இந்த வார வல்லமையாளராகக் கலைஞர் மு. கருணாநிதி (1924-2018) அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிய இசை வேளாளர் குடும்பத்தில், திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு.க. தமிழக அரசியலை 60 ஆண்டுகளாக வழிநடத்திய மாபெரும் சக்திகளில் ஒருவராக இருந்தார். எப்பொழுதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும், வன்முறைப் பாதையைத் தூண்டும் அரசியலைக் கையில் எடுக்காதவர் ஆகவும் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தை அமைத்தார்.

சமூக நீதியை அனைவர்க்கும் பரப்பிய கருணாநிதி, மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று மாநில அரசில் பணிபுரிவோருக்கும் செய்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் வருமானத்தை வெகுவாகக் கூட்டினார், ரிக்‌ஷா ஒழிப்புத் திட்டத்தை அமல்படுத்தினார்.

கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், பூம்புகாரில் இளங்கோ அடிகளின் காப்பியத்திற்கு எழுநிலை மாடம், .. இவரது குறிப்பிடத்தக்க சாதனைகள். கோவையில் கோலாகலமான செம்மொழி மாநாடு, சென்னையில் நிரந்தரமாக செந்தமிழ் ஆய்வுக்கென மத்திய அரசாங்க நிறுவனம் என, பரிதிமாற் கலைஞர் தொடங்கிய செம்மொழி கோரிக்கையை வெற்றியுடன் நிறைவேற்றினார்.

தமிழர்களில் ஒரு சிலர் வட எழுத்து ஒன்றுகூட இருக்கக்கூடாது என வாதிடுவர். அவரது கல்லறைப்பெட்டியில் ஜூன், ஆகஸ்ட் என்று எழுதிக்காட்டி, மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டு அழைத்தவர். செம்மொழி மாநாட்டில் தான் இன்று செல்பேசிகளிலும், வலைத்தளங்களிலும், எல்லா பத்திரிகைகள், தினத்தாள்களில் வழங்கும் யூனிக்கோடு என்னும் ஐஎஸ்ஓ 10646 குறியேற்றம் தமிழுக்கான அரசாங்கக் குறியேற்றம் என அறிவித்தார். பேரா. வா. செ. குழந்தைசாமி தலைமையில், பேரா. மு. அனந்தகிருஷ்ணன் பொறுமையாகப் பல ஆண்டுகள் தமிழர்களிடம் ஆலோசித்துச் செய்த முடிவு இது. யூனிகோடில் தமிழ்மக்கள் ஹிந்தி, தெலுங்கு போன்ற தமிழல்லாத பிற இந்திய மொழிகள், திருக் குரான், வேதம், … போன்ற சமய சாத்திரங்கள் தமிழ் எழுத்தில் எல்லோரும் எழுதி எளிய வழியில் பயில, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த ஐந்து வடவெழுத்துகள் (ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ) இன்று தேவைப்படும்போது பயன்பாட்டில் எல்லா கணினிகளிலும், அச்சிலும், செல்போன்களிலும் உள்ளது. எழுத்துபெயர்ப்பு மூலம் இந்திய மொழிகளின் இலக்கியங்களைத் தமிழர்கள் அதன் உச்சரிப்புடன் ஒலித்துப் பழகத் தமிழருக்கு அளித்ததில் கலைஞருக்கும் பங்குண்டு.

பெரியார் வழியில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர் கலைஞர். இன்று திராவிட இயக்கத்தின் இரண்டு பெருங் கட்சிகளும் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மூவரும் மறைந்துவிட்டனர். தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லி அரசாங்கத்திடம் பெறுவதற்கும், நல்ல உயர் அதிகாரிகள், துணைவேந்தர்களாக அறிஞர்கள் நியமனம், தொல்லாய்வுகளுக்கு ஆதரவு, மொழியியல் துறையில் உலக நிபுணர்களுடன் கூடிய மாநாடுகள், … எனச் செய்தலுக்கு வாய்ப்பு. பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்திருத்தம் முழுமை பெறவில்லை. மலையாளிகள் செய்துவிட்டனர். அதுபோல, விரும்புவோர் உ,ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம் என ஆணையை தமிழ்நாட்டு அரசாங்கம் வெளியிட்டால் திராவிட இயக்கம் அளிக்கும் கொடையாகும். இதனைச் செய்யலாம் என்று கி.வா.ஜகந்நாதன், சிலம்புச் செல்வர் மபொசி போன்றோரும் கட்டுரைகள் எழுதி அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுக இரு கட்சித் தலைவர்களும் சேர்ந்து அறிவிக்கலாம்.

