Advertisements
இலக்கியம்கட்டுரைகள்வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்!

 

திவாகர்

பொதுவாகவே தமிழர்களாகிய நாம் பெருமைப்படவேண்டிய பெருமையான விஷயம் எதுவென்றால் சிற்பக் கலையில் நாம் சிறந்தவர்களென்பதை மிகவும் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், காவியத்தில் இருப்பதைக் கண் முன்னே காட்ட சிற்பிகள் எத்தனையோ சிரமங்கள் மேற்கொண்டு கடினமாக உழைத்து உளி கொண்டு நேர்த்தியான கலைப் படைப்புடன் செதுக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

இந்தச் சமயத்தில்தான் இந்த சிற்பங்களைப் பற்றிய ஒரு கட்டுரை குழுக்களில் காண நேர்ந்தது. நண்பர் உதயன் அவர்கள் ’மூதாதையரைத் தேடி’ என ஆரம்பித்து ஊர் ஊராகத் தேடிச் சென்ற கட்டுரை அது. இந்த வாரத்தில் அந்தக் கட்டுரையில் திருப்பரங்குன்றத்து குகைச் சிற்பங்களைப் பற்றியும் தான் தேடிய விவரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் குடைவரைச் சிற்பங்கள் காலத்தின் சிதைவில் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்னமும் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குபவை என்பதை அவைகளை நேரில் பார்த்தோர் மட்டுமே உணரலாம். புதுப்புது அர்த்தங்கள் கொடுக்கும் சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை தனது அழகிய புகைப்படக் கருவியில் பதிவு செய்து வெளியிட்ட பாங்கு மிகவும் கவர்ந்தது. இவருடைய விடாமுயற்சியைப் பற்றிய ஒரு சிறு பகுதியை அவர் எழுத்திலேயே பார்ப்போம்.

https://groups.google.com/group/vallamai/browse_thread/thread/925727a7cf67ae52#

 

குடைவரை கோவிலில் படம் எடுத்து முடித்ததும் அங்கிருந்த பாதுகாவலர் நிலையூர் திருப்பத்தில் படுக்கைகள் உள்ளன என்றார். அங்கேயும் போய்விடக் கிளம்பினேன். அவர் சொல்லியபடி அந்த இடம் அடைந்ததும் காம்பவுண்ட் போல் அமைந்திருந்த வீட்டைத் தாண்டி முட் செடிகளைத் தாண்டி பாதை தெரியாமல் மலையேறி நான் பாறை இடுக்கில் சரிந்து மாட்டிக் கொண்டேன். காலையிலிருந்து ஆகாரம், தண்ணீர் அருந்தாமல், சோர்வுடன்  இருந்தாலும் மலை ஏறிவிட வேண்டும் என்ற முனைப்புடன் ஏறிவிட்டேன். நிலையூர் திருப்பத்தில் இருந்த பலகை. மலை சுற்றி வரும் பாதையில் நிலையூர் திருப்பம் இடப்புறம் வரும், அதைத் தாண்டி வலப்புறமாகவே பார்த்து வந்தால் இந்தப் பலகை தெரியும், காம்பவுண்ட்,  முட்செடிகளினூடேதான் பயணிக்க வேண்டும். ….”

திரு உதயன் அவர்கள் பழகுவதற்கு இனிய பண்பாளர்.  அவரின் விடாமுயற்சியும் உழைப்பும் நம் தமிழ் மரபைப் பற்றிய வேர்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எல்லோராலும் விரும்பத்தக்கதே.. ’திக்கெட்டும் சென்று கலைச் செல்வங்களைக் கொணர்வீர்’ என்ற நம் மகாகவியின் கட்டளைகளுக்கேற்ப சிற்பச் செல்வங்களை நமக்கு சேகரித்துத் தருவது என்ற உதயனின் சேவை மென்மேலும் தொடர வேண்டும். அவரது தேடலை, அவரது கலையார்வத்தை மகிழ்ச்சியாக வரவேற்றும், இந்த வாரம் பதிப்பித்த அவரது சிற்பச் செல்வங்களை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டும், இந்த வார வல்லமையாளர் விருதினை அதே மகிழ்ச்சியுடன் வல்லமை குழுவினர் சார்பில் வழங்கி சிறப்பிப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் (உதயன் என்றதும் ஒரு வார்த்தையில் எத்தனை மகிழ்ச்சிகள் பாருங்கள்..). வல்லமையாளரான திரு உதயன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: திருமலைசோமு’வின் ‘மனிதன் எனும் விருட்சம்’ கவிதையில் வரும் வரிகள்தான் இந்த வாரக் கடைசி பாராவில் இடம் பெறுகிறது.

துளி விந்தின்
விருட்சம் மனிதன்…

தன்
நெடும் பயணத்தில்
நீண்ட வெற்றிகளை
நெற்றிக்குள்
குவியலிட்டுக் கொண்டவன்
விரல் நுனிக்குள்
உலகை இயக்கும்
நூதனம் அறிந்தவன்

மனிதன்
மனிதனாய் மட்டுமல்ல
இறைவனாகவும்
அவதரிப்பவன்.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (4)

 1. Avatar

  உதயன் அவர்களுக்கும், திருமலை சோமு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

 2. Avatar

  ’திக்கெட்டும் சென்று கலைச் செல்வங்களைக் கொணர்வீர்’ என்ற நம் மகாகவியின் கட்டளைகளுக்கேற்ப சிற்பச் செல்வங்களை நமக்கு சேகரித்துத் தருவது என்ற உதயனின் சேவை மென்மேலும் தொடர வேண்டும். இந்த வார வல்லமையாளர் விருதினை அதே மகிழ்ச்சியுடன் வல்லமை குழுவினர் சார்பில் வழங்கி சிறப்பித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.
  திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, மதுரையைச் சுற்றியுள்ள அனைத்துத் தொன்மைமிகு சிற்பங்களும் கல்வெட்டுகளும் உதயனால் உலகோருக்குத் தெரிய வரட்டும்.  
  வல்லமையாளருக்குப் பாராட்டுகள்.
  விருது வழங்கியோருக்கு நன்றிகள்.

  அன்பன்
  கி.காளைராசன்

 3. Avatar

  வாழ்த்துக்கள் உதயன்,,,,,

 4. Avatar

  மனமார்ந்த வாழ்த்துகள்!
  உதயன்,,,,,

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க