இந்த வார வல்லமையாளர்
திவாகர்
இன்னொரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வகையில் இந்த புதிய ஆண்டையும் புதுமையாகவே எதிர்கொள்வோம். புது விஷயங்களையும் தெரிந்து கொள்வோம். அப்படி ஒரு புது விஷயத்தை பழைய கால நிகழ்விலிருந்து இன்றுதான் படிக்க நேர்ந்தது. உங்களுடன் அந்த புதிய விஷயத்தை புதுமையாக இந்தப் புது வருட ஆரம்பத்தில் பகிர்ந்துகொள்வது கூட எனக்கு என்னவோ புதுமையாகத்தான் படுகின்றது.
இறைவன் மீது காவியம் பாடுவோர் பலர், மனிதனை மையமாக வைத்து காவியம் பாடுவோர் பலர். சின்னஞ்சிறு குயிலையும் கூட பாடுபொருளாக்கி காவியம் படைத்தவர் மகாகவி பாரதி. கடவுள், குயில், மனிதன் எல்லாமே நமக்குப் பழைய சங்கதிதான். ஆனால் யாரேனும் எருமை மீது காவியம் பாடுவதைக் கேட்டிருப்போமா.. அப்படிக் கேள்விப்பட்டால் அது புதுமையான விஷயம்தானே..
இந்தப் புதிய விஷயத்தை தம் பதிவின் மூலம் வெளிப்படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. இதோ அந்தச் செய்தியின் வடிவம். அவர் பதிவின்படி http://gopu1949.blogspot.in/2014/01/105-1-2.html அவர் எழுத்து மூலமாகத் தருகிறேன்.
//’ஷாஹூஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, ‘குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியாக குழந்தையாத்தான் இருந்தார்.
ஷாஹூஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.
அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது ‘குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார்.
மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே… மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே… அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை ‘சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு ‘அந்யாப தேசம்’ என்று பெயர்.
இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.
அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு ‘மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
‘மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு ‘மஹிஷன்’ என்று பேரில்லை. ‘மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து ‘மஹீசன்’ ‘மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.
குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் ‘சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது ‘ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.
அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்… அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ‘ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் ‘உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் ‘பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே ‘தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.
”மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது… சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான – உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்யத்தின் பலன்தான்!” என்று ஒரு ஸ்லோகம்.
இன்னொன்றில், ”எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே!
‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!” என்கிறார்.
இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு – அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே… அதனால், மனஸிலே நன்றாகத்தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.
ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.
அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் ‘ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் ‘மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.
‘ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், ‘ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிறவனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார்.
வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.
ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.’
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? //
நம் காலகட்டத்தில் நம் முன்னே நடமாடிய தெய்வமான காஞ்சி மகா முனிவர் அருளிய இந்த புதுமையான செய்தியை நமக்குப் பதிவாகத் தந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம். காஞ்சி மஹானின் செய்திகளையெல்லாம் தம் வலைப்பூவில் கொடுத்து வருவது பயனுள்ளவிஷயம் என்பதோடு அதைப் படிக்கும் இக்கால சமுதாயத்தினர் மேலும் பயன்பெறுகிறார்கள் என்பதும் இனிமையான விஷய்ம்தானே. வாழ்க அவரது உயர்ந்த பணி!!
கடைசி பாரா: கவிஞர் ஜெயபாரதனின் புத்தாண்டு பிறந்தது’ கவிதையிலிருந்து
சித்தர்கள் புதிதாய்ப் பிறக்கணும் !
பித்தர்கள் தெளிவாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும்.
சண்டைகள் குறையணும் !
ஜாதிகள் சேர்ந்து வாழணும் !
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !
// திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம்.//
’வல்லமை’ மின் இதழ் ஆசிரியர் அவர்களுக்கும், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் அடியேனின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்ரஹம் மட்டுமே, அடியேனால் தொடர்ந்து அவர்களைப்பற்றி 100 பகுதிகளுக்கு மேல், ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம், செய்திகள் பல சேகரித்து, அவற்றை ஒருங்கிணைத்து, பிறருக்கு எளிதில் புரியும் வண்ணம், பதிவுகளாக வெளியிட முடிந்துள்ளது.
வரும் 11.01.2014 அன்று 108வது பகுதியுடன் அந்தத்தொடர் நிறைவடைய உள்ளது.
மீண்டும் என் நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
http://gopu1949.blogspot.in/2014/01/106-3-3.html
மேற்படி இணைப்பினில், என் வலைத்தளத்தில், இந்த மகிழ்ச்சியான புத்தாண்டுச் செய்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே. .
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
புத்தாண்டில் புதிதாக ஒன்றைச்சொல்லி வல்லமையாளர் ஆன
திரு வை கோபாலைருஷ்ணன் ஜிக்கு என் இனிய வாழ்த்துகள்
என் அன்பு ஜெயபரதன் ஜி க்கும் என் நல்வாழ்த்துகள்