திவாகர்

புதிய வருடத்தில் நான் பேச்ப்போவது மிக மிகப் பழைய விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதான்.. ஆனால் இவை மட்டும் இல்லையேல் இந்த இடங்களில் மனிதனின் ஆதி நாகரீகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எதிர்கால மக்களுக்கு எப்படித் தெரிய வரும்.. நான் சொல்வது இந்த மியூசியங்கள்தான்.

பல வருடங்களாகவே எனது பழக்க வழக்கங்களில் இது ஒன்றுதான். இந்தியாவில் எந்த நகருக்கு செல்ல நேர்ந்தாலும் நான் அங்கே தெரிந்து கொள்ள விழைவது அந்த நகரில் மியூசியம் இருக்கிறதா என்பதுதான்.. இப்படித்தான் விஜயவாடாவில் உள்ள மியூசியத்தில் காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு நடராஜர் கற்சிலையைக் காண நேரிட்டது. அங்கேயே அந்த நகரின் மத்தியிலேயே ஒரு சிறிய பாறை மலை.. அந்த மலையினைக் குடைந்து சின்னச் சின்ன கோயில்கள். ஒரு குடைவரைக் கோயிலில் மகிஷாசுர மர்த்தனியும் நடராஜரும் செதுக்கப்பட்டுள்ளனர்.. கொஞ்சமும் தவறாமல் அதே பாணியில் இரட்டையர் போல இருந்த நடராஜரின் ஒரு கற்சிலை அந்தப் பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டு அங்கே உள்ள மியூசியத்தில் சேர்க்கப்ப்பட்டதும் இந்த கற்சிலை கலையில் ஆர்வம் உள்ளவருக்கு விருந்தாக இருந்ததும் நினைவுக்கு வருகிறது.. அதே போல இன்னொரு விஷயமும் அதன் மூலம் அறியலாம். காலத்தால் மகேந்திர பல்லவனின் குடைவரைகளுக்கு முற்பட்டதாக இருப்பதையும், நடராஜர் அந்தப் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் இந்தப் பகுதியில் வணங்கப்பட்டு வந்திருக்கிறார் என்பதும் தெரிய வரும்

நான் வம்சதாரா எனும் முதல் நாவல் எழுதுவதற்கான ஒரு நல்வாய்ப்பையும் கொடுத்தது கூட ஒரு மியூசியம்தான். விசாகப்பட்டினத்தில் உள்ள மியூசியத்தில் அந்த பதினோராம் நூற்றாண்டின் தமிழ்க் கல்வெட்டை நான் காண நேரிடாவிட்டால் வம்சதாரா எனும் புத்தகம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கல்வெட்டைத் தொடர்ந்து சென்றதால்தானே வம்சதாரா வந்தது என்பதை ஏற்கனவே எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

நம் பாரதமே புராதன பூமி. எத்தனையோ  நேர்த்தியான கலைச் சிற்பங்கள் நிறைந்த பூமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமோ என்று தோன்ற வைக்கும்.. இன்னமும் சொல்லப்போனால் உலகில் எந்த ஒரு நகரத்திலும் நேர்த்தியாக செயல்பட்டு வரும் ஒவ்வொரு மியூசியத்திலும் பாரத புராதனக் கலைச் சிற்பங்கள் இல்லாமல் அந்த மியூசியங்கள் புகழ் பெற்றிருக்க முடியாது.. இந்தக் கருத்தை இன்னும் வலுப்படுத்துகிறது திருமதி தேமொழி எழுதிய சான்பிராஸிஸ்கோ நகரைப் பற்றிய கட்டுரையும் அதன் அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும்.(குடதிசை மருங்கில்)

ஆசிய நாடுகளின் கலைப்பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம். – மேலும் படிக்க https://www.vallamai.com/literature/articles/30356/

ஒவ்வொரு நகரத்துக்கும் இந்த அருங்காட்சியகம் என தமிழில் பேசப்பட்ட மியூசியம் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் மியூசியத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இன்னமும் பல கலைச் செல்வங்களும் பண்டைய காலத்தில் வணங்கப்பட்ட பல தெய்வச் சிலைகளும் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சிதறிக் கிடக்கின்றன. ஆனால் அன்னிய நாட்டவர் அப்படியல்ல ..ஆவ்ரி ப்ரெண்டேஜ் போன்றோர் எப்படியெல்லாம அரும்பொருட்கள் சேகரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இக்கட்டுரையைப் படித்தால்தான் தெரியும். நல்லதொரு கட்டுரையை வழங்கி இப்புத்தாண்டைத் தொடக்கி வைத்த தேமொழி அவர்களை இந்த வார வல்லமையாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். தேமொழிக்கு அன்பான வாழ்த்துகள்.

கடைசி பாரா: தேவா’வின் கவிதை வரிகள்.

அழுகின்ற குழந்தைக்கு

பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

ஆலயம் கட்டி வணங்குவேன்

வாடுகின்ற மனிதனுக்கு

ஊக்கமூட்டி ,பகிர்ந்துண்ணும்

இதயமே இறைவன் வாழும்

ஆலயம் அன்றோ!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமை வார விருது பெற்ற திருமதி தேமொழி அவர்களுக்கும், விருது வழங்கிய திரு திவாகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    மியூசியம் தவிர, நான் பல பாடல் பெற்ற ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஆலய வளாககத்துக்குள்ளேயே பல வரலாறுகளைச் சொல்லும் கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் திருவரங்கமும், பத்ராச்சலமும் குறிப்பிடத்தக்கது. பண்டைக்கால அரசர்கள் ஆலயங்களை நிர்வகித்த ஆவணங்களும், இறைவனுக்கு அணிவித்த ஆபரணங்களும் இதில் அடக்கம். இறைவழிப்பாட்டிற்குச் செல்லுகின்ற பக்தர்கள் இத்தகய மியூசியங்களையும் காண விழையவேண்டும். பண்டைக்காலத்தில் வணங்கப்பட்ட பல தெய்வச்சிலைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன என்று திரு திவாகர் அவர்கள் சொன்னது போல், சென்னையில் குன்றத்தூரிலும், கோவூரிலும் கற்களில் பொறிக்கப்பட்ட பல ஆங்காங்கே மண்ணில் புதையுண்டு கிடப்பதைக் காணலாம்.

  2. இந்த வார வல்லமையாளர் தேமொழி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  3. இந்த வார வல்லமையாளர் தேமொழி அவர்கட்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் !!!

  4. நண்பர்கள் பார்த்தசாரதி, தனுசு மற்றும் தமிழ்முகில் ஆகியோரின் பாராட்டுகளுக்கு என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ….. தேமொழி

  5. திறமை எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் அது சிறப்பித்துக் கவுரவிக்கப்படும் என்பதற்கு ஒரு சான்றாய் இந்த வலைத்தளம் தேமொழியைச் சிறப்பித்துக் கவுரவப்பட்டுக் கொள்கிறது என்ற விஷயத்தை சொல்லிக்கொண்டு என் ரத்தத்தின் ரத்தம் அன்பு அண்ணியை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்தி மகிழ்கிறேன்..நன்றி ..வணக்கம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.