–

    கலைஞரைக் காணாது கலங்கு கின்றான்!

    காலையிலே எழுந்து வந்த கதிரவனும்
          கலைஞரைக் காணாது கலங்கு கின்றான்!
    சோலையிலே பறந்து சென்ற பறவையிடம்
          சொல்லாமல் போனஇடம் எங்கே என்றான்.
    மாலையிலே மறையுங்கால் இருந்த குன்றை
          மறுநாள் காணாது மலைத்து நின்றான்!
    பாலையிலே பாய்ந்து சென்ற நீர்ச்சுனையும்
          பாதியிலே வறண்டதைப் பார்த்துச் சென்றான்!

    “முப்போதும் முப்பாலில் மூழ்கும் நல்ல
          முத்தமிழ் போற்று கின்ற வித்தகரை
    எப்போதும் இனிக்காண இயலா தம்மா!”
          என்றபடி ஏகினான் முன்னே முன்னே!
    தப்பேதும் இல்லாமல் தனித்தமிழ்ப் பேசுவதைத்
          தவறாத வேள்வியாய்த் தக்கபடி செய்தவரை
    இப்போதும் பணிகின்றேன் என்று சொல்லி
          இரங்கலைத் தெரிவித்தான்! என்னே! என்னே!

    -கவிஞர் இனியன், கரூர்.

    ———————

    இனியதமிழ் இருக்கும்வரை அவர் இருப்பார்!

    எப்பொழுதும் தமிழாக இருந்த மேதை
          எடுத்தவுடன் விடையிறுக்கும் புத்திக் கூர்மை
    ஒப்பிடவே ஆளில்லா வகையில் யாவும்
          உடனடியாய் நிறைவேற்றி வைத்த செம்மல்
    இப்படித்தான் வசனத்தை எழுத வேண்டும்
          எனக்கற்றுத் தந்த பெரும் வசன கர்த்தா
    இப்பொழுது மறைந்துவிட்டார் என்ப தில்லை
          இனியதமிழ் இருக்கும்வரை அவரி ருப்பார்.

    அரசியலில் எந்நாளும் வெற்றி ஒன்றே
          அவர்வழியாய் இருந்துளது, மாற்றா ரோடே
    உரசுகிற போதுமவர் இரசிக்கும் வண்ணம்
          உரையாற்றத் தெரிந்திருந்த மொழியின் வேந்தர்
    விரியுமொளிச் சூரியனாய் வெளிச்சம் காட்டி
          வென்றிருந்த சாதனைகள் கொஞ்ச மல்ல.
    பெருமையினைத் தமிழ்நாடு காண வைத்த
          பெருமகனார் கலைஞர் திரு நாமம் வாழ்க!

    – இலந்தை சு இராமசாமி

    —————-

    எப்போதும் போலத்தான் இன்றைய மாலையும்
    தப்பாமல் வந்தது தன்வேலை ஓய்ந்தே
    உதய சூரியன் உச்சியை விட்டான்
    இதயங்கள் எங்கும் இருள்…

    – விவேக் பாரதி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (273)

    முனைவர். நா.கணேசன்

    இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    “மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்றார் பைந்தமிழ்ச் சாரதி பாரதியார். உலகம் புகழும் கணிதவியல் நிபுணர் ஒருவரை இந்த வார வல்லமையாளர் எனத் தெரிவுசெய்கிறோம்.

    இந்தியாவில் கணிதத்தில் சாதனை புரிந்தவர்கள் பலர். தொல்லியலாளர்கள் சிந்து சமவெளியிலேயே நீளம், எடை போன்றவற்றை அளக்கும் அளவைகள் தரப்படுத்தியிருக்கிறார்கள் என்பார்கள். தமிழ்நாட்டில் எண்கணித வரலாறு பற்றிய கட்டுரை: வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்.   பாரத தேசத்தில் பிறந்து மேற்கு ஆஸ்திரேலியா பல்கலையில் இளங்கலைப் பட்டம் 17 வயதில் முடித்து, 21 வயதில் பீட்டர் சார்னாக் என்னும் பேராசிரியர் நெறியாளராக இருந்து கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இப்பொழுது ஸ்டான்போர்ட் பல்கலை, கலிபோர்னியாவில் கணிதப் பேராசிரியர், அக்‌ஷய் தன் கணக்குப் பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறார்: https://www.youtube.com/watch?v=p7iXVQxvM00

    இன்போசிஸ் கம்பெனியின் பரிசை அக்‌ஷய் வெங்கடேஷ் பெற்றபோது நடந்த விழா: https://www.youtube.com/watch?v=IWHb_STZvzA

    அண்மைக் காலத்தை எடுத்துக்கொண்டால், சீனிவாச ராமானுஜன் நினைவுக்கு வருகிறார். கனடாவைச் சேர்ந்தவர் ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் (1863 – 1932) 1924இல் சர்வதேசக் கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், கணிதத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் விளைவாக, ஃபீல்ட்ஸ் பதக்கம் என்ற பரிசு உருவானது. கணிதத்துக்கான நோபல் பரிசு எனப் புகழ் பெற்றது இப்பரிசு. 2014இல் முதன்முதலாக இந்தியாவைச் சேர்ந்த மஞ்சுள் பார்க்கவா, ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றார். இப்பொழுது தமிழர் அக்‌ஷய் வெங்கடேஷ் வென்றுள்ளார். Synthesis of analytic number theory, homogeneous dynamics, topology, and representation theory துறைகளில் பங்காற்றும் வெங்கடேஷுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

    இவர்தம் தாயார், ஆஸ்திரேலியாவில் டீக்கின் பல்கலையில் கணினியியல் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வெற்றியாளரும் 15,000 கனடா டாலர் பரிசுத் தொகையைப் பெறுகின்றனர். இந்த ஆண்டு நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அக்‌ஷய என்றால் தமிழில் கேடிலி. தேவாரத்தில் கீழ்வேளூர் தலப்பாடல்களில் இத் தமிழ்ப்பெயரைப் பார்க்கலாம். இந்தியப் பல்கலைகளிலே பணிபுரியும் கணிதப் பேராசிரியர்களும் நல்ல ஆய்வுகளின் மூலம் மஞ்சுள், அக்‌ஷய் போலவே ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றெடுக்க வாழ்த்துகிறோம்.

    எண் கணித வல்லுநர் அக்ஷய் வாழ்த்துப் பதிவில் தமிழ்நாட்டின் எண்வரலாற்றைப் பார்க்கலாம்: வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள் (http://www.vallamai.com/?p=29153)

    வலமிருந்து இடமாகப் பேரெண்களை வர்ணித்தல் (வாமகதி முறை):

    ஸ்ரீபுராணத்தில் வலப்பக்கத்தில் இருந்து எண்கள் வளர்ந்தன எனப்படும் கதையை பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழின் 2000 ஆண்டு இலக்கியங்கள் வழியாகப் பார்க்கலாம். பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். இந்த வாமகதி முறையைத்தான் ஸ்ரீபுராணத்தில் அழகான கதையாகச் சொல்லியுள்ளனர்.

    புள்ளி உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்களின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர் தன் காலத்தில் புழங்கிய பேரெண்களை வாசிக்கும் வாமகதி முறையைப் பல சூத்திரங்களில் தந்துள்ளார்.  உதாரணமாக, தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:

    ”மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்

    இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது

    அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்”

    தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே,  2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் நூற்பா ஒன்று பேரெண் 13699-ஐ வாமகதி முறையில் தருகிறது. வாமகதி முறையை அறிந்துகொள்ளாமல் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிழைபட எண்களைத் தம் உரைகளில் தருகின்றனர். ஆனால் தொல்காப்பிய முதல் உரைகாரர் இளம்பூரண அடிகளும் யாப்பருங்கல விருத்தியிலும் சமணர்கள் வாமகதி முறையைப் பயன்படுத்திக் காப்பியரின் 13699 எண்ணைச் சரியாக விளக்கியிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் வெண்பா (மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ள பதிப்பு) இதுதான்:

    ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான்
               மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் – தேறும்
               ஒருபதின்மூ வாயிரத்தோடொன்றூன மாகி
               வருமெழுநூ றென்னும் வகை.

