திவாகர்

ஒரு நாணயமான உயரதிகாரி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். இளைஞர், ஐஏஎஸ் தேர்வுக்காகத் தன்னை நான்கு முறை ஈடுபடுத்தி ஒவ்வொரு முறையும் புள்ளிக்கணக்கில் பெரிய தேர்வை கோட்டை விட்டவர். கடைசியில் ஐபிஎஸ் கிடைத்தது. இங்கும் அவருக்கு ஒரு தடை. உயரம் ஒரு சில மில்லி மீட்டர்கள் குறைவானது என்பது. ஆனாலும் தேர்வு உயரதிகாரிகள், இவர் திறமையைக் கண்டு அதிசயமாக பாவித்து இந்த சிறு குறையை கண்டுகொள்ளாமல் விடலாம் என்று யோசனை சொன்னார்கள். ஆனால் நம்மாள் ரோஷம் மிக்கவர்.. இப்போது கண்டுகொள்ளாமல் போனாலும் பின்னாளில் இதுவே தன் வேலைக்கு உலை வைக்கும் தீயாக மாறலாம் என்று மறுத்துவிட்டார்.

பிறகு இவருக்கு ரெவின்யூ’வில் கிடைத்தது. ஒப்புக் கொண்டார். இவர் சாமர்த்தியம் எக்ஸைஸ் வரி விதிப்பிலும், அதன் வசூலிலும் தெரிந்தது. சரியான நேர்மையாக விதிப்படி யார் யார் எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படியே நேர்மையாகவே வசூல் செய்யுங்கள் என்றார். இங்குதான் வந்தது மிகப் பெரிய சவால். ஏற்கனவே குறைந்த அளவில் உற்பத்தியைக் காண்பித்து குறைந்த அளவில் வரி செலுத்தியவர்கள் உண்மையான முறையில் வரி செலுத்தவேண்டும் என்றால் இத்தனை நாள் வரை ஏமாற்றியதும், இந்த ஏமாற்றலுக்கு உதவிய அதிகாரிகளின் ஏமாற்றுதலும் தெரிய வந்தது. ஆனாலும் சளைக்கவில்லை இவர். இப்போதிலிருந்து வசூலை ஒழுங்காக நடத்துங்கள் என்றார். ஏனைய அதிகாரிகளுக்கும் ஒரு வகையில் சந்தோஷம்.. ஒரே வருடத்தில் வசூல் அதிகமானது. அதே சமயம் ஒரே வருடத்தில் அதிகாரிகள் பலர் தங்கள்மேல் வருவாயை  அதிகபட்சமாக இழந்ததால் வெறுப்புற்று இதற்கெல்லாம் காரணமான இவரிடம் தன் மனதை மாற்றிக்கொள்ளுமாறும் பழையபடியே விட்டுக்கொடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தினர். அத்துடன் தங்கள் வசூலில் இவருக்குப் பாதியை ‘சமர்ப்பிப்பதாகவும்’ ஆசை காட்டினர். ஆனால் இவர் மசியவில்லை.. தனக்கே ஆசை காட்டியவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு பயனில்லாத பகுதிக்கு மாற்றினார்.. அவ்வளவுதான் வந்தது மோசம். ஏனைய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து இவருக்கே வேட்டு வைத்தனர். என்ன செய்தனரோ, ஏது செய்தனரோ, இரண்டே நாளில் இவருக்கு பதவி மாற்றம்.

கலங்கவில்லை.. அடுத்து சென்ற வேலையிலும் இதே தொடர்ந்தது. மறுபடியும் வேலை மாற்றல், இடம் மாற்றல். அங்கேயும் இவர் நேர்மையைப் பழகினார். ஆளில்லாத காட்டில் வசூலே இல்லாத இடத்தில் ‘ஆடிட்’ எனும் பெயரில் அதே பதவியில் இடமாற்றம். கவலைப்படவில்லை. நான் நேர்மையாக இருக்கும் வரை எனக்கு என் நெஞ்சில் பயமில்லை. என் நெஞ்சில் பயமில்லை எனும்போது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிகிறது’ என்றுதான் ஒவ்வொரு மாற்றத்திலும் இவர் எழுதிக்கொடுப்பது.. இப்போதும் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிறார். நேர்மை அவருக்குத் துணையாக இருக்கிறது. நெஞ்சில் பயமில்லை. நிம்மதியாகவே இருக்கிறார்.

இங்கே இவரைப் பற்றி எழுதுவதற்குக் காரணம் நான் சமீபத்தில் வல்லமையில் மாதவன் இளங்கோ எழுதிய ‘என் இனிய சக இந்தியனே’ என்ற நீண்ட கவிதைதான்.

மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்

வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

ஐரோப்பியரைப் பாரேன்றேன்!

ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்

ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்

அமைதியாய் குமுறினேன்!

சினிமா பின்னால் ஒருகூட்டம்

கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்

அரசியல் பின்னால் தெருக்கூட்டம்

இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!

இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!

அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என

அனைத்தும் கண்ட அவன் எங்கே?

அன்பு, பண்பு, அறம், மறம் –

இவையெல்லாம்தான் எங்கே?

எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் –

எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும்

நிலை ஏனோ?

வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,

தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,

“‘நெஞ்சு பொறுக்குதிலையே

இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’

அன்றே பகர்ந்தேன் புரியலையோ?

அறிவில்லையோ?

நெஞ்சில் உரமுமில்லையடா,

நேர்மை சிறிதுமில்லையடா,

வஞ்சனை சொல்வாரடா,

வாய்ச்சொல்லில் வீரரடா!

நீ புறப்படடா!

உலகெலாம் நம் புகழ் பரப்படா!

நிலையாய், நீர்நிலையாய்,

குளமாய் நீ இராதேடா!

துர்நாற்றம் வீசுமடா!

ஓடும் ஓடையாய் மாறடா!

ஓடடா! ஓடடா! ஓடடா!!”

வந்தோம் ஓடி வெளிநாடு!

வாவென்றது வளநாடு!

கடுமையாய் உழைத்தோம் திறமோடு!

மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!

நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!

என்று மாறும் எம் திருநாடு?

வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!

எம்மைப்போல் ஏங்குபவர்

எத்தனை பேர்?

எத்தனையோ பேர்!

நான் மேலே குறிப்பிட்ட நண்பரைப் போல எத்தனையோ பேர் எங்கெங்கோ இன்னமும் எந்தந்த நிலையிலோ இந்த பாரதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களை யாரும் விலைக்கு வாங்கிட முடியாது. அவர்களுக்கும் ஏக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நம்பிக்கை என்ற ஒன்றுதான் இந்த உலகத்தையே ஆட்டுவிக்கிறது. அந்த நம்பிக்கை இவர்களையும் ஒருநாள் வாழவைக்கும் என்றுதான் நம்ப விரும்புகிறேன்.

இந்தவாரம் ஒரு சிந்தனைக்குரிய கவிதையைப் படைத்த மாதவன் இளங்கோ அவர்களை இந்தவார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கிறது. திரு மாதவன் இளங்கோ அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

கடைசி பாரா: திரு இன்னம்பூரான் அவர்கள் ‘குசலம்’ விசாரித்து எழுதியதில் ஒரு பகுதி

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
கண்ணில் நல்லஃது   உறும் கமுமல வள நகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

“இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா”

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. இந்த வார வல்லமையாளர் மாதவன் இளங்கோ அவர்களுக்கும், இன்னம்பூர் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ….. தேமொழி

  2. இவ்வார வல்லமையாளர் திரு. மாதவன் இளங்கோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

  3. எனது படைப்புகளை வல்லமை இதழில் பிரசுரித்து அங்கீகரித்தது மட்டுமல்லாமல், என்னை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு ‘வல்லமையாளர்’ விருதை அளித்துள்ள ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், ஆலோசகர் குழுவுக்கும், திவாகர் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிச் செண்டுகள்!!! 
    பரிசு வழங்கிய ஐக்கியா நிறுவனத்திற்கும், வையவன் ஐயா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! 
    வல்லமை தளத்திலும், கடிதம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி!
    வல்லமைக் குழுவின் இலக்கியப் பணிக்கு என் வாழ்த்துக்கள்!!!

  4. “வல்லமை தாராயோ – இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே”
    மாதவன் , வாழ்த்துக்கள் , தங்களது கதை, கவிதை காதல் பணி தொடரட்டும்

  5. ஒவ்வொரு இந்தியனின் உள்ளக்குமுறலையும் தமது ஆழ்ந்த சொல்லாற்றலால் ஆணித்தரமாக பதிவு செய்த மாதவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் … நல்ல சொல்லாட்சி …. பாராட்டுக்கள் பல ……..  உங்களிடம் இருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *