இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

எண்ணங்களும் வார்த்தைகளும்தான் நம் மனத் திண்மையை அதிகரிப்பதோடு விளைவுகளுக்கு வித்தாகவும் இருக்கின்றன. எண்ணங்களைப் பற்றி கீதையில் கூட செய்தி உண்டு. கடைசிகால கட்டத்தில் என்ன எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறதோ அதுவாகவே மறுபிறவியில் மாறிவிட சாத்தியங்களைப் பற்றியும் கீதை பேசுகிறது. வார்த்தைகள் கூட அப்படித்தான்.

1069274_10200403582107947_1677963781_nரிஷிகளின் சாபங்கள் பற்றி ஏகப்பட்ட கதைகளைப் படித்திருக்கிறோம். வார்த்தைகள் சாபங்களாக மாறும்போது அதன் பலன் என்ன என்பதையும் அகலிகை முதலானதாக நிறையவே படித்திருக்கிறோம். பொதுவாகவே வார்த்தைகளை நாம் அளந்துதான் பேசவேண்டும் என்பதைப் பெரியவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்மறை வார்த்தைகள் பேசும்போது உடனடியாக அது பலிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதே போல நெஞ்சார நாம் வாழ்த்தி வார்த்தைகளாய்ப் பேசும்போது வார்த்தைகளை வெளியே விடும் நமக்கே ஒரு நல்ல திருப்தியைக்கூட தரும். இதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்கள் எழுதியது. இதோ அவர் எழுத்தில்.

ஒரு வார்த்தை வெறும் ஓர் ஒலி அல்ல. இதற்கு அர்த்தமும் உண்டு — தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்று கூறியது போல.

அர்த்தம் என்றால் என்ன?

ஒருவர் “நேர்மை” என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்னென்ன நடக்கிறது?

உங்களுக்குத் தெரிந்த சில நேர்மையானவர்களின் படிமங்கள் உங்கள் மனதில் தோன்றுகின்றன. அந்த படிமங்களுடன் இணைந்த இனிமையான உணர்வுகளும், அனுபவங்களும் மனதில் எங்கோ ஆழத்தில் தோன்றி அங்கு நேர்மறை உள்ளுணர்வுகளைத் (positive feelings) தோற்றுவிக்கின்றன . அதே போல எதிர்மறையான ஒரு வார்த்தையைக் கேட்கும்போது எதிர்மறையான உள்ளுணர்வுகள் மனதில் தோன்றுகின்றன.

“நாளை காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்வேன்” என்று சொல்வதற்கும், “நாளைக்கு தாமதமாக எழுந்திருக்க மாட்டேன்” என்று சொல்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

இரண்டாவது வாக்கியத்தின் அர்த்தத்தில் ஒரு சிறிய எதிர்மறை சாயல் இருக்கிறது. முதலாவது வாக்கியம் ‘சீக்கிரமாக எழுந்திருக்கும்’ நேர்மறை பிம்பத்தை நம் மனத்திரையின் மீது வீசுகிறது. ஆனால், இரண்டாவது வாக்கியமோ ‘தாமதமாக எழுந்திருக்கும்’ எதிர்மறை சாயலைக் கொண்டுள்ளது. நாம் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணரவில்லையானாலும் அது ஆழ்மனதைப் பாதிக்கும்.

வார்த்தைகள் வெறும் ஒலி அல்ல. அவை மின்னூட்ட அணுக்களைப் போல (charged particles). நமது மனதை எப்படிப்பட்ட வார்த்தைகளுடன் நிரப்புகிறோமோ அவ்வாறே மாறுகிறோம். தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாலா? சோகமும் தளர்ச்சியும் விளைவிக்கும் வார்த்தைகளாலா?

உண்மைதான். நல்ல வார்த்தைகளால் ஊக்கமும் தன்னம்பிக்கையையும் நம்மால் அனைவருக்கும் வழங்கமுடியும்தானே.. இப்படிப்பட்ட ஊக்க மாதிரிகள் இந்தச் சமுதாயத்திற்கு நிறைய தேவை என்பதை மனதிற்கொண்டு, நல்லதொரு கட்டுரையைத் தந்த திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம். திரு டோக்ரா அவர்களுக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

http://dhiaanam.wordpress.com/

கடைசி பாரா: குறவன் பாட்டு – கடைசிப் பகுதியிலிருந்து நகர வாழ்க்கையை நன்றாகக் காண்பிக்கிறார் திரு சச்சிதானந்தம்.

அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளர் விருது பெற்ற திரு.டோக்ரா அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. 

    கடைசி பாராவில் இடம் பிடித்த திரு.சச்சிதானந்தம் அவர்களது வரிகள் நெஞ்சைச் சுடும் நிஜம்.. அவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் திரு.திவாகர் அவர்களுக்கும், ‘வல்லமை’ இணைய இதழ் ஆசிரியர், நிர்வாகக் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி.

  2. இந்த வார வல்லமையாளராகத் தேர்வு பெற்றுள்ள திரு.சதீஷ்குமார் டோக்ரா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கடைசி பாராவில் குறவன் பாட்டின் வரிகளைக் குறிப்பிட்டமைக்காக திரு.திவாகர் ஐயா அவர்களுக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள சகோதரி திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published.