    சீவக சிந்தாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கணவிளக்கம் போன்ற பிற்கால நூல்களிலும் இந்த வாமகதி முறை உள்ளது. ’ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர் ’ – குசேலர் மைந்தர் 27  பேர் என 19-ஆம் நூற்றாண்டில் கூடக் குசேலோபாக்கியானம் குறிப்பிடுகிறது.  ”ஆறு தலையிட்ட அந்நாலைந்தும்” (= 26, தொல். செய்யுளியல், 310), “நாலைந்தும் மூன்று தலையிட்ட” (=23, தொல். சொல். 210)  – இவை போல வாமகதியில் எழுதும் பானையோடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து அழகன்குளம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் கிடைத்துள்ளது அருமை.  ஐராவதம் மகாதேவன் மருங்கூர்ப்பட்டினம் (அழகன்குளம்) அளித்த சங்ககாலப் பானையோட்டை இந்து நாளிதழில் 29.12.2011-ல் வெளியிட்டுள்ளார். அந்த ஓட்டில் (படம் 3), 804 என்ற எண் தான் எழுதப்பட்டுள்ளது என இலங்கை பிராமிக் கல்வெட்டு எண் மதிப்பை (படம் 4) வைத்துத் தெளிந்தோம்.  தொல்காப்பியம் அதன் பின்னர் எல்லா நூற்றாண்டுக் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால், மருங்கூர்ப் பட்டினப் பானையோட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு”(=804) என்று வாசிக்கவேண்டும். வலப்புறத்தில் நான்கு எனும் எண்ணை எழுதி அதற்கு இடப்புறமாக 8 (100) எழுதப்பட்டுள்ளது. 100 என்பதன் சின்னமாக ஸ (=ஸதம்) உள்ளது. ஐராவதம் வாமகதி முறையை விளக்கியுள்ளார். ஆனால், எண்ணின் மதிப்பு என்று பார்த்தால் 804 தான், 408 அன்று. இதற்கு ஆதாரம். தொல்காப்பியத்தின் நான்கு எடுத்துக்காட்டுகளும், படம் 4-ம் (விக்கிரமசிங்கே, 1901, JRAS). 1996-ல் ஐராவதம் அவர்கள் அரிகமேடு அகழாய்வில் பெரிய எண்களுடன் கிடைத்த பானை ஓடுகளை வெளியிட்டார்.  அருகமேட்டுப் பானையோட்டில் 855 = = ௮௱ ௫௰ ௫ என்ற எண் உள்ளது. அதை “ஐந்து தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” என்று வாமகதி முறையில் எழுதி வாசிக்கவேண்டும்.  குறளில் “பத்து அடுத்த கோடி” என்பதை ௰ (C) என்றிருக்கும். அதாவது, (10), (100), (1000) மாத்திரம் இப்போது உள்ளது. வள்ளுவர் காலத்தில் லட்சம் (L), கோடி (C) இரண்டுக்கும் தனிச் சின்னம் (symbol) இருந்திருக்கும்.

    ———–

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (231)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),&  Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அவர்கள் பெயர்:

    ஜாய்தீப் பாக்சி
    சிஷிர் சங்காயன்
    பிரகாஷ் சர்க்கார்
    சோமக் ராய்சவுத்ரி
    ஜோ ஜேக்கப்
    ப்ரதிக் தபாடே

    (ஆங்கிலத்தில் Joydeep Bagchi, Shishir Sankhyayan, Prakash Sarkar, Somak Raychaudhury, Joe Jacob, Pratik Dabhade)

    இந்த ஆறு விஞ்ஞானிகளும் புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே (கேலக்ஸி) கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயர் சூட்டியுள்ளனர். அதிலும் சரஸ்வதி கேல்க்ஸியானது சூப்பர்க்ளஸ்டர் எனப்படும் மிகப் பெரிய கேலக்சி வகையை சார்ந்தது.

    1

    சரஸ்வதி கேலக்ஸி பூமியில் இருந்து 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 60 கோடி ஒளியாண்டுகள் ஆகும். இதில் உள்ள நடசத்திரங்களின் எண்ணிக்கை (மூச்சை பிடித்துக்கொள்ளவும்) 20 லட்சம் ஆயிரம் கோடி.

    பிரபஞ்சம் தோன்றி 1000 கோடி ஆண்டுகள் கழித்து சரஸ்வதி தோன்றியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்த நம் கணக்கீடுகளை சரஸ்வதியை ஆய்வதன் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இந்த மகத்தான சாதனையை செய்த இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டி அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • வல்லமையாளர் விருது!

    வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய
    ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    1. ராமலக்ஷ்மி
    2. மறவன்புலவு சச்சிதானந்தம்
    3. அவ்வை மகள்
    4. ஷைலஜா
    5. வெ. சா
    6. நித்தி ஆனந்த்
    7. நாகேஸ்வரி அண்ணாமலை
    8. கவிநயா
    9. சு. கோதண்டராமன்
    10. ராமஸ்வாமி ஸம்பத்
    11. சாந்தி மாரியப்பன்
    12. பெருவை பார்த்தசாரதி
    13. மலர்சபா
    14. தமிழ்த்தேனீ
    15. பாகம் பிரியாள்
    16. ஜெயஸ்ரீ சங்கர்
    17. இரவி வேணு
    18. விசாலம்
    19. சக்தி சக்திதாசன்
    20. சிலம்பொலி அருண்
    21. சி. ஜெயபாரதன்
    22. சிங்கப்பூர் விஜயகுமார்
    23. சிரிப்பானந்தா
    24. ஸ்ரீஜா வெங்கடேஷ்
    25. பழமைபேசி
    26. செல்வன்
    27. நூ.த.லோகசுந்தரம்
    28. கீதா சாம்பசிவம்
    29. அரவிந்த் சச்சிதானந்தம்
    30. பர்வதவர்தினி
    31. உதயன்
    32. வித்யாசாகர்
    33. சுபாஷினி
    34. பெருவை பார்த்தசாரதி
    35. தமிழ்முகில் நீலமேகம்
    36. தோழர் ஜோ
    37. தேமொழி
    38. துரை
    39. ரிஷி ரவீந்திரன்
    40. மாதவன் இளங்கோ
    41. கோபி சரபோஜி
    42. கலிங்கா பாலு
    43. மேகலா இராமமூர்த்தி
    44. டி. சச்சிதானந்தன்
    45. சத்தியமணி
    46. பேராசிரியர் நாகராஜன்
    47. ஈரோடு கதிர்
    48. டாக்டர் செம்மல்
    49. சங்கர ராமசாமி
    50. பொன் இராம்
    51. காயத்ரி பாலசுப்பிரமணியம்
    52. கல்பட்டு நடராஜன்
    53. ஹரிகி
    54. லோகநாதன்
    55. சாந்தினி பீ
    56. சு. ரவி
    57. வேணுகோபாலன்
    58. நரசய்யா
    59. அப்பாதுரை
    60. சுந்தர்ஜி
    61. திவாஜி
    62. வே. ம. அருச்சுணன்
    63. சி.டி. சனத் குமார்
    64. காளைராஜன்
    65. திருவள்ளுவன் இலக்குவனார்
    66. பானுமதி/ஆதிரா முல்லை
    67. தமிழ்ச்செல்வி
    68. சு. கோபாலன்
    69. பசுபதி
    70. கிருஷ்ணன்
    71. வெ.கோபாலன்
    72. எஸ். ஜெயபாரதி
    73. கமலாதேவி
    74. குரு பிரசாத்
    75. செங்கை பொதுவன்
    76. தீனா வேணு/காப்பியக் கவிஞர்
    77. இராஜ ராஜேஸ்வரி
    78. பார்வதி ராமச்சந்திரன்
    79. காப்பியக் கவிஞர் மீனவன்
    80. பாண்டியராஜா
    81. தேவ்
    82. நிர்மலா ராகவன்
    83. ஒய்.ஜி. மகேந்திரா
    84. டி. சச்சிதானந்தன்
    85. கிருஷ்ணமூர்த்தி
    86. வனிலா பாலாஜி
    87. சத்யா
    88. காவிரி மைந்தன்
    89. வை.கோபாலகிருஷ்ணன்
    90. இப்னு ஹம்துன்
    91. திண்டுக்கல் தனபாலன்
    92. மாலன்
    93. சதீஷ்குமார் டோக்ரா
    94. ஸ்ரீனிவாசன்
    95. சி. ராஜேந்திரன்
    96. முத்துசாமி
    97. விப்ரநாராயணன் திருமலை
    98. நந்திதா
    99. தி.சுபாஷிணி
    100. நா. கணேசன்
    101. முனைவர். ராஜம் ராமமூர்த்தி
    102. எம்.ரிஷான் ஷெரீப்
    103. சொ. வினைதீர்த்தான் 
    104. எம்.மணிகண்டன்
    105. பிச்சினிக்காடு இளங்கோ
    106. ராஜா கார்த்திக் கண்ட்டா
    107. கே.எஸ்.சுதாகர்
    108. ‘ரீச்’ சந்திரா
    109. பூவை. பி. தயாபரன்
    110. கேசவ் வெங்கட்ராகவன்
    111. கீதா மதிவாணன்
    112. பெனோ செபீன்
    113. வாசு ரெங்கநாதன்
    114. எல். கனக சுப்பிரமணி
    115. செண்பக ஜெகதீசன்
    116. கிரேசி மோகன்
    117. சீதா நடராஜன்
    118. கவிஞர் குட்டி ரேவதி
    119. காமாட்சி மகாலிங்கம்
    120. “வழிகாட்டும் ஒளி” குழுவினர் பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி
    121. ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
    122. ஹீடி எப்ஸ்டீன்
    123. வைதேகி ஹெர்பர்ட்
    124. திரு. பாலமுருகன்
    125. எம்.ஜெயராமசர்மா
    126. செ. இரா. செல்வக்குமார்
    127. இஸ்ரோ அறிவியலாளர்கள்
    128. இந்திராணி
    129. பிரியம்வதா நடராஜன்
    130. மருத்துவர் சிதம்பரம் வீரப்பன்
    131. திவாகர்
    132. இன்னம்பூரான்
    133. டாக்டர் ஆர்த்தி பிரபாகர்
    134. சீதாலட்சுமி
    135. கீதா இளங்கோவன்
    136. எஸ்.கணேசன்
    137. அனுராதா கொய்ராலா
    138. கே. ரவி
    139. வையவன்
    140. ஜாதவ் பயேங்
    141. ஏற்காடு இளங்கோ
    142. கவிஞர் ருத்ரா
    143. இல. சுந்தரம்
    144. முனைவர் மு.பழனியப்பன்
    145. கவிஞர் கலைமகள் ஹிதாயா
    146. மு​னைவர் சி.​சேதுராமன்
    147. ரா. பார்த்தசாரதி
    148. வைதேகி
    149. முனைவர் எல்மார் நிப்ரத்
    150. அனிதா சத்யம்
    151. முனைவர் ந. சுந்தரம்
    152. “பாடம்” நாராயணன்
    153. முனைவர் கு.கல்யாணசுந்தரம்
    154. ஜோதிர்லதா கிரிஜா
    155. கவிஞர் வைகைச்செல்வி
    156. கவிஞர் றியாஸ்முஹமட்
    157. “குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள் – செல்வா சரவணா, பெனிடிக்ட் சேவியோ
    158. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
    159. நீதிபதி ராஜ ராஜேஸ்வரி
    160. இளம் அறிவாளி விசாலினி
    161. சட்டக்கல்லூரி மாணவி நந்தினி
    162. மருத்துவர் இரா. கலைக்கோவன்
    163. ராதிகா கண்ணன்
    164. மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினர்
    165. சூப்பர் 30 – ஆனந்த் குமார்
    166. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்
    167. விளையாட்டு வீரர் திரு. வருண் ராம்
    168. தாஷி – நான்சி மாலிக் சகோதரிகள்
    169. இசைக்கவி இரமணன்
    170. எம். ஆர். ஹப்பர்ட்
    171. ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்
    172. மீனாட்சி பாலகணேஷ்
    173. டாக்டர் டெஸ்ஸி தாமஸ்
    174. இயக்குநர் நந்தினி
    175. அன்பு ஜெயா
    176. பி.சங்கர் மகாதேவன்
    177. மணற்கேணி திரு. ரவிக்குமார்
    178. தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி
    179. கிரண் சேத்தி
    180. அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி
    181. லட்சுமி
    182. சேசாத்திரி சிறீதரன்
    183. லெ. சொக்கலிங்கம்
    184. பேராசிரியர் டி. நாகராஜன்
    185. முனைவர் நா. கண்ணன்
    186. நீச்சல்காரன் ராஜாராமன்
    187. கே. பிரித்திகா யாசினி, எஸ். ஐ.
    188. ஆர். பி. ரமேஷ்
    189. மாணவி நிகிதா ஆசாத்
    190. அமுதா ஐ.ஏ.எஸ், கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்
    191. மாணவர் ஆக்சாத் பிரகாஷ்
    192. மாணவர்கள் தனய் டாண்டன், தீபிகா போடபட்டி
    193. மாணவர் மகிஷன் ஞானசேகரன்
    194. மாணவர் ரிஃபாத் ஷாருக்
    195. இ. மயூரநாதன்
    196. கோட்டலாங்கோ லியோன்
    197. மாணவர் ஆண்டனி எடிசன்
    198. மாணவர் உதயகீர்த்திகா
    199. மு. இளங்கோவன்
    200. ரூபாதேவி
    201. கம்சாயினி குணரத்தினம் 
    202. க. பாசுக்கரன் 
    203. சா. அர. சீனிவாச வரதன் 
    204. வினோது கண்ணப்பன் 
    205. ஃகெப்சிபா 
    206. ந. இரவிக்கிரண் 
    207. மீனா செகதீசன் 
    208. பேராசிரியர் இராசு செட்டி 
    209. பிரீத்தி சீனிவாசன் 
    210. ப. அருளி 
    211. இல. பாலசுந்தரராமன் 
    212. ஆ.க. இராமகிருட்டிணன் 
    213. அலெக்சாந்தர் துபியன்சுக்கி 
    214. சோ. ந. கந்தசாமியார் 
    215. கே. சிவக்குமார் 
    216. ஃபெட்னா 
    217. செயபாண்டியன் கோட்டாளம் 
    218. அரி சீனிவாசன் 
    219. பு. வே. சிந்து 
    220. நித்தியா துரைசாமி 
    221. எஸ்.எஸ். ராஜமவுலி
    222. பெட்ஸி டிவோஸ்
    223. சுந்தர் ஐயர்
    224.  கே.வி. மாமா 
    225. உம்முல் கர்
    226. பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)
    227. வீர வாஞ்சிநாதன்
    228. விஷ்வேச தீர்த்த ஸ்வாமி
    229. கிம் யாங் – ஷிக்
    230. சஹா நாதன்
    231. இந்திய விஞ்ஞானிகள் (IUCAA)
    232. கலைஞானி கமலஹாசன்
    233. என்.சொக்கன்
    234. எவிடென்ஸ் கதிர்
    235. பெஜவாடா வில்சன்
    236. நடிகர் அல்வா வாசு
    237. எழுத்தாளர் பாலகுமாரன் 
    238. அரிசோனன் மகாதேவன்
    239. வேந்தன் அரசு
    240. திலகவதி மதனகோபால்
    241. மலேசியா கமலநாதன்
    242. இரா. பானுகுமார்
    243. சவுமியா சாமிநாதன்
    244. யது கிருஷ்ணா
    245. குமார் துரைசாமி
    246. பா. ராகவன்
    247. மலாலா யூசுப்சையி
    248. முனாப் கபாடியா
    249. அஜீத் பாய் (Ajith pai)
    250. நூஃப் மர்வாய் 
    251. தாரிகா பானு
    252. பாக்கியம் ராமசாமி
    253. சமுத்திரகனி
    254.  சிற்பி இராசன்
    255. கவுதம சன்னா
    256. திருத்தம் சரவணன்
    257. விஞ்ஞானி சிவன்
    258. பைக் ரைடர் சைபி
    259. தகடூர் கோபி
    260. பேராசிரியர் கண்மணி
    261. டிராபிக் ராமசாமி
    262. சுமிதா மித்ரா
    263. ஸ்ரீதேவி
    264. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 
    265. தென்னிந்திய திரைத்துறை மையம் 
    266. கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 
    267. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
    268. சற்குணா பாக்கியராஜ்
    269. அ.முத்துலிங்கம்
    270. டொனால்ட் டிரம்ப் 
    271. சிவசிவா’ வி. சுப்பிரமணியன்
    272. திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப
    273. பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்
    274. கலைஞர் மு. கருணாநிதி
    275. அடல் பிகாரி வாய்பாய்
    276. கவிஞர் சுகதகுமாரி
    277. கவிஞர் வைரமுத்து
    278. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள்
    279. விஞ்ஞானி ஜாசிலின் பர்னல்
    280. கி. ராஜநாராயணன்
    281. விஞ்ஞானி குசலா ராஜேந்திரன்
    282. ஐராவதம் மகாதேவன்
    283. சமூகப் போராளி ‘தரனா பர்க்
    284. மெங் ஃபான்சாவ்
    285. ராம் சுதார்
    286. சு. தியடோர் பாஸ்கரன்
    287. ரா  முத்துசாமி
    288. பாவலர் மா வரதராசன்
    289. விட்டல் நாராயணன்
    290. சேவாலயா முரளி
    291. சுகந்தி நாடார்
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Subashini_Thirumalaiஇந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது –

    ”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா? என்ற அச்சம். ஆனால் படிக்கப் படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்” – என்று திருமதி சுபாஷிணி குறிப்பிட்டு பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பொதுவாகவே மனிதர்கள் பல விதானங்களில் சிந்திக்கிறார்கள். இது உலக மாந்தர்களுக்குண்டான சிறப்பு. பல சிந்தனைகள் சித்தாந்தங்களாக மாறுகிறதுதான். அந்த சித்தாந்தங்களில் சில காலத்தின் கோலத்திற்கேற்ப மிக அதிக அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களால் அதற்கு மாறாக உள்ள இன்னொரு சித்தாந்தத்தை மனதாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான்.

    அதே சமயத்தில் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றினாலும் மாற்றார் கருத்தையும் நாம் படித்து அறிய வேண்டும். இதற்கு பொதுவாக மனது இடம் கொடுக்காது. மறுக்கும்.. சில சமயம் அலட்சியப்படுத்தும், சிலசமயம் பயப்படுத்தும் ஆனால் படித்தபின்னர், அதுவும் முடிந்தவரை பொறுமையாக ஒரு திறந்த மனதில் படிக்கப்படும்போது அந்த சித்தாந்தத்தில் உள்ள பல நல்ல கருத்துகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்தான். இப்படிப்பட்ட கருத்து நம் மனதுள் வந்தவுடன் நமக்குள் முதலில் தோன்றுவது மாற்று சித்தாந்தத்தில் உள்ள நல்ல கருத்துகளும் நல்ல மதிப்பும் உண்டாகும்., இதனால் நம் எண்ணங்களையும் செம்மையாக்கிக்கொள்ள உதவுகிறது. மாற்று சித்தாந்தங்களையும் மதிக்கத் தோன்றுகிறது. நம்முள் உள்ள ஒரு எதிர்மறையை நீக்கிக் கொள்ள சந்தர்ப்பமும் தருகின்றது.

    அப்படிப்பட்ட ஒரு கருத்தை நம்முன் நிறுத்தி வாசகர்களுக்கும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துரையைப் பதிப்பித்த திருமதி சுபாஷிணி அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நல்வாழ்த்துகள். அவர் கட்டுரையை முழுதும் படிக்க இதோ அவரது இணைப்பு – http://www.vallamai.com/?p=42999

    கடைசி பாரா: பிச்சினிக்காடு இளங்கோ’வின் சொல்லும் சொல்லும் கவிதை.

    சொற்களெல்லாம்

    சிக்கிமுக்கிக் கற்கள்

    விருட்சமாய்

    விளையும் விதைகள்

    ஒவ்வொரு சொல்லும்

    வாமன வடிவம்

    ஒவ்வொரு சொல்லும்

    சுரங்கம்

    ஒவ்வொரு சொல்லும்

    ஒரு

    சூத்திரம்

    சூத்திரம் விரிந்தால்

    சூட்சுமம் விளங்கும்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம்.

    உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் மட்டுமே நாம், நம்மை மறக்கமுடியும். உறக்கம் இறைவன் உயிரினத்துக்குத் தந்த பரிசு.அதை சத்விநியோகம் செய்து கொள்வது கூட பெருங்கலைதான். ஏனெனில் மனிதகுலம் பெரும்பாலும் இந்தக் கலையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்தான் தவிக்கிறது. அதற்கேற்றாற்போலத்தான் இந்த நவீன காலமும் காலத்தின் மாற்றத்தில் தோன்றிய வசதிகளும் மனித குலத்தை உறக்கத்தின் பக்கம் போகாமல் அலைக்கழிக்கிறது. இயற்கை முறையில் வரவேண்டிய உறக்கம் செயற்கை முறையில் தருவிக்கப்பட்டு அதனால் கிறக்கம் மட்டுமே கிடைக்கிறது என்பதும் நிஜம்தானே..

    வாழ்க்கையில் எது குறைந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உறக்கம் குறைந்தால் நிச்சயம் உடல்நிலைக்குக் கெடுதல்தான். உறக்கம் குறைந்தால் முதலில் எரிச்சல்தான் வரும். நம் மனநிலையும் கெடும்.. இப்படிப்பட்ட உறக்கத்தைப் பற்றி நந்திதா அவர்கள் வேறு வகையில் வல்லமையில் எழுதியது மிகச் சரியாக மனதுக்குப்பட்டது. இதோ நந்திதா அவர்களின் எழுத்தில் உறக்கத்தின் மகிமையைக் கொஞ்சம் படியுங்களேன்.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

    பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

    சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனை போதும்.

    நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

    அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

    கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

    ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

    டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

    கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு.

    அழகான எழுத்தில் உறக்கத்தின் பெருமையை வடித்த நந்திதா அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ஞா. கலையரசியின் –

    1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

    பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப் மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ’மனைவி அமைவதெல்லாம் ’ என்று முன்பொருநாள் என்னுடைய வலைப்பகுதியிலே மனைவியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் (http://vamsadhara.blogspot.in/2008/06/blog-post_05.html) இந்த விஷயத்தில் . என் எண்ணம் இன்றைக்கும் மாறவில்லை. என்றைக்கும் மாறவும் மாறாது. மனைவி என்பவள் என்றைக்குமே ஒரு ஆச்சரியக் குறி. சுயநலமில்லாதவள். தனக்கென வாழாது குடும்பத்துக்கென வாழும் அவளால்தான் இந்தியாவுக்கு, இந்திய சமூகத்துக்கு இன்றளவும் உலகத்தில் நல்லபெயர். இந்த விஷ்யம் விவாதத்துக்குரியதே இல்லை என்பது கூட என் கணிப்பு.

    அவ்வப்போது இந்த கல்யாணமே செய்துகொள்ளாமல் பிரமச்சரியமாக இருப்போர் செயலையும் சொல்லையும் பார்க்கும்போதெல்லாம் ஒரு பரிதாபம் கூடத் தோன்றும். இவர்கள் மட்டும் திருமணபந்தத்தில் வந்திருந்தால் இவர்களது புத்தியானது மிகவும் கூரடைந்து சீராக இருந்திருக்குமே.. மனைவியானவள் அமைவதின் பயனை இவர்களும் அனுபவித்திருக்கலாமே இப்படி ஒரு நல் வாய்ப்பை நழுவ விடுகிறார்களே என்று கூட தோன்றும். இதனால் பிரமச்சார்ய சமுதாயம் என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம். மனைவியானவளின் சக்தி அபரிமிதமானது என்பதை அறியாமலே வாழ்க்கையைக் கழிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் சொன்னேன்… அவ்வளவே..

    ஆண் பெண் யாராக இருந்தாலும் அந்த ஆத்மாவுக்கு நிச்சயம் வாழ்வின் முடிவில் நினைத்துப் பார்க்கும்போது ஒரு நிம்மதி கிடைக்கவேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது பொதுவாக தனக்காக விதிக்கப்பட்ட கடமையை செவ்வனே கழிப்பது பெண் அதாவது மனைவியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த மனைவி எனும் ஸ்தானத்தில் நிம்மதியை அதி சீக்கிரம் அவள் அடைவதாகவும் நினைப்பதுண்டு. அப்படியானால் ஆண்களுக்கு நிம்மதி கிடையாதா எனக் கேட்க வேண்டாம். அதைப் பற்றி ’கணவர்’ என்ற தலைப்பு கிடைக்கும்போது நிறைய பேசலாம்.

    சமீபத்தில் வல்லமையில் இந்தக் கட்டுரையைப் படித்தேன். (http://www.vallamai.com/?p=42320) கஸ்தூரி பா காந்தியைப் பற்றியது. காந்தியைத் தெரிந்த அளவுக்கு கஸ்தூரிபா அவர்களைப் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்களோ.. கஸ்தூரிபா வின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் இந்தக் கட்டுரையின் மூலம் தெரிய வருவது. காந்தியை விட அவர் ஆத்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கவேண்டும் என்றும் மனதில் பட்டதை சொல்லிவிடவேண்டும்தான்.

    unnamed (3)

    //கஸ்துர்பா அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்தது, அவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு இருந்தது. ”அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; அவர் உடல் மயக்க மருந்தை ஏற்கும் தகுதியற்றதாக இருக்கிறது” என்று மருத்துவர் அண்ணலிடம் தெரிவித்தார். காந்திஜி அன்னையிடம் இதைத் தெரிவித்தார். அவர்கள் உடனே, ’’நான் வலியைத் தாங்கிக் கொள்கிறேன். மயக்க மருந்து தர வேண்டாம்” என்று கஸ்தூர்பா அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துவிட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த அம்மையாருக்கு இத்தகையதொரு ஆன்ம பலம் எவ்வாறு கிட்டியது? அவருடைய கர்மயோகத்தின் வலிமையே காரணம். கணவரின் செயல்களை தன் உள்ளத்தில் ஏற்றி உண்மையாகவே அவற்றை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததன் பயன் தான் இந்துமதத்தின் அடிப்படைக் கருத்துகளில் அசையா நம்பிக்கை அவருக்கு. படிப்பறிவோ எழுத்தறிவோ கிடையாது. ஆனால் ஞானம் பெற்ற பெண்மணியாக விளங்கினாள்.

    அறுவை சிகிச்சை முடிந்தது. எனினும் அவர்தம் உடல்நிலை தேறவில்லை. அன்னைக்கு மாட்டிறைச்சி தேநீர் கொடுத்தால் உடல் தேறும் என்று மருத்துவர் கூறினார். காந்திஜி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, இதை அன்னையிடம் தெரிவிக்க, ”நான் அந்தத் தேநீரைக் குடிக்க மாட்டேன். இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்தது அரிது. நான் என் உடலை அசுத்தப்படுத்த விரும்பவில்லை. அதைவிட நான் உங்கள் மடியில் உயிரை விட விரும்புகிறேன்” என்று பதிலளித்துவிட்டார். அவர்கள் வாழ்ந்து வந்த பீனிக்ஸ் பண்ணைக்கு வந்த ஸ்வாமி மாட்டிறைச்சி தெநீர் அருந்துவதில் தவறில்லை என்றும் இந்துமத நூல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அன்னை அவர்கள் மறுத்துவிட்டார். நூல்கள் கூறினாலும் தன் கொள்கையினின்றும் சற்றும் பிறழாத தன்மைதான் காந்தி-கஸ்தூர்பா வாழ்க்கையின் சிறந்த அம்சமாகும். ஏனெனில் காந்திஜி அன்னையிடம் சொல்லுவார், ”நாம் மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறோம், நாம் செய்யும் செயல்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்” என்று. அதனால் கஸ்தூர்பா அவர்கள் தான் செய்யும் செயல்கள் தன் கணவரின் நெறிக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்

    ஆகாகான் மாளிகையில் அவர் இறுதிக் காலம் கழிந்தது. அவர்கள் அங்கே சிறைபடுத்தப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மிக மோசமாகிக் கொண்டு வந்தது. பா அவர்கள் காந்திஜியின் மடியில்தான் தன் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். தன் உடல் மீது காந்திஜி அவர்கள் நூற்ற நூலினால் நெய்யப் பட்ட துணியைத்தான் தன் மீது போர்த்த வேண்டும் என்றும் தன் சமாதி மகாதேவ் தேசாயின் சமாதியின் அருகில்தான் இருக்க வேண்டும் எண்றும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டது. பா அவர்கள் உயிர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிரிந்தது. காந்திஜி வேதனையுடன் கூறினார், ”என்னை என் மூத்த ஆனால் என்னிடம் நம்பிக்கையுள்ள உடனுறை தோழியிடமிருந்து எவ்வாறு பிரிக்க முடியும்? அவள் என்னுடன் பின்னிப் பிணைந்து விட்டாள். அவள் பிரிவு நிரப்ப முடியாத ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.” //.

    இந்தக் கட்டுரைக்குத் தலைப்பாக ‘ஒரு மனைவியின் பெருமை’ என்று குறிப்பிட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது. அருமையான கட்டுரையை வல்லமையில் பகிர்ந்து கொண்ட திரு விப்ரநாராயணன் திருமலையை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி. திரு திருமலைக்கு எனது வாழ்த்துகள்.

    கடைசி பாரா::திருமதி மேகலாவின் இறைநேசர் கட்டுரையில் உள்ள குறளுக்கு விளக்கம்:

    பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சென்ற வாரம் உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு மகிழப்பட்டது. சந்தோஷம்தான். காதலை வாழ்த்திப் போற்றுவோம்.

    இதன் மத்தியில் திருக்குறளைப் பற்றிய விவரணை புத்தகம் ஒன்று எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை எழுதியவர் திரு சி. ராஜேந்திரன் அவர்கள். இந்திய கலால், சுங்கத்துறை ஆணையர்.

    rajendranதிரு ராஜேந்திரனுக்கு உயிர்மூச்சு என்பது திருக்குறள்தான். வாழ்நாளில் அதன் உள்ளார்ந்த தத்துவத்தை அப்படியே மனிதர்கள் கடைபிடித்தால் சண்டை சச்சரவு, நிம்மதியின்மை, கொடுமை, எல்லாமே தீரும் என்பதை தம்மை சந்திக்கும் அத்தனை பேரிடமும் சொல்லி வருகின்றார். திருக்குறள் கருத்துகள் வாழ்க்கையின் முடிவல்ல, அவை வாழ்க்கையின் அடித்தளம், திருக்குறளை வாழ்வின் ஆணிவேராகக் கொண்டு வானுயர வளர்வோம்’ என்பார்.

    இவரது ‘திருக்குறள் உவமைநயம்’ எனும் புத்தகம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பப்பாடமாக வைத்துப் பயிற்றுவித்தால் மாணவர்கள் நிச்சயமாக பலனடைவார்கள் என்பது என் எண்ணம். திருக்குறளுக்கு வாழ்வியல் பாடம் போல எளிய விதத்தில் விளக்கமாக எடுத்துரைக்கும் விதம் எல்லோருக்கும் மனதில் சடக்கென் புகுந்து விடும்.

    காதலர் தினம் என்று சொன்னேன் அல்லவா.. காதலைப் பற்றிய வள்ளுவரின் குறட்பாக்கள் ஏராள்மாக இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து திரு ராஜேந்திரனின் எழுத்து மூலமாக கீழே கொடுத்துள்ளேன்.

    ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலையானும் இனிது.

    ஒருதலைக் காதல் துன்பமானது. காதல் காவடியைப் போல இருபுறத்தில் இருந்தால்தான் இன்பம்.

    இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது இந்த சிக்கல். காதல் என்பது ஒருதலையாக இருந்தால்தான் துன்பம்தான் வரும். இந்தக் காதல் என்பதை களவு மற்றும் கற்பு என்ற இருநிலையிலும் வைத்துப் பார்க்கவேண்டும்.

    காவடியின் எடை இருபுறமும் சரியாக இருந்தால்தான் காவடியை சுமக்கும்போது பாரமில்லாமல் இருக்கும், காவடி நிலையாக இருக்கும், சுமப்பதற்கு எளிதாக இருக்கும். அதே போல வாழ்க்கை எனும் காவடி எப்போதும் நிலையாக இருக்கவேண்டும். குடும்பம் எனும் காவடி அதன் இலக்கைச் சென்று சேரவேண்டுமெனில் கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் ஒத்த அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மை தத்துவத்தைப் புரிந்து கொண்டால் மணவாழ்க்கையில் கசப்பு ஏது, குழப்பம் ஏது?

    மேலும் நாம் இன்று பயன்படுத்தும் காமம் என்ற சொல்லின் பொருளுக்கும் வள்ளுவர் பயன்படுத்தும் காமம் என்ற சொல்லுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உண்டு. இன்று காமம் மிகவும் கீழ்த்தரமான செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.காதல் என்பது மென்மையான உணர்வு தொடர்பான சொல்லாகக் கருதப்படுகிறது.

    வள்ளுவரோ காமம் எனக் குறிப்பிடும்போது மென்மையான உணர்வு என்று குறிப்பிடுகிறார். காமக்கலன் (அதி.61) என்றால் விரும்பி ஏறும் படகு என்கிறார்.. உடல் சேர்ந்த இன்பத்தைப் ‘புணர்ச்சி’ ‘முயக்கம்’ என்று சொற்களைப் பயன்படுத்தி விளக்குகிறார்.

    மேலும் காமம் – காதல், திருமணத்துக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடியது. திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை மறைந்து காதலிக்கும் களவு வாழ்க்கை. கற்பு – இல்வாச்ழ்க்கை என்பது ஊரறிய உறவறிய திருமணம் முடிந்து அதன் பின் தொடரும் காதல் வாழ்க்கை. எனவே காமம் என்பது உடல் சார்ந்த சொல் இல்லை.
    (பக்கம் 288, ’திருக்குறள் உவமை நயம்’, எழுதியவர் திரு சி. ராஜேந்திரன், கவிதா பப்ளிகேஷன், தி. நகர், சென்னை, விலை ரூ 125/-)

    உண்மைதானே.. இன்று காதல் என்பது காமநோக்கில் பார்க்கப்படுகிறது. அன்று காமம் என்பது காதல் நோக்கில் பார்க்கப்பட்டது. எளிமையான விளக்கம் தந்த திரு ராஜேந்திரன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்வு செய்கிறது.. குறட்பாக்களைப் பரப்பும் வலைத்தளம் ஒன்றை www.voiceofvalluvar.org என்ற பெயரில் உருவாக்கி அனைவருக்கும் சமுதாய சேவை செய்து வரும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    இந்த தளத்தை ஒருமுறை அனைவரும் பார்க்கவும். திருக்குறள் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் வாழ்வில் பயன் தருகிறது என்று புரியும். அத்துடன் நீங்களும் இந்தத் தளத்தில் கருத்துக்க்களையும் திருக்குறள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் பதிவு செய்யலாம். வாழ்க அவரது பணி!!

    கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தியின் கவிதை:

    ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த

    ஆண்டவன் போலவே எந்நாளும்

    காதலும் காலத்தை வென்றதடி – வளைக்

    கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வரும்காலம் பூராவுமே காகிதமில்லா உலகமாக மாற இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே ஒரு கவலையும், சந்தோஷமும் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கவலை என்னவென்றால் பேப்பர் (செய்திகளாகட்டும், புத்தகங்களாகட்டும்) சம்பந்தப்பட்ட தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்றுதான். அதே சமயத்தில் பேப்பரில்லா காலத்தில் எத்தனை சேமிப்புகள், எத்தனை எளிமைகள், என்பதையும் எண்ணிப்பார்த்து சந்தோஷப்பட வேண்டும்தான்.

