நான் அறிந்த சிலம்பு – 47 (26.11.12)
மலர் சபா
புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
வண்ணக் கலவைகள், சாந்து வகைகள்,
மலர்கள் சுண்ணப் பொடிகள்
பணியாரம் முதலான தீனிவகைகள்
இவை விற்போர் வைத்திருந்த விளக்குகள்;
செய்யும் தொழிலில் வல்லவரான
கம்மியர்(தட்டார்)
அணிகலன் செய்யுமிடங்களில்
வைத்திருந்த விளக்குகள்;
பிட்டு வாணிகர்கள்
வரிசை வரிசையாய்
ஏற்றி வைத்திருந்த விளக்குகள்;
அப்பம் விற்கும் வாணிகர்
குடத்தண்டில் ஏற்றி வைத்திருந்த
கரிய அகல்விளக்குகள்;
பண்டங்கள் பலவும் விற்கும் பெண்கள்தம்
கடையில் வைத்த விளக்குகள்
ஆங்காங்கு இடையிடையே
மீன் விற்பவர்கள் வைத்த விளக்குகள்
கடலின் இடத்து துறை எதுவென்று அறியாது
ஓடுகின்ற மரக்கலங்களை
அடையாளம் காட்டி அழைக்கவென்று
வைத்த்திட்ட விளக்குகள்
மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து
வலையில் அகப்படுத்தும்
பரதவர் வைத்திட்ட
மீன் திமில் விளக்குகள்
வேற்றுமொழி பேசும் தேசத்தவர்
வைத்திட்ட விடிவிளக்குகள்
பெரிய பெரிய பண்டங்களையுடைய
பண்டகசாலைக் காப்பாளர்கள்
வைத்திட்ட விளக்குகள்
எண்ணுவதற்கு அரிய அளைவினதாய் விளக்குகள்
எங்கு காணினும் பொருந்தி இருந்தன.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 134 – 145
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram16.html
படத்துக்கு நன்றி:
http://aammaappa.mywebdunia.com/2008/11/20/1227199500000.html