மனோன்மணீயம் பெ. சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து இந்திய மொழியியல் குடும்பங்களைப் பற்றிய அறிவு வந்தவுடன் ஏற்பட்டது. அந்தச் செய்யுளுக்கு அரசாங்கத் தமிழ்த்தெய்வ வணக்கம் எனச் செய்துவிட்டார் கலைஞர். உலகெங்கிலும் தமிழர் கூடும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்ரன. பள்ளிகளில் குழந்தைகள் கற்கின்றனர். வேத காலத்தில் தை 1 புத்தாண்டாக இருந்ததற்கான சான்றுகள் உண்டு. இன்றும் நேப்பாளத்தில் விவசாயிகள் தை 1 (மகர சங்கராந்தி) புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாளை திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு தினமாக அதிகாரபூர்வமாகச் செய்தவர் கலைஞர் தான். தமிழ்ப் பெருமை, பீடு என்பதனை இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அறியச் செய்ததில் கலைஞரின் பங்கு அளப்பரியது.

ஹிந்தி எழுத்தை மைல்கல்களில் கூட திணிக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது. பல நாடுகளில் ரோமன்/ஆங்கில எழுத்துகள் பல்வேறு மொழிக் குடும்பங்களை எழுதப் பயன்படுகிறது. வியட்நாம், மலாயா, இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, …. எல்லாவற்றிலும் ரோமன் லிபி. இந்திய பிரதேச எழுத்துக்கள் பல. ஆனால், பாரத மொழிகளுக்குள் பல்வேறு தொடர்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பவை. பொருளாதாரம், கலைகள் (சினிமா, …), வாழ்க்கை, திருமணங்கள், … என்று இந்திய மாநில மக்கள் பிணைந்துவருகின்றனர். வருமானத்தில் மத்திய, உயர் வகுப்பார் விரும்பும் கல்வியாக ஆங்கிலக் கல்வி வளர்ச்சி பெற்றுவருகிறது. கம்பர், சங்கப் புலவர் போன்று எழுதுவோர் இன்று மிகக் குறைவாகவே உள்ளனர். ஆங்கில எழுத்திலும் கூட எல்லா இந்திய மொழிகளும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட வேண்டும். தமிழை, ஹிந்தியை ஆங்கில எழுத்தில் எழுதலாம் என்பதும் கற்பிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் ஸ்கிரிப்ட்டுக்கும் (lipi), மொழிக்கும் உள்ள வித்தியாசம் மக்கள் பரவலாக அறிந்துகொள்வர். ரயிலில், ரயில் நிலைகளில், மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி எழுத்துடன், அதன் ஆங்கில (ISO 15919) வடிவமும் இடம்பெற வேண்டும். பல மாநில மக்களும், வெளிநாட்டவர்களும் படிக்க ஹிந்தி இலிபி மட்டும் போதாது, அதன் ஆங்கில வடிவமும் தரவேண்டும் என்று ஹிந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களின் முதல்வர்கள் டெல்லி அரசிடம் கேட்கவேண்டும். இந்த மாற்றத்திற்கு வருங்கால தமிழ்நாட்டு முதல்வர்கள் தலைமை ஏற்க வேண்டும்,

 

 

அமெரிக்காவிலே ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான கொடி உண்டு. நாட்டுக் கொடியுடன், மாநிலக் கொடிகளை எப்படி ஏற்ற வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு. அதுபோல் இந்தியாவில் வரவேண்டும். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி காட்டும் கலைஞர் மு.க.

இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மு. கருணாநிதியும்


அண்ணாதுரை அமைத்த திமுக மந்திரிசபை, 1967

இந்தியாவில் நடுவணரசு மிகப்பலம் வாய்ந்தது. அதனையும் மீறி, சோனியா காந்தியின் ஆட்சியில் ஈழத்தீவில் தமிழர்க்கு தனிநாடு கலைஞர் அமைத்திருக்க முடியுமா என்பது ஐயமே. ஆனால், டெல்லி சர்க்காரிடம் பதவிகளில் இருந்து விலகி, எம்.பிக்களை ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தால் இலங்கையில் இறுதிப்போரின் போக்கும், தமிழ் உயிர்ச் சேதாரமும் வெகு அளவில் குறைந்திருக்கும் என்பர். இது கலைஞர் மீது உலகத் தமிழர்கள் வைக்கும் விமரிசனங்களுள் முக்கியமானது. அவருக்கு அப்போது என்ன நெருக்கடி எனப் புரியவில்லை என்பர்.
———–

கலைஞரைக் காணாது கலங்கு கின்றான்!