    எத்தனைதான் மின்வழிச் சாதனங்கள் மூலம் படித்துப் பார்த்தாலும் புத்தகம் மூலம் பொறுமையாக பார்த்துப் படித்து ரசிப்பது போல வருமா எனக் கேட்ப்போருமுண்டு. பழங்காலத்தில் செவி வழிக் கல்விதான். பின்புதான் ஏட்டுக் கல்வி வந்தது.ஏட்டுக் கல்வி போய் கணினிக் கல்வி வரும்போது கணினிக்கு ஏடு தாராளமாக வழிவிட வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்கனவே தினப் பத்திரிகைகள் மின்னிதழ்களை இப்போதே ஆரம்பித்து விட்டன. இந்தப் போக்கு இன்னும் வேகமடையுமா..காகிதம் முழுவதும் . மின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் மூலமாக ஓரங்கட்டப்பட்டு ஒரேயடியாக கிழிந்து போகும் நிலை வருமா. காகிதத்தை வெறும் காற்றாடிக்காக மட்டுமே பயன்படுத்தும் காலம் வருமா.. ஏனோ இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    இதற்கிடையில் இந்த கால கட்டத்தில் வாழும் படைப்பாளிகள் வரும் எதிர்காலத் தலைமுறைக்காக தம்மைத் தயார் செய்துகொள்ளத்தான் வேண்டும். காகிதப் புத்தகங்கள் நிச்சயமாக நமக்குச் செல்வம் போலத்தான்.ஆனால் காலம் மாறுகிறது என்பதை நம் கண் முன்னால் காணும்போது காலத்துக்கேற்றவாறு மாறுவதும் இயல்புதானே.. காகிதப் புத்தகங்கள் காகிதத்தைத் துறந்து மின் புத்தகமாக மாறி வரும் இந்த இடைப்பட்ட காலத்தை படைப்பாளிகள் தகுந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    480498_10151261068171644_1937474422_nஇப்படிப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த திரு ஸ்ரீனிவாசன் . படைப்பாளிகளுக்கு ஒரு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த பணி ஒரு உயரிய பணி என்பதோடு படைப்பாளியின் படைப்புகள் உலகெங்கும் பரவ வழியின் செய்தது போல ஆகிறது. நல்லுதவி செய்து வரும் திரு ஸ்ரீனிவாசன் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்

    தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள். அவரைப் பற்றி மேலும் அறிய தேமொழியின் தொடுப்பைக் காணலாம்.

    I nominate Mr. Srinivasan   (https://www.facebook.com/tshrinivasan) as vallamaiyaalar for his continuing effort in making free eBooks possible and also for introducing authors by making their works available for the general public.
     
     

    கடைசி பாரா: கிரேஸி மோகன் அவர்களின் வேதாந்த பண்டு

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    எண்ணங்களும் வார்த்தைகளும்தான் நம் மனத் திண்மையை அதிகரிப்பதோடு விளைவுகளுக்கு வித்தாகவும் இருக்கின்றன. எண்ணங்களைப் பற்றி கீதையில் கூட செய்தி உண்டு. கடைசிகால கட்டத்தில் என்ன எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறதோ அதுவாகவே மறுபிறவியில் மாறிவிட சாத்தியங்களைப் பற்றியும் கீதை பேசுகிறது. வார்த்தைகள் கூட அப்படித்தான்.

    1069274_10200403582107947_1677963781_nரிஷிகளின் சாபங்கள் பற்றி ஏகப்பட்ட கதைகளைப் படித்திருக்கிறோம். வார்த்தைகள் சாபங்களாக மாறும்போது அதன் பலன் என்ன என்பதையும் அகலிகை முதலானதாக நிறையவே படித்திருக்கிறோம். பொதுவாகவே வார்த்தைகளை நாம் அளந்துதான் பேசவேண்டும் என்பதைப் பெரியவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்மறை வார்த்தைகள் பேசும்போது உடனடியாக அது பலிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதே போல நெஞ்சார நாம் வாழ்த்தி வார்த்தைகளாய்ப் பேசும்போது வார்த்தைகளை வெளியே விடும் நமக்கே ஒரு நல்ல திருப்தியைக்கூட தரும். இதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்கள் எழுதியது. இதோ அவர் எழுத்தில்.

    ஒரு வார்த்தை வெறும் ஓர் ஒலி அல்ல. இதற்கு அர்த்தமும் உண்டு — தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்று கூறியது போல.

    அர்த்தம் என்றால் என்ன?

    ஒருவர் “நேர்மை” என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்னென்ன நடக்கிறது?

    உங்களுக்குத் தெரிந்த சில நேர்மையானவர்களின் படிமங்கள் உங்கள் மனதில் தோன்றுகின்றன. அந்த படிமங்களுடன் இணைந்த இனிமையான உணர்வுகளும், அனுபவங்களும் மனதில் எங்கோ ஆழத்தில் தோன்றி அங்கு நேர்மறை உள்ளுணர்வுகளைத் (positive feelings) தோற்றுவிக்கின்றன . அதே போல எதிர்மறையான ஒரு வார்த்தையைக் கேட்கும்போது எதிர்மறையான உள்ளுணர்வுகள் மனதில் தோன்றுகின்றன.

    “நாளை காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்வேன்” என்று சொல்வதற்கும், “நாளைக்கு தாமதமாக எழுந்திருக்க மாட்டேன்” என்று சொல்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

    இரண்டாவது வாக்கியத்தின் அர்த்தத்தில் ஒரு சிறிய எதிர்மறை சாயல் இருக்கிறது. முதலாவது வாக்கியம் ‘சீக்கிரமாக எழுந்திருக்கும்’ நேர்மறை பிம்பத்தை நம் மனத்திரையின் மீது வீசுகிறது. ஆனால், இரண்டாவது வாக்கியமோ ‘தாமதமாக எழுந்திருக்கும்’ எதிர்மறை சாயலைக் கொண்டுள்ளது. நாம் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணரவில்லையானாலும் அது ஆழ்மனதைப் பாதிக்கும்.

    வார்த்தைகள் வெறும் ஒலி அல்ல. அவை மின்னூட்ட அணுக்களைப் போல (charged particles). நமது மனதை எப்படிப்பட்ட வார்த்தைகளுடன் நிரப்புகிறோமோ அவ்வாறே மாறுகிறோம். தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாலா? சோகமும் தளர்ச்சியும் விளைவிக்கும் வார்த்தைகளாலா?

    உண்மைதான். நல்ல வார்த்தைகளால் ஊக்கமும் தன்னம்பிக்கையையும் நம்மால் அனைவருக்கும் வழங்கமுடியும்தானே.. இப்படிப்பட்ட ஊக்க மாதிரிகள் இந்தச் சமுதாயத்திற்கு நிறைய தேவை என்பதை மனதிற்கொண்டு, நல்லதொரு கட்டுரையைத் தந்த திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம். திரு டோக்ரா அவர்களுக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    http://dhiaanam.wordpress.com/

    கடைசி பாரா: குறவன் பாட்டு – கடைசிப் பகுதியிலிருந்து நகர வாழ்க்கையை நன்றாகக் காண்பிக்கிறார் திரு சச்சிதானந்தம்.

    அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

    அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

    அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

    அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    தமிழ்மொழி தேனினும் இனிய மொழி. பல்வகை சிறப்புகளைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டும், காலத்துக்கேற்ற மாறுதல்களையும் தனக்கெனத் தனியாக உள்வாங்கிக் கொண்டும் எக்காலத்துக்கும் சிறந்த மொழியாகத் திகழ்கிறது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாதுதான். அதே சமயத்தில் தமிழ் மொழியின் சிறப்பு அதன் பழைய இலக்கியங்களிலேயே அடங்கிக் கிடப்பதும், புத்தம் புதிய இலக்கியங்கள் என வரும்போது அதன் தன்மை இன்னமும் அதிகமாக வெளிப்படவில்லையென்றுதான் தற்சமயம் நமக்குப் படுகின்றது. எதிர்காலத்தில் இன்றைய தமிழ் உலகம் தமிழுக்குக் கொடுத்த சிறப்புகள் என்னென்ன என்பதை வாழ்வாங்கு வாழ்விக்குமா என்பதும் நமக்கு இப்போதைக்குத் தெரியாதுதான்.

    இன்றைய தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத்தில் பேசப்பட வேண்டும் என்று நினைத்து எழுதும் எண்ணம் நம் தமிழ் மண்ணில் இருப்பதை விட தமிழ்நாடு தவிர்த்த பிற மண்ணில் வாழும் தமிழரிடையே பரவலாக இருப்பதைக் காண்கிறேன். தமிழ் எல்லோருக்கும் பரவலாகவே வளைந்து கொடுக்கும் மொழி எனும்போது புலம்பெயர்ந்த மண்ணில் இருந்தாலும் தமிழில் நல்ல நூல்கள் சமீப காலங்களில் படைக்கப்பட்டுள்ளன. இவை காலம் கடந்து நிற்கவேண்டுமென்பதே நம் ஆசை. அதே சமயத்தில் இப்படி புலம்பெயர்ந்த மண்ணில் தோன்றும் தமிழ் நூல்களையும் எழுத்தாளர்களையும் தமிழ்நாடு எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இப்படி ஒரு உற்சாக விழாவாக சமீபத்தில் கோவையில் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் மாநாடு ஒன்று நடந்ததும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த திரு மாலன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், திரு மாலன் அவர்களின் செயல்பாடு குறித்தும் திருமதி பவளசங்கரி அவர்களின் கட்டுரை வல்லமையில் வெளியாகி உள்ளது. அதிலிருந்து சில பகுதி..

    Maalan//கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற *திரு மாலன்* தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது.
    “புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது//

    இப்படிப் போற்றுதலுக்குரிய திரு மாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு மாலன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் தமிழ்நாடு தவிர பாரதத்திலேயே உள்ள பிற பாகங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இலக்கியப் பணிகளையும் வெளிக்கொணர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: தஞ்சை திரு வே. கோபாலன் அவர்களின் பின்னூட்டம் வல்லமையில்:
    64 வயது ஆன இந்திய குடியரசு இன்னமும் ஜனநாயக நெறிகளைப் பின்பற்றவில்லையென்றால், நம்மை நாமே ஆளும் தகுதி நமக்கு வரவில்லை என்று பொருள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    தை மாதம் வந்தாயிற்று.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஏனெனில் தைமாதம் புதுநெல் அறுவடையில் கிடைக்கும் உழவர் பெருமக்கள் யாவரும் புதுநெல்லைத் தந்து ஆண்டு முழுவதற்குமான தங்கள் வயிற்றுச் சோறைப் பெறும் மாதம். உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க, அந்தப் பொங்கும் மகிழ்ச்சியை மங்கலமாகக் கொண்டாட வழி வகுத்த மாதம். தாம் மட்டுமல்லாமல் தம்மால் ஆதரிக்கப்பட்டுவரும் கால்நடைகளையும் சிங்காரித்து அழகுபார்த்து ஆராதனை செய்து சந்தோஷத்தை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிரும் மாதம். உழவர்களின் பொன்னான மாதம்.

    இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இந்த இருபது-இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வந்த பசுமைப் புரட்சி உலகின் வயல் வளத்தையே புரட்டிப் போட்டு விட்டது. இயற்கையாகவே வரவேண்டிய தானிய உணவுகள், காலம் பார்த்துக் கிடைக்கவேண்டி பயிரிட வேண்டிய உணவுப் பயிர்கள் பெருகி வரும் மக்கள் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டும் வளர்ந்து வரும் நாகரீக உலகின் வசதிக்கேற்பவும், சுலபமாகவும் அதே சமயத்தில் மிக அதிக அளவில் உற்பத்திப் பெருக்கத்தையும் ரசாயனப் பொருட்கள் உதவியின் மூலம் பெற்றுக்கொண்டு வருவதை உலகெங்கும் கண்டு வருகிறோம். நிச்சயமாக உழவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாக நம் நாட்டை அறிவித்துக் கொள்ளலாம். மகிழ்ச்சியான விஷயம்தானே.. ஆனால் அப்படி இல்லைதான். உற்பத்தி அதிகமானாலும் உழவர்களுக்கு உற்பத்திக்கான செலவு வகைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் உழவர் சமுதாயம் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்படுகின்ற காலங்கள் இவை.

    311091_106473259466111_178984958_nஇதைப் பற்றி நிறைய எழுதலாம். உற்பத்திச் செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி, கடனைத் திருப்பமுடியாமல் உழவர்கள் நாடெங்கும் தற்கொலை செய்துகொள்வதைக் கேட்டுக் கண்ணீர் வடிக்காமல் இருக்கமுடியாது. இத் தருணத்தில் உழவர்களைப் போற்றுவோம் என்று நமக்கு உறுதியாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல் உழவர்களைப் போற்றும் குறட்பாக்களை எழுதி பொருளையும் அழகாக விவரித்துப் பதிவிட்ட திண்டுக்கல் தனபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். இதோ அவரது பதிவின் சுட்டி.

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html.

    படித்துப் பாருங்கள். உழவின் அருமை புரியும். ஆதிகாலத்திலேயே சொல்லப்பட்ட கருத்துகள் இன்றும் பொருந்தும் வகையில் இருப்பதற்காக ஒரு பெருமையும், அதே சமயத்தில் இந்த உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாமும் உதவி செய்து கை கொடுக்கவேண்டிய உந்துதலும் கிடைக்கும்

    திரு தனபாலன் உழவர்களுக்கு மட்டும் தோழரல்ல. அவர் எல்லாப் பதிவர்களுக்கும் தோழர். எங்கெங்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தானே வலிய வந்து உதவும் பண்பாளரான திரு தனபாலன் அவர்களை இந்தத் தைமாதத்து வாரத்தில் வல்லமையாளராக வந்தமைக்கு வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திருமதி காயத்ரி பாலசுப்ரமணியம்:

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    மௌனமே மிகச் சிறந்த தவச்செயல் என்பதற்கு நிறையக் காரணம் சொல்லலாம் போல. பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது கூட மௌனத்தை விட சிறந்த பதில் ஏதுமில்லை. அது போல மௌனத்தை விட கடினமான செயலும் ஏதுமில்லை. சும்மா இரு, சொல்லற’ என்று சும்மாவா சொல்லிச் சென்றார்கள் பெரியவர்கள்? மௌனமாக இருப்பது என்பது மனிதனால் அவ்வளவு எளிதான செயலாக எப்போதும் இருந்ததில்லை.

    மனிதனுக்கு ஆதியில் எப்போது பேசும் சக்தி கிடைத்ததோ அப்போதிலிருந்து தன் பிராண சக்தியில் பாதி பலம் இழந்துவிட்டானோ என்றும் படுகிறது. எல்லோருக்கும் பேசத் தெரியுமென்பதால் பேசிப் பேசியே நாட்டைக் கெடுத்து தானும் கெட்டவர்கள் பலபேர். சும்மா இருப்பதால் சுகம் அதிகம் என்பதோடு பேசினால் கெடுதலே அதிகம் என்பதை உணர்ந்தவர் பெரியோர்கள்.

    ஆகையினால் மௌனத்தில் சக்தி அதிகம். மௌனத்தால் கிடைத்த சக்தியைப் பயன்படுத்தியே ஆதிகாலத்தில் நம் சனாதன தர்மத்தை நம் முன்னோர்களான ரிஷிகள் நிலைநிறுத்தினார்கள் என்று சொல்வர். காஞ்சிப் பெரியவர்களின் மௌன விரதமும், ஸ்ரீரமண மகரிஷிகளின் மௌன விரதமும் பல பயன்களைப் பெற்றுத் தந்தன என்பதை மறுக்கமுடியுமா.. பிரபல தத்துவாசிரியர் பால் பிரண்டன் எப்படி வாய்மூடி மௌனமாக இருந்த ரமணமகரிஷியின் கண்களிலிருந்தே குருபோதனை தன்னை நோக்கி வந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். காதலிலும் மௌனம் பேரங்கம் வகிக்கிறது. வாய்பேசுவதை விட மௌனத்துக்கு காதலில் பலவகைப் பதில்கள் காணலாம் என்பதை திருக்குறளிலிருந்து கம்பராமாயணம் வரை பல நூல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மௌனத்தின் பேரழகையும் பேராற்றலையும் வர்ணிக்கும் கவிதையொன்று:

    மௌனத்தின் பாடல்:

    சொற்கூச்சல் பொழுதுகளில்Fakhrudeen (Ibnu Hamdun)
    உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
    நேசத் தென்றல் வீசும் இதயங்களை
    வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
    காலக் காற்று
    தலைமுடி கலைக்கையில்
    சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
    வார்த்தைகள் புதைந்த
    வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
    முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
    ஒரு தவம் போல் நீள்கிறாய்
    வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
    ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.

     

    அறியாமையின் நர்த்தனத்தை
    ஏளனப் பார்வையால் வீழ்த்தி
    மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
    புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
    குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
    நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
    அவ்வப்போது நாற்றமெடுக்கும்
    ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
    பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
    வாழ்வாங்கு வாழ்கிறாய்.

    பின்
    பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
    ‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.

    அந்தக் கடைசி இரண்டு வரிகளில் பேச்சுகள் வெடித்தெழும் தருணத்தையும் மௌனத்தின் மரணத்தையும் எளிமையாகவும் அருமையாகவும் விவரித்த திரு இப்னு ஹம்துன் அவர்களின் கவிதைக்காக இந்தவார வல்லமையாளர் விருது பெறுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு அண்ணா கண்ணனின் தொலைக்காட்சி கவிதை

    பஞ்சுண்டு தீயுண்டு முள்ளுண்டு மலருண்டு உண்டுண்டு பாடம் உண்டு
    நெஞ்சுண்டு நெறியுண்டு நிழலுண்டு நிஜமுண்டு உண்டுண்டு நீதி உண்டு

    வினையுண்டு விளைவுண்டு விழியுண்டு விடிவுண்டு உண்டுண்டு வெற்றி உண்டு
    முனையுண்டு கணையுண்டு முதலுண்டு பதிலுண்டு உண்டுண்டு காலம் உண்டு

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    இன்னொரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வகையில் இந்த புதிய ஆண்டையும் புதுமையாகவே எதிர்கொள்வோம். புது விஷயங்களையும் தெரிந்து கொள்வோம். அப்படி ஒரு புது விஷயத்தை பழைய கால நிகழ்விலிருந்து இன்றுதான் படிக்க நேர்ந்தது. உங்களுடன் அந்த புதிய விஷயத்தை புதுமையாக இந்தப் புது வருட ஆரம்பத்தில் பகிர்ந்துகொள்வது கூட எனக்கு என்னவோ புதுமையாகத்தான் படுகின்றது.

    இறைவன் மீது காவியம் பாடுவோர் பலர், மனிதனை மையமாக வைத்து காவியம் பாடுவோர் பலர். சின்னஞ்சிறு குயிலையும் கூட பாடுபொருளாக்கி காவியம் படைத்தவர் மகாகவி பாரதி. கடவுள், குயில், மனிதன் எல்லாமே நமக்குப் பழைய சங்கதிதான். ஆனால் யாரேனும் எருமை மீது காவியம் பாடுவதைக் கேட்டிருப்போமா.. அப்படிக் கேள்விப்பட்டால் அது புதுமையான விஷயம்தானே..

    இந்தப் புதிய விஷயத்தை தம் பதிவின் மூலம் வெளிப்படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. இதோ அந்தச் செய்தியின் வடிவம். அவர் பதிவின்படி http://gopu1949.blogspot.in/2014/01/105-1-2.html அவர் எழுத்து மூலமாகத் தருகிறேன்.

    //’ஷாஹூஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, ‘குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியாக குழந்தையாத்தான் இருந்தார்.

    ஷாஹூஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.

    அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது ‘குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார்.

    மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே… மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே… அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை ‘சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு ‘அந்யாப தேசம்’ என்று பெயர்.

    இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.

    அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு ‘மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

    ‘மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு ‘மஹிஷன்’ என்று பேரில்லை. ‘மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து ‘மஹீசன்’ ‘மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

    குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் ‘சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது ‘ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.

    அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்… அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ‘ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் ‘உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் ‘பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே ‘தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.

    அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

    ”மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது… சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான – உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்யத்தின் பலன்தான்!” என்று ஒரு ஸ்லோகம்.

    இன்னொன்றில், ”எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே!

    ‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!” என்கிறார்.

    இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு – அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே… அதனால், மனஸிலே நன்றாகத்தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.

    ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.

    அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் ‘ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் ‘மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

    ‘ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், ‘ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிறவனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார்.

    வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

    ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.’

    vgk photoஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? //

    நம் காலகட்டத்தில் நம் முன்னே நடமாடிய தெய்வமான காஞ்சி மகா முனிவர் அருளிய இந்த புதுமையான செய்தியை நமக்குப் பதிவாகத் தந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம். காஞ்சி மஹானின் செய்திகளையெல்லாம் தம் வலைப்பூவில் கொடுத்து வருவது பயனுள்ளவிஷயம் என்பதோடு அதைப் படிக்கும் இக்கால சமுதாயத்தினர் மேலும் பயன்பெறுகிறார்கள் என்பதும் இனிமையான விஷய்ம்தானே. வாழ்க அவரது உயர்ந்த பணி!!

    கடைசி பாரா: கவிஞர் ஜெயபாரதனின் புத்தாண்டு பிறந்தது’ கவிதையிலிருந்து

    சித்தர்கள் ​புதிதாய்ப் ​பிறக்கணும் !

    பித்தர்கள் தெளிவாகணும் !

    ​புத்திகள் கூர்மை ஆகணும் !

    யுக்திகள்​ புதிதாய்த் தோன்றணும்.

    சண்டைகள் ​குறையணும் !

    ​ஜாதிகள் சேர்ந்து வாழணும் ! ​

    சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    sathyaசென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட சந்தித்திருந்தேன். என்னடா உனக்கு இப்படி வயசாகிவிட்டதே என்று அவனை கிண்டலடித்ததற்கு, ஆமாம்.. இவர் என்றும் மார்க்கண்டேயராக்கும்’ என்று பதிலடி கொடுத்தான்.. கூடவே என்னை அருகேயே இருந்த அவன் வீட்டுக்கும் அழைத்துப்போய் தூசி தட்டப்பட்டு அலமாரியில் வைத்திருந்த என் புத்தகங்களையும் (பெருமையாக) காண்பித்தான். அவன் மனைவிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தான்..

    அந்தப் பெண்மணி என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, உங்கள் புத்தகத்தில் உள்ள புகைப்படத்தைப் போலத்தான் இருக்கிறீர்கள்.. ஆனால் சின்னப்ப மட்டும் கொஞ்சம் அழகாகத்தான் இருந்தீர்கள்’ என சீரியஸ்ஸாகச் சொன்னதும் என் நண்பனை கேள்விக் குறியாகப் பார்த்தேன்..

    ’அட, அது வேற ஒண்ணுமில்லே.. நம்ம ஸ்கூல் போட்டோவைச் சொல்றாடா.. ’எங்கே இவனுக்கும் கொஞ்சம் காண்பியேன்.. இவன் அழகை இவனே மெச்சிக்கட்டும்’ என்று மனைவியைப் பார்த்துச் சொன்னதும் அவர் உள்ளே சென்று ஒரு பழைய ஆல்பம் கொண்டு வந்தார். என் நண்பனின் சித்திர சுய வரலாறு என்று பார்த்தவுடனே புரிந்தது. என்னுடனும் இன்னும் இரண்டு நண்பர்களுடனும் அந்தப் பள்ளி வயதில் போட்டோ எடுத்துக் கொண்டதை நான் அந்த நேரத்திலேயே மறந்திருந்தாலும், இவன் மறக்காமல் ஆல்பத்தில் இன்னும் வைத்துக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தாலும், அதே சமயத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் உள்ள அந்த நான், நான்தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்ததும் வாஸ்தவம்தான்.. நானேதான் என்பதை சத்தியம் செய்தான் அவன் என்பது இன்னொரு விஷயம்.

    இந்த விஷயங்கள் கீழே உள்ள அந்த சுட்டிப் பெண்ணைப் பார்த்ததும் நினைவுக்கு வந்ததுதான். நாளை வயதானபின் இந்தப் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்தப் பெண் என்ன நினைப்பாளோ என்ற ஒரு கற்பனையும் கூடவே எழுந்ததுதான். இனி இந்த வார வல்லமையாளரைத் தேர்ந்தெடுக்கும் அமைதிச்சாரல் சாந்திக்கு வழிவிடுவோம். இதோ சாந்தியின் எழுத்தில்:

    இந்த வார வல்லமையாளர்: திரு. சத்யா.

    ஒளிப்படக்கலையில் வல்லுனரான இவர் எதைக் க்ளிக் செய்தாலும், அந்தப் படம் உயிர் பெற்று வந்ததைப்போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஒளியமைப்பு, காட்சியமைப்பு, கோணங்கள், வண்ணங்களின் சேர்க்கை என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் அழகைக்கொண்டவை. இவரது படங்களை ரசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

    http://www.flickr.com/photos/snarayanank/with/9537102597

    ஒளிப்படங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துவதாக அல்லாமல் சில சமயங்களில் தகவல்களின் இருப்பிடமாகவும் இருப்பதுண்டு. ஒளிப்படங்கள் வழியாக கலைஞன் அந்த நொடியில் தான் உணர்ந்ததை பார்வையாளனுக்கும் கடத்துகிறான். அந்த வகையில் சத்யாவின் இந்த ஒளிப்படம் சிறப்புப்பெறுகிறது. பார்க்கும் அந்த நொடியிலேயே பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மனநிலை நமக்கும் ஏற்பட ஆரம்பிக்கிறது. அந்தப்பெண்ணின் குறும்புத்தனமான பார்வையும் வண்ணக்கலவையும், அழகான முகபாவமும் கவர்கின்றன. bokeh, dof போன்ற சிறப்பம்சங்களால் படம் மேலும் அழகுபெறுகிறது.

    sathya

    http://www.flickr.com/photos/snarayanank/11368702886

    இந்த வார வல்லமையாளரான திரு. சத்யாவுக்கு வல்லமை சார்பில் என் வாழ்த்துகள்.

    கடைசிப்பாரா: தேமொழியின் ”தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை”

    தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.

    Share