காலையிலே எழுந்து வந்த கதிரவனும்
      கலைஞரைக் காணாது கலங்கு கின்றான்!
சோலையிலே பறந்து சென்ற பறவையிடம்
      சொல்லாமல் போனஇடம் எங்கே என்றான்.
மாலையிலே மறையுங்கால் இருந்த குன்றை
      மறுநாள் காணாது மலைத்து நின்றான்!
பாலையிலே பாய்ந்து சென்ற நீர்ச்சுனையும்
      பாதியிலே வறண்டதைப் பார்த்துச் சென்றான்!

“முப்போதும் முப்பாலில் மூழ்கும் நல்ல
      முத்தமிழ் போற்று கின்ற வித்தகரை
எப்போதும் இனிக்காண இயலா தம்மா!”
      என்றபடி ஏகினான் முன்னே முன்னே!
தப்பேதும் இல்லாமல் தனித்தமிழ்ப் பேசுவதைத்
      தவறாத வேள்வியாய்த் தக்கபடி செய்தவரை
இப்போதும் பணிகின்றேன் என்று சொல்லி
      இரங்கலைத் தெரிவித்தான்! என்னே! என்னே!

-கவிஞர் இனியன், கரூர்.

———————

இனியதமிழ் இருக்கும்வரை அவர் இருப்பார்!

எப்பொழுதும் தமிழாக இருந்த மேதை
      எடுத்தவுடன் விடையிறுக்கும் புத்திக் கூர்மை
ஒப்பிடவே ஆளில்லா வகையில் யாவும்
      உடனடியாய் நிறைவேற்றி வைத்த செம்மல்
இப்படித்தான் வசனத்தை எழுத வேண்டும்
      எனக்கற்றுத் தந்த பெரும் வசன கர்த்தா
இப்பொழுது மறைந்துவிட்டார் என்ப தில்லை
      இனியதமிழ் இருக்கும்வரை அவரி ருப்பார்.

அரசியலில் எந்நாளும் வெற்றி ஒன்றே
      அவர்வழியாய் இருந்துளது, மாற்றா ரோடே
உரசுகிற போதுமவர் இரசிக்கும் வண்ணம்
      உரையாற்றத் தெரிந்திருந்த மொழியின் வேந்தர்
விரியுமொளிச் சூரியனாய் வெளிச்சம் காட்டி
      வென்றிருந்த சாதனைகள் கொஞ்ச மல்ல.
பெருமையினைத் தமிழ்நாடு காண வைத்த
      பெருமகனார் கலைஞர் திரு நாமம் வாழ்க!

– இலந்தை சு இராமசாமி

—————-

எப்போதும் போலத்தான் இன்றைய மாலையும்
தப்பாமல் வந்தது தன்வேலை ஓய்ந்தே
உதய சூரியன் உச்சியை விட்டான்
இதயங்கள் எங்கும் இருள்…

– விவேக் பாரதி

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர் (274)

  1. தமிழைக் கற்றவர்கள், எந்த உயரத்திற்குச் செல்ல முடியும் என்பதற்குக் கலைஞர் ஓர் எடுத்துக்காட்டு. ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அரசோச்ச முடியும் என்பதற்கு இவர், இன்னுமொரு சான்று. பள்ளிப் படிப்பை முழுதும் முடிக்காவிட்டாலும் தாமே ஒரு பாடமாக முடியும் என்பதை இவரது வாழ்விலிருந்து கற்கலாம். சாதியப் படிநிலைகளை உடைத்தெறிந்து, தமது ஆற்றலின் மூலமாகச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தலைவராக முடியும் என்பதற்கு இவர், நாம் கண்ணெதிரே கண்ட உதாரணம். திருவாரூரில் இவர் படித்த பள்ளியில் நானும் படித்தேன். இவர் நடத்திய செம்மொழி மாநாட்டில் பங்குபெற்றேன். இவரைச் சில முறைகள் சந்தித்து மகிழ்ந்தேன். இவர் மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு என்றாலும், உளம் நிறைய அன்பும் உண்டு. வல்லமையாளர் கலைஞர் புகழ் வாழ்க.

  2. தங்கள் பதிவு உலகத் தமிழர்களின் மனக்குரல